World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s aggressive turn to Asia

ஆசியாவை நோக்கிய ஒபாமாவின் தீவிரமான திருப்பம்

Peter Symonds
24 November 2011
Back to screen version

கடந்த வாரம் ஒபாமா ஆசியாவிற்கு பயணித்தது புவிசார்-அரசியலில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. இராஜதந்திரம், பொருளாதாரம், மூலோபாயம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் அமெரிக்க ஜனாதிபதி உலகின் மிக விரைவாக வளர்ச்சியடையும் பிராந்தியத்தில் தடையற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை மீண்டும் வலிமையாக்குவதற்காக சீனாவுடன் ஒரு மோதல் போக்கை நிர்ணயித்துள்ளார்.

ஹோனோலுலுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், ஒபாமா அட்லான்டிக் கடந்த பங்காளித்தனத்தை தொடக்கினார்; இது பிராந்திய வர்த்தகம் வாஷிங்டனின் விதிகளுக்கு ஏற்ப நடப்பதை உறுதிசெய்யும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. கான்பெர்ராவில் அவர் வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மரைன்கள் நிலைகொள்வதை அறிவித்தார்; அத்துடன் ஆஸ்திரேலிய விமான, கடற்படைத் தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதையும் அறிவித்தார்; இது வியட்நாம் போருக்குப் பின் முதல்தடவையாக ஆசியாவில் அமெரிக்க இராணுவத்தின் விரிவாக்கமாகும். பாலியில் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, ஒபாமா தென் சீனக் கடல் பற்றி ஒரு விவாதத்தை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்காக ஒழுங்குபடுத்தினார். இப்பகுதியில் சீனாவின் முக்கிய மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைக் கொண்டுள்ள பூசலுக்கு உட்பட்ட கடல்நிலைகள் உள்ளன.

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முக்கிய உரையில், ஒபாமா அவருடைய வெளியுறவு கொள்கை ஆசியாவிற்கு மாறியிருப்பது குறித்து வெளிப்படையாகப் பேசினார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒரு தசாப்தம் போர்களை நடத்தியபின், "அமெரிக்கா இப்பொழுது தன் கவனத்தை ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பரந்த திறனுடைய பக்கம் திருப்புகிறது" என்று விளக்கினார். "தான் வேண்டுமென்றே ஒரு மூலோபாய முடிவை--அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்னும் முறையில் இப்பிராந்தியத்தை உருவாக்க, வருங்காலம் பற்றி அதிக, நீண்டக்கால பங்கைக் கொள்வதை" எடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளமையானது ஒபாமா சமீபத்தில் எடுத்த கொள்கையின் முடிவு அல்ல; ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகத்தின்போது இருந்த மூலோபாயச் சார்பின் பிரதிபலிப்புக் குறித்து அமெரிக்க ஆளும் வட்டங்களிடையே இருந்த ஆழ்ந்த அதிருப்தியை, உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாற்றங்களில் இருந்து இது வருகிறது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்னும் பெயரில் புஷ் அமெரிக்காவை இரண்டு பேரழிவுப் போர்களில் தள்ளினார்; அவைகள் அமெரிக்க இராணுவத்தை உளச்சோர்விற்கு உட்படுத்தின, அமெரிக்க இராஜதந்திர முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தின, மேலும் உள்நாட்டில் பெரும் எதிர்ப்பை தோற்றுவித்தன.

போர்களுக்கு இரு கட்சிகளும் கொடுத்த ஆதரவு அடித்தளத்திலுள்ள மூலோபாயத்திற்கு வாஷிங்டன் கொண்டுள்ள பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது--அதாவது மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும், உலகின் மிகப் பெரிய எரிசக்தி இருப்புக்களின்மீது அமெரிக்க மேலாதிக்கத்தை அடைதல், அதையொட்டி வாஷிங்டனின் ஆசிய, ஐரோப்பிய போட்டி நாடுகளை அச்சுறுத்தி வைத்தல் என்பது. ஆனால் எளிதான வெற்றிகள் என்று கூறப்பட்டவை உண்மையில் ஆழ்ந்த சகதிகளாகிவிட்டன. ஆசியாவில் சீனாவின் பெருகிய செல்வாக்கைத் தடுப்பதில் புஷ் தோல்வி அடைந்தபின், குறைகூறல்கள் அதிகரித்தன.

கடந்த தசாப்தத்தில் சீனாவின் பொருளாதார விரிவு 1997-98 ஆசிய நெருக்கடியைத் தொடர்ந்து வந்த பொருளாதார வழிவகைகளில் முக்கிய மறுகட்டமைப்புடன் பிணைந்துள்ளது. பெருகிய முறையில், கிழக்கு ஆசிய, மற்றும் தென்கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் சீன உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்த விநியோக மையங்களுடன் ஒருங்கிணைந்தன. 2000த்திற்கும் 2010க்கும் இடையே, ஆசியானுடன் சீனாவின் ஆண்டு வர்த்தகம் 39.4 பில்லியன் டொலர்களிலிருந்து 292.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இப்பொருளாதார வழிவகைகள் பிராந்தியத் தடையற்ற வணிக உடன்பாடுகளிலும் சீனப் பிராந்திய அரங்கு அமைப்புகளான ஆசியான், ஆசியான்+3, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவற்றில் கொண்டிருந்த செல்வாக்கில் பிரதிபலித்தன--இந்த அரங்கு அமைப்புகளில் அமெரிக்க இடம் பெறவில்லை, அல்லது அவற்றில் கலந்து கொள்ளவும் இல்லை.

ஒபாமாவை ஜனாதிபதியாக அமர்த்தியதற்கு அமெரிக்க வெளியுறவு ஸ்தாபனத்தில் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவைக் கொண்டிருந்தது; இது அமெரிக்காவை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டுக் கொள்ளவும், பொருளாதார அளவில் இயக்கம் கொண்டுள்ள ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடுமையான உந்துதலைக் காணவேண்டும் என்பதற்கு ஒரு வழிவகையாகக் கருதப்பட்டது. 2008-09 உலக நிதிய நெருக்கடிக்கு நடுவில், ஒபாமா ஆரம்பத்தில் சீனாவை சமரசத்திற்கு உட்படுத்த முயன்றார்--அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள், பெய்ஜிங்கிற்கு அது "அமெரிக்காவின் வங்கியாளராக இருக்க வேண்டும்", இன்னும் கூடுதலான அமெரிக்கப் பத்திரங்களை வாங்கவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக.

ஆனால் அந்தக் கட்டம் விரைவில் கடக்கப்பட்டுவிட்டது. ஒபாமா நிர்வாகம் ASEAN அமைப்பினுடைய கூட்டுறவு, ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Treaty of Amity and Cooperation) என்பதில் கையெழுத்திட்டது. இதையொட்டி ASEAN னைத் தளமுடைய அரங்கு அமைப்புகளில் நுழைந்தது. ஜூலை 2009ல் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் ஆசியான் உச்சிமாநாட்டில் அமெரிக்கா "மீண்டும் தென்கிழக்கு ஆசியாவிற்கு வந்துவிட்டது" என்று அறிவித்தார். ஓராண்டிற்குப் பின் நடைபெற்ற ஆசியான் கூட்டத்தில் அவர் அமெரிக்கா "ஒரு தேசிய நலனை" தென் சீனக் கடல் பிராந்தியப் பூசல்களில் கொண்டுள்ளது என்றார். இது சீனாவின் வெளியுறவு மந்திரி யாங் ஜீச்சியை அவருடைய கருத்துக்கள் "கிட்டத்தட்ட சீனாவின் மீது தாக்குதல்களுக்கு ஒப்பாகும்" என்று கூறத் தூண்டின. அமெரிக்க இராஜதந்திர முயற்சிகள் ஏற்கனவே உள்ள நட்பு நாடுகள்மீது மட்டும் செலுத்தப்படவில்லை, மாறாக சீனாவின் செல்வாக்கு மண்டலத்திலுள்ள பர்மா போன்ற நாடுகளை ஈர்க்கவும் முற்பட்டன.

மத்திய கிழக்கை போன்றே, ஒபாமா நிர்வாகம் ஆசியாவின் மீது காட்டிய மிகப் பெரும் குவிப்பு அமெரிக்க இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துவதில் இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இது இப்பிராந்தியம் முழுவதும் மூலோபாய, இராணுவப் பிணைப்புக்களை மேம்படுத்தியுள்ளது, குறிப்பாக ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுடன். பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொடுத்து, முன்னோடியில்லாத வகையில் வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது; சிங்கப்பூரில் புதிய தலைமுறை போர்க்கப்பல்களை நிலைகொள்ள வைத்தது; தைவானுக்கு மிகப் பெரிய அளவில் புதிய ஆயுதங்களின் விற்பனையை அறிவித்தது; இந்தோனேசியாவில் இழிவுற்ற கோபாசஸ் சிறப்புப் படைகளுடன் அமெரிக்க ஒத்துழைப்பிற்கு இருந்த தடையை அகற்றியது. கடந்த ஆண்டு, சீனாவுடன் கடுமையான அழுத்த நிலைப்பாட்டை சீன மீன்பிடிக் கப்பல் தலைவரை பூசலுக்கு உட்பட்ட கடல்நிலைகளில் ஜப்பான் கைது செய்தபோது ஏற்பட்டதை தூண்டுதல் தரும் வகையில் ஒபாமா நிர்வாகம் எதிர்கொண்டது; எந்தப் பூசலிலும் ஜப்பானுக்கு உடன்பாடுகள் ஏற்பாடுகளை ஒட்டி அமெரிக்கா உதவக் கடமைப்பட்டுள்ளது என்று அறிவித்தது.

பென்டகனுடைய மூலோபாயமானது எரிசக்தி விநியோகங்களைக் கட்டுப்படுத்துவதில் மையம் கொண்டுள்ளது. ஆனால், மத்திய கிழக்கை முழுமையாகத் தன் அரசியல் செல்வாக்கின் கீழ் உட்படுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்கா தன் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி சீனாவின் முக்கிய எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் தேவையை, மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் இருந்து தென்சீனக்கடல் பகுதிக்கு அதன் தேவைகள் வரும் கப்பல் பாதைகள்மீது ஆதிக்கம் கொள்ள முற்பட்டுள்ளது--முக்கிய நெருக்கடி இடங்களின்மீது அழுத்தத்தைக் கொள்ளும் வகையில்; எல்லாவற்றிற்கும் மேலாக மலாக்கா ஜலசந்திப் பகுதியில். இத்திட்டங்கள் அதன் கடற்படை வலிமையை 1941ம் ஆண்டு ஜப்பான் மீது தடைகளைச் சுமத்தப் பயன்படுத்தியது என்பதைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது; அதுதான் சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளைத் தூண்டி இறுதியில் பசிபிக் போருக்கு வழிவகுத்தது.

ஆசியாவில் அமெரிக்க உந்துதலின் அழுத்தத் தீவிரம் இரண்டு முக்கியமான அரசியல் இழப்புகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஒபாமா "ஜனநாயகம்" பற்றி நிறையப் பேசினாலும், அவருடைய நிர்வாகம் எந்த எதிர்ப்பையும் ஏற்பதில்லை, அமெரிக்காவில் மிக நெருக்கமான நட்பு நாடுகளில் இருந்தும் கூட. ஜப்பானிய பிரதம மந்திரி யுகியோ ஹடோயமா ஜூன் 2010ல் இராஜிநாமா செய்ததில், வெள்ளை மாளிகைக்கு ஒரு பங்கு இருந்தது; இது நடந்து ஒரு மாதத்திற்குப் பின் தொழிற் கட்சி ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் ஆட்சியை மாற்றியதிலும் பங்கைக் கொண்டிருந்தது. ஹடோயமாவின் "குற்றம்" ஓகினாவாவில் முக்கிய அமெரிக்கத் தளம் நீடிப்பதை எதிர்த்ததுதான். ரூட்டின் குற்றம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்த அழுத்தங்களைக் குறைக்கப் பாடுபட்டதுதான். இவர்கள் இருவருமே அகற்றப்பட்டு, மிக வலுவான அமெரிக்க ஆதரவைக் கொடுக்கும் நபர்கள் பதவிக்கு வந்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒப்புமையிலான பொருளாதாரச் சரிவு, சீனாவின் எழுச்சி இவற்றில்தான் இந்த ஆபத்தான மோதலின் உந்துதல் சக்தி உள்ளது. அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் தன் இராணுவச் சக்தியை, பொருளாதார வலிமையை இழந்த நிலையில், உலக ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு ஈடுகட்டும் வகையில் செயல்படுத்த முற்படுகிறது. அதன் பொருளாதாரக் குறியீடுகள் மிக உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும்கூட, சீனப் பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளினால் இடரில் உள்ளது: எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவில் வெடித்தெழுந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் வளர்ச்சி மூலம். வாஷிங்டனுக்குச் சலுகைகளை இன்னும் கொடுக்கும் நிலையில் பெய்ஜிங் இல்லை; எப்படிச் சீனாவிற்கு ஆசியச் செல்வாக்கு மண்டலத்தை அமெரிக்கா விட்டுக் கொடுப்பதற்குத் தயாராக இல்லையோ அதுபோல். ஒவ்வொரு சக்தியும் மற்றவற்றின் இழப்பில் தன் நிலையை உயர்த்திக் கொள்ள முற்படுகையில் இந்த அழுத்தங்கள் உலகப் பொருளாதார நெருக்கடியினால் அதிகமாகிவிட்டன.

சில கூரியமதி படைத்த முதலாளித்துவ விமர்சகர்கள் ஏற்கனவே வரலாற்று இணை நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த வெள்ளியன்று பைனான்சியல் டைம்ஸின் ஆசிரியர் லியோனல் பார்பர் விளக்கினார்: "காலம் முழுவதும் ஏற்றம் பெற்றுவரும் சக்திகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளாதது--அல்லது எழுச்சி பெறும் சக்திகள் இருக்கும் நாடுகள் முறைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாதது--மோதலுக்கு ஆதாரமாகிறது." ஜேர்மனி, ஜப்பான் ஆகியவை எழுச்சி பெற்றது உலகப் போர்களைத் தூண்டிவிட்டதைச் சுட்டிக் காட்டியபின், அவர் அமெரிக்கா, சீனா ஆகியவை "ஒன்றையொன்று தவறாகக் கணக்கிடுவதால் ஏற்படும் இடர்கள்" குறித்து எச்சரித்தார். ஒரு தற்கால க்ளீமென்ஸ் வான் மெட்டர்நிக்தான் பசிபிக் சக்திகளுக்கு இடையே உறவுகளைச் சரி செய்ய முடியும், அந்த ஆஸ்திரிய இளவரசர் நெப்போலியப் போர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவில் செய்தது போல், என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 19ம் நூற்றாண்டு ஒரு வேறுவகை வரலாற்றுக் காலமாக இருந்தது. 1914 ஆகஸ்டு வெடிப்புடன் ஏகாதிபத்தியச் சகாப்தமானது இரு உலகப் போர்களினால் குறிக்கப்படுகிறது; இப்பொழுது இன்னும் பேரழிவு தரக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

போரைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி அதன் மூலகாரணத்தை அகற்றுவதுதான் -- அதாவது இலாப அமைப்புமுறை மற்றும் உலகமானது போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகளாக பிரிந்துள்ளதும்தான். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இந்த வரலாற்றுக் கடமைக்காக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தி, கல்வியூட்டி, அணிதிரட்ட முற்படவிழையும் ஒரே அரசியல் சக்தியாகும்.