World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Politics and the international Occupy movement

அரசியலும், சர்வதேச முற்றுகை போராட்டமும்

By the WSWS editorial board
14 October 2011

Back to screen version

வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டங்களின் பரவலானது சர்வதேசரீதியாக மறுக்கமுடியாத அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அக்டோபர் 15 முதல், ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, கனடா, தெற்கு அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் நகரங்களிலும் முற்றுகை போராட்டங்கள் தொடங்க உள்ளன.

அபிவிருத்தியடைந்துவரும் இந்த போராட்டம், அதன் சாரத்தில், முதலாளித்துவ-எதிர்ப்பாக உள்ளது. இந்த போராட்டங்கள் சமூக சமத்துவத்திற்கான விருப்பங்களால் உயிரூட்டப்பட்டுள்ளன. “நாங்கள் 99 சதவீத பேர் இருக்கிறோம்,” என்ற அவர்களின் பதாகையின் சுலோகம், சமூக செல்வவளத்தை ஏகபோகமாக்கி வைத்திருக்கும் "ஒரு சதவீத" சிறிய நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டை எதிர்க்கும் தொழிலாளர் வர்க்க விரோதத்தினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மில்லியன் கணக்கானவர்கள் மனதில் சுதந்திர வர்த்தகத்தின்" மாட்சிமை மீதிருந்த மாயை, அதுவும் குறிப்பாக உலகளாவிய நிதியியல் நெருக்கடி ஆரம்பித்து மூன்று ஆண்டுகளில், மதிப்பிழந்து போயுள்ளது. உலக முதலாளித்துவத்தின் மையத்தில் தொழிலாளர்களும், இளைஞர்களும் முகங்கொடுத்துவரும் நிலைமைகள், தீவிர சமூக மாற்றங்கள் மற்றும் சோசலிச முன்னோக்கு குறித்து ஆழமாக யோசிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளி வருகின்றன.

உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புகள், கட்சிகள், தொழிற்சங்கங்கள், போலி-இடது போராட்ட அமைப்புகளின் செல்வாக்கின்றி அவற்றிற்கு வெளியே எழுந்துள்ள இந்த முற்றுகை போராட்டங்கள், உள்ளார்ந்து பார்த்தால், அவர்கள் பெருநிறுவன நலன்களிடம் அடிபணிவதற்கு எதிராக திரும்பியுள்ளதைக் காட்டுகிறது. பாரிய வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சி அடைந்துவரும் கூலிகள் மற்றும் நிலைமைகள், உயர்ந்துவரும் கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் யுத்தம் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற உணர்வுகள் உலகம் முழுவதும் ஒருமித்திருப்பதென்பது, அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் அணுகுமுறைகளை வடிவமைக்கும் அதே அனுபவங்கள் உலகம் முழுவதும் இருப்பதையே வெளிப்படுத்துகின்றன.

நிதியியல் பொறிவிற்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர், “ஒரு சதவீத" முதலாளிமார்களின் செல்வவள திரட்சிக்கு உதவ வந்த ஊகவணிக மற்றும் அரைக்குற்றவியல் நிதியியல் நடவடிக்கைகள் உலக முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் உடைந்து போக இட்டுச் சென்றுள்ளது; அது பொருளாதார மந்தநிலை மற்றும் நாடுகளுக்கிடையிலான பதட்டங்களுக்கு கொண்டுசென்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் மேற்தட்டின் மந்திரம் ஒன்றுபோலவே உள்ளன. அவர்கள் தோற்றுவித்த நெருக்கடியின் முழு சுமையையும், வேலை அழிப்புகள், கூலி வெட்டுகள் மற்றும் அத்தியாவசிய சமூக திட்டங்களை மற்றும் உரிமைகளை நீக்குதல் ஆகியவற்றின் மூலமாக தொழிலாளர் வர்க்கத்தின் மீது திணிக்க வேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். முதலாளித்துவம் ஓர் உலக அமைப்புமுறையாக இருப்பதில் தோற்றுவிட்டது. அது வறுமை, சீரழிவு, சுற்றுச்சூழல் பேரழிவு ஆகியவற்றின் ஓர் எதிர்காலத்தை மட்டுமே கொடுக்கின்றது. அது தூக்கியெறியப்படாவிட்டால், முதலாளித்துவ போட்டி-நாடுகளுக்கு இடையே நாசகரமான புதிய யுத்தங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை முன்வைக்கின்றது.

சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும், ஆரம்பக்கட்ட இந்த வாரயிறுதி உலகளாவிய போராட்டங்கள், தொழிலாளர் வர்க்கம் எல்லாயிடங்களிலும் ஒரேமாதிரியான பிரச்சினைகளையும், உலக அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட நிதியியல் மற்றும் பெருநிறுவனங்களையும், அதற்கு சொந்தம் கொண்டாடும் மேற்தட்டான ஒரே பொதுவான எதிரியையுமே   எதிர்கொண்டிருக்கிறது என்ற அடிப்படை புரிதலை பிரதிபலிக்கின்றது. இதற்கு தேசியரீதியான தீர்வு எதுவுமில்லை.

முற்றுகை போராட்டத்திற்கு எழுச்சிகொடுத்த உந்துதல்களுக்கு  நனவூட்டுவதே தற்போதிருக்கும் முக்கிய பிரச்சினையாகும். தொழிலாள வர்க்கமும், ஒடுக்கப்பட்ட மக்களும் முகங்கொடுக்கும் இந்த போராட்டத்திற்கு, சர்வதேச அளவில் ஒரு புரட்சிகர சமூக மாற்றத்திற்காக நன்கு தயாரிக்கப்பட்ட அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது. அரசியல் வேலைதிட்டம், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் குறித்த கேள்விகள் மீது இடம்பெறும் ஒரு முழுமையான விவாதம் அவசியமாகும்.

அனைத்திற்கும் முதலாக, தொழிலாள வர்க்கம் இது பற்றி விவாதிக்க வேண்டும். மற்றும் ஆளும் வர்க்கத்திற்கு உதவும் தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு அமைப்புகளிடமிருந்து அது அரசியல்ரீதியாக உடைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் AFL-CIO, ஐரோப்பா முழுவதிலும் உள்ள சமூக ஜனநாயக கட்சியினர், ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள், ஏனைய நாடுகளிலும் இவற்றிற்கு இணையாக உள்ளவைகளிடமிருந்து தொழிலாள வர்க்கம் முறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த பிற்போக்கு அமைப்புகளைக் காப்பாற்ற முயற்சிப்பவர்கள், அதுபோன்றவொரு விவாதத்தைத் தடுப்பதற்காக அந்த போராட்டத்தின் கட்டுப்பாட்டைக் கையிலெடுக்கவும், முயற்சிக்கவும் விழைந்துள்ளனர் என்ற உண்மையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் உணர வேண்டும். அத்தகையவர்களை எளிதாக அடையாளங் கண்டுவிட முடியும். போராட்டங்களுக்குள் "அரசியலை" அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கூப்பாடு போட்டு கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். ஆஸ்திரேலியாவில் வெளியான "சிட்னி முற்றுகை போராட்டம்" என்ற Facebook பக்கத்தின் நிர்வாகி, அதற்கொரு உதாரணமாகிறார். அவர் இந்த வாரம் அறிவித்திருந்தார்: “இந்த போராட்டத்தை ஓர் அரசியல் திட்டநிரலுக்குள் கைப்பற்ற விரும்பும் அல்லது முயலும், எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ, எதுவாக இருந்தாலும் நாங்கள் அவர்களைத் தூக்கி வீசுவோம்,” என்றார்.

இதுபோன்ற நிலைப்பாடுகள் ஆழமாக ஜனநாயகத்திற்கு எதிரானவை என்பதோடு, முற்றுகை போராட்டத்தை மேலெழுப்பி கொண்டுவந்த நோக்கங்களுக்கும் இவை விரோதமானவையாகும். தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்துவரும் நிலைமைகளுக்கு காரணமான முதலாளித்துவ-சார்பு கொள்கைகளைக் கொண்டிருக்கும் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் மீது விமர்சனங்களை வைக்கக்கூடாது என்று கூறுவதைவிட, மேலதிகமாக அது வேறொன்றுமில்லை. அது சோசலிச அரசியலைத் தடுத்து, ஓர் உண்மையான அரசியல் மாற்றீட்டின் அபிவிருத்தியைத் தடுக்கும் முயற்சியாகும்.

எந்த மட்டத்திலும், “அரசியல் கூடாது" என்பது முட்டாள்தனமாக உள்ளது. “ஒரு சதவீத" முதலாளிமார்களுக்கு எதிரான ஒரு போராட்டமென்பது ஆழமான அரசியல் பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது என்பதை எந்தவொரு சிந்திக்கத்தெரிந்தவருக்கும்  வெளிப்படையாக தெரியும். வரலாற்றில் இடம்பெற்ற ஒவ்வொரு சமூக போராட்டமும், எந்த வர்க்கம் ஆள வேண்டுமென்ற அரசியலின் அடிப்படை கேள்வியின் மீது, ஒரு நிலைப்பாட்டைப் எடுக்க  நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

சமூக மாற்றத்திற்கான ஓர் உண்மையான போராட்டமானது, முதலாளித்துவத்தைத் தூக்கிவீசக்கூடிய பலத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு சமூக சக்தியாக விளங்கும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தைப் புரட்சிகரமாக ஒன்றுதிரட்டுவதை நோக்கி ஒருமுனைப்பட வேண்டும். அது ஒட்டுமொத்த சமூகமும் முகங்கொடுக்கும் வரலாற்று பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்னெடுக்க வேண்டும். அது உற்பத்தி கருவிகளின் தனியுரிமைக்கு முடிவு கட்டுவதையும் மற்றும் முதலாளித்துவ ஒருசிலவர் ஆட்சியின்  ஆதிக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும் மற்றும் உலக பொருளாதாரத்தை உடைத்து முரண்பாடுகளுக்கு எழுச்சிகொடுக்கும்  தேசிய அரசு அமைப்புமுறையை முடிவு கட்டுவதையும் மிகவும் நனவுப்பூர்வமாக நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.

இந்த முற்றுகை போராட்டங்கள், மக்களின் கோபத்தையும், எதிர்ப்பையும் காட்டும் மற்றொரு போராட்டமாக குறைக்கப்பட்டு, அரசியல் அமைப்புமுறையின் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குப் பின்னால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் திருப்பிவிடப்படக்கூடும் என்பதே இவை எதிர்கொண்டிருக்கும் அபாயமாகும்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஆளும் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்கள் ஏற்கனவே வோல் ஸ்ட்ரீட் போராட்டங்களை, 2012 தேர்தலில் பராக் ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரத்திற்குள் திசைதிருப்ப முயன்று வருகிறார்கள். "தீமை குறைந்தவர்" என்ற முறையீடுகள் மூலமாக, அவர் (ஒபாமா) குடியரசு கட்சியினரையும் விட வோல் ஸ்ட்ரீட்டிற்கு மிகவும் எதிராக உள்ளார் என்று முறையிடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், இந்த வார றுதியில் நடந்த போராட்டங்களுக்குள் இருந்த பிரிவுகள், ஆஸ்திரேலிய பெருநிறுவன மேற்தட்டிற்கு சார்பாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளின் மீது ஒரு தீவிர தாக்குதலை நடத்தும் தொழிற்கட்சி அரசாங்கம், அதன் பசுமைக்கட்சி கூட்டாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பயனற்ற முறையீடுகளுக்குள் திருப்ப முனைகின்றன.

ஐரோப்பா முழுவதிலும், இந்த போராட்டத்தை உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பு கொடியின்கீழ் வழிநடத்த இதேபோன்ற முயற்சிகள் செய்யப்படும். பிரான்சில் உள்ள புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் உள்ள இடது கட்சி, பிரிட்டனில் உள்ள சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி போன்ற அமைப்புகள் எவ்விதமான சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் தடுக்க திட்டமிட்டும், நனவுப்பூர்வமாகவும் வேலை செய்கின்றன.

முதலாளித்துவ-சார்பு இயந்திரங்களுக்கு எதிராக ஒரு நனவுபூர்வமான எதிர்ப்பு அவசியமாகும். தேசியவாதம் மற்றும் சோவினிசத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் எதிர்த்து, தொழிலாளர்களின் உண்மையான ஜனநாயக அரசுகளை ஸ்தாபிப்பதற்காகவும், சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மறுகட்டமைப்பதற்காகவும், ஒவ்வொரு நாட்டிலும் போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஒருங்கிணைந்த உலக கட்சி ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிரதான நிதியியல் அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்களை பொதுவுடைமையாக்கி, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்புகளாக மாற்றுவதும், தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உலக பொருளாதாரத்தைத் திட்டமிடுவதுமே ஒரு சதவீதத்தினரின்" ஆட்சிக்கும், முதலாளித்துவ தோல்விக்குமான முற்போக்கான பதிலாக உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பாகமாக, சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் இந்த முன்னோக்கிற்காகவே அர்பணித்துள்ளன. கொள்கைகள், வரலாறு, மற்றும் உலக ட்ரொட்ஸ்கி இயக்கத்தின் பாரம்பரியத்தை விவாதிக்க, எம்மை தொடர்பு கொள்ளுமாறு, சர்வதேச அளவில் முற்றுகை போராட்டங்களில் பங்கெடுத்துவரும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.