சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்துக்கு எதிரான அரசாங்கத்தின் வேட்டையாடல்

W.A. Sunil
1 October 2011

use this version to print | Send feedback

தனியார் மருத்துவ கல்லூரியை ஸ்தாபிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு விரோதமாக எதிர்ப்பு இயக்கமொன்றில் ஈடுபட்டிருந்ததனால், அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்துக்கு எதிராக அரசாங்கம் வேட்டையாடல் ஒன்றை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதன் பாகமாக, கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் நிர்வாகியின் பொறுப்பில் இருந்த, சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதனியவின் சுயவிபர கோப்பு, கடந்த திங்கட் கிழமை (26) லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரால் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டு கால பயிற்சிக்காக விடுமுறை பெற்றுக்கொள்ளும் போது அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக கூறியே இந்த கோப்பு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வைத்தியர் பாதனியவுக்கு எதிராக விசாரணையொன்று நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது.

வைத்தியர் பாதனிய இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றார். எவ்வாறெனினும் அத்தகைய மோசடி நடந்திருந்தால், அது நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட காரணத்தால், அது சம்பந்தமாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு அன்றி, சுகாதார அமைச்சே அந்த விசாரணையை நடத்தவேண்டும் என வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது.

வைத்தியர் பாதனியவும் வைத்திய அதிகாரிகளின் சங்கமும், அரசாங்கம் மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு வைத்திய பட்டத்தை வழங்குவதற்கு அனுமதி கொடுத்திருப்பது பற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதால், அவர் திருடன், வஞ்சகன் மற்றும் தகமை பூர்த்தியடையாத நபர் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க பகிரங்கமாக விமர்சித்தார். வைத்திய சங்கம் அதற்கு எதிராக 300 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளது. இதன் பின்னரே வைத்தியர் பாதனியவின் சுயவிபர கோப்பு கடத்திச் செல்லப்பட்டுள்ளதோடு அவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

அச்சுறுத்தலின் பாகமாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, வைத்தியர் பாதனியவிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது. அவருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடோ அல்லது மனுவோ தாக்கல் செய்யப்படாத நிலையில், அவ்வாறு வாக்குமூலம் பெறுவது, வெறுமனே தன்னை துன்பத்துக்கு உள்ளாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும் என பாதனிய கூறினார். வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர்களுக்கு தொலை பேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் சங்கம் தெரிவிக்கின்றது.

எந்தவொரு எதிர்ப்பையும் அலட்சியம் செய்த திசாநாயக்க, மருத்துவ கல்லூரி உட்பட தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்க செயற்படுவதாக பகிரங்கமாக அச்சுறுத்தும் முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகள் இயக்கும் பல இடங்களை அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட் கிழமை அளவில், வைத்தியர் பாதனியிவின் சுய விபரக் கோப்பை மீண்டும் சிறுவர் வைத்தியசாலையில் ஒப்படைக்காவிட்டால், எதிர்வரும் செவ்வாய் கிழமை (04) முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு செப்டெம்பர் 29 நடந்த கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்கும் வேலைத்திட்டத்தின் பாகமாக அரசாங்கம் கடந்த மாதம் அதி விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம், தெற்காசிய தொழில்நுட்ப மருத்துவ நிறுவனம் என்ற மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ பட்டத்தை (எம்.பி.பி.எஸ்) வழங்குவதற்கு அனுமதி அளித்தது. அந்த மருத்துவ கல்லூரிக்கு வைத்தியர்களை பயிற்றுவிப்பதற்குப் போதுமான வசதிகள் இல்லாமையால், அது வழங்கும் பட்டத்தை இலங்கையில் வைத்திய தொழிலில் ஈடுபடுவதற்கான தகமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை வைத்தியர்கள் சபை தெரிவித்த போது, வைத்தியர்கள் சபையை கலைத்து விடுவதாக அமைச்சர் திசாநாயக்க அச்சுறுத்தினார். இலங்கையில் நடைமுறையில் உள்ள விதிகளின் படி, பட்டம் கிடைத்தாலும் வைத்திய சபையின் அனுமதி இன்றி வைத்திய தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு பட்டம் வழங்கும் அனுமதியை கொடுத்தமை, இலவச கல்வி மற்றும் சுகாதார சேவையை அழிக்கும் அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் பாகமாகும். அத்தோடு இது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் உலக வங்கியின் கட்டளையின் கீழ், சமூக நலன்புரி சேவைகளை வெட்டித்தள்ளும் பொருளாதார மறுசீரமைப்புடன் சம்பந்தப்பட்டதாகும்.

தனியார் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமாக மாணவர்கள் மத்தியிலும், அதே போல் வைத்தியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் விளைவாகவே வைத்தியர்கள் சங்கம் பிரச்சாரத்தில் இறங்கியது. எவ்வாறெனினும் வைத்திய அதிகாரிகளின் சங்கம், அரசாங்கத்தின் இந்த திட்டத்துக்கு அந்தளவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் சரியான தரத்துடன் இயங்காதது சம்பந்தமாகவே அது எதிர்ப்புத் தெரிவிக்கின்றது.

ஆழமடைந்துவரும் உலக பொருளாதார நெருக்கடியின் கீழ், உலகின் ஏனைய சகல நாடுகளிலும் உள்ள ஆளும் வர்க்கங்களைப் போலவே, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும், சமூக நலன்புரி சேவைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் பொருளாதார வெட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வேலைத் திட்டம் எதுவும் கிடையாது.

அதே போல், அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டத்துக்கு எதிராக வளர்ச்சியடைகின்ற எந்தவொரு எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. கொடூரமான ஒடுக்குமுறை சட்டங்கள், பலாத்காரம் மற்றும் இராணுவ பொலிஸ் வழிமுறைகளைப் பயன்படுத்தி இத்தகைய எதிர்ப்புகளை நசுக்குவதற்கு அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது. சம்பளத்தை வெட்டிக் குறைக்கும் திட்டமான தனியார் துறை ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக, கடந்த மே மாதம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் மீது கொடூரமான பொலிஸ் தாக்குதலை நடத்தி ஒரு தொழிலாளியை கொலை செய்த அரசாங்கம், கடந்த மாதம் எஞ்சியிருக்கும் சம்பளத்தை கேட்டு பிரச்சாரம் செய்த இலங்கை மின்சார சபையின் தொழிலாளர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவைகள் கட்டளையை அமுல்படுத்தியது. இலவச கல்வி வெட்டுக்கு எதிராக வளர்ச்சியடைகின்ற பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்காக, அக்டோபர் மாதத்தில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கும் ரத்ன லங்கா பாதுகாப்புச் சேவையை பல்கலைக்கழக பாதுகாப்புக்குப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வைத்திய அதிகாரிகளின் சங்கத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரச ஒடுக்குமுறை, தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக உக்கிரமாக்கப்படும் அரச பயங்கரவாதத்தின் பாகமாகும். அதே போல், அது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் விடுக்கப்படும் கடும் முன்னெச்சரிக்கையாகும். வைத்தியர்கள் சங்கத்துக்கு எதிரான வேட்டையாடலை தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கம் முன்னிலைக்கு வர வேண்டும்.