World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Obama increases US military presence in Australia and Asia

ஆஸ்திரேலியா ஆசியாவில் ஒபாமா அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்கிறார்

By James Cogan
17 November 2011
Back to screen version

தன்னுடைய சுருக்கமான ஆஸ்திரேலியப் பயணத்தில் கடந்த 24 மணி நேரத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவருடைய நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான தலையீடு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் பெருகிய செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். பிரதம மந்திரி ஜூலியா கில்லர்டின் தொழிற் கட்சி அரசாங்கம் இப்பிராந்தியத்தில் ஆஸ்திரேலிய பெருவணிக, மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்கும் வழிமுறையாக, நிபந்தனையற்ற முறையில் அமெரிக்காவுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஓபாமாவும் கில்லர்டும் அமெரிக்க இராணுவம் அதன் செயற்பாடுகளை ஆஸ்திரேலிய கண்டத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் அதிகப்படுத்தும் என்று அறிவித்தனர். நாட்டின் வடக்குப் பகுதியும் அதன் தலைநகரான டார்வினும், பல ஆஸ்திரேலிய பெரும் தெற்கு நகரங்களைவிட இந்தோனேசியாவிற்கு அருகே உள்ளது, ஒரு பெரிய அமெரிக்கப் பிரசன்னம் கொண்டுள்ள இடமாக வளர்ச்சியுறும்.

அடுத்த ஆண்டிலிருந்து 200 முதல் 250 அமெரிக்க மரைன்கள் வடக்குப் பகுதியில் ஆண்டிற்கு ஆறு மாதக் காலம் பயிற்சி அளிப்பர். 2016-17 ஆண்டையொட்டி, இப்பயிற்சி ஒரு முழு தரைப்படைப் பிரிவான 2,500 துருப்புக்களை ஈடுபடுத்தும். படைகள் பகுதியைச் சுற்றிவரும் நிகழ்வு மிக அதிக அளவு கட்டுமானத்தேவை வசதிகள், மற்றும் விநியோகச் சேமிப்புக் கிடங்குகளை அமைக்கப்படுவதை நியாயப்படுத்துவதாக இருக்கும்; இதுதான் இன்னும் கூடுதலான தரையிறக்கலைச் செய்ய வழிவகுக்கும்.

டார்வினுக்குத் தெற்கே உள்ள டிண்டல் விமானத்தளம் முறையாக அமெரிக்க விமானப் படையினால் பயன்படுத்தப்படும்; இன்னும் அதிகமான பயிற்சிகள் வடபகுதியில் B-52 தொலை தூர குண்டுத்தாக்குதல் திறன் உடையவற்றினால் நடத்தப்படும். அமெரிக்க போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் பெருகிய முறையில் மேற்கு ஆஸ்திரேலிய கடற்படைத் துறைமுகங்களுக்கு இந்திய பெருங்கடலில் அவற்றின் செயல்களைத் தீவிரப்படுத்த செல்லும். இந்த உடன்பாடுகள், பரந்த முறையில் எதிர்பார்க்கப்பட்டாலும், 60 ஆண்டுகால ANZUS இராணுவ உடன்பாட்டின் வடிவமைப்புக்களிலுள்ள அமெரிக்க-ஆஸ்திரேலிய இராணுவ ஒத்துழைப்பில் பெரும் விரிவாக்கத்தைக் குறிக்கும்.

இந்த உடன்பாடு குறித்து நான்கு நாடுகள்தான் முன்கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா தவிர ANZUS இன் மற்ற உறுப்பு நாடான நியூசிலாந்து, தன்னுடைய கடல் நிலையிலும் வான்பகுதியிலும் இன்னும் அதிக அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைக் காண உள்ள இந்தோனேசியா, வாஷிங்டனுடன் உறுதியாக இராணுவப் பிணைப்புக்களைக் கட்டமைத்துவரும் இந்தியா மேலும் சீனா ஆகியவைகள்தான் அவைகள். அமெரிக்கா வட கிழக்கு ஆசியாவில் அதன் இரு முக்கிய இராணுவ நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடமும் இது பற்றித் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பொழுது ஆசியாவிலுள்ள மற்ற நாடுகளுக்கும் தகவல் கொடுக்கப்படுகிறது; அதேபோல் பசிபிக் தீவிலுள்ள அரசுகளுக்கும் தகவல் கொடுக்கப்படுகிறது; இவைகள் வாஷிங்டன் மற்றும் கான்பெர்ராவிடம் இருந்து தங்கள் பகுதிகளில் சீன இராணுவத்தின் அணுகுதலை அனுமதிக்கக் கூடாது என்று வாஷிங்டனிடமிருந்து தீவிர அழுத்தங்களைக் கொண்டுள்ளன.

இப்பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகரித்த அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் இலக்கு சீனாதான் என்பதில் சந்தேகம் இல்லை. செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த தன் கருத்துக்களில், ஒபாமா அமெரிக்கா சீனாவின் ஏற்றத்தை வரவேற்கிறது ஆனால்அந்த ஏற்றம் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று சேர்த்துக் கொண்டார், அதாவது ஓர் உலக சக்தி என்னும் முறையில்விதிகளின்படி நடக்க வேண்டும் என்றார். இக்கருத்துக்கள் அமெரிக்கா நிர்ணயிக்கும்விதிகளுக்கு உட்பட்டு சீனா நடக்க வேண்டும் என்னும் வாஷிங்டனின் உறுதிப்பாட்டை உயர்த்திக் காட்டுகின்றன அதாவது அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு உலக ஒழுங்கிற்குள்.

அமெரிக்கத் துருப்புக்கள் வடக்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலை கொள்ளுவது, இத்துடன் பெருகிய கடற்படை மற்றும் விமானப்படையின் பிரசன்னம் ஆகியவைகள், அமெரிக்காவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையேயுள்ள முக்கியமான கடல்வழிகள் மீது இன்னும் சிறப்பாக ஆதிக்கம் செலுத்த உதவும்; இப்பாதைகளின் மூலம்தான் உலக வணிகத்தின் பெரும் பகுதி செல்கிறது. சீன ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளில் பெரும்பாலானவை, சீனப் பொருளாதாரம் செயல்படுவதற்குத் தேவையான மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய் விநியோகங்கள் ஆகியவை இதில் அடங்கும். Australian உடைய கட்டுரையாளர் கிரெக் ஷெரிடன் டார்வின்அமெரிக்கப் படைகள் பசிபிக் அல்லது இந்தியப் பெருங்கடலுக்குள் எங்கும் செல்லும் ஒருவகையான அச்சு போன்றது என்று எழுதியுள்ளார். இந்த முடிவுஒரு முக்கிய வணிகப் பாதையான தென் சீனக் கடலுக்கு அருகே ஒரு கணிசமான அமெரிக்க அடிச்சுவட்டை மீட்கும் என்று நியூ யோர்க் டைம்ஸ்  குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாடு உடைய பகுதிகள் எனப் பூசலுக்கு உட்பட்ட பகுதிகளில் அமெரிக்க ஏற்றுமதிகளும் அதிகமாக இருக்கும் பகுதியாகும் இது.

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஒபாமா ஈராக்கில் இருந்து படைகளை அகற்றிக் கொள்வது அமெரிக்காவிற்குஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நம்முடைய பிரசன்னத்தைக் கொள்ளுவதை உயர்ந்த முன்னுரிமையாக வைக்க உதவும் என்றார். மொத்த இராணுவச் செலவுகள் குறைக்கப்படும் என்றாலும், ஆசியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றார் அவர். ஆஸ்திரேலியாவுடன் கொண்டுள்ள உடன்பாடுகள் அப்பிராந்தியம் முழுவதும்அமெரிக்கா ஒரு பசிபிக் சக்தி, அது இங்கே நிலைத்திருக்கும் என்ற தெளிவான அடையாளத்தைக் கொடுக்கும் என்றார். தன்னுடைய பகுதி என்று கூறும் தென் சீனக் கடல் பகுதியில்கப்பல் போக்குவரத்து தடையற்று இருக்க வேண்டும் என்பதைச் சீனா ஏற்க வேண்டும் என்று ஒபாமா உறுதிப்படக் கூறினார்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் இராணுவ ஆதிக்கத் திறன் என்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரச் செயற்பட்டியலில் இருந்து பிரிக்க முடியாதது ஆகும். ஆஸ்திரேலியாவுடனான உடன்படுகளிலுள்ளபரந்த நோக்கத்தைப் பற்றியும் ஒபாமா குறிப்பிட்டார். அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில்நாடுகளின் விதிகளின்படி நடந்து கொள்ளும்”, வர்த்தகத்திற்கான அணுகல் அனைத்திற்கும் கிடைக்கும், அறிவுஜீவித சொத்துக்கள் மற்றும் நாணய மதிப்பீடுகள் முறையாக இருக்கும் என்பதற்கு அமெரிக்க பாடுபடும் என்று ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் ஒபாமா கூறினார்.  “சர்வதேச நெறிகளை நிலைநிறுத்துவதின் முக்கியத்துவம் பற்றி பெய்ஜிங்கிற்கு அமெரிக்கா தெளிவாகப் பேசும் என்றார் ஒபாமா.

ஆஸ்திரேலியாவில் வெளிவந்துள்ள அறிவிப்புக்கள் இந்த வார இறுதியில் இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடக்க இருக்கும் கிழக்கு ஆசிய உச்சமாநாட்டின் செயற்பட்டியல், ஒலிக்குறிப்பு மற்றும் விளைவுகளைச் செல்வாக்கிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டது என்பது தெளிவு. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்கிறார். சீனாவிற்கு எதிராக அப்பிராந்தியத்தில் ஒபாமா நிர்வாகத்தின் கோரிக்கைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு இது ஒரு அரங்காக அமையும்.

ஒபாமா நிர்வாகமானது பசிபிக் கடந்த கூட்டுப்பங்காண்மைத்தனம் (TPP) என்னும் வணிக முகாமில் சேருமாறு ஆசிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதன் நுழைவு நிபந்தனைகள் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயத்தைக் கொடுக்கும். இம்முகாம் குறிப்பாக அறிவுஜீவித சொத்து விவகாரங்களில் அமெரிக்காவிற்கு தாழ்ந்து நடத்தல் என்பதைச் செயல்படுத்த முயற்சிக்கிறது; மேலும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான சிறப்பு விருப்புரிமை கையாளல் உட்பட பாதுகாப்புவாத நடவடிக்கைகள் இருந்தால் அவைகள் அகற்றப்பட வேண்டும் என்ற ஆணையையும் இடுகிறது.

இன்னும் பரந்த வகையில், சீனா அதன் நாணயத்தை 20 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தி மறுமதிப்பீடு செய்யவேண்டும் என்னும் அமெரிக்காவின் இடைவிடா வலியுறுத்தலும், சீன ஆட்சி குறைவூதிய தொழிலாளர் தளப் பொருளாதாரத்தில் அஸ்திவாரங்களைக் குறைக்க வேண்டும் என்ற பொருளைக் கொண்டுள்ளது. இதையொட்டி நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் பிற நடவடிக்கைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நேரடி உந்துதல் இருக்கும்; அதில் அமெரிக்காவும் அடங்கும்; அங்கு பல ஆசிய நாடுகளில் இருப்பதைவிடக் குறைவான தரங்களுக்கு தொழிலாளர்களின் ஊதியங்களும் நிலைமைகளும் முறையாகக் குறைக்கப்படுகின்றன.

அமெரிக்கச் செயற்பட்டியல் சீனா மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்குப் பேரழிவுப் பொருளாதார விளைவுகளைக் கொடுக்கும். சீனாவும் மற்ற ஆசிய சக்திகளும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க இராணுவப் பங்கு இருப்பதாலும், முக்கியமான மூலப்பொருட்களைப் இந்நாடுகள் பெறுவதைத் தடுக்கும் திறன் உடையது, அதில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிடம் இருந்து எரிசக்தி, மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இரும்புத் தாதுப் பொருட்கள், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை அடங்கும் என்பதால், இந்நாடுகள் எளிதில் இசைவு கொடுக்கும் என்ற முன்கருத்தில் இச்செயற்பட்டியல் உள்ளது.

 

ஆனால் சீனா எளிதில் இவற்றை ஏற்றுவிடாது என்பதற்கான அடையாளங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. பெய்ஜிங் ஆட்சியின் குரலான People’s Daily ஒரு தலையங்கத்தில் அப்பட்டமாக எழுதியது: “ஆஸ்திரேலியாவானது சீனா ஒரு முட்டாள் நாடு என்று கருதிவிடக்கூடாது. சீனாவின் பாதுகாப்பைக் குறைப்பதற்கு ஆஸ்திரேலியா என்ன செய்தாலும் சீனா ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்துவிடும் என்று இருப்பது இயலாத செயல் ஆகும். ஆஸ்திரேலியா சீன நலன்களுக்குத் தீமை கொடுப்பதற்காகத் தன் இராணுவத் தளங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு உதவுமானால், இரு சக்திகளுக்கு இடையே நடக்கும் வன்முறைகளில் ஆஸ்திரேலியாதான் நடுவே பாதிப்பிற்கு உட்படும்.”

வடக்கு ஆஸ்திரேலியாவில் துருப்புக்களை நிலைநிறுத்தும் அமெரிக்க முடிவிற்கு இந்தோனேசியாவிடமிருந்தும் குறைகூறல்கள் தீவிரமாக வெளிப்பட்டுள்ளன. வெளியுறவு மந்திரி மார்ட்டி நடலெகவா சற்றே பயத்துடன் இதுஒரு தீய அழுத்தம், அவநம்பிக்கை வட்டங்களை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்: “அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நடவடிக்கைகளின் சவாலை ஏற்க வேண்டும் என்ற உணர்வு சீனாவிற்கு வரக்கூடியதுதான்; தன்னுடைய திறன்களை வலிமையாக்கிக் கொள்ளவும் அது கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும். இத்தகைய நிலைமையில் இயல்பாக இருக்கும் ஆபத்துக்கள் இதுதான்; நம் அனைவருக்கும் வந்துள்ள சவால் இது கட்டுப்பாட்டை மீறி விரிவடைந்துவிடக்கூடாது என்பதுதான்.”

நடலேகவாவின் அறிக்கைகள் இப்பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா உட்பட எழுச்சி பெற்றுள்ள அமெரிக்க-சீன அழுத்தங்களை ஒட்டி ஒவ்வொரு ஆளும் உயரடுக்கையும் எதிர்கொள்ளும் சங்கடத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. இந்நாடுகள் அனைத்தும் பொருளாதார அளவில் சீனாவுடன் பிணைந்துள்ளன; அதுதான் இந்நாடுகள் பெரும்பாலானவற்றின் பெரிய வணிகப் பங்காளி ஆகும். அதே நேரத்தில் அமெரிக்க மேலாதிக்க இராணுவச் சக்தியாக உள்ளது; ஒவ்வொரு நாடும் பெய்ஜிங்கிற்கு எதிராக வாஷிங்டன் பக்கம் சேரும் தீவிர அழுத்தங்களைக் கொண்டுள்ளன. ஒபாமாவின் ஆசியப் பயணம் இப்போட்டிகள் ஒரு வெளிப்படையான மோதலை விரிவாக்கும் என்ற ஆபத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன; இதையொட்டி பெரும் பேரழிவுகள் கொடுக்கும் விளைவுகளைத்தான் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும்.