World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Conflicts deepen over European bailout

ஐரோப்பிய பிணையெடுப்பின்மீது கருத்துமுரண்பாடுகள் ஆழமடைகின்றன

Nick Beams
13 October 2011

Back to screen version

ஐரோப்பிய அரச கடனும், வங்கியியல் நெருக்கடியும் அதிகமாக ஆழமடைய அடைய, யூரோ மண்டலத்திற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் முக்கிய சக்திகளுக்கு இடையிலான பிளவுகளும் கூடுதலாக விரிவடைகின்றன.

பல மாத சச்சரவுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும், ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கெலும் ஐரோப்பிய வங்கிகளுக்குள் "மூலதனத்தைப் பாய்ச்சும்" ஓர் உடன்படிக்கைக்கு வந்திருப்பதாக, கடந்த ஞாயிறன்று, அறிவித்தனர். இருந்தபோதினும், அதில் அடிப்படை கருத்துமுரண்பாடுகள் நீடிப்பதால், அந்த உடன்படிக்கை குறித்து அவர்கள் எவ்வித விபரங்களையும் வெளியிடவில்லை.

பொதுநிதியிலிருந்து எடுத்து பில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கு வழங்கும் அந்த மூலதனம்-பாய்ச்சும் நடவடிக்கை (recapitalisation) ஐரோப்பிய நிதியியல் ஸ்திரத்திற்கான நிதியிலிருந்து (EFSF) வழங்க வேண்டுமென பிரெஞ்சு வலியுறுத்தி வருகிறது. தேசிய அரசாங்கத்தின் ஒரு நேரடியான தலையீடு பிரான்சின் மதிப்பைக் குறைக்குமென்றும், அதன் நிதியியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குள் கொண்டு வருமென்றும் அது அஞ்சுகிறது. பிரெஞ்ச் ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவும் கவலைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில், பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் பின்வருமாறு எச்சரித்தார்: “எந்த தவறும் செய்துவிடாதீர்கள். நாம் ஓர் எரிமலையின்மீது இருக்கிறோம். அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து ஐரோப்பிய கண்டத்தையும், அதன் ஜனநாயக உடன்படிக்கைகளையும், அதன் நாணய ஒன்றியத்தையும், அதன் அரசியல் ஒன்றித்தையும் சிதைத்துவிடும்.”

மறுபுறம், ஜேர்மனியில் முதல் அழைப்பு தனியார் சந்தைகளை நோக்கி இருக்க வேண்டுமென்றும், அந்த அணுகுமுறை தோல்வியடைந்தால் தேசிய அரசாங்கங்கள் தலையிடலாம் என்று  கோரியிருந்தது. EFSF ஒருவித நிதிவழங்குனராக இறுதி தருணத்தில் மட்டும் தான் தலையீடு செய்ய வேண்டுமென்று அது வலியுறுத்துகிறது. பெரும்பான்மை சுமையை EFSF தாங்கினால், அந்த நிதியில் பிரதான பங்களிப்பு அளித்துவரும் ஜேர்மனியின் நிதியியல் நிலைப்பாடு பிரச்சினைக்கு உள்ளாகுமென்பது ஜேர்மனியின் கவலையாக இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அக்டோபர் 23இல் சந்திக்கும் போது, நவம்பர் 3இல் நடக்கவிருக்கும் G20 கூட்ட தயாரிப்பிற்கான "நம்முடைய விளக்கமான இறுதி மூலோபாயத்தை" தீர்மானிப்பார்கள் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் ஹெர்மன் வன் ரோம்பெ உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த வாக்குறுதி பெரிதாக எதையும் கூறவில்லை. பைனான்சியல் டைம்ஸ் இதழாளர் மார்டின் வொல்ஃப் நேற்று (12.10.2011) எழுதியதைப் போல, இந்த நெருக்கடி விரைவில் தீரும் என்பதில் எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதற்கு மாறாக, அது இன்னும் மோசமடையவதற்கான அறிகுறிகளே உள்ளன.

அவர் தொடர்ந்து எழுதுகையில், “யூரோமண்டலத்தில் மிகவும் மதிப்புடைய பெரும் அரசுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் வராக்கடன் காப்புறுதிகள் [கடன் திவால்நிலைமையின் மீது செய்யப்பட்ட காப்பீடு] அதிகரிக்க ஆரம்பித்திருப்பதானது, அதிகரித்துவரும் கவலையெனும் புயலில் சிக்கிய சிறுதுரும்பைப் போல உள்ளது. திகைப்பூட்டும் விதத்தில், இது ஜேர்மனியில் பரவும் வேகம் இங்கிலாந்தைவிட ஒருபடி மேலாக உள்ளது. பலவீனமான யூரோமண்டல அங்கத்தவர்களைப் பிணையெடுப்பதென்பது மிகவும் சுமையாகிவிடும் என்ற கவலையை இது பிரதிபலிக்கும். ஜேர்மனி அதன் சொந்த செல்வாக்கிற்கு பாதிப்பு இல்லாத வரையில் அது யூரோமண்டலம் செயல்படுவதைக் காப்பாற்ற அதனால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யும் என்பதே என்னுடைய சொந்த கண்ணோட்டமாகும்,” என்று குறிப்பிட்டார்.

இங்கேதான் நெருக்கடிக்கான எந்தவொரு "பொருளாதார" தீர்வுக்கும் முக்கிய தடை தங்கியுள்ளது. அரச கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மாறாக, பிணையெடுப்புகள் அதை "விளிம்பிலுள்ள" நாடுகளில் இருந்து மையத்தியில் உள்ள நாடுகளுக்கு விரிவாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் பிரச்சனைக்குள்ளான சொத்துக்களை பாதுகாக்கும் (TARP) திட்டத்தைப் போலவே வங்கிகளுக்கு ஒரு பாரிய பிணையெடுப்பை அட்லாண்டிக் முழுவதிலும், ஐரோப்பிய அரசுகள்  வழங்க வேண்டுமென, ஒபாமா நிர்வாக அதிகாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். ஐரோப்பா பெரியளவில் திவாலானால், அது ஐரோப்பிய கடன்களின்மீது திரும்பிவராக்கடன் சந்தைகளைக் (credit default swaps) கொண்டிருக்கும் அமெரிக்காவின் வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐரோப்பிய Tarp” க்கான முறையீடுகளுக்கு சமீபத்தில் முன்னாள் துணை அமெரிக்க நிதித்துறை செயலாளர் ரோஜர் ஆல்ட்மேனும் அவருடைய குரலைச் சேர்த்திருக்கிறார். நேற்றைய பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், "பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வங்கி மீட்பு திட்டமானது, ஐரோப்பிய தலைவர்களின் மங்கி போயிருக்கும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு நல்ல வாய்ப்பாகும்,” என்றவர் முறையிட்டார். "வங்கியில்துறையில் அமெரிக்கா தலையீடு செய்ததை நகலாக" கொண்டு அவர்களும் செய்ய வேண்டும், "அத்தோடு அவர்கள் எழுச்சிபெற்றுவரும் நிதியியல் பலத்தினை முழுப்பலத்துடன் பயன்படுத்த  உறுதியுடன் இருக்கவேண்டுமென" அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்த போதினும், புரூஸெல்சில் உள்ள ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் இயக்குனர் டானியல் குரோஸ், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதியியல் நெருக்கடிகள் வெவ்வேறு வடிவத்தில் இருப்பதாக உடனடியாக குறிப்பிட்டுக் காட்டினார். நிலம் மற்றும் மனை விற்பனைத்துறை மற்றும் பத்திர விற்பனைத்துறையில் ஏற்பட்ட அமெரிக்க வங்கிகளின் இழப்பிற்குப் பின்னர், அவற்றை பிணையெடுக்க அமெரிக்க Tarp கொண்டு வரப்பட்டது.

இதற்கு முரணாக, ஐரோப்பிய வங்கிகள் வைத்திருக்கும் அரசு பத்திரங்கள் வீழ்ச்சி அடைந்திருப்பதால், இன்று ஐரோப்பிய வங்கிகள் நீருக்கடியில் மூழ்கி போயுள்ளன. அந்த பிராந்தியத்தின் வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் ஒரு தீர்க்கமான வரவு-செலவு அறிக்கையை வைத்திருப்பதோடு இப்போது நெருக்கமாக தொடர்புபட்டுள்ளதால், அந்த அரசுகள் இந்த பள்ளத்திலிருந்து தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதன் விளைவாக, மூலதனத்தைப் பாய்ச்சும் தேசிய அரசுகளின் முடிவானது, இடதிலிருந்து வலது பையிற்கு மாற்றுவதேயாகும். இதனால் தான் 'யூரோ Tarp' என்பது யூரோ மண்டலத்தின் முக்கிய பிரச்சினையான, அரச கடனின் மீது நிலவும் நம்பிக்கையின்மையைத் தீர்க்காது,” என்றவர் எழுதுகிறார்.

உண்மையில் ஒரு பிணையெடுப்பானது அரசு கடனை அதிகரித்து இன்னும் மோசமான நிலைமையைத் தான் கொண்டு வரும் என்று குரோஸ் தொடர்ந்து குறிப்பிட்டார்.

ஒரு முக்கிய ஜேர்மன் பொருளாதார நிபுணரான ஹன்ஸ்-வெர்னர் சின்னின் கண்ணோட்டமும் இதுவாகவே உள்ளது. அவருடைய கருத்துக்கள் ஜேர்மன் ஆளும் மேற்தட்டின் பிரதான பிரிவுகளின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. சின்னின் கருத்துப்படி, ஐரோப்பாவின் கரைந்து கொண்டிருக்கும் அரசுகளைச் சுற்றி ஒரு தடுப்புச்சுவரைஎழுப்புவதற்கு மாறாக, “அதீத மீட்பு தொகையானது"  அவற்றினை ஒரு "கடன் சதுப்புநிலத்தினுள்" இழுத்துச்சென்றுவிடக்கூடும் என்கிறார்.

இறுதி வடிவம் என்னவாக இருந்தாலும், எந்தவொரு பிணையெடுப்பும் ஒரு பொருளாதார மீட்சியை கொண்டு வரப்போவதில்லை. மாறாக அது கிரீஸ் மற்றும் ஏனைய கடன்பட்டுள்ள நாடுகளில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஓர் ஆழமான தாக்குதலை உட்கொண்டிருக்கும்.

யூரோ மண்டலத்திற்குள் நிலவும் முரண்பாடுகளின் முக்கியமாக, இந்த நெருக்கடி ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையுமே நிலைகுலைத்து வருவதாக அங்கே கவலைகள் நிலவுகின்றன. அரசு கடன் நிலைமை "மிகவும் அபாயகரமான கட்டத்திற்குள்" நுழைந்துள்ளதாக விவரித்து, முன்னாள் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் ஓவென் இந்த வாரம் ஒரு கட்டுரையை இணைந்து எழுதியிருந்தார். அதில் அவர், பிரிட்டன், ஸ்வீடன், போலாந்து மற்றும் ஏனைய யூரோ-சாராத நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே ஒரு "யூரோவைச் சாராத" ஒரு குழுவை உருவாக்கி அவற்றினை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமென அழைப்புவிடுத்தார்.

இந்த முன்மொழிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் ஆக்கபூர்வமான வலிமைப்படுத்தலாக முன்வைக்கப்பட்டிருந்த போதினும், அது அதன் உடைவிற்கு கூடுதல் ஆதாரமாக உள்ளது.

உண்மையில், EFSFஇன் தற்போதைய கடன் வழங்கும் சக்தியை 250 பில்லியன் யூரோவிலிருந்து 440 பில்லியன் யூரோவாக உயர்த்த ஸ்லோவேகிய நாடாளுமன்றத்தில் இந்த வாரத்தின் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டதே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோமண்டலத்தின் பலவீனத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. ஸ்லோவேகிய தீர்மானம் "உறுமும் எலியின்" ஒரு விஷயமாக நிராகரிக்கப்பட்டு, ஒரு புதிய அரசாங்கம் வந்தவுடன் அது இன்னும் அதிகமாகவும் கூட ஆக்கப்படலாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் தேசிய அணிகளாக உடையக்கூடுமென்ற எதிர்கால நிகழ்வுகளுக்கு அதுவொரு அறிகுறியாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வெடித்த முரண்பாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, அந்த கண்டத்திலுள்ள மக்களுக்கு ஒரு பாதையை முன்னெடுக்க வாய்ப்பளிக்கும் விதத்தில், ஐரோப்பிய முதலாளித்துவம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவை இதுவரை முன்வைத்துவந்தது. ஆனால் வறுமையையும், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிகமாக ஒரு சிதறுண்ட ஐரோப்பா மற்றும் யுத்த அபாயங்களை முன்கொண்டு வந்து, ஒட்டுமொத்த திட்டமும் ஒரு பெருங்கவலையாக திரும்பியுள்ளது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தூக்கியெறிந்து, அதனிடத்தில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான போராட்டமே உழைக்கும் மக்கள் முன்னெடுப்பதற்கான ஒரே பாதையாக உள்ளது.