World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The UAW and the reincarnation of the US auto industry

ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கமும் (UAW), அமெரிக்க வாகனத்துறையின் "மறு பிறப்பும்"

Jerry White
28 October 2011
Back to screen version

ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் மற்றும் கிறைஸ்லர் ஆலைகளின் புதிய நான்காண்டு-கால தொழிலாளர் உடன்படிக்கைகள் அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்களுக்கு ஒரு பலத்த அடியாகும். அது உலகெங்கிலும் உள்ள வானகத் தொழில்துறை தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் நிலைமைகளை பின்தள்ளுவதற்கே இட்டுச்செல்லும். தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிற்கு எதிராகவும் பெருநிறுவனங்கள் மேலதிக தாக்குதல்களை நடத்த அவர்கள் ஒரு முன்மாதிரியை உருவாக்குகின்றனர்.

1970க்குப் பின்னர், உற்பத்தி செலவுகளை இந்தளவிற்கு மிகவும் குறைவாக அதிகரித்திருப்பதற்காக வோல் ஸ்ட்ரீட் அந்த உடன்படிக்கைகளை பாராட்டியது. “குறைந்தபட்ச இலாபத்தோடு, முந்தைய ஆண்டுகளில்போல் என்ன விலை கொடுத்தாகிலும்  வேலைகளை பாதுகாப்பதற்கு மாறாக பெருநிறுவன நிர்வாகமும்  மற்றும் ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் (United Auto Workers union) “புதிய ஒருமுனைப்பை" பாராட்டிய, IHS Global Insightஇன் ஆய்வாளர் மைக்கேல் ரோபினெட், Detroit Newsக்கு கூறுகையில், “அது தொழில்துறையின் மறுபிறப்பு" என்று கூறினார்.

இந்த பொருளாதார நெருக்கடியை நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் வருமானத்தை கடுமையாக குறைப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தும் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் முயற்சிகளில், இந்த வாகனத்துறை உடன்படிக்கைகள் ஒரு புதிய மைல்கல்லாகும். 2009இன் நடத்தப்பட்ட வாகனத்துறையின் பலவந்தமான மறுகட்டமைப்பில் தொடங்கி, வாகனத்துறை தொழிலாளர்களை வறுமையில் தள்ளி (இது நாடுமுழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உச்சவரம்பாக செய்ய உதவும்) பெருநிறுவனங்களின் இலாபங்களை மீட்டெடுக்க ஒபாமா நிர்வாகம், நிறுவனங்களோடும் UAW உடனும் மிகவும் நெருக்கமாக வேலை செய்து வந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களோடு சேர்ந்து, ஒருங்கிணைந்த வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கமும் (UAW) ஒரு தொழிலாளர்களின் அமைப்பு அல்ல, மாறாக பெருநிறுவனங்களுக்கு சாதகமாக கூட்டுறவுவாத வணிகஅமைப்பு என்பதை உடன்படிக்கையின் உள்ளடக்கமும், அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் இரண்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

 “அமைதி ஏற்படுத்தியமைக்காகவும்", உத்தரவாதமான கூலி உயர்வுகளும், வாழ்க்கை செலவுகளுக்கான உயர்வுகளும் கடந்தகாலத்தின் ஒரு விஷயமாகிவிட்டதை அங்கீகரித்திருப்பதற்கும் நிதியியல் வல்லுனர்கள் UAWக்கு பாராட்டை வாரிவழங்கியுள்ளனர். நிறுவனம் இலாபம் ஈட்டினால், நிர்ணயித்த உற்பத்தியையும், தர இலக்குகளையும் தொழிலாளர்கள் எட்டினால் மட்டுமே ஒருதடவை பண விருப்பூதியத்தை தொழிலாளர்கள் பெறுவார்கள் என்பதற்கு UAW உடன்பட்டுள்ளது.

புதனன்று இரவு PBS தொலைக்காட்சியில் பேசுகையில், UAW தலைவர் பாப் கிங் கூறியது, “நம்முடைய கண்ணோட்டம் மாறியுள்ளது, இந்த நிறுவனங்களின் நீண்டகால வெற்றியில் நிறைய பங்கெடுக்கக்கூடியவர்களே நம்முடைய அங்கத்தவர்களாக இருக்க முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தொழிற்துறை, தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கம் அனைத்தும் ஒன்றாக வேலை செய்வதற்கு வாகனத்துறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. துருவமுனைப்படுவதற்கும், துருவமுனைப்படும் நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் மாறாக நாம் கூட்டாக பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம்,” என்றார்.

பெருநிறுவன நிர்வாகத்தின் மற்றும் அரசாங்கத்தின் ஒரு நேரடி கையாட்களாக மாறியுள்ள UAWஇன் மாற்றத்தை, போர்டில் உள்ள தொழில்துறை தொடர்புகள் மேலாளரின் மகனான கிங் மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். நிறுவனங்களின் "நீண்டகால வெற்றிக்கு" தம்மை அர்பணித்துக் கொண்ட கிங்கும், அவரின் கூட்டாளிகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 150,000 வேலைகளை அழிப்பதிலும் மற்றும் வாகனத்துறை தொழிலாளர்களின் பல தலைமுறை போராட்டங்களின் மூலமாக வென்றெடுத்த வெற்றிகளை அழிப்பதிலும் கூடி வேலை செய்துள்ளனர்.

தங்களின் கொழுத்த சம்பளங்களையும், செலவின கணக்குகளையும் பாதுகாத்துக் கொள்ள, UAW நிர்வாகிகள் மலிவுக்கூலியை ஒழுங்கமைப்பாளர்களாக தங்களின் சேவைகளை வழங்கியுள்ளனர். PBS நேர்காணலின் போது அளித்த அவரது கருத்துக்களில், கிங், மெக்சிகோ, சீனா மற்றும் ஏனைய குறைந்த-கூலி நாடுகளிலிருந்து சில உற்பத்திகளை அமெரிக்காவிற்குத் திரும்ப கொண்டு வந்தமைக்காக வாகனத்துறை நிறுவனங்களைப் பாராட்டினார். “ஒருவேளை UAW இல்லாதிருந்தால், இதில் பெரும் முதலீடுகள் அமெரிக்காவிற்கு அல்லாமல் உலகின் ஏனைய இடங்களுக்குச் சென்றிருக்கக்கூடும்,” என்றார்.

வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும், அடுத்த நான்காண்டுகளில் 20,000 புதிய வேலைகள் அனைத்திற்கும் UAWஆல் ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டாந்தர கூலிகளே வழங்கப்படும். இதற்கிடையில், குறைந்த-சம்பள தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்க சந்தாவில் கூடுதலாக $10 மில்லியன் செலுத்த வேண்டியதிருக்கும்.

தற்போதைய உடன்படிக்கைகளை தொழிலாளர்களின் பரந்த எதிர்ப்புகளுக்கிடையில் கொண்டு செல்ல, UAW குறிப்பாக நயவஞ்சகமான, ஜனநாயக விரோத முறைகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது.

 “இல்லை என வாக்களிப்பது முட்டாள்தனமானதென்றும், உணர்ச்சிவயப்பட்ட விடையிறுப்பென்றும் முன்னதாக குற்றஞ்சாட்டிய UAW நிர்வாகிகள், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சிறந்தவொன்றையும் அவர்களால் பெற முடியாதென தொழிலாளர்களுக்கு கூறினர். Fordஇன் பல தொழிற்சாலைகளில் அதை நிராகரித்த பின்னர், 'ஒரு நிராகரிப்பென்பது ஒரு வேலைநிறுத்தத்தில் தான் போய் முடியும், பின்னர் தொழிலாளர்களுக்கு பிரதியீடாக கருங்காலிகளை போர்டு நிர்வாகம் கொண்டுவருவார்கள்' என்று UAW நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உடன்படிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் வாக்களித்தால், ஒரு மத்தியஸ்தரால் அதையும்விட மோசமான உடன்படிக்கை திணிக்கப்படும் என்று தொழிலாளர்களை அச்சுறுத்த, 2009இல் ஒபாமா நிர்வாகம் மற்றும் நிறுவனங்களுடன் அது ஒப்புக்கொண்டிருந்த வேலைநிறுத்த தடை உடன்பாட்டை கிறைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸில், UAW பயன்படுத்தியது.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்ததால், UAW வாக்கு எண்ணிக்கை மோசடியில் இறங்கி, தொழிலாளர்களின் விருப்பங்களுக்கு மாறாக செயற்பட்டது. கிறைஸ்லரில் இல்லை என வாக்களித்த தொழிற்தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களைப் புறக்கணித்து, ஒப்பந்தங்களை நிர்பந்தப்படுத்தியதன் மூலம் சர்வதேச UAW நிர்வாகக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவில் அது உச்சத்தை அடைந்திருந்தது.

சுமார் மூன்று தசாப்த-கால இதுபோன்ற காட்டிகொடுப்புகளின் உச்சகட்டத்திற்கு வந்த இந்த சமீபத்திய அனுபவம், UAW மூலமாக தங்களை பாதுகாத்துக்கொள்வதென்பது தொழிலாளர்களுக்கு சாத்தியமே இல்லையென்பதை எடுத்துக்காட்டுகிறது. இது, Autoworker Caravanஇல் இருந்து Soldiers of Solidarity மற்றும் Labor Notes வரையிலான  அனைத்து போலி அதிருப்தியாளர்கள் மற்றும் போலி-இடதுகளின் கருத்தான UAWஐ சீர்திருத்தி, தொழிலாளர்களின் நலன்களுக்காக போராட செய்ய முடியுமென வாதிடுவதையும் நிராகரிப்பதாக உள்ளது. இது 1920கள் மற்றும் 1930களில் முசோலினி அல்லது ஹிட்லரால் உருவாக்கப்பட்ட பாசிச தொழிலாளர் கூட்டமைப்புகள் சீர்திருத்தப்பட்டமுடியாதிருந்ததோ அதேபோல் UAWஐ மேலும் சீர்திருத்திவிட முடியாது.

இது வெறுமனே அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தனிப்பட்ட ஊழல் சார்ந்த ஒரு விஷயமல்ல. ஒவ்வொரு நாட்டிலும், தொழிற்சங்கங்கள் சமூகநல வெட்டுக்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை ஆதரித்து வருகின்றன. இது அவர்கள் குறைந்த ஊதியம் நிலவும் நாடுகளுடன் போட்டிபோடுவதற்காக தொழில்வழங்குனர்கள் மற்றும் பெருவணிக அரசாங்கங்களோடு கூடி வேலைசெய்வதன் மூலமாக முதலீடுகளை ஈர்க்க முனையும், முதலாளித்துவ-சார்பு மற்றும் தொழிற்சங்கங்களின் தேசியவாத நிலைநோக்கின் விளைவுகளாகும்.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தொழில்துறை மற்றும் அரசியல் அமைப்பிற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவ கட்சி தாக்குதல்முனையாக்கி வருகிறது. தொழிலாளர்கள் UAWஇல் இருந்து முறித்துக்கொண்டு, அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் நல்ல சம்பளம் கிடைக்கச் செய்யும் போராட்டத்திற்காக சாமானிய குழுக்களை அமைக்குமாறு நாம் அழைப்புவிடுக்கிறோம். UAWஇன் "அமெரிக்க பொருட்களையே வாங்குங்கள்" என்ற தேசியவாதம் நிராகரிக்கப்பட வேண்டும்; கூலிகள் மற்றும் நலன்களை அடிமட்டத்திற்குக் கொண்டுவரும் போட்டியை எதிர்க்க அனைத்து தேச எல்லைகளிலும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட போராட வேண்டும்.

UAW நடவடிக்கைகள், முற்றிலும் இலாபத்தைப் பாதுகாக்கும் அவர்களின் கொள்கையோடு பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை தேவைகள் மற்றும் உரிமைகள், ஒரு சிறியளவிலான பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் இலாபகர அமைப்புமுறையோடு மற்றும் செல்வவளத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்புமுறையோடு பொருந்தாமல் உள்ளன.

வாகனத்துறை தொழிலாளர்களின் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதென்பது, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி கட்சிகளில் இருந்து உடைத்துக் கொண்டு, ஒரு தொழிலாளர்களின் அரசிற்காக மற்றும் பொருளாதார வாழ்க்கையை சோசலிச மாற்றத்திற்காக போராடும், தொழிலாள வர்க்கத்தின் ஓர் அரசியல் போராட்டத்தோடு பிணைந்துள்ளது. இது வங்கிகளையும், வாகனத்துறை போன்ற அடிப்படை தொழில்துறைகளையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் மற்றும் பொதுவுடைமையின்கீழ் தேசியமயமாக்குவதை உட்கொண்டுள்ளது.

அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் பின்னணியில் மூன்று பெரியவற்றில் (ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், கிறைஸ்லர்) வாக்களிப்பு நடக்கின்றது.  வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பு போராட்டங்கள், கிரேக்க தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம், சீனா மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வரையில் அதிகரித்துவரும் வாகனத்துறை தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டங்கள் அனைத்தும் ஒரு சமூக எழுச்சி காலக்கட்டத்தின் ஆரம்ப அறிகுறிகளாக உள்ளன.

இந்த போராட்டங்களின் வெற்றியானது தொழிலாளர் வர்க்கத்திற்குள் ஒரு புதிய அரசியல் தலைமையைக் கட்டியெழுப்புவதைச் சார்ந்துள்ளது. அமெரிக்கா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வாகனத்துறை தொழிலாளர்களும், அனைத்து தொழிலாளர்களும் சோசலிச சமத்துவ கட்சியின் வேலைத்திட்டங்களைப் புரிந்துகொண்டு, சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.