தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Economic crisis heightens global tensionsபொருளாதார நெருக்கடி உலகப் பதட்டங்களை அதிகரிக்கின்றது
Nick
Beams use this version to print | Send feedback நீண்டகால வட்டிவிகிதங்களை குறைக்கும் பொருட்டு, மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளிடமிருந்து அரசு பத்திரங்களை வாங்கும் ஒரு செயல்முறையான, “அதிக பணத்தைப் புழக்கத்தில் விடுதல்" (quantitative easing) என்றழைக்கப்படுவதை விரிவாக்குவதற்கான கடந்த வாரங்களின் தீர்மானத்தை விவரித்து, பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநர் மேர்வின் கிங் வெளியிட்ட அறிக்கைகள், உலக நிதியியல் நெருக்கடி வேகமாக ஆழமடைந்து வருவதையும், அதன் விளைவாக சர்வதேச பதட்டங்கள் அதிகரிப்பதையும் குறித்து காட்டுகின்றன. யூரோ மண்டலத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியின் "காயங்களை" மேற்கோளிட்டுக் காட்டி, கிங் Sky Newsக்கு கூறுகையில், உலகளாவிய பொருளாதார பேரழிவின் ஓர் அறிகுறியால் உந்தப்பட்டு, வங்கி (Bank of England) இந்த நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளது என்றார். “குறைந்தபட்சம் 1930களின் பின்னர், நாங்கள் பார்த்த நிதியியல் நெருக்கடியில் இது ஒருபோதும் இல்லாத மிகவும் தீவிரமானதாகும்,” என்றார். “ஒருபோதும் இல்லாத" என்ற சொற்கள் பெரும்பாலான விமர்சனங்களை ஈர்த்திருந்த போதினும், முக்கியத்துவம் குறையாதபடிக்கு, அவருடைய கருத்துக்களில் வேறு அம்சமும் இருந்தது. இந்த உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க தொடங்குவதற்கு முன்னரே, அதற்காக "கூட்டு நலன்களுக்காக செயல்பட" உலகின் பிரதான சக்திகளுக்கு இடையில் ஒரு "பிரமாண்ட உடன்பாடு" இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிடின் 1930களில் வெடித்ததைப் போன்ற முரண்பாடுகள் வெடிப்பதற்கு அதிக காலம் தேவையில்லை. எவ்வாறிருந்த போதினும், பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் தீர்மானம் குறித்த அவரின் கருத்துகள், யூரோமண்டல அதிகாரிகளிடையே "நம்பிக்கை இழந்திருப்பதை" காட்டுவதாக கருதப்பட்டன. அது பிரிட்டனை அதன் சொந்த முடிவுகளின்படி செயல்படச் செய்தது. அதன்பின்னர் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரோன் இன்றைய பைனான்சியல் டைம்ஸிற்கு (FT) அளித்த ஒரு நேர்காணலில், அதே கொடியைத் தூக்கிப்பிடித்தார். அந்த நேர்காணலில் அவர், ஐரோப்பிய வங்கிகளுக்கு நிதி வழங்க, ஐரோப்பிய தலைவர்கள் "அபாய அறிவிப்பொளி" (big bazooka) அணுகுமுறையைக் கையாள அழைப்புவிடுத்தார். அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் யூரோ-அல்லாத உறுப்பினராக இருப்பதற்கான பிரிட்டனின் விருப்பங்களைப் பாதுகாக்கும் பிரத்யேக முறைமைகளுக்கும் அவர் அழைப்புவிடுத்தார். பிரான்ஸை நேரடியாக தாக்கி, அவர் FTக்கு கூறியது: “நம்முடைய நிதியியல் சேவை தொழில்துறையை பிராங்க்பேர்டிற்கு அவர்கள் நகர்த்துவதை நான் அனுமதிக்க போவதில்லை -- ஒருபோதுமில்லை,” என்றார். கடந்த வார இறுதியில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி ஒபாமா தெளிவுபடுத்தியதைப் போல, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. கடன் நெருக்கடியைச் சமாளிக்கவும், நிதியியல் சந்தைகளில் நிலவும் ஸ்திரமின்மையை (இது அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் அளவிற்கு "மிகப்பெரிய எதிர்ப்பாக” உள்ளதால், இதை) முடிவுக்குக் கொண்டு வரவும் ஐரோப்பிய தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒபாமா வலியுறுத்தினார். “அவர்கள் வேகமாக செயல்பட வேண்டியுள்ளது,” என்று தெரிவித்த அவர், “அடுத்த மாத தொடக்கத்தில் நடக்கவுள்ள அடுத்த ஜி20 கூட்டத்திற்கு முன்னதாக, தீர்வுக்கும், செயல்பாட்டிற்கும் உகந்த ஒரு மிகவும் தெளிவான, திடமான நடவடிக்கை திட்டத்திற்கும்" அழைப்பு விடுத்தார். காங்கிரஸிற்கு கொடுத்த அறிக்கையில் அமெரிக்க நிதித்துறை செயலாளர் திமோதி கெய்த்னரும் அதேபோன்ற கருத்துக்களை முன்வைத்தார். ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய கவலை, அமெரிக்க மக்கள்மீது ஆழமடைந்துவரும் உலகளாவிய நெருக்கடியின் தாக்கங்கள் குறித்தல்ல. மாறாக 2008-2009இல் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட வங்கிகளுக்கான ஒரு பிணையெடுப்பிற்கு ஒத்த ஒன்றை ஐரோப்பிய அதிகாரிகள் ஏற்பாடு செய்யாவிட்டால், பின்னர் ஒரு கிரேக்க திவால்நிலைமை அல்லது ஒரு வங்கியியல் தோல்வியானது (இந்த இடத்தில் அங்கே பல வங்கிகள் உள்ளன) அமெரிக்க வங்கியியல் அமைப்புமுறைக்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்குமென்று ஒபாமா நிர்வாகம் அஞ்சுகிறது. ஐரோப்பிய அரச கடன்களால் அமெரிக்க வங்கிகள் மிக குறைந்தளவே பாதிக்கப்படும் என்று நம்பப்பட்டாலும் கூட, அவை திரும்பிவாரா கடன் சந்தை (credit default swaps market- CDS) காரணமாக எந்தவொரு திவால்நிலைமையினாலும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன. அமெரிக்க வங்கிகள் CDS சந்தைகள் வழியாக ஐரோப்பிய வங்கிகளுக்கு "காப்பீடு" வழங்கி, பில்லியன் கணக்கான டாலர்களை திரட்டியுள்ளன. அந்த ஐரோப்பிய வங்கிகள் ஐரோப்பா திவாலானால் ஆட்டங்காணக் கூடியவையாக உள்ளன. இவ்விதத்தில் பேங்க் ஆஃப் அமெரிக்கா மட்டுமே 2010இல் $9 பில்லியன் திரட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தை வழிமுறைகளில் இருக்கும் புதிரான இயல்பினால், இதன் துல்லியமான தொகை எவருக்கும் தெரியாது. ஆனால் நோபல் விருது வென்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஜ் கருத்துப்படி, ஐரோப்பிய அரச பத்திரங்களில் 50 சதவீதம் திரும்பிவாரா கடன்களுக்காக அமெரிக்க வங்கிகளில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஆகவே ஐரோப்பாவில் ஏற்படும் எந்தவொரு திவால்நிலைமைக்கும், அமெரிக்க வங்கிகள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும். இதுவே சீனா என்று வரும்போது, ஒபாமா இன்னும் கடுமையாகிவிடுகிறார். “சீனா அதன் ஆதாயத்திற்காகவும், ஏனைய நாடுகளை, அதுவும் குறிப்பாக அமெரிக்காவைப் பாதிக்கும் விதத்திலும் வர்த்தக முறையில் மிகவும் தீவிரமாக விளையாடி வருகிறது,” என்றவர் கூறினார். உண்மைகள் வேறுவிதமாக உள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிராக பெய்ஜிங் அதன் ரென்மிபியின் மதிப்பை உயர்த்திவைக்க, ஆண்டுக்கு 5-6 சதவீத வட்டிவிகிதத்தை அனுமதிக்கும் அதன் கொள்கையை பெய்ஜிங் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, சீனாவின் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேல் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் உதிரிபாகங்களைச் செய்துமுடிப்பதிலிருந்தும் (processing) வந்து கொண்டிருக்கின்ற நிலையில், முழுவதுமாக தயாரிக்கப்பட்ட பண்டங்களை (finished products) விட சீனாவில் உற்பத்தி வலையமைப்புகள் அதிகமாக இருக்கும் நிலைமைகளின் கீழ் வர்த்தக சமநிலைகள் என்பது பெரும்பாலும் அர்த்தமற்றதாகும். உண்மையில் அங்கே, சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கும் சீனாவைத் தூற்றும் அமெரிக்காவின் வலிமைக்கும் இடையிலுள்ள தொடர்பு தலைகீழாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், அதுவும் குறிப்பாக ஒபாமா நிர்வாகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னால், சீனா மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதினும், அதே காலக்கட்டத்திற்குள் சீனாவின் வர்த்தக உபரி அதன் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு நேர்விகிதத்தில் குறைந்துள்ளது. அதன் உள்நாட்டு மொத்த உற்பத்தி 7-8 சதவீதத்திலிருந்து தற்போது சுமார் 1-2 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. அமெரிக்காவின் அதிகரித்துவரும் விரோதபோக்கானது அமெரிக்க முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளேயே நிலவும் முரண்பாடுகளில் இருந்தும், சீனாவின் "தீவிரம்" என்பதிலிருந்து அல்லாமல் மாறாக உலகில் அதன் [அமெரிக்காவின்] இடம் வீழ்ச்சியடைந்து வருவதிலிருந்தும் எழுகிறது என்பதை இத்தகைய புள்ளிவிபரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த பதட்டங்கள் கண்டங்களின் அணிகளுக்கு (continental blocs) இடையில் மட்டும் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐரோப்பாவிற்குள் வெடித்த வரலாற்றுரீதியிலான அனைத்து முரண்பாடுகளும் மேலெழும்பி வருகின்றன. யூரோவைக் காப்பாற்றுவதற்கான ஒரு சமீபத்திய முறையீட்டில், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெல் கூறுகையில், ஒரு பொது செலாவணியைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றிற்குள் யுத்தத்தில் இறங்குவதில்லை என்பதை வரலாறு காட்டியுள்ளது என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இதனால் தான் யூரோ ஒரு பொதுவான செலாவணி என்பதையும் விட பலமடங்கு மேம்பட்ட ஒன்றாக உள்ளது. அதனால் அதை தோல்வியடைய விடக்கூடாது. யூரோ தோல்வியுற்றால், ஐரோப்பா தோல்வியுறும்” என்றார். ஆனால் இந்த சொற்கள் உதிர்க்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர், யூரோவின் எதிர்காலம் இன்னும் மோசமடைந்துள்ளது. மே 2010இல், யூரோமண்டல நிதியியல் நெருக்கடி வெளிப்படையாக வெடித்து வந்த போது, ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் ஜோன் குளோட் திரிஷே ஐரோப்பிய நிதியியல் அமைப்புமுறை முறிவினால் ஏற்படக்கூடிய பிரமாண்டமான அரசியல் விளைவுகளைக் குறித்துகாட்டும் விதமாக, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர், ஒருவேளை முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளிலேயே கூட இது "மிகவும் சிக்கலான நிலைமையாக" உள்ளது என்று எச்சரித்தார். ஓர் உறுதியான தீர்வை முன்னெடுப்பதற்கான இடமாக, வரவிருக்கும் G20 நாடுகள் கூட்டத்தின்மீது கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டு வருகின்ற போதினும், அங்கே எந்தவொரு "பொருளாதார" முறைமைகளும் கிடைக்காது என்பது பெரிதும் தெளிவாக உள்ளது. இங்கிலாந்து செய்தியிதழ் Daily Telegraph அக்டோபர் 7இல் வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டதாவது: “இரண்டு ஆண்டுகளுக்கு சற்று முன்னர், உலகத் தலைவர்கள் 1930களின் தவறுகளை தவிர்த்துவிட்டதாகவும், அதன்மூலம் ஒரு மந்தநிலையை தடுத்துவிட்டதாகவும் தங்களைத்தாங்களே மகிழ்ச்சியோடு பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் 2008இன் பிரச்சினைகளோ, எதிர்காலத்தில் வரவிருப்பதன் முன்கூட்டிய முன்னறிவிப்பாக இருந்ததைப் போல இப்போது தெரிகிறது. ஐரோப்பிய வங்கியியல் அமைப்புமுறை மீண்டும் பொறிவின் விளிம்பில் இருக்கையில், அரசியல்வாதிகளும் பொருளாதார நிபுணர்களும் வாய்ப்புகள் எதுவுமின்றி இருக்கிறார்கள், அத்தோடு அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும் நிகழ்ந்துவரும் சம்பவங்களுக்கு முன்னால் சக்தியற்று உள்ளன என்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. முன்னால் இருந்த சிறந்த படைகளை யுத்தத்திற்கு அனுப்பியாகிவிட்டது, அவை கிழிந்து கந்தலாகி திரும்பி வந்துவிட்டன. நிதி ஆதாரங்கள் தீர்ந்து போய்விட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா, சீனா போன்ற வளர்ந்துவந்த சந்தைகளில் ஏற்பட்ட வளர்ச்சியினால் கிடைத்த ஆதரவும் அதன் கடைசி கட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் நம்மை பாதுகாக்க அங்கே மத்திய வங்கியின் அச்சுக்கூடத்தில் கொஞ்ச வெடிமருந்து மிஞ்சியிருக்கிறது,” என்று குறிப்பிட்டது. எதிர்வரவிருக்கின்ற உலகளாவிய நெருக்கடிக்கு தேவையான அனைத்து பொருளாதார ஆதாரங்களும் தீர்ந்து போயுள்ள நிலைமையானது, இப்போது அதிகப்படியாக அரசியல் முன்வரும் என்பதை குறித்துக்காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஏற்கனவே அவற்றின் நிகழ்ச்சிநிரலை தயாரித்து வைத்திருக்கின்றன: அதாவது, தொழிலாள வர்க்கத்தின் மீது ஒடுக்குமுறையை அதிகரிப்பது, பின்னர் இருபதாம் நூற்றாண்டின் சமூக சலுகைகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக திரும்ப எடுப்பது, அதனோடு சேர்ந்து வர்த்தக யுத்தம், செலாவணி யுத்தம் மற்றும் இறுதியாக சர்வதேச அளவில் இராணுவ மோதல் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்வது. ஆனால் இப்போதைய நிலைமைகளில் ஒரு புதிய காரணி, அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு நுழைந்துள்ளது. எகிப்திய புரட்சிகர போராட்டங்கள், ஐரோப்பாவில் நடந்துவரும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும், மற்றும் தற்போது அமெரிக்கா முழுவதும் பரவிவரும் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டங்களும் சக்திகளின் சமநிலையை மாற்றி வருகின்றன. முதலாளித்துவம் அதன் சமூக அமைப்புமுறையின் நெருக்கடிக்கு எந்தவொரு தீர்வும் காணமுடியாமல் மனித இனத்தை பேரழிவிற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகின்ற அதேவேளையில், உலக முதலாளித்துவம் மற்றும் அதன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் குறித்த மார்க்சிச பகுப்பாய்வின் அனைத்து அடிப்படை கோட்பாடுகளும் நிரூபிக்கப்படுகின்றன. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற முதலாளித்துவத்திற்குள் எந்தவொரு சீர்திருத்த பாதையும் கிடையாது. ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும், இளைஞர்களும் ஒரேமாதிரியான உலகளாவிய இராட்சஷனை முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், நேர்மையான சமூக சமத்துவத்திற்கான தங்களின் கோரிக்கைகளைப் பெறவும், இலாபகர அமைப்புமுறையின் பேரழிவுமிக்க நலன்களுக்காக அல்லாமல் மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சமூகத்தை உருவாக்கவும் அவர்கள் போராடி வருவதற்கு இடையில், பிரமாண்டமான சமூக போராட்டங்கள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. சர்வதேச சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே தற்போதைய மிகப்பெரிய அரசியல் பணியாக உள்ளது. இதுவே உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினதும், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினதும் முன்னோக்காகும். |
|
|