சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Welsh mining tragedy and the return to Dickensian-style exploitation

வேல்ஸ் சுரங்கச் சோகமும் டிக்கன்சன் வகையிலான சுரண்டல் மீண்டும் திரும்புவதும்

Robert Stevens and Julie Hyland
27 September 2011

use this version to print | Send feedback

வேல்ஸில் ஸ்வான்ஸீ பள்ளத்தாக்கிலுள்ள தனியார் (க்ளைஸன்) Gleision நிலக்கரிச் சுரங்கத்தில் நான்கு சுரங்கத் தொழிலாளர்களின் சோகமான இறப்புக்களுக்கு இரு வாரங்களுக்குப் பின்னர், பொலிஸ் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிர்வாகத்தின் (HSE) விசாரணையாளர்கள் அதற்கான காரணத்தைப் பற்றி இப்பொழுது தீர்மானிப்பது மிகவும் காலத்திற்கு முந்திய செயலாகும் என்று கூறியுள்ளனர். இத்தகைய குழப்பத்தின் நோக்கம் பிரிட்டன் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் கடந்த கால சமூக நலன்களை தகர்த்தலின் விளைவாக ஏற்பட்டுள்ள டிக்கன்சன் வகையிலான சுரண்டலை மூடி மறைப்பதுதான்.

62 வயது சார்ல்ஸ் பிரெஸ்லின், 50 வயது டேவிட் பவல், 39 வயது ஹரி ஜென்கின்ஸ் மற்றும் 45 வயது பிலிப் ஹில் ஆகியோர் செப்டம்பர் 15ம் தேதி நிலத்தடி நீரைத் தேக்கிவைத்திருந்த ஒரு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து, அவர்கள் வேலை செய்து வந்த நிலத்தடிப் பகுதியில் ஏராளமான நீர்ப் பெருக்கு ஏற்பட்டதில் கொல்லப்பட்டனர்.

துழைக்கப்படும் சுரங்கங்கள் குறிப்பிடத்தக்க வகையில் ஆபத்தானவை என்பது தெரிந்ததே; க்ளைஸன் இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரு மலைப் பகுதியில் வெட்டப்பட்டுள்ள இச்சுரங்கம் உள்ளூர் மக்களால் மரணப்பொறி என்றே கருதப்படுகிறது. நான்கு அனுபவமிக்க சுரங்கத் தொழிலாளிகள், சுரங்கத்தில் வேலையில் இருக்கும் தொழிலாளர்களில் சிலரே, மிகக் குறுகிய இடத்தில் பணி புரிந்துகொண்டிருந்தனர்; நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு வெடி மருந்துகளையும் மண்வெட்டிகளையும் பயன்படுத்தினர்.

மிக நேரடியான அர்த்தத்தில், அவர்களுடைய இறப்பு 1984-85ல் ஓராண்டு நீடித்திருந்த சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டு தோல்வி அடைந்ததின் விளைவுதான். இதன் விளைவாக சுரங்கத் தொழில் பின்னர் மூடப்பட்டதும் எஞ்சியிருந்தவை தனியார்மயம் ஆக்கப்பட்டதுமாகும்.

க்ளைஸன் சுரங்கத் தொழிலாளர்களின் மோசமான சுரண்டல் மற்றும் அவர்கள் பாதுகாப்பு பற்றிய திமிர்த்தனமான பொருட்படுத்தாத் தன்மை ஆகியவை தெற்கு வேல்ஸ் மற்றும் சுரங்கத் தொழிலுக்கும் அப்பால் எதிரொலிக்கின்றன. பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை இழிசரிவுற்ற மூன்று தசாப்தங்களைப் பற்றி இது குறிக்கிறது.

தெற்கு வேல்ஸ் உலகத்தின் மிக முக்கியமான நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் ஒன்றாக ஒருகாலத்தில் இருந்தது. 1913ல் இது உலகின் நிலக்கரி ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டிருந்தது; இங்கு 620 சுரங்கங்களில் 232,000 சுரங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அச்சகாப்தம் பிரிட்டனின் தனியாரிடம் சுரங்கத்தொழில் இருந்தகாலமாகும். பேரழிவுகளில் சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழப்பதும், உறுப்புக்களை இழப்பதும் வாடிக்கையாக இருந்தன. 1851 க்கும் 1920க்கும் இடையே தெற்கு வேல்ஸ் சுரங்க வயல்களில் 48 பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு 3,000 இறப்புக்கள் ஏற்பட்டிருந்தன. மிக மோசமான இறப்பு எண்ணிக்கையைக் கொடுத்த பேரழிவு 1913ல் செங்கென்யிட்டில் (Senghenydd) இருந்த யூனிவேர்சல் சுரங்கப் பேரழிவு ஆகும்; இதில்  439 பேர் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிலக்கரித் தொழில் தேசியமயமாக்கப்பட்டபின், பிரிட்டனில் சுரங்க வேலைகள் சற்றுக்கூடுதலான பாதுகாப்பானது. ஒரு தன்னம்பிக்கை கூடிய தொழிலாள வர்க்கம் போராடி விடுமுறை, நோய்வாய்ப்பட்ட காலத்திற்கு ஊதியம் ஆகியவற்றைப் பெற்றது. ஆனால் ஊதியங்கள் குறைவாகத்தான் இருந்தனஇதையொட்டி அடிக்கடி வேலநிறுத்தங்கள் ஏற்பட்டன. பெப்ருவரி 1974ல் எட்வர்ட் ஹீத்தின் பழைமைவாத அரசாங்கம் ஒரு தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால் வீழ்ச்சியுற்றது.

பிரிட்டனில் மிகப் போர்க்குணம் நிறைந்த தொழிலாளர்கள் பிரிவின் மீது தோல்வியை சுமத்துவதற்குத்தான் 1984ல் மார்கரெட் தாட்சரின் பழைமைவாத அரசாங்கம் ஒரு வேலைநிறுத்தத்திற்குத் ஆத்திரமூட்டியது. 20 சுரங்கங்கள் அது மூடும் திட்டத்தை அறிவித்தது; சுரங்கத் தொழிலாளர்கள் அறிந்தபடி இது சுரங்கத் தொழிலையே தகர்ப்பதற்கான உந்துதலின் தொடக்கம்தான்.

தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கோழைத்தனம் மற்றும் துரோகத்தனத்தை தாட்சர் பெரிதும் நம்பி தன் மூடும் திட்டத்தை விரைவுபடுத்தினார். வேலைநிறுத்தக்காலம் முழுவதும் அவர்கள் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எந்தப் போராட்டத்தையும் நடத்த மறுத்துவிட்டனர். Trades Union Congress (TUC) அனைத்து உத்தியோகபூர்வ இரண்டாம் நிலை ஆதரவு வேலைநிறுத்த நடவடிக்கையை எதிர்த்தது. தொழிற் கட்சித் தலைவர் நீல் கின்னோக் மறியல் செய்வோர் வன்முறைக்காரர்கள் என்று கண்டித்தார்.

இக்காட்டிக்கொடுப்பிற்கு தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றியமும் (NUM) அதன் அப்பொழுதைய தலைவர் ஆர்தர் ஸ்கார்கில்லின் ஆதரவும் இருந்தது. துரோகத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குப் பதிலாக ஸ்கார்கில் TUC க்கு ஒரு இரகசியக் கடிதம் எழுதினார்: அதில் இச் சங்கத்தினால் TUC தலையிட வேண்டும், உதவ வேண்டும் என்று எக்கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.”

இதுதான் ஸ்கார்கில்லின் தேசியவாத வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது; தொழிலாள வர்க்கம் தாட்சர் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் அதற்குப் பதிலாக உண்மையான தொழிலாளர் அரசாங்கத்தை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவுவதற்கு ஒரு அரசியல் தாக்குதல் நடத்த அழைப்பு விடுவதற்கு அவர் மறுத்ததும் இதனால்தான்.

சுரங்கத் தொழிலாளர்கள் தோல்வியை அடுத்து, பழைமைவாத அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தேர்ந்தெடுத்து நசுக்கியது. இன்று NUM என்பது பெயரளவில் பதிவுசெய்யப்பட்ட 1,700 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள அமைப்பாகிவிட்டது.

இப்போராட்டத்தைக் கடந்த ஒரு தலைமுறைத் தொழிலாளர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இத்தகைய அனுபவங்களைப் பற்றி ஏதும் தெரியாது. இது வெறும் 25 ஆண்டுகள் கடக்கப்பட்டதனால் அல்ல.

தொழிற் கட்சி மற்றும் TUC ஐப் பொறுத்தவரை, சுரங்கத் தொழிலாளர்களின் தோல்வி சமூக சீர்திருத்தம் மற்றும் வர்க்க ஒற்றுமை பற்றிய கருத்து என்னும் பழைய கொள்கைகளை முற்றிலும் கைவிடும் வாய்ப்பாக போயிற்று. “புதிய தொழிற் கட்சி என்பது டோனி பிளேயரால் பெருவணிகத்திற்குக் கட்டுப்பட்ட கட்சி என்று தொடக்கப்பட்டது; இது எந்தக் குறிப்பிடத்தக்க வகையிலும் பழைமைவாதிகளிடம் இருந்து வேறுபட்டது அல்ல. அதே நேரத்தில் அப்பொழுது இருந்த TUC தலைவர் ஜோன் மோங்க்ஸ், “தொழிற்சங்கங்கள் ஒரு மாற்று எதிர்ப்புச் சக்தியை காட்டியது என்பது பழைய கால நிகழ்ச்சி என ஆகிவிட்டது என்று அறிவித்தார்.

தொழிற் கட்சி மற்றும் TUC ஆகியவை நிதியத் தன்னலக்குழு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்தின் நேரடிக் கருவிகளாக மாறியது உலகச் சந்தையில் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையில் இருந்த வலுவற்ற தன்மையை அகற்ற விரும்பிய தொழிற் கட்சி அதிகாரத்துவத்தின் அரசியல் பிரதிபலிப்பாகும் ஆளும் உயரடுக்கு தன் நெருக்கடியை தொழில்துறை தகர்ப்பின் மூலம் தீர்க்க முற்பட்டதுடன் மற்றும் சமூக நலன்களை அழிக்க விரும்பி இதனால் கூடுதலான நிதிய ஊகங்களுக்கு அது வசதியளித்தது. இவ்வாறு செய்கையில், அது தொழிற்கட்சியையும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தையும் தொழிலாளர் வர்க்கத்தைக் கட்டுப்படுத்தி எவ்வித எதிர்ப்பையும் அழித்துவிட நம்பியிருந்தது.

இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தொழில்துறை நடவடிக்கை மூலம் இழக்கப்பட்ட பணி நாட்களின் எண்ணிக்கை புதிய குறைந்த நிலையை அடைந்தது. முந்தைய தொழில்துறை இதயத்தானங்களான வேல்ஸ் போன்றவை தரிசு நிலங்களாக ஆக்கப்பட்டு, மிக உயர்ந்த வேலையின்மை, வறுமை ஆகியவை அங்கு நிலவின.

வேல்ஸ் பன்முக இழப்புக் குறியீடு அமைப்பின்படி, Rhyl West Two, Denbighshire, ஆகியவற்றில் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் (56%) உயிர்தப்பி வாழ்வதற்கே சமூகநல உதவிகளைத்தான் நம்பியுள்ளனர். முன்பு தீவிரமான, சோசலிசப் போராட்டத்தின் மையமாக இருந்த மெர்த்திர் டிட்பில் மாவட்டம் இப்பொழுது தேசிய அளவில் மிக இழப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உயர் 10 சதவிகித இடங்களில் ஒன்றாக உள்ளது.

வேல்ஸில் கிட்டத்தட்ட 14 சதவிகித குழந்தைகள் கடும் வறுமையில் வாழ்கின்றனஇது ஒரு பெற்றோர், ஒரு குழந்தைக்கு 7,000 பவுண்டுகள் வருமானம் என்றும் ஒரு தம்பதி, இரு குழந்தைகளுக்கு 12,600 பவுண்டுக்கள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. க்ளைஸன் சுரங்கம் மற்றும் போர்ட் தால்போட் எஃகுத் தொழில் அடங்கிய நீத் போர்ட் டால்போட் மாவட்டத்தில் 4,000 குழந்தைகள் கடுமையான வறுமையில் வாழ்கின்றன.

இச்சூழ்நிலைதான் பிரெஸ்லின், பவல், ஜேன்கின்ஸ் மற்றும் ஹில் போன்றவர்களை ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரியக் கட்டாயப்படுத்தின. பல தகவல்களின்படி க்ளீசியன் சுரங்கம் என்பது சமீபத்தில்தான் மதிப்பு மிக்க ஆன்த்ராசைட் நிலக்கரியைத் தோண்டி எடுக்க மீண்டும் திறக்கப்பட்டது; இப்பொருளின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்துவிட்டது. இலாபத்திற்கான உந்துதல் இந்த மனிதர்களின் உயிர்களைவிட அதிகமாகக் கருதப்பட்டுவிட்டது.

இதே சமூக இழப்புக்கள் மற்றும் தொழில்துறை சுரண்டல் ஆகியவைதான் நாடு முழுவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஏப்ரல் 2006ல் எஃகுத் தொழிலாளி, 49 வயதான கெவின் டௌனி போர்ட் தால்போட் எஃகுத் தொழிற்சாலையில் 1,400 டிக்ரி சென்டிகிரேட் உருகிய உலோக வெப்ப ஓடையில் விழுந்து இறந்தார். ஆலையில் ஒரு உலை நீராவி வெடிப்பில் முதலில் டௌனி கண்களை இழந்து அதையொட்டித் தடுமாறி வெப்ப உலோக ஓடையில் விழுந்து இறந்தார்.

இம்மாதம் இறப்பு பற்றிய விசாரணையில், டௌனியின் இறப்பு தற்செயல் நிகழ்வு என்று தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது; உலைக்களத்தில் பாதுகாப்புத் தடுப்புக்கள் ஏதும் இல்லை என்ற உண்மையிருந்தும் இந்த முடிவு கொடுக்கப்பட்டுள்ளது. 2001ல் மூன்று மற்ற தொழிலாளர்கள் 25 வயதான ஸ்டீபன் கால்ஸ்வொர்த்தி, 20 வயதான ஆண்ட்ரூ ஹுடின், மற்றும் 53 வயதான லென் ராட்போர்ட் ஆகியோர் இதே ஆலையில் நடந்த வெடிப்பு ஒன்றினால் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமுற்றனர்.

கடந்த மாதம் ஜேம்ஸ் டென்னிஸ் கே என்னும் 62வயது தற்கா   லிகதொழிலாளி, போர்த்துகேய சிப் போர்ட் தயாரிப்பு நிறுவனமான Sonae க்குச் சொந்தமான Merseyside ஆலை ஒன்றில் கொல்லப்பட்டார். தீயினால் சேதப்பட்டிருந்த ஆலையின் ஒரு பகுதியை தகர்த்துக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.

கேயின் இறப்பைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 27 வயதான தோமஸ் எல்மெர், 24 வயதான ஜேம்ஸ் பிப்பி ஆகியோரும் இதே ஆலையில் இறந்தனர். அவர்கள் ஒரு மிகப் பெரிய நிலத்தடிச் சேமிப்புக் கிடங்கிற்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்தனர். கடந்த தசாப்தத்தில் Sonae நான்கு முந்தைய சுகாதார, பாதுகாப்பு விசாரணைகளுக்கு இலக்காகியிருந்தது. இவற்றிற்கு அது 132,000 பவுண்டுகளைத்தான் அபராதமாகக் கட்டியது.

இத்தகைய சோக சம்பவங்கள் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணியின் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாகத்தான் அதிகரித்துள்ளன. இவற்றுள் HSE வரவு-செலவுத் திட்டத்தில் 35 சதவிகிதக் குறைப்பும் உண்டு: இதைத்தவிர நடுத்தர, குறைந்த இடருள்ள தொழில்கள் வாடிக்கையாக ஆய்விற்கு உட்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது; தொழிலிட காயங்கள் பற்றிய அறிக்கைகள் ஒரு வாரம் கழித்துப் பதிவு செய்யப்பட்டால் போதும் என்றும் வந்துள்ளது இதற்குக் காரணம் ஆகும்.

தொழிலாளர்கள் மீண்டும் தங்களைப் பாதுக்காத்துக் கொள்ள புதிய அமைப்புக்களை வர்க்கப் போராட்டத்திற்காக கட்டமைத்துக் கொள்ளத் திரும்புவது தவிர்க்கமுடியாது. இவை தவிர்க்க முடியாமல் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மோதலுக்கு இட்டுச்செல்லும். இப்போராட்டத்தின் வெற்றி தொழிலாளர்கள் ஒரு சர்வதேச, சோசலிச முன்னோக்கை முதலாளித்துவ அமைப்புமுறை, அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத போராட்டத்தை அடித்ததளமாகக் கொள்வதின் மூலம்தான் அடைய முடியும்.

 

கட்டுரை ஆசிரியர்கள் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கின்றனர்:

Death at UK Sonae factory highlights appalling safety record
[28 August 2011]