World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Euro crisis deepens after failure of G20 meeting

G20 உச்சிமாநாட்டுத் தோல்விக்குப் பின் ஐரோப்பிய நெருக்கடி ஆழமைடைகிறது

By Nick Beams
8 November 2011
Back to screen version

யூரோ வலையத்திற்கு ஒரு மீட்புப் பொதியை அளிப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளதின் உட்குறிப்புக்களின் தெளிவான காரணத்தால் கடந்த வாரம் G20 மாநாட்டின் நிலைகுலைவிற்குப் பின் அதிர்ச்சி அலைகள் உலக நிதிய முறையில் பரவத் தொடங்கியுள்ளன.

நேற்று இரவு பிரஸ்ஸல்ஸில் யூரோப்பகுதி நிதி மந்திரிகள் கூடினர், இன்றும் நெருக்கடி பற்றி விவாதிக்கத் தொடர்ந்து கூடுவர். உடனடிப் பிரச்சினை கிரேக்கம் திவாலாவதைத் தவிர்ப்பதற்கு 8 பில்லியன் யூரோப் பொதியை அளிக்க முடிவெடுப்பதா இல்லையா என்பதாகும். அதையும் விட அவசரமானது, ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பின் (EFSF) திறனை உயர்த்துவதற்கு ஒரு வழிவகையைக் காண்பதாகும்; அதுதான் இன்னும் அதிக அரசாங்க கடன்களைக் கொண்ட இத்தாலியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

 

பைனான்சியல் டைம்ஸின் கருத்துப்படி, இக்கூட்டம் எந்த உறுதியான முடிவை எடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை, “எனவே முக்கியமான வினாக்களுக்கு இப்பொழுது விடை கிடைக்காது.”

திங்களன்று இத்தாலிய அரசாங்கப் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதங்கள் 1 சதவிகிதம் உயர்ந்து 6.68 என இருந்தன; இது ஆபத்தான பகுதி எனக் கருதப்படுகிறது. வட்டிவிகித அதிகரிப்பு இரு காரணிகளால் வந்துள்ளது. இத்தாலியின் நிதி நிலைமை பற்றிய பெருகிய கவலைகள் மற்றும் இத்தாலிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் திறன் உடைய புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்காக பெர்லுஸ்கோனி அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஒருமித்த நடவடிக்கைகள்.

ஒரு பெரிய நிதி நெருக்கடிக்கான சூழ்நிலை இத்தாலியில் ஏற்கனவே உள்ளன. இத்தாலிய பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வாங்காமல் இருந்திருந்தால், வட்டி விகிதங்கள் அயர்லாந்து, போர்த்துக்கல் பிணை எடுப்புக்களால் தூண்டவிடப்பட்டிருந்த உயர்ந்த மட்டங்களை அடைந்திருக்கும். ஆனால் ECB பத்திரங்களை வாங்கியதும் ஒரு இடைக்கால நிறுத்தம்தான், ஏனெனில் ஜேர்மனி காலவரையறையற்றுத்தான் தன்னுடைய ஆதரவை விரிவாக்கத் தயாராக இல்லை என்பதை வலியுறுத்தி வருகிறது.

பைனான்ஸியல் டைம்ஸ்  கூறுவதாவது: “6 சதவிகிதம் மற்றும் கூடுதல் என்ற மட்டத்தில், எதிர்மறை பின்னூட்டல்கள் என அழைக்கப்படுபவை களத்தில் நுழைந்து இத்தாலி அல்லது பிற ஐரோப்பியப் பகுதி நாடுகளிலுள்ள அரசாங்கக் கடன் பத்திரங்கள் இன்னும் விற்பனை செய்வதை விரைவுபடுத்தும் வகையில் தூண்டிவிடக்கூடும்.

EFSF ஆனது இத்தாலியக் கடன் சந்தைக்கு ஆதரவு கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை; அது இப்பொழுது கிட்டத்தட்ட 1.9 டிரில்லியன் யூரோக்கள் என்ற அளவில் உள்ளது. நிதிய அமைப்பின் இரண்டாவது மிகப் பெரிய உத்தரவாதம் அளிக்கும் நாடான பிரான்சின் இயலுமை பற்றிய தொடர்ந்த சந்தேகங்களால் அது குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது; ஏனெனில் பிரான்ஸ் தன்னுடைய மூன்று A கடன் தர மதிப்பை பிரான்ஸ் தக்க வைத்துக் கொள்ளமுடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

EFSF இடம் நிதியச் சந்தைகள் கொண்டுள்ள மிகக் குறைந்த நம்பிக்கை, கடந்த வாரம் அது தேவை இல்லை என்னும் காரணத்தால் 5ல் இருந்து 3 பில்லியன் யூரோக்களைத் திரட்டுவது என்று அதன் முயற்சிகளை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. யூரோப் பகுதி நெருக்கடியைத் தீர்ப்பதற்குபெரும் ராக்கட்டுகள் தேவை என்று கூறப்பட்டாலும், EFSF ஒரு தண்ணீர் துப்பாக்கி என்றுதான் வர்ணிக்கப்படுகிறது.

G20 மாநாட்டில், EFSF ற்குக் கூடுதல் நிதியைப் பெற விரும்பும் யூரோப்பகுதி நாடுகளின் முயற்சிகள், IMF மூலம் பங்களிப்புக்கள் அல்லது நேரடியாக என்னும் வகையில், பெரும் தோல்வியைக் கண்டன. ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கூறியது போல், “தாங்கள் பணம் கொடுக்க முன்வருவோம் என்று கூறும் நாடுகள் இங்கு எவையும் இல்லை.”

IMF மூலம் கூடுதலான நிதி அளிப்பதற்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தலைமையில் வந்தது. பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரோன், “எந்த நாடு எத்தனை கொடுக்கும் என்பது பற்றித் தெளிவு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை வரையறை செய்தல் மிக மோசமானது ஆகும். IMF ன் வேலை தொந்தரவிற்கு உட்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதுதான், ஆனால் நாணய முறைக்கு ஆதரவு கொடுப்பது அல்ல என்றார்.

சில BRIC நாடுகள் தன்னார்வத்துடன் பணத்தை அளிக்கும் என்றுகூட நம்பப்பட்டு இருந்தது. ஆனால் சீனர்கள் எவ்வளவு நிதி கொடுக்க முடியும் என உறுதியாகக் கூறுவதற்குமுன் தங்களுக்கு இன்னும் தகவல்கள் தரப்பட வேண்டும் எனக் கூறிவிட்டனர். பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரௌசெப் இன்னும் அப்பட்டமாக ஐரோப்பியச் சக்திகள் பரந்த ஆதரவு கோரி நிற்பது பற்றிக் கூறினார்: “EFSF க்கு நேரடியாக நிதி கொடுக்க எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை; அந்நாடுகளே (ஐரோப்பிய நாடுகளே) அதைச் செய்யவில்லை என்றால், நான் ஏன் உதவ வேண்டும்?”

நிதிய வட்டங்களில் ஐரோப்பிய உச்சிமாநாடுகள் இன்னும் பரந்த நெருக்கடி தோன்றுவதற்கான சூழலைத் தோற்றுவித்து விட்டன என்பது குறித்து நிதிய வட்டங்களில் பெருகிய கவலைகள் உள்ளன. மோர்கன் ஸ்ரான்லியின் உலகப் பொருளாதாரப் பிரிவின் தலைவராக இருக்கும் Joachim Fels நான்கு மாதங்களுக்குள் ஜேர்மனியும் பிரான்ஸும் இப்பொருள் பற்றிப் பேசுவதையேஒரு தடை என்பது போல் நடந்து கொள்ளுகின்றன என்று எச்சரித்தார்.

முதல் தடவை ஜூலை 21ஆம் திகதி உச்சிமாநாட்டையடுத்து இந்நிலை ஏற்பட்டது; அப்பொழுது கிரேக்கப் பிணை எடுப்பிற்கு தனியார் வங்கிகளின் உதவியும் பெறப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அரசாங்கக் கடன்களினால் ஆபத்து ஏதும் இல்லை என்று அடையாளம் காட்டியது; ஆனால் ஸ்பெயின் மற்றும் இத்தாலிய பத்திரச் சந்தைகளில் ஒரு நெருக்கடியை தூண்டியது. இரண்டாம் முறையாக, கடந்த வாரம், பிரான்ஸும் ஜேர்மனியும் கிரேக்கம் சிக்கன நடவடிக்கைத் திட்டத்தின் விதிகளைச் செயல்படுத்தவில்லை என்றால் அது யூரோப்பகுதியை விட்டு அகற்றப்படும் என்று தெளிவாக்கின.

 “யூரோவை விட்டு ஒரு நாடு (கட்டாயமாக) அகற்றப்படக்கூடும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதின் மூலம், அரசாங்கங்கள் தொடர்நிகழ்வுகள் ஏற்படக்கூடிய வகையில் நடந்து கொண்டிருக்கலாம்; இவை அண்டை நாடுகளிலிருந்து அரசாங்க வங்கிகளிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறும் பரபரப்பை ஏற்படுத்தும் திறன் உடையவை; அந்நாடுகளோ இதுவரை நெருக்கடி தொடர்பாக நடப்பதை சற்றே கருணையுடன் கண்டுவந்தன என்று பெல்ஸ் எழுதியுள்ளார்.

யூரோப்பகுதி நாடுகள் நெருக்கடியை தீர்க்க ஒரு ஆரம்பம் கூட காணமுடியாத நிலை தவறான கொள்கைகளின் விளைவு அல்ல. இது புறநிலை மற்றும் தீர்க்க முடியாத முரண்பாடுகள் ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவப் பொருளாதாரங்களில் வேர்களைக் கொண்டிருப்பதின் விளைவுதான்.

1999ம் ஆண்டு யூரோ நிறுவப்பட்டது, ஐரோப்பிய பொருளாதாரத்தை விரிவாக்குவதில் வசதியளித்தல் மற்றும் பெருநிறுவன, நிதிய மூலதனத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த, தடைகளற்ற சந்தையை ஏற்படுத்துவது என்ற  நோக்கத்தைக் கொண்டது. ஆனால் யூரோப்பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சுமுகமான நிலையைக் கொண்டுவருவதற்கு முற்றிலும் மாறாக இது அதன் உறுப்பு நாடுகளிடையே பிளவுகளை வளர்ப்பதற்குத்தான் உதவியுள்ளது.

Deutsch mark உடன் ஒப்பிடும்போது யூரோவின் மதிப்பு உலகச் சந்தைகளில் குறைவாக இருந்ததினால் ஜேர்மனிய மூலதனம் நன்மைகளை அடைந்தது; ஆனால் மற்ற நாடுகளுக்கு யூரோவின் மதிப்பு அவற்றின் முந்தைய நாணயத்தை விட அதிகமாக இருந்தது. இந்த ஆதாயமற்ற தன்மைக்கு ஈடுகட்டும் வகையில் யூரோப்பகுதி நாடுகளானது உறுப்பு நாடுகளுக்குக் குறைந்த விகித வட்டி கொடுத்தல் என்பது நடைமுறையில் இருந்தது.

பைனான்ஸியல் டைம்ஸ் கட்டுரையாளர் Gavyn Davies குறிப்பிட்டுள்ளது போல், அரசாங்கக் கடன் பிரச்சினை என்பது பொதுவாக சுற்றியுள்ள நாடுகளின் பொதுக்கடன் தொடரும் ஆற்றல் உடையதா என்பது பற்றி விவாதிக்கப்படும்; ஆனால் இது யூரோப்பகுதியின் கட்டமைப்பில் இருந்தே வெளிவரும் செலுத்தப்பட வேண்டிய நிலுவைகள் என்று காணப்படுவதுதான் சிறப்பாக இருக்கும்.

இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கிரேக்கம் என மொத்தமாக எடுத்துக் கொண்டால்இந்நாடுகள்தான் பெரிய பிரச்சினைகளைக் கொண்டுள்ளனபற்றாக்குறை 136 பில்லியன் டொலர்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவிகதம் என உள்ளது.

டேவிஸ் கருத்துப்படி, “இக்கண்ணோட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாடுகளில் இருந்து துணை நாடுகளுக்கு ஜேர்மனிய உள்நாட்டு உற்பத்தியின் மொத்தத்தில் மூலதனக் கணக்கு மாற்றம் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் என இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் யூரோ உடைந்து போகும்.”

2008ம் ஆண்டு நிதிய நெருக்கடி வரை, இந்த மாற்றம் தனியார் மூலதனமானது சுற்றியுள்ள நாடுகளுக்குக் கடன்கள் என்று பாய்ந்த வகையிலும், சொத்துக்கள் வாங்கப்படுதல், உதாரணத்திற்கு ஸ்பெயினில், என்ற வகையிலும் நடைபெற்று வந்தது. ஆனால் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவை ஒட்டி, மூலதனப் பாய்வுகள் வரண்ட நிலையில், இந்த வழிவகை நின்றுபோயிற்று.

கடுமையான உள் சமசீரற்ற தன்மையில் இருந்து யூரோப்பகுதியை தக்க வைப்பதற்கு, பொதுநிதிகள் முக்கிய நாடுகளில் இருந்து சுற்று நாடுகளுக்கு முறையாகப் பாய்தல் என்பது இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய கொள்கைக்கு முக்கிய நாடுகள், குறிப்பாக ஜேர்மனியும் பிற வடக்குச் சக்திகளும், எதிர்ப்பைக் காட்டுகின்றன; அவை இந்நிலை உலகப் பொருளாதாரத்தில் தங்கள் நிலைமையை வலுவற்றதாக்கிவிடும் என்று அஞ்சுகின்றன.

வேறுவிதமாகக் கூறினால், யூரோப் பகுதியின் நெருக்கடி இரு இடைத்தொடர்புடைய வழிவகைகளின் வெளிப்பாடு ஆகும். 2008ல் தொடங்கிய நிதியச் சரிவு மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ இலாபமுறையில் வேரூன்றியுள்ள போட்டியிடும் தேசிய அரசுகளுக்கும் இடையேயுள்ள தீர்க்கமுடியாத முரண்பாடு என்பவையே அவைகள்; எனவேதான் முதலாளித்துவ சரிவைத் தடுப்பதற்கு முன்வைக்கப்படும்தீர்வுகள் என அழைக்கப்படுபவை அனைத்தும் ஒரு இரவிலேயே சரிந்துவிடுகின்றன.