World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Greece and the dictatorship of finance
 

கிரேக்கமும் நிதிச் சர்வாதிகாரமும்

Peter Schwarz
9 November 2011

Back to screen version

பண்டைய ஏதென்ஸ் ஐரோப்பிய ஜனநாயகத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. தற்கால ஏதென்ஸ் அதன் கல்லறையாக மாறிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. சமீபத்திய நாட்களில் கிரேக்கத்தை அதிர்விற்கு உட்படுத்திவரும் நிகழ்வுகள் அனைத்து ஐரோப்பாவிற்கும் ஒரு படிப்பினையும் எச்சரிக்கையும் ஆகும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, ஒரு இரு-நாள் பொதுவேலைநிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்தது. அப்பொழுது முதல் ஏதென்ஸ், பிரஸ்ஸல்ஸ், கான் என்று ஒவ்வொரு நெருக்கடி தொடர்பான உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதன் விளைவு தொழிலாள வர்க்கத்தின் மீது நிதியச் சந்தைகள் ஆணைகளை சுமத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்ட, எந்தவித ஜனநாயக நெறியும் அற்ற புதிய அரசாங்கம் கிரேக்கத்தில் வந்திருப்பதுதான்.

தங்கள் சொந்த விதியைத் தாங்களே பரந்த அளவில் பெரும்பாலான மக்கள் நிர்ணயித்துக் கொள்ளுவதுதான் ஜனநாயகம் என்று கருதப்பட்டால், பின்னர் ஏதென்ஸில் இனி ஜனநாயகம் என்பது இல்லை. இறைமை மக்களிடம் பொதிந்துள்ளது என்ற போலித்தன நிலைப்பாடு கூட இல்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவை அடங்கியமுக்கூட்டின் ஆட்சிதான் நடக்கிறது. வரவிருக்கும் புதிய பிரதம மந்திரி லூகாஸ் பாப்படெமோஸ், ECB யின் ஒரு முன்னாள் துணைத்தலைவர், இந்த முக்கூட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதற்கு மட்டுமே பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்.

ஏதென்ஸில் நடப்பது பெருகிய முறையில் விதிவிலக்கு என்பதைவிட விதியாகத்தான் வருகிறது. சமீபத்திய மாதங்களில் யூரோப் பகுதியில் மிக அதிக கடன்பட்டுள்ள நான்கு நாடுகள்அயர்லாந்து, போர்த்துக்கல், இத்தாலி மற்றும் ஸ்பெயின்அரசாங்க மாற்றம் என்பதைக் கடந்து விட்டன, அல்லது கடக்க உள்ளன. ஒவ்வொரு முறையும் இதற்கான முன்முயற்சி நிதி மூலதனம் மற்றும் பெருவணிகத்திடம் இருந்துதான் வந்தது. ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதில் மிக முக்கியமான முன்னிபந்தனை செல்வாக்கற்ற பொருளாதார நடவடிக்கைகளை அது செயல்படுத்தும் திறன், அதே நேரத்தில் பொது மக்களுடைய அழுத்தத்திற்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கமால் அவற்றை எதிர்க்க வேண்டும் என்பதுதான்.

மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே வழிவகையில் பாதிக்கப்படும் என்பது காலதாமதமான என்பதைவிட விரைவான நிகழ்வாகத்தான் இருக்கும். பிரான்சில் பியோனுடைய அரசாங்கம் இப்பொழுது ஒரு புதிய சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை, 65 பில்லியன் யூரோக்கள் மதிப்புடையதை அறிவித்துள்ளது. ஏற்றுமதியைத் தளமாகக் கொண்ட ஜேர்மனி வேறு எந்த நாட்டையும் விட மற்ற ஐரோப்பிய நாடுகளை அதிகம் நம்பியுள்ளது.

இந்த நிலைமை 1930களில் ஜேர்மனி இருந்த நிலைமையைத்தான் நினைவுறுத்துகிறது. அப்பொழுது ஜேர்மனியின் சான்ஸ்ஸலரான ஒரு மையவாத அரசியல்வாதி ஹென்ரிக் ப்ரூனிங் சர்வதேச நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை மக்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை விதிப்பதின் மூலம் சுமத்த முற்பட்டார். நெருக்கடிக்கால நடவடிக்கைகள் மூலம் அவர் ஆட்சி நடத்தி, ஜனாதிபதியின் அதிகாரங்கள், சமூக ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற ஆதரவு ஆகியவற்றை நம்பியிருந்து, அவருடைய சிக்கனக் கொள்கைகளுக்கான எதிர்ப்பை மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் நசுக்கினார். நாஜிக்களுடைய எழுச்சிக்கும் பின்னர் அதிகாரத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளுவதற்கும் ப்ரூனிங் வழிவகுத்தார்.

கிரேக்க நிகழ்வுப் போக்கும் அதே திசையில்தான் சென்று கொண்டிருக்கின்றன. “தேசிய ஐக்கிய அரசாங்கம் என்பதின் தர்க்கத்தில் இருந்து தவிர்க்க முடியாமல் இது பின்தொடர்கிறது. தலையாய தேசிய நலன்களின் வெளிப்பாடுதான் அதன் சிக்கனத் திட்டம் என்று அறிவித்துக் கொண்டு, அரசாங்கம் அனைத்து எதிர்ப்பையும் நாட்டுக்கு எதிரான துரோகம் எனக் கண்டித்து வன்முறையில் நசுக்கும். 1967ல் நடைபெற்றது போல், இராணுவம் அதிகாரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படும். வெளியேறும் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மூத்த இராணுவத் தலைமையைத் திடீரெனப் பதவி நீக்கம் செய்துள்ளது இவ்வகையில் ஒரு எச்சரிக்கையாகும்.

கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதும் சர்வாதிகாரம் வெளிப்படுவது தடுக்கப்படமுடியும். ஆளும் உயரடுக்குகள் பிளவுற்று, நலிவுற்று உள்ளன; அவர்களுடைய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு பெருகி வருகிறது. ஆனால் தற்போதைய எதிர்ப்பில் ஒரு தெளிவான முன்னோக்கு இல்லை; அதே நேரத்தில் ஆளும் உயரடுக்குகள் தங்கள் நலன்கள் பற்றி முழு நனவு கொண்டுள்ளன, அவற்றிடம் எதிர்ப்பை முடக்கி நசுக்குவதற்கான நவீன வழிவகைகள் உள்ளன.

அந்த நிலைப்பாட்டின் முன்னணியில் சமூக ஜனநாயகக் கட்சிகள் உள்ளன; இவை நீண்டகாலமாகவே தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிப்பதை நிறுத்திவிட்டன; வெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கு வாதிடுபவையாகிவிட்டன; அவற்றின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிகளைப் போலவே கூடுதலான ஆக்கிரோஷத்தைத்தான் இம்முறையில் கொண்டுள்ளன.

இவற்றிற்குப் பின்னால் தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுத்து நிற்கின்றன; இவை ஐரோப்பிய ஒன்றியம், தேசிய அரசாங்கங்கள், வணிகக் கூட்டமைப்புக்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்து, சர்வதேச ஐக்கியம் எதுவும் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு வந்தால் அதை முறையாக நசுக்கிவிடுகின்றன.

கிரேக்கத்தின் விதியை அரசாங்க மாற்றம் மூலம் உறுதிப்படுத்திவிட்ட, சமீபத்திய G20 உச்சிமாநாட்டில், பங்கு பெறும் நாடுகளின் தொழிற்சங்கங்கள் (ஒரு G20 நாட்டில் தொழிற்சங்கங்கள் தடைக்குட்பட்டுள்ளன என்பது நினைவில் இருக்க வேண்டும்சௌதி அரேபியாவில்), மற்றும் முதலாளிகள் சங்கம் (Business 20) ஆகியவை தங்கள் நெருக்கமான ஒத்துழைப்பை மறு உறுதி செய்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (ITUC) தலைமைச் செயலர் Sharon Burrfow  மற்றும் பிரெஞ்சு முதலாளிகள் கூட்டமைப்பின் தலைவர் Laurence Parisot ஆகியோரால் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த அறிக்கை கூடியிருந்த தலைவர்கள்இப்பொழுது முன்னுரிமை முயற்சிகள் மற்றும் வேலைகளைத் தோற்றுவித்தலுக்கு ஏற்ற சூழலைத் தோற்றுவிப்பதற்குத்தான் என வலியறுத்தவேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கிரேக்கத்திலேயே, தொழிற்சங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்குக் குறைந்த எதிர்ப்பு என்னும் வகையில் குறுகிய கால நடவடிக்கைகளைத்தான் மேற்கோண்டன; அதையொட்டி PASOK அரசாங்கத்திற்குப் பாதிப்பு கூடாது என்ற வகையில் நடந்துள்ளன. இதையொட்டி வலதுசாரி அரசாங்க மாற்றத்திற்கான முன்முயற்சி எடுக்க முடிந்துள்ளது.

இதைத்தவிர, பல ஸ்ராலினிச அமைப்புக்களின் எஞ்சிய பிரிவுகள் உள்ளன; இவை மிக நெருக்கமாகத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் செயல்படுகின்றனஉதாரணமாக கிரேக்கத்தின் KKE, தேசியவாத உணர்வுகளைத்தான் தூண்டிவிடுகின்றன.

இறுதியில், கணக்கிலடங்கா மத்திய வர்க்கக் குழுக்கள், “முதலாளித்துவ எதிர்ப்பு”, “சோசலிஸ்ட் எனக் கூறிக்கொள்பவை உள்ளன; ஆனால் இவை சமூக ஜனநாயகவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைக்கின்றன, அவற்றுடன் எந்தவொரு முறிவு என்னும் கருத்தை எதிர்க்கின்றன. இந்த அமைப்புக்கள்தான்சீற்றமுற்றவர்கள்”, “ஆக்கிரமிப்பு இயக்கங்களுக்கு செயல்பட்டியலை ஆணையிட முற்பட்டு, “அரசியல் கூடாது”, அதாவது இருக்கும் கட்சிகளுக்கு ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீட்டு கட்டமைப்பு தேவை என்பது பற்றிய விவாதங்களை வேண்டுமென்ற நசுக்கும் கோஷங்களை எழுப்புகின்றன.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளானது இந்த அமைப்புக்கள் அனைத்தில் இருந்தும் முறித்துக் கொள்ளுதல் என்னும் அடிப்படை மூலம்தான் காப்பாற்றப்பட முடியும். வேலைநிறுத்தங்களும், எதிர்ப்புக்களும் முக்கியமானவை என்றாலும், அவைகள் போதாது. சர்வாதிகாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கு மற்றும் ஒரு புதிய கட்சி கட்டமைக்கப்படுதல் தேவைப்படுகிறது. ஆளும் உயரடுக்குகள் தெருக்களில் இருந்து வரும் அழுத்தங்கள் மூலம் அசைக்கப்பட முடியாதவை. அவற்றிற்கு இழப்பதற்கு நிறைய உள்ளன. தங்கள் சலுகைகள், செல்வம் ஆகியவற்றை ஒரு முதலாளித்துவ முறையின் கீழ் பாதுகாப்பதற்கு அவைகள் உறுதி கொண்டுள்ளன; ஆனால் அம்முறைதான் உலகை நெருக்கடியில் தள்ளியுள்ளது.

ஐரோப்பியக் கடன் நெருக்கடி பணம் இல்லாததை ஒட்டி ஏற்படவில்லை. Handelsblatt கருத்துப்படி செல்வம் படைத்த கிரேக்கத் தனிநபர்கள் கிட்டத்தட்ட 560 பில்லியன் யூரோக்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ளனர்இது முழுத் தேசியக் கடனின் அளவைப் போல் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். அமெரிக்க முதலீட்டு வங்கியான மெரில் லிஞ்ச் 2007ம் ஆண்டு ஐரோப்பாவில் குறைந்த பட்சம் 3 மில்லியன் மில்லியனர்கள் வசிக்கின்றனர், அவர்களுடைய சொத்துக்களின் மொத்த மதிப்பு 7.5 டிரில்லியன் யூரோக்கள் என மதிப்பிட்டுள்ளது.

இந்த பெரும் மூலதன  நிதி இப்பொழுது புதிய வட்டி, இலாப ஆதாரங்களை நாடுகிறது. கார்ல் மார்க்ஸின் சொற்களில், “மூலதனம் என்பது இறந்த உழைப்பு ஆகும், இரத்தம் உறிஞ்சும் பேய் போல் உயிருடன் உழைப்பை உறிஞ்சுவதின் மூலம்தான் வாழ்கிறது.” நிதியச் சந்தைகள் அவைகளின் அன்றாட சந்தை விலையைக் கோருகின்றன. தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பெருகிய உபரி மதிப்புத் தொகைகளானது வங்கிகள், ஒதுக்கு நிதியங்கள் (hedge funds) மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்குள் செல்கின்றன; ஆனால் அவைகள் எந்த மதிப்பையும் உற்பத்தி செய்வதில்லை.

இங்குத்தான் கடன் நெருக்கடியின் முக்கியத்துவம் உள்ளது. இது தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தும் ஒரு கருவியாகிறது, அரசாங்கத்தின் சமூகநலச் செலவுகளைத்  தகர்க்கிறது, ஊதியங்களை வெட்டுகிறது, முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டங்களில் நிலவியிருந்த அனைத்து வகைச் சுரண்டல்களையும் மீண்டும் நிறுவ முற்படுகிறது.

நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வு, இருக்கும் சொத்து உறவுகளை மாற்றுதல் என்னும் அடிப்படையால்தான் முடியும். வங்கிகள், மிகப் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரும் தனியார் செல்வங்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, சமூகம் முழுவதற்கும் பயன்படுத்துவதற்கு இயக்கப்பட வேண்டும். இலாப உந்துதலுக்கு பதிலாக சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் எடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் தேவையாகும். அவை அனைத்து நடைமுறைக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் சந்திக்கும்; முந்தையவை நிதியச் சந்தைகள் மற்றும் பெருவணிகத்தின் நலன்களுடன்தான் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. முக்கிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதுதான் தொழிற்சங்கங்கள், அவற்றின் போலி இடது சோசலிச நட்பு அமைப்புக்களின் வேலையாக உள்ளன.

ஒரு சோசலிச முன்னோக்கின் அடித்தளத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம்தான் பொருளாதார, சமூக அளவில் நெருக்கமாக இணைந்துள்ள ஐரோப்பாவை பெறுதல் என்பது சாதிக்கப்பட முடியும். அதனுடைய நோக்கம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கட்டமைப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு மாற்றீடு, 1930 களில் இருந்ததைப் போல், கண்டத்தில் பெரும் பிளவுகளும் சர்வாதிகாரமும், போர்களினாலும் அழிவுகளுமாகும்.