World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை நவசமசமாஜக் கட்சி இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது
By K. Ratnayake இலங்கையின் முன்னாள் இடதுகளின் கட்சியான நவசமசமாஜ கட்சி, அக்டோபர் 8 அன்று நடக்கவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், கொழும்பு நகரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் முதலாளித்துவக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடன் கூட்டணி ஒன்றை அமைத்துக்கொண்டு சில சபைகளில் போட்டியிடுகின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் ரீதியில் போராடாமல், மக்களின் ஜனநாயக உரிமைகளை இந்த முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே வெற்றிகொள்ள முடியும் என்ற மாயையை பரப்பும் நவசமசமாஜ கட்சி, மக்களை முதலாளித்துவ கட்சிகளுக்கும் முதலாளித்துவ பிரிவினருக்கும் பின்னால் கட்டிவிடும் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கே இந்த தேர்தல் கூட்டணியை அமைத்துக்கொண்டுள்ளது. கொழும்பு மாநகர சபைக்கு ஜ.ம.மு. தலைவர் மனோ கனேசன் தலைமையிலான குழுவொன்று நவசமசமாஜ கட்சியின் ஒத்துழைப்புடன் போட்டியிடுகின்றது. ஜ.ம.முன்னணியின் கீழ், நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தலைமையிலான குழுவொன்று, கொழும்பை அண்டிய தெஹிவலை கல்கிஸ்ஸை மாநகர சபைக்குப் போட்டியிடுகின்றது. இந்த கூட்டணிக்கு ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) உட்பட்ட தீவிரவாத முகமூடி அணிந்துகொண்ட பல குழுக்களின் ஒத்துழைப்பும் கிடைப்பதாக நவசமசமாஜ கட்சி தெரிவித்துள்ளது. ஜ.ம.மு. மற்றும் மனோ கனேசன், நீண்ட காலமாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) உடன் கூட்டணி சேர்ந்திருந்தனர். கனேசன் 2001 முதல் 2009 வரை யூஎன்.பீ. உடனான கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அவர் 2010 தேர்தலில் தோல்வியடைந்தார். அண்மைய காலமாக ஜ.ம.மு. கொழும்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தாலும் வேட்பாளர்கள் பட்டியலில் அதற்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்று முனுமுனுத்தவாறு அது யூ.என்.பீ.யில் இருந்து தூர விலகி இருக்கின்றது. யூ.என்.பீ. உடன் ஜ.ம.மு. கொண்டிருந்த உறவு, அதனுடன் தேர்தல் கூட்டுக்குச் செல்வதில் நவசமசமாஜ கட்சிக்கு தடையாக இருக்கவில்லை. யூ.என்.பீ. மற்றும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மனோ கனேசனுடனும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு என்ற போர்வையில் நவசமசமாஜ கட்சியும் கருணாரட்னவும் கூட்டணி சேர்ந்திருந்தனர். நகரில் வாழும் 75,000 குடிசைவாசி குடும்பங்களை அகற்றி, கைப்பற்றும் நிலங்களை சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் நாட்டின் பெரும் வர்த்தகர்களுக்கும் விற்றுத் தள்ளுவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டம், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் மையப் பிரச்சினையாக தோன்றியுள்ளது. கொழும்பை தெற்காசியாவின் நிதிய மற்றும் சுற்றுலா மையமாக மாற்றுவது அரசாங்கத்தின் நவ-தாராளவாத முதலாளித்துவ பொருளாதார வேலைத் திட்டத்தின் பாகமாகும். இந்த திட்டத்துக்கு மக்களின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ளதால், குடிசையில் வாழும் குடும்பங்களை அகற்றும் எந்தவொரு திட்டமும் தம்மிடம் இல்லை என அரசாங்கம் அடித்துக் கூறுகின்றது. ஆட்சியில் இருந்த காலத்தில் வறியவர்களின் வீடுகளை அகற்றி தாக்குதல் நடத்திய யூ.என்.பீ., மக்களின் எதிர்ப்பை தமது நன்மைக்காக சுரண்டிக் கொள்வதற்கே இப்போது குடிசைவாசிகளின் உரிமைகள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. மனோ கனேசன், தான் கொழும்பு மேயர் பதவிக்கு பொருத்தமானவனாக இருப்பது ஏன், என தெளிவுபடுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல் சம்பந்தமாக ஒரு வசனமும் குறிப்பிடப்படவில்லை. மாநகரம் சம்பந்தமாக அவரின் “நோக்கம்” அதை “மனிதாபிமான முறையில்” அபிவிருத்தி செய்வதே என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “நகரின் பொது நடைமுறையை அபிவிருத்தி செய்வதற்காக நகரின் சொத்தை முடிந்தளவு தொழிற்துறை முறையில் பிரயோசனப்படுத்துவதற்கே” அவர் முன்நிற்கின்றார். “கொழும்பு வர்த்தக நகரமாக இருப்பதால்,” அரசாங்கத்தின் அலுவலகங்களை அகற்றி, வாணிப மற்றும் வியாபார நடவடிக்கைகளை சிறப்பாக செய்வதற்கு நகரின் வர்த்தக தட்டினருக்கு இடங்களை விடுவித்துக் கொடுக்குமாறு அவர் மத்திய அரசிடம் கோரியுள்ளார். வியாபாரத்தை சொந்தத் தொழிலாகக் கொண்டுள்ள கனேசனதும் ஜ.ம.முன்னணியினதும் வேலைத் திட்டம், முதலாளித்துவவாதிகளின் உரிமைகளை பாதுகாக்கின்ற வர்த்தக சந்தை கொள்கைகளை முன்னெடுப்பதன் படியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரும் வர்த்தகர்களதும் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளதும் ஆதரவுடன், புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட “சமாதான முன்னெடுப்புகளையும்”, உலக வங்கியால் கட்டளையிடப்பட்ட “இலங்கையை மீண்டும் மலரச் செய்வோம்” (Regaining Sri Lanka) என்ற வேலைத் திட்டத்தையும் ஆதரித்தே அவர் 2001ல் ஸ்தாபிக்கப்பட்ட யூ.என்.பீ. தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இலங்கையை மீண்டும் மலரச் செய்யும் வேலைத் திட்டமானது தொழிலாளர்களது உரிமைகளை பறிப்பதையும் கிராமப்புற வறியவர்களின் மானியங்களை கொடூரமாக வெட்டிக் குறைப்பதையும் நடைமுறைப்படுத்திய ஒரு வேலைத் திட்டமாகும். கொழும்பு நகரின் சிங்கள, தமிழ் மற்றும் ஏனைய மக்கள் பகுதியினரை “சமமாக நடத்துவதும் மற்றும் சம உரிமைகளை பெற்றுக்கொடுப்பதுமே” தமது அபிலாஷை என்பது மனோ கனேசன் கூறியிருக்கின்ற போலிக் கதைகளில் ஒன்றாகும். ஆயினும் அவரது தேர்தல் பிரச்சாரம், “ஒரு தமிழ் தலைவர்” என்பதால் தமிழ் மக்களின் வாக்கு தனக்கே கிடைக்க வேண்டும் என சுட்டிக் காட்டி, தமிழ் இனவாத உணர்வுகளுக்கு தூபம் போடும் போஸ்டர் விளம்பரங்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. நவசமசமாஜ கட்சிக்கு மனோ கனேசனின் இந்த இனவாத பிரச்சாரத்தைப் பற்றி எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. அண்மையில் அது முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்கும் ஒரே அமைப்பு என மிகைப்படுத்தி வந்தது. அரசாங்கத்தின் இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், தமிழ் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் சம்பந்தமான நம்பிக்கையீனத்தாலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகின்ற நிலையிலேயே நவசமசமாஜ கட்சி அவ்வாறு மிகைப்படுத்தியது. தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்நிற்பதாக சித்தரித்து, அவர்களை அந்த கட்சிக்குப் பின்னால் கட்டிவிடவே நவசமசமாஜ கட்சி முயற்சிக்கின்றது. ஜ.ம.மு., மத்திய மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செயற்படும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசுக்கு (ஜ.தொ.கா.) தலைமைத்துவம் கொடுத்து, அங்கு தொழிலாள வர்க்க மூலங்களை காட்டுவதன் காரணமாக, அதனுடன் கூட்டணி ஒன்றை அமைப்புது நியாயப்பூர்வமானது என கருணாரட்ன தெரிவிக்கின்றார். ஆயினும், ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, வறிய மட்டத்திலான சம்பளத்தை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் தோட்ட முதலாளிமாருக்கு உதவுகின்றமையால் ஜ.கொ.கா.வும் தொழிலாளர்கள் மத்தியில் அபகீர்த்திக்கு உள்ளாகி இருக்கின்றது. நவசமசமாஜ கட்சி தமது தேர்தல் கூட்டணி சார்பில், தெஹிவலை-கல்கிஸ்சை நகர சபைக்காக வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம், கட்சியின் முதலாளித்துவ சார்பு கொள்கையை அம்பலப்படுத்தும் சிறந்த உதாரணமாகும். அது முதலாளித்துவ கட்சிகள் தேர்தல் காலத்தில் வாக்குகளை கறப்பதற்காக கூறும் போலி வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று கதைகளுக்கு ஒப்பானதாக உள்ளது. “சுற்றுலா மற்றும் வெளிநாட்டு முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட ஸ்திரமற்ற பொருளாதார திட்டம் அரசாங்கத்தை பெரும் நிதி நெருக்கடிக்குள் சிக்க வைத்துள்ளது, என குறிப்பிடுகின்ற நவசமசமாஜ கட்சியின் வேலைத் திட்டம், நாட்டின் நிலங்களை தேசிய மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விற்றுத் தள்ளுவதன் மூலமே அரசாங்கம் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்கின்றது என குற்றஞ்சாட்டுகின்றது. இந்த கருத்து இலங்கை உட்பட சகல நாடுகளையும் பற்றிக்கொண்டுள்ள உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியையும், அதனால் தொழிலாள வர்க்கத்தின் முன் தோன்றியுள்ள ஆபத்துக்களையும் மூடி மறைக்கின்ற கருத்தாகும். கொழும்பில் இருந்து குடிசைவாசிகளை அகற்றுவதை தோற்கடிக்க வேண்டும் என குறிப்பிடுகின்ற நவசமசமாஜ கட்சி, அவர்களுக்கு மாடிவீடுகளை கட்டிக் கொடுக்கவும் நீர் மற்றும் மின்சாரம் மற்றும் “மாற்று எரிவாயுவையும்” பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூறுகின்றது. இவை வெற்று வாய்ச் சவாடல்களாகும். அவற்றை எவ்வாறு செய்வது என்பது பற்றி நவசமசமாஜ கட்சி எதையும் குறிப்பிடவில்லை. அரசாங்கம் தனது திட்டத்தை தொடங்கி கடந்த ஒரு ஆண்டு காலத்துக்குள் 200க்கும் அதிகமான குடும்பங்களையும் ஆயிரக்கணக்கான நடை பாதை வியாபாரிகளையும் பலாத்காரமாக வெளியேற்றியது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்புடனே இதை நடைமுறைப்படுத்தியது. நவசமசமாஜ கட்சியோ அல்லது அதன் பங்காளியான ஜ.ம.முன்னணியோ இந்த வறியவர்களை பாதுகாக்க எதனையும் செய்யவில்லை. தாக்குதலுக்கு உள்ளாகும் வறிய குடிசைவாசிகளை பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு வசதிகள் கொண்ட வீடுகளைப் பெற உள்ள உரிமைகளை வெற்றிகொள்ளவும் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்கி போராடுவதை தடுப்பதே நவசமசமாஜ கட்சியின் இந்த வாய்ச்சவாடலின் நோக்கமாகும். வீட்டு உரிமையை உறுதிப்படுத்துவதற்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். இலாபம் கறக்கும் பெரும் நிறுவனங்களை தொழிலாளர் ஆட்சியின் கீழ் மக்கள் மயப்படுத்தும் சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே அதற்கான வளங்களை பெற முடியும். அந்த வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும். நவசமசமாஜ கட்சி இந்த வேலைத்திட்டத்துக்கு இயல்பிலேயே விரோதமானது. சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்பும் பாதையை அடைத்துவிடுவதற்கே அது தலையீடு செய்துவருகின்றது. கருணாரட்ன, இந்த முதலாளித்துவ தட்டுக்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதை நியாயப்படுத்துவதற்கு கொடூரமான முறையில் ட்ரொட்ஸ்கிஸத்தை மேற்கோள் காட்டுகின்றார். நவசமசமாஜ கட்சிக்கும் கருணாரட்னவுக்கும் –இந்த பாசாங்குக்கும்- ட்ரொட்ஸ்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கருணாரட்ன லக்பிம நியூஸ் பத்திரிகைக்கு அக்டோபர் 2 அன்று எழுதிய ஒரு பத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் பகுதிகளில் இருந்து மேற்கோள் காட்டி, தமது சந்தர்ப்பவாத கொள்கையை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார். ட்ரொட்ஸ்கியிடம் இருந்து அவர் மேற்கோள் காட்டியிருப்பதாவது: “முதலாளித்துவ வளர்ச்சி காலங்கடந்த நாடுகள் சம்பந்தமாக, விசேடமாக காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகள் சம்பந்தமாக, நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு முன்வைக்கும் கருத்து, அந்த நாடுகளில் ஜனநாயகத்தையும் தேசிய விடுதலையையும் வெற்றிகொள்ளும் பிரச்சினைக்கு, தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட இனத்தின் தலைமைத்துவமாக, ஏனையவற்றை விட விவசாயிகளின் தலைவராக இருந்து ஸ்தாபிக்கின்ற சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே முழுமையான, தூய்மையான தீர்வு ஏற்பட முடியும்.” ட்ரொட்ஸ்கி அத்துடன் குறிப்பிட்டுள்ள பத்தியையும் கருணாரட்ன மேற்கோள் காட்டுகின்றார். “தொழிலாள வர்க்கம் விவசாயிகளுடன் செய்துகொள்கின்ற கூட்டணியின்றி ஜனநாயக புரட்சியின் கடமைகளை இட்டு நிரப்புவது ஒரு புறம் இருக்க, ஆழமாக முன்னிலைப்படுத்துவதும் முடியாததாகும். ஆயினும் தேசிய லிபரல் முதாளித்துவத்தின் அழுத்தத்துக்கு எதிராக செய்யும் சமரசமற்ற போராட்டத்தினால் அன்றி வேறு வழியில் இந்த இரு வர்க்கங்களுக்கு இடையில் கூட்டணியை அமைக்க முடியாது.” தான் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களுக்கு எதிராக செயற்படுவதை நியாயப்படுத்தவே கருணாரட்ன இந்த மேற்கோளை காட்டியிருக்கின்றார். அவர் ட்ரொட்ஸ்கியிடம் மேற்கோள் காட்டியிருப்பது ஜனநாயக உரிமைகளை இட்டு நிரப்புவது அல்லது ஜனநாயக பணிகளை இட்டு நிரப்புவதைப் பற்றிய அக்கறையினால் அல்ல. நிரந்தரப் புரட்சி கோட்பாட்டை திரிபுபடுத்தி, தொழிலாளர்களும் இளைஞர்களும் அந்த கோட்பாட்டுக்காக மற்றும் வேலைத் திட்டத்துக்கான போராட்டத்துக்கு வருவதை தடுப்பதற்கே ஆகும். ட்ரொட்ஸ்கி சமரசமற்றுப் போராட வேண்டும் என கூறிய முதலாளித்துவத்தின் அழுத்தத்தை தொழிலாள வர்க்கத்துக்குள் ஊடுருவச் செய்யும் கருவியாகவே நவசமசமாஜ கட்சி செயற்படுகின்றது. ஜ.ம.மு. உடன் நவசமசமாஜ கட்சி கொண்டுள்ள கூட்டணி இதற்கு ஒரு புதிய உதாரணமாகும். கடந்த ஆண்டில் பல்வேறு முதலாளித்துவ மற்றும் வலதுசாரி குழுக்களை முற்போக்கானவை என மிகைப்படுத்திக் காட்டி, அவற்றுடன் கூட்டணிகளை ஏற்படுத்திக்கொள்ள தான் எடுத்த முயற்சிகள் பற்றி கருணாரட்ன இதற்கு முன்னர் லக்பிம நியூஸ் பத்திரிகைக்கு எழுதிய பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “உறுதியான ஜனநாயக வேலைத் திட்டத்துக்காகப் போராட விரும்பும் தீவிர போக்கு யூ.என்.பீ.க்குள் உள்ளது. இரண்டாவது, இடதின் முன்னாள் தலைமைத்துவத்தையும் தாண்டிச் செல்லும் இன்னுமொரு குழுவும் உள்ளது.” அரசாங்கத்தின் ஜனநாயக விரோத தாக்குதல்களுக்கு போலித்தனமாக எதிர்ப்பு காட்டி, வெகுஜன எதிர்ப்பை சுரண்டிக் கொள்வதற்கு செயற்பட்ட வலதுசாரி குழுவினரையே, யூ.என்.பீ.யின் உறுதியான ஜனநாயக தீவிரவாதிகளாக கருணாரட்ன உயர்த்திக் காட்டுகிறார். அரசாங்கத்தோடு சேர்ந்த லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்டாலினிஸ கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே போலி முன்னாள் இடதுகளாகும். இந்த இரு கட்சிகளதும் தலைமைத்துவத்தில் இருந்து தூர விலகிச் சென்றவர்கள் என கருணாரட்ன காட்டுவது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் பொலிஸ்-அரச வேலைத்திட்டங்கள் பற்றி மோசடியாக வாய்சவாடல் விடுப்பவர்களையே ஆகும். அவர்கள் உட்பட இந்த இரு கட்சிகளும், வட கிழக்கு யுத்தத்துக்கு ஆதரவு கொடுத்து, உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு இடைவிடாமல் ஒத்துழைத்தனர். இந்த இரு கட்சிகளுடன் கூட்டுக்குச் செல்வது வெற்றியளிக்காத நிலைமையிலேயே ஜ.ம.மு. உடன் புதிய கூட்டணியை அமைத்ததாக கருணாரட்ன தெரிவிக்கின்றார். இத்தகைய பல்வேறு முதலாளித்துவ குழுக்களை ஒன்று சேர்த்து, தான் “சமூக ஜனநாயக” இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவதாக கருணாரட்ன தெரிவிக்கின்றார். ஜ.ம.மு. உடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள கூட்டை அதன் உயர்ந்த விளைவாக அவர் காட்டுகின்றார். தான் “சமூக ஜனநாயக” இயக்கம் ஒன்றை அமைப்பதற்கு வழியமைப்பதாக கருணாரட்ன தெரிவிப்பது ஒரு சங்கேத குறியாகும். ஏனெனில் அந்த பெயரிலான கட்சி, முதலாளித்துவமயமாகி அதிக காலமாகிவிட்டது. கருணாரட்ன அமைக்க முயற்சிப்பது அத்தகைய முதலாளித்துவ கூட்டே ஆகும். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி, முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டரசாங்கம் ஒன்றை அமைத்த போது, கருணாரட்ன லங்கா சமசமாஜக் கட்சியின் உறுப்பினராக இருந்து அதற்கு ஆதரவளித்தார். இந்த கூட்டரசாங்கம் செய்த அநியாய அரசியல் நடவடிக்கைகளுக்கு லங்கா சமசமாஜக் கட்சியைப் போலவே அதன் உறுப்பினர்களாக இருந்து பின்னர் நவசமசமாஜக் கட்சியை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்த சகலரும் பொறுப்பாளிகளாவர். 1978ல் கட்சியை ஸ்தாபித்தது முதலே நவசமசாமஜக் கட்சி, யூ.என்.பீ., ஸ்ரீ.ல.சு.க. மற்றும் தமிழ் கட்சிகள் உட்பட சகல முதலாளித்துவ அமைப்புக்களுடனும் மோசடி சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, அவற்றை மிகைப்படுத்திக் காட்டி உழைக்கும் மக்களை அவற்றுடன் கட்டிப்போடுவதற்கு செயற்பட்டு வந்துள்ளது. தன் விருப்பப்படி வலதுக்கு சென்ற இந்த கட்சி, ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளை மேலும் மேலும் பிரதிபலித்துள்ளது. பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் நடந்த யூ.என்.பீ.யின் “சமாதான முன்னெடுப்புகளுக்கு” இந்த கட்சி ஒத்துழைப்பு கொடுத்தது மட்டுமன்றி, இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் யுத்தத்தை ஈவிரக்கமின்றி முன்னெடுத்த போது, அதே ஏகாதிபத்திய சக்திகளிடமே அதை நிறுத்துவதற்கு தலையீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. “யுத்தத்தின் பின்னர், தமிழ் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுக்கு வருமாறு கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவும் இந்தியாவும் தலையீடு செய்வதற்கு ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட பெரும் வல்லரசுகள் யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவளித்தன என்பதும், அவை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி அன்றி, தமது மூலாபாய நலன்களையிட்டே அக்கறை காட்டுகின்றன என்பதும் நவசமசமாஜக் கட்சிக்கு தெரியாதது அல்ல. ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியது போல், முதலாளித்துவ கட்சியின் அழுத்தத்துக்கு எதிரான சமரசமற்ற போராட்டம், முதலாளித்துவ தட்டுக்களுக்கு இடது முகமூடியை அணிவிக்கும் நவசமசமாஜக் கட்சியை போன்ற கட்சிகளுக்கு எதிரான போராட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ, தொழிற்சங்கங்கள் மற்றும் சந்தர்ப்பவாத அமைப்புக்களில் இருந்து அரசியல் ரீதியில் சுயாதானமாக்கி, ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரின் தலைமைத்துவத்தை ஸ்தாபிப்பதற்காக, சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவரும் முன்னோக்கை வழங்குவது சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும். இந்த போராட்டம் உலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும். |
|