World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Stalinist union works to impose company demands on locked-out Maruti Suzuki workers

இந்தியா: ஸ்ராலினிய தொழிற்சங்கம் கதவடைப்பு செய்யப்பட்ட மாருதி சுஷூகி தொழிலாளர்கள் மீது நிறுவனத்தின் கோரிக்கைகளை திணிக்க முயல்கின்றது

By Arun Kumar
27 September 2011

Back to screen version

அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (ஏஐடியுசி) ஸ்ராலினிச தலைமை, ஒரு "நன்னடத்தை பத்திரத்தில்" கையொப்பமிடக் கோரும் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு, ஹரியானா மானேசரில் உள்ள மாருதி சுஷூகி கார் உற்பத்தியாலையில் கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களை அடிபணியச் செய்ய வலியுறுத்தி வருகிறது. அந்த "நன்னடத்தை பத்திரம்" ஓர் ஒடுக்குமுறை, சர்வாதிகார தொழில் நிர்வாகத்தைப் பலப்படுத்தும் மற்றும் தொழிலாளர்களின் எவ்வித நேர்மையான பிரதிநிதித்துவத்தையும் மறுப்பதாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலையான, மாருதி சுஷூகி இந்தியா (MSI) கடந்த ஆகஸ்ட் 29இல் இருந்து அதன் மானேசர் ஆலையில் சுமார் 3,000 தொழிலாளர்களுக்கு கதவடைப்பை அறிவித்துள்ளது. தொழிலாளர்களின் எதிர்ப்பை உடைக்கும், மற்றும் அதன் தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களால் சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மாருதி சுஷூகி தொழிலாளர்கள் அமைப்பை (MSEU) அங்கீகரிக்க மறுக்கும் நிறுவனத்தின் முயற்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான அம்மாநில அரசும், பொலிஸூம் மற்றும் நீதிமன்றங்களும் முழுமையாக நிறுவனத்திற்கு ஆதரவளித்துள்ளன.

MSEU எதனோடு இணைந்துள்ளதோ அந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஐ) சேர்ந்த தொழிலாளர் கூட்டமைப்பான அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) இந்த நிறுவன-அரசு தாக்குதலுக்கு எவ்வித மும்முரமான எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக கதவடைப்பிற்கு உள்ளாகி உள்ள தொழிலாளர்களை தனிமைப்படுத்தியுள்ள அது, கதவடைப்பு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் அரசின் வலதுசாரி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் உள்ள ஏனைய சுஷூகி ஆலைகள் மற்றும் துணை நிறுவனங்களில் எழுந்த ஆதரவு வேலைநிறுத்தங்களையும் குலைத்து வருகிறது.

இது நிறுவனத்தையும் அரசாங்கத்தையுமே ஊக்கப்படுத்தி உள்ளது. செப்டம்பர் 18இல் பேச்சுவார்த்தை முறிந்ததும், பொய் குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸ் மூன்று MSEU தலைவர்களைக் கைது செய்தது.

MSIஇல் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு பரந்தளவில் தொழிலாளர்களிடையே கிளர்ச்சியை தூண்டிவிடக்கூடும் என்ற அச்சம் குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் உள்ள ஏனைய தொழில் வழங்குனர்கள் மத்தியிலும் மற்றும் அரசாங்கத்தின் மத்தியிலும் அதிகரித்துவரும் நிலைமைகளின்கீழ், தற்போது, அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர்கள் கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களை MSIயிடம் சரணடைய வலியுறுத்தி வருகின்றனர். “நன்னடத்தை பத்திரத்தின்" சற்றே மாற்றப்பட்ட ஒரு பதிப்பில் கையெழுத்திட அவர்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர். துல்லியமாக, MSEU அங்கீகரிக்கும் அவர்களின் போரட்டத்தைக் கைவிடும் மற்றும் மிகவும் போர்குணமிக்க முப்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்குவதன் மூலமாக அவர்களைக் களையெடுப்பதையும் புதிய சற்றே திருத்திய பதிப்பு உட்கொண்டுள்ளது.

 “பத்திரத்தை" சற்றே குறைவான அடக்குமுறையோடு செய்யவும், அதன் எரிச்சலூட்டும் தன்மையை சற்றே குறைக்கவும், மற்றும் MSEU தலைவர்கள் இணங்கிச் செல்லுமாறு அவர்களின் செல்வாக்கை மேலோங்கி நிறுத்தும் ஒரு வரைவை மறுதிருத்தத்தோடு செய்ய, அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் சமீபத்திய நாட்களில் பின்புலத்தில் MSI உடன் பேரம்பேசி வருகிறது. “முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய நன்னடத்தை நெறிமுறைகளின்மீது நிறுவனமும், தொழிலாளர்களும் ஓர் இணக்கத்தை எட்டியுள்ளனர். நிறுவனம் பழியுணர்ச்சியோடு செயல்பாடாதென அது உத்திரவாதம் அளித்துள்ளது,” என MSEU பொதுச்செயலாளர் ஷிவ் குமார் தெரிவிக்கிறார்.

முந்தைய பதிப்புகளைப் போலவே, புதிய பத்திரமும் "தொழிலாளர்கள் மெதுவாக வேலை செய்யக்கூடாது, வேலையை நடுவில் நிறுத்தக்கூடாது, வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, வேலையிட விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும், ஆலையின் வழக்கமான உற்பத்தியைப் பாதிக்கும் நாசவேலைகளில் அல்லது வேறு எவ்வித தன்னிச்சையான காரியங்களிலும் ஈடுபடக்கூடாது" போன்ற உறுதிமொழிகளை தொழிலாளர்கள் மீது திணிக்கிறதென்று, செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்பும் நிலவுவதாலும், மிகவும் தீவிரமாக உள்ள பல தொழிலாளர்களை வேலையைவிட்டு நீக்க நிறுவனம் உறுதியுடன் இருப்பதாலும், கதவடைப்பு தொடர்கிறது.

ஒழுக்கமீறல் மற்றும் அடிபணியாமைக்காக" வேலையைவிட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள 62 தொழிலாளர்களில் சுமார் பாதி பேரை வேலையில் அமர்த்த நிறுவனம் உடன்பட்டால், தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கலாமென அது குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. ஆனால் நீக்கப்பட்ட தொழிலாளர்களில் 18 பேரைத் தவிர கூடுதலாக ஒருவரையும் சேர்க்க முடியாதென நிறுவனம் விடாப்பிடியாக உள்ளது. இந்த நிலைப்பாடு ஹரியானாவின் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தாலும் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்லது முதன்மை குற்றப்பத்திரிகை (FIR) வழங்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குஎடுக்க முடியாது. 18-20 தொழிலாளர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள நிர்வாகம் உடன்பட்டுள்ளது,” என்று ஹரியானாவின் தொழிலாளர்நலத்துறை மந்திரி ஷிவ் சரண் லால் சர்மா தெரிவித்தார். தொழிலாளர்களைநன்னடத்தை பத்திரத்தில்" கையொப்பமிட கோரியும், “வெளியில் இருப்பவர்களால் அரசியல்ரீதியாக தூண்டிவிடப்படுகிறது" என MSEU குற்றஞ்சாட்டியும், தொழிலாளர்கள் நாசவேலைகளில் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறும் நிறுவனங்களின் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டும், கதவடைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்தே, சர்மா நிறுவனத்தின் பிரச்சாரத்தையே கிளிப்பிள்ளை போல திரும்பதிரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிறுவனம் பின்வாங்காது; அதற்கு மாறாக அது மாற்று தொழிலாளர்களை, அதாவது கருங்காலிகளை நியமிக்க முனையுமென்று சமீபத்திய நாட்களில் MSI சேர்மேன் R.C. பார்கவா தொடர்ந்து அறிவித்து வருகிறார். “எதிர்காலத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தொழிலைச் செய்வதையும் விட, அதற்கு பதிலாக இப்போது நான் உற்பத்தியை இழக்கவும் தயாராக உள்ளேன்,” என்று பார்கவா அறிவித்தார்.

தனது தொழிலாளர்களிடமிருந்து பெரும் இலாபங்களை முறுக்கிப் பிழிய அனுமதிக்கும் ஒரு வேலையிட நிர்வாகத்தைத் தாங்கிப்பிடிக்க, கணிசமான அளவிற்கு உற்பத்தியை இழக்கவும் MSI தயாராக இருக்கிறது என்பதையே பார்கவா குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடுகையில், “நாம் விரும்பும் வரைக்கும் இந்த வேலைநிறுத்தத்தை நம்மால் தாங்க முடியும். நமக்கு தாக்குப்பிடிக்கும் சக்தி உள்ளது நாம் ஒரு நீண்டகால கண்ணோட்டத்தை எடுக்க வேண்டியுள்ளது. நாம் இந்த விளையாட்டில் ஒருசில மாதங்களோ அல்லது ஒருசில ஆண்டுகளோ இல்லை,” என்றார்.

திங்களன்று வெளியான ஒரு நேர்காணலில் பார்கவா குறிப்பிட்டதாவது: நிறுவனம் இதுவரையில் 1,200 மாற்று தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அது கதவடைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 40 சதவீதமாகும். வரவிருக்கும் நாட்களில், மாதங்களில் இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க நிறுவனம் தயாராக உள்ளது, என்றார்.

செய்திகளின்படி, கடந்த மாதம் கதவடைப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து 7 பில்லியன் ரூபாய் மதிப்பிலான அல்லது 140 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சுமார் 16,000 உற்பத்தியை நிறுவனம் இழந்துள்ளது. ஜூனில் நடந்த 13 நாள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம், குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகத்தில் ஏனைய தொழிலாளர்களிடமிருந்தும் பெரும் ஆதரவைப் பெற்றுவந்த முக்கிய தருணத்தில், ஸ்ராலினிச அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸின் உத்தரவுகளால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட அந்த வேலைநிறுத்தம், நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் (111 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பை ஏற்படுத்தியது.

MSI தொழிலாளர்களின் தைரியமான அந்த போராட்டம் உடைக்கப்படாமல் இருந்திருந்தால், இதேபோன்று ஒரேமாதிரியான நிலைமைகள் அல்லது காட்டுமிராண்டித்தனமான சுரண்டலை முகங்கொடுத்து வரும் பிரமாண்டமான குர்காவ்-மானேசர் தொழில்துறை வளாகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களிடமிருந்து தொடங்கி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஒரு தொழில்துறைரீதியிலான மற்றும் அரசியல்ரீதியிலான எதிர்ப்பு போராட்டத்தின் தாக்குமுனையாக அதை மாற்றியிருக்க முடியும்.

ஹரியானாவின் அண்டைமாநிலமான பஞ்சாபிலுள்ள பிரதான தொழில்துறை நகரமான லூதியானாவில், ஜவுளித்துறை ஆலைகளின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள உயர்வு, சிறந்த வேலையிட சூழல்கள் என அவர்களின் கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 21இல் இருந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அந்த தொழிலாளர்கள் மானேசரில் உள்ள மாருதி சுஷூகி ஆலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். மலிவுக்கூலி தொழில்முறை, வேலை பாதுகாப்பின்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் வழங்கப்படாமை போன்ற ஒரேமாதிரியான நிலைமைகளை முகங்கொடுக்கும் தொழிலாளர்களின் ஒரு பொதுவான போராட்டத்தின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகின்றது.

உருவாகிவரும் இதுபோன்றவொரு போராட்டத்தில் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் மற்றொரு பிரதான ஸ்ராலினிச கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு (சிபிஐ-எம்) சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் சம்மேளனம்(CITU) போன்ற தொழிற்சங்கங்களே தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் மிகப்பெரிய தடைகளாகும். வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதில் இந்த தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம், அவற்றை வழிநடத்தும் கட்சிகளின் முன்னோக்கு, நிலைநோக்கு மற்றும் செயல்பாடுகளிலிருந்து வருகிறது. சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டுமே முதலாளித்துவ அரசியலமைப்பின் ஓர் உள்ளார்ந்த பாகமாக உள்ளன. தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸிற்கும், ஏனைய இந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கும் அரசியல்ரீதியாக அடிபணிய வைப்பதில், அவை பல தசாப்தங்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அவை ஆட்சியில் இருந்த போதும் கூட, அவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள "முதலீட்டாளர்கள் சார்ந்த" கொள்கைகளையே பின்பற்றின.