World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Egypt: Treacherous “independent” trade unions seek to end mass strikes and prop up military junta

எகிப்து: துரோகத்தனமான “சுயாதீன” தொழிற்சங்கங்கள் வெகுஜன வேலைநிறுத்தங்களை நிறுத்தி இராணுவ ஆட்சிக் குழுவிற்கு முட்டுக் கொடுக்க முயற்சிக்கின்றன

By Johannes Stern
1 October 2011
Back to screen version

எகிப்தில் ஏழு மாத இராணுவ ஆட்சிக்குப் பின்னர், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புரட்சிகர இயக்கம் ஒரு இரண்டாம் உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றன. நேற்று நூறாயிரக்கணக்கான மக்கள் மீண்டும் எகிப்தில் உள்ள சதுக்கங்கள் மற்றும் தெருக்களில் கூடி ஆட்சி அகற்றப்பட வேண்டும், பீல்ட் மார்ஷல் மகம்மது ஹுசைன் தந்தவி பதவி நீக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

தொழிலாளர்களின் புறநகர்ப்பகுதிகளில் இருந்து கெய்ரோவில் பல வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் பெருமிதச் சின்னமான தஹ்ரிர் சதுக்கத்திற்கு அணிவகுத்துச் சென்று, “ரொட்டி, சுதந்திரம், சமுக சமத்துவம்” ஆகியவற்றைக் கோரின. “இதுதான் முக்கியம்: இனியும் நாம் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆளப்பட மாட்டோம்; அவர்களுடைய மக்களை நாங்கள் உண்மையில் நேசித்தாலும்” என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளைச் சிலர் ஏந்தியிருந்தனர். கடலோர நகரான அலெக்சாந்திரியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் “எகிப்தின் அனைத்து ஆலைகளிலும் புரட்சி தேவை” என்று அழைப்புவிடுத்து “இனியும் தனியார்மயம் ஆக்கப்படல் கூடாது” என்றும் கூக்குரலிட்டனர். சூயஸ் கால்வாயின் வடக்கு நுழைவாயிலில் உள்ள சையத் துறைமுகத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் “இராணுவ ஆட்சி வீழ்க! வீழ்க!” என்று குரலெழுப்பினர்; மேலும் “SCAF இல்லை, மக்கள்தான் ஒரே சிவப்புக் கோடு” என்றும் கூறினர்; இது தந்தவியின் தலைமையில் உள்ள ஆயுதப்படைகளின் தலைமைக் குழுவைக் குறிப்பதாகும்.

நீண்ட கால சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டதற்கு வழிவகுத்த புரட்சியின் முதல் 18 நாட்களில் இருந்ததைப் போலவே புதுப்பிக்கப்பட்டுள்ள வெகுஜன எழுச்சியிலும் தொழிலாள வர்க்கம்தான் முக்கிய சமூக சக்தியாக உள்ளது. ரமழான் முடிந்ததில் இருந்து, எகிப்து முழுவதும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களில் பங்கு பெற்று அதிக ஊதியங்கள், நல்ல பணி நிலைமைகள் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றையும் கோரி வருகின்றனர்.

எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சி, ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் பேரழிவு தரும் சமூக நிலைமைகளினால் தூண்டுதல் பெற்று, உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு அதிர்ச்சி அலைகளை அனுப்பி வருகிறது. எகிப்திய முதலாளித்துவச் செய்தி ஊடகம் “வர்க்கத் தளமுடைய எதிர்ப்புக்களுக்கு” எதிராக ஒரு தீய பிரச்சாரத்தை நடத்துகிறது; இவை “பெரும் குழப்பத்திற்கு” வழிவகுக்கின்றன, வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் முடிவிற்கு வரவேண்டும் என்று கோரியுள்ளன. சமீபத்திய நாட்களில் பல கட்டுரைகளும் தலையங்கங்களும் எகிப்திய செய்தித்தாட்களில் வெளிவந்துள்ளன; இவை “ஓர் இரண்டாம் புரட்சிக்கான” அச்சுறுத்தல் பற்றி எச்சரித்துள்ளன.

“பட்டினி புரட்சியை” தடுப்பதற்கு      இராணுவ ஆட்சிக்குழு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அடக்குதல்களுக்கான தயாரிப்புக்களை முடுக்கியுள்ளது. எகிப்தின் இராணுவ ஆட்சியாளர்கள் சமீபத்தில் நெருக்கடிச் சட்டங்களின் விரிவாக்கத்தை அறிவித்து, வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த வாரங்களில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர், இராணுவ விசாரணைகளுக்கு அனுப்பப்பட்டனர், பொலிஸ் மற்றும் இராணுவச் சக்திகளால் சித்திரவதை செய்யப்பட்டனர்.

வெள்ளியன்று நடந்த எதிர்ப்புக்களுக்கு முன், இராணுவப் படைகளின் தலைமைக்குழு 75வது அறிக்கையை வெளியிட்டு “இராணுவம் அல்லது பொது அமைப்புக்கள் மீது எவ்விதத் தாக்குதலையும் அது பொறுத்துக் கொள்ளாது” என எச்சரித்துள்ளது. புரட்சியின் மையப் பகுதிகளில் ஒன்றான சுயசில், ஆயுதமேந்திய படைகள் நகரத்தில் நுழைந்து அரசாங்கக் கட்டிடங்கள், வங்கிகள் மற்றும் சுயஸ் கால்வாய் அதிகாரத்தின் மத்திய அலுவலகங்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றன.

இராணுவ ஆட்சிக்குழுவின் மிருகத்தன முயற்சிகளை மீறி தொழிலாளர்கள் தங்கள் வெகுஜன வேலைநிறுத்தங்களை தொடர்கின்றனர். விமர்சகர்கள் இந்நிலையை ஏற்கனவே புரட்சியின் முதல் கட்டத்துடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டனர்; அப்போதைய தொழிலாளர்களின் வெகுஜன நடவடிக்கைகளினால் ஹொஸ்னி முபாரக் அகற்றப்பட்டார். SCAF க்கு எதிரான இரண்டாம் புரட்சி என்பது எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு அச்சறுத்தல் மட்டும் இல்லாமல், பிராந்தியம் முழுவதும் முதலாளித்துவ ஒழுங்கு மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும். 

புரட்சியின் இந்த முக்கியமான கட்டத்தில், “சுயாதீன” தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவை, அவற்றின் போலி இடது ஆதரவு அமைப்புக்களான புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), ஜனநாயகத் தொழிலாளர்கள் கட்சி (DWP) ஆகியவையும் எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதில் பெருகிய முறையில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. இவை முக்கிய கருவியாக மாறியுள்ளன—அவற்றின்மூலம்தான் எகிப்திய இராணுவ ஆட்சி தொழிலாளர்களை ஆயுதமிழக்கச் செய்து, சார்பையும் மாற்றுகிறது; அதையொட்டி புரட்சியை நிறுத்த முயல்கிறது. இந்த குட்டி முதலாளித்துவ சக்திகள் முதலாளித்துவத்தின் முகவர்களாக முழு நனவுடன் செயல்படுகின்றன; வேலைநிறுத்தங்களை நிறுத்தி தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குச் செல்லுமாறு நம்பவைக்கலாம் என நினைக்கின்றனர்.

செப்டம்பர் 17ம் திகதி நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் 1951க்கு பின்னர் முதல் தடவையாக வேலைநிறுத்தம் செய்தனர். செய்தி ஊடகத் தகவல்கள்படி, 1.5 மில்லியன் ஆசிரியர்களில் 80% வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றனர். கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எகிப்திய மந்திரிசபைத் தலைமையகத்திற்கு முன்னர் கூடி தற்போதைய கல்வி மந்திரியான அஹ்மத் கமல் எட்டின் மௌசா உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கோரிய வகையில் ஆசிரியர்களின் இயக்கம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. அவர்கள் குறைந்தபட்ச ஊதியம் 1,200 EGP வேண்டும், இது படிப்படியாக 3,000 EGP ஐ அடைய வேண்டும் என்றும் கோரினர். தற்பொழுது ஒரு ஆசிரியரின் நிகர ஊதியம் EGP 287 (US$50) மாதத்திற்கு அதிகப்பட்சமாக என்று உள்ளது.

இராணுவ ஆட்சிக்குழு பெருகிய முறையில் வேலைநிறுத்தம் பற்றி உள்ளத்தளர்ச்சி அடைந்தது; சில தகவல்கள்படி எதிர்ப்புக் காட்டிய ஆசிரயர்கள் சிலரை இராணுவப் பொலிஸ் அடித்துக் காயப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, சுயாதீன ஆசிரியர்கள் குழு (Independent Teachers Syndicate -ITS) பிரதம மந்திரி எஸ்ஸம் ஷரப் தலைமையிலுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.

“தற்போதைய வரவு-செலவுத் திட்ட வரம்புகள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்கின்றன” என்று மௌசா அறிவித்தாலும், ITS ன் தலைவர் ஹசன் அஹ்மத் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என அறிவித்தார். அவர் அமைச்சரகத்திற்கு ஆசிரியர்கள் குறைகளுக்கு தீர்வைக் கொடுக்க ஒரு வார அவகாசம் கொடுக்க ITS தயார் என்றும் அறிவித்தார். தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்த விரும்பிய தொழிலாளர்களுடன் கலந்தாலோசிக்காமல் ஹசன் வேலைநிறுத்தத்தை நிறுத்தும் முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது. தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு இருந்தும், செய்தி ஊடக ஆதாரங்கள் பெனி சுயப், ஷர்கியா, சூயஸ் மற்றும் கெய்ரோவில் சில பகுதிகளில் பல பள்ளிகள் போராட்டங்களை தொடர்வதாக தெரிவித்துள்ளன.

மூன்று நாட்களுக்குள், செப்டம்பர் 27ம் திகதி, IUPTW எனப்படும் சுயாதீன பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களின் சங்கமும் கெய்ரோவில் 45,000 போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிக்க முயன்றது. IUPTW ன் பிரதிநிதிகள் மனிதவள மந்திரி அஹ்மத் ஹசன் எல்போரையைச் சந்தித்து நிலைமையை விவாதித்து அரசாங்கத்திடம் இருந்து எந்தச் சலுகைகளையும் பெறாமல் உடனடியாக வேலைநிறுத்தத்தை நிறுத்த ஒப்புக் கொண்டனர். எகிப்திய நாளேடு அல்-அஹ்ரம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை கவனிப்பதாக மட்டுமே மந்திரி “உறுதிமொழி” கொடுத்தார் என்ற தகவலைத் தந்துள்ளது.

அல்-அஹ்ரம் கருத்துப்படி தலைநகரின் 25 பஸ் டிப்போக்களில் பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க மறுத்தனர். அவர்கள் மந்திரியின் “உறுதிமொழி” “ஏற்கத்தக்கது அல்ல” என்று அறிவித்து, தொழிற்சங்கம் எல்-போரையுடன் கொண்ட உடன்பாட்டையும் நிராகரித்தனர். புதன்கிழமை, செப்டம்பர் 28 அன்று, கெய்ரோ தெருக்களில் பொது பஸ்கள் முற்றிலும் காணப்படவில்லை. “சுயாதீன போக்குவர்த்துத் தொழிலாளர் சங்கத்தின்” தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் அது தொடர்பு கொள்ள முடியவில்லை, பெரும்பாலான தொழிலாளர்கள் உடன்பாட்டை நிராகரித்து, முறையாக வேலை செய்யவில்லை என முடிவெடுத்தனரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அல்-அஹ்ரம் ஆன்லைன் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தங்கள இரத்துச் செய்யும் முயற்சி சுயாதீன தொழிற்சங்கங்கள் என அழைக்கப்படுபவற்றின் வர்க்கத் தன்மையைத்தான் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் கொண்டு, இராணுவ ஆட்சியுடன் கைகோர்த்து உழைத்து தொழிலாள வர்க்கத்தை நசுக்கி எகிப்தில் முதலாளித்துவ ஆட்சியை உறுதிப்படுத்த முயல்கின்றனர். இந்த நோக்கத்திற்காகத்தான் சுயாதீன தொழிலாளர் சங்கங்கள் கட்டமைக்கப்படுவதற்கு அமெரிக்க வெளிவிவகாரச் செயலகம் மற்றும் பிற மேற்கத்தைய வெளியுறவு மந்திரிகள் ஊக்கம் கொடுத்தனர். தொழிற்சங்க, தொழிலாளர்கள் பணியின் மையம் (Center for Trade Union and Workers Services CTUWS) போன்ற சுயாதீன சங்கங்களை கட்டமைப்பதில் —முக்கிய அரச சார்பற்ற அமைப்புக்கள்— தொடர்பு கொண்டிருந்தது, ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்க AFL-CIO ஆகியவற்றிடம் இருந்து பணம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள ஆட்சியின் ஆதரவாளர்களான இராணுவ ஆட்சியார்களினால் ஊக்கம் கொடுக்கப்பட்ட “சுயாதீன” தொழிற்சங்கங்களை நிராகரிப்பது என்பது எகிப்திய தொழிலாள வர்க்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் நடவடிக்கை ஆகும். எகிப்திய புரட்சியின் அரசியல் கடமைகளின் மையமே இப்பொழுது இராணுவ ஆட்சியைக் கவிழ்த்து, சோசலிச நடவடிக்கைகளை தொடர்வதற்காக தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதாக இருக்க வேண்டும்.

எகிப்திய தொழிலாளர்கள் தங்கள் சமூக, ஜனநாயக உரிமைகளை அடைவதற்கு இயலக்கூடிய ஒரே முன்னோக்கு, மிக உரத்த குரலில் போலி இடது சக்திகளான சோசலிஸ்ட் முன்னணியின், அரச முதலாளித்துவ RS, DWP போன்றவற்றால் எதிர்க்கப்படுகின்றன. தொழிலாளர்கள் இராணுவ ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று அழைப்புக் கொடுத்திருக்கையில், அவர்கள் பெருகிய முறையில் சுயாதீன தொழிற்சங்கங்களின் இரும்புக் கவசம் போன்ற செயற்பாடுகளையும் அவை முதலாளித்துவ ஆட்சியின் வெளிப்படையான காவலர்களாக நடப்பதையும் நிராகரிக்கின்றனர். RS மற்றும் பிற போலி இடது சக்திகள் திமிர்த்தனமாக “இரண்டாம் புரட்சி” என்பதை எதிர்க்கின்றனர்; இவர்கள் சுயாதீன தொழிற்சங்கத்தின் முக்கிய காப்பாளர்கள் ஆவர்.

IUPTW போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றவுடன், RS ஓர் அறிக்கையை வெளியிட்டது; அதில் தொழிற்சங்கத்தை அதன் காட்டிக் கொடுப்பிற்காகத் தாக்காமல், அரசாங்கமும் தொழிற்சங்கத் தலைவர்களும் கையெழுத்திட்ட அறிக்கை “இறுதி வெற்றி” யை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்று பாதுகாப்புக் கொடுத்தது. அவர்கள் எழுதினர்: “இதுவரை பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சாதித்துள்ளது அவர்கள் ஒரு இறுதி வெற்றியின் விளிம்பில் நிற்கிறார்கள் என்பதை உறுதிபடுத்துகிறது.” RS ன் இந்த அறிக்கை முற்றிலும் ஏமாற்றுத்தனம் வாய்ந்தது ஆகும்—ஒரு மிருகத்தனமான தொழிலாளர் எதிர்ப்பு வர்க்க இராணுவ ஆட்சிக்குழுவின் வெற்று “உறுதிமொழிகள்” ஏதோ ஒரு வகையில் வெற்றி என்று தொழிலாளர்கள் ஏன் நம்ப வேண்டும்?

எகிப்திய புரட்சி, தொழிலாள வர்க்கத்திற்கும் எகிப்திய முதலாளித்துவத்திற்கும் இடையே —இராணுவ ஆட்சிக்குழு மற்றும் அதன் போலி இடது ஆதரவாளர்கள் என தொழிற்சங்கங்கள் மற்ற மத்தியதர வகுப்புச் சக்திகளிடையே இருப்பவர்கள்— உள்ள வர்க்கப் பிளவுகள் முன்னெப்போதையைக் காட்டிலும் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது என்பதை குறித்து நிற்கிறது. தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் விரிவாக்கிக் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் இப்பொழுது இராணுவ ஆட்சிக்குழு, சுயாதீனத் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது குழுக்களுடன் வெளிப்படையான மோதலில் இறங்கியுள்ளனர்.

வெகுஜன எதிர்ப்புக்களுக்கு ஒரு நாள் முன்பு வெள்ளி, செப்டம்பர் 29 அன்று DWP மற்றும் பிற போலி இடது குழுக்களும் பல வேறு முதலாளித்துவக் கட்சிகளுடனான ஒரு கூட்டணியில் நுழைந்து இராணுவக் குழு மீது பயனற்ற கோரிக்கைகளை முன்வைத்தன. இராணுவ ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்னும் தொழிலாளர்களின் அழைப்பு, இந்தக் குட்டி முதலாளித்துவ சக்திகளால் முன்வைக்கப்படும்  எதிர்ப்புரட்சிக் கொள்கைகளை முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என்பதையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது.