சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Sri Lankan NSSP repudiates socialism and the October Revolution

இலங்கை நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தையும் அக்டோபர் புரட்சியையும் நிராகரிக்கின்றது

Statement of the Socialist Equality Party Sri Lanka
25 October 2011

use this version to print | Send feedback

இலங்கையில் நவ சம சமாஜக் கட்சி, சோசலிசத்துக்கான போராட்டத்தை நிராகரித்து, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை தாக்குவதுடன் அக்டோபர் புரட்சியை ஒரு வரலாற்று தவறு எனக் கூறுகின்றது.

நவசமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்வதை நோக்கி முன்செல்வதற்காக இலங்கையில் முதலாளித்துவ கட்சிகளுடன் புதிய கூட்டுக்களை அமைக்க முயற்சிக்கின்ற நிலையிலேயே கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நவசமசமாஜக் கட்சி இலங்கையில் அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் முதலாளித்துவக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான கூட்டணியை இறுக்கமாக்கிக்கொண்டது.

லக்பிமநியூஸ் வாரப் பத்திரிகையில் செப்டெம்பர் 4 அன்று தனது பத்தியில் கருணாரட்ன எழுதியிருப்பதாவது: மேற்கத்தைய நாடுகளில் சோசலிச அரசியல் இயக்கங்களில் கலந்துரையாடப்படுவது போல், எங்களது போன்ற வறிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டில் சோசலிசம் இருக்க முடியாது. உலக அளவில் முதலாளித்துவப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்த பின்னரே சோசலிசம் வரும். உலக முதலாளித்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயக உலக அரசாங்கம் இருக்க வேண்டும். அதன் பொறிவு மனித குலத்தை சோசலிசத்தை நோக்கி வழிநடத்தும்.

அத்தகைய அறிக்கைகள் மூலம் நவசமசமாஜக் கட்சி இலங்கையிலும் ஆசியாவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தை அது முழுமையாக எதிர்க்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. நவசமசமாஜக் கட்சி நிலைப்பாட்டைப் பொறுத்தளவில், முடிவற்ற எதிர்காலத்தின் நிகழ்ச்சி நிரலில் சோசலிசம் கிடையாது. மாறாக, தொழிலாளர்கள் நீண்ட போராட்டங்களில் ஈடுபடுவது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கன்றி, அமைதியாக ஒன்றிணைந்து வெகுஜனங்களுக்கு ஒரு ஜனநாயக உலக அரசாங்கத்தை கொடுக்க வேண்டும் என உலகம் பூராவும் உள்ள பெரும் நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காகவே ஆகும்.

இந்த முன்நோக்கு கற்பனையானதும் பிற்போக்கானதுமாகும். மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் தமது நாட்டில் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளையும் வெகுஜனப் போராட்டங்களையும் எதிர்கொள்கின்ற நிலையில், மேலும் மேலும் சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை இராணுவ ரீதியில் அச்சுறுத்தி வருகின்றன. இப்போது கூட வாஷிங்டன் தனது பிரஜைகளை விசாரணையின்றி கொல்வதற்கான உரிமையை கோருகின்றது. சமூக சமத்துவத்துக்கும் உலக பொருளாதார உற்பத்தியை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்குமான ஒரு சோசலிசப் போராட்டம் இன்றி, ஜனநாயகத்தின் பேரில் எந்தவொரு அக்கறையான போராட்டமும் இடம்பெற முடியாது.

கருணாரட்ன பின்தங்கிய நாடுகளில் சோசலிசத்துக்கான போராட்டத்தை நிராகரித்த பின்னர், லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மீது தாக்குதல் தொடுக்க விரைகின்றார். பின்தங்கிய நாடுகளில் சோசலிசம் உருவாக முடியாது என வலியுறுத்தும் நவசமசமாஜக் கட்சி போலன்றி, அவர் [ட்ரொட்ஸ்கி] பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கான சாத்தியத்தை முன்னறிவிக்கின்றார்... வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகில் சமத்துவமற்ற அபிவிருத்தியானது உலக சோசலிசத்துக்கு ஒரு குறுக்குப் பாதையை திறந்துவிடும் என்பதாகும், என கருணாரட்ன எழுதுகின்றார்.  

நவசமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தால் ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை மேற்கொள்ள முடியாது என ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளார். விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்தல், ஜனநாயக உரிமைகளை ஸ்தாபித்தல், நிலப்பிரபுத்துவ மற்றும் சமய பிற்போக்குத்தனங்களை எதிர்த்தல் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டு ஜனநாயகப் புரட்சிகளை அபிவிருத்தி செய்ய, அல்லது  தேசிய ஐக்கியத்தை, உண்மையான சுதந்திரத்தை மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையை எட்ட முதலாளித்துவத்தால் முடியாது.

மாறாக, சோசலிச புரட்சியின் ஒரு உப-விளைவாக மற்றும் உலக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் இத்தகைய இன்றியமையாத பணிகளை இட்டு நிரப்ப முடியும். இந்த வகிபாகத்தை ஆற்றுவதற்காக தொழிலாள வர்க்கம் ஒவ்வொரு முதலாளித்துவ கட்சியில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.

1917 அக்டோபரில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அடித்தளத்தைக் கொடுத்து, சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிக்கவும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் விரிவுபடுத்துவதற்கும் வழியமைத்துக் கொடுத்தது இந்த முன்நோக்கே ஆகும். நிச்சயமாக கருணாரட்ன நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்ப்பதனாலேயே, அவர் சோவியத் ஒன்றியத்தை தாக்குவதோடு அதற்கும் சோசலிசத்துக்கும் சம்பந்தம் இல்லை என பிரகடனமும் செய்கின்றார்.

ஐரோப்பாவில் அடுத்து வந்த புரட்சிகர அலைகள் 1920களில் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக, கருணாரட்ன எழுதுவதாவது: ட்ரொட்ஸ்கியின் முன்நோக்கின் விளைவால் ரஷ்யா தேசியமயப்படுத்தப்பட்ட பின்தங்கிய பொருளாதாரத்துடன் ஒரு கட்சி அரசாக தனிமைப்படுத்தப்பட்டது. பின்னையது எந்தவொரு அரசியல் அர்த்தத்திலும் ஒரு சோசலிச அரசு அல்ல, மாறாக அது ஒரு பக்குவமற்ற நெறிபிறழ்வாகும், என கருணாரட்ன எழுதுகிறார்.

எந்தவொரு அரசியல் அர்த்தத்திலும் சோவியத் ஒன்றியம் சோசலிசம் அல்ல, அது ஒரு நெறிபிறழ்வே என கூறுவதன் மூலம், 1917ல் ரஷ்யாவில் தொழிலாளர்கள் ஆட்சிக்கு வந்தமை ஒரு தவறு மற்றும் ஒரு வரலாற்று மரண முடிவு. புரட்சியை நடத்தாமல் இருந்திருக்க வேண்டும், என கருணாரட்ன அர்த்தம் கற்பிக்கின்றார்.

இது இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான முழு புரட்சிகரப் போராட்டங்களும் வரலாற்று ரீதியில் முறைகேடானது என அர்த்தப்படுத்துவதோடு மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்தினதும் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தினதும் ஸ்டாலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தையும் ஒதுக்கித் தள்ளுகின்றது.

எதிர் ஏகாதிபத்திய சக்திகளால் சுற்றிவளைக்கப்பட்ட ஆரம்ப சோவியத் ரஷ்யாவின் யுத்தத்தால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தில் தலைதூக்கிய அதிகாரத்துவம், உலக சோசலிசப் புரட்சியினதும் மற்றும் தனிப்பட்ட முறையில் ட்ரொட்ஸ்கியினதும் எதிரியாக உருவெடுத்தது. மாறாக அது தனி நாட்டில் சோசலிசத்துக்காக வாதாடியது. அதன் இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாடு என சொல்லப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, அது பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சோசலிசத்துக்கான போராட்டத்தை பிந்திய வரலாற்று சகாப்தத்துக்கு ஒத்திவைத்துவிட்டு முதலில் ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும் எனக் கூறியது.

பின்தங்கிய நாடுகள் சோசலிசத்தை அன்றி முதலில் ஜனநாயகத்தையே பெற வேண்டும் என இன்று கருணாரட்ன வலியுறுத்துவது, தனது கட்சியை ஏகாதித்தியத்துக்கும் அரசியல் பிற்போக்குத்தனத்துக்கும் நேரடியாக சேவையாற்றுவதற்கு நகர்த்துவதற்கான தயாரிப்பே ஆகும். தாம் ஒரு சோசலிச ஐக்கியத்துக்காக அன்றி, ஜனநாயகத்துக்கும் சமூக சமத்துவத்துக்காகவும் முயற்சிப்பவர்களின் ஐக்கியத்துக்காக முன் நிற்பதாகவும், அத்தகைய ஒரு பரந்த குழுவமைவு சமூக ஜனநாயக கூட்டணி என்றழைக்கப்படுகிறது என்றும் நவசமசமாஜக் கட்சி தலைவர் எழுதுகின்றார்.

கருணாரட்னவின் சமூக ஜனநாயக கூட்டணி என்பது என்ன? இலகுவாகக் கூறினால், அது வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணியே ஆகும். ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான நவசமசமாஜக் கட்சியின் புதிய கூட்டணி, தீவிர சமூக ஜனநாயக இயக்கத்தின் தோற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது என கருணாரட்ன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அவரது இலக்கு, இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் (யூ.என்.பீ.) உள்ளடக்கும் வகையில் கூட்டணியை விரிவுபடுத்துவதே ஆகும்.

நவசமசமாஜக் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக யூ.என்.பீ. உடனும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அடிக்கடி நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட்டது. 2009 முற்பகுதியில், நவசமசமாஜக் கட்சி, இன்னுமொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க என்ற பெயரில், யூ.என்.பீ. உடன் சுதந்திரத்துக்கான களம் என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டு யூ.என்.பீ. உடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிவந்தது.

உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், கருணாரட்ன யூ.என்.பீ. யை சமூக ஜனநாயகக் கட்சியாக ஆகுமாறு கேலிக்கூத்தான முறையில் அழைப்புவிடுத்தார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கருணாரட்ன வலியுறுத்தியதாவது: யூ.என்.பீ. ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக மாற வேண்டும்; சகல வலதுசாரி அரசியலையும் (இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ) மஹிந்த எடுத்துக்கொண்டுள்ளதால், அவர்களால் தொடர்ந்தும் வலதுசாரி அரசியல் கட்சியாக இருக்க முடியாது,

யூ.என்.பீ. தனது கொள்கைகளை சமூக ஜனநாயகத்துக்கு மாற்றிக்கொள்ளாவிட்டால்... சகல சாதகங்களும் அரசாங்கத்துக்குச் சென்றுவிடும், என இன்னுமொரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

வலதுசாரி யூ.என்.பீ.யை முதலாளித்துவ இடது கட்சியாக மாறுமாறு கருணாரட்ன அழைப்பு விடுப்பது வஞ்சகமானதும் கேலிக்கூத்தானதுமாகும். தமிழ் தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்ததன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தாலும், மற்றும் மக்களின் வறுமை நிலை மோசமடைந்து வருவதாலும், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) அவப்பேறு பெற்றுள்ளது என்பது அவர் அறிந்ததே. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போரட்டத்தை தான் எதிர்ப்பதால், கருணாரட்ன ஒரு புதிய, மற்றும் மோசடியான கூட்டணியை அமைத்துக்கொள்ளக்கூடியவாறு ஒரு புதிய சக்தியை அரசியல் ஸ்தாபனத்துக்குள் தேடிக்கொள்ள வேண்டும். அது இடது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்க முடியாததால், அவர் வலதுசாரி யூ.என்.பீ.யை தேர்வு செய்துகொள்கின்றார்.

யூ.என்.பீ. இலங்கையில் பாரம்பரிய விசுவாசமான மேற்கத்தைய-சார்பு கட்சியாகும். அது வாஷங்டனுடன் நெருங்கிய உறவு கொண்டதாகும். அது பெய்ஜிங்கின் பக்கம் சாய்வதற்கு எதிராக மீண்டும் மீண்டும் இராஜபக்ஷவை எச்சரித்து வந்துள்ளது. பெருமளவில் உள்நாட்டு யுத்தத்துடன் விரிவாக்கமடைந்த சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவு, மேற்கத்தைய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கையை தனிமைப்படுத்திவிடும் என்று அது கவலை கொண்டிருந்தது.

நவசமசமாஜக் கட்சி பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஒரு கூட்டணியை அமைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றது. கருணாரட்ன தமிழ் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக முன்னிலைப்படுத்துவதோடு அதனுடன் ஒரு அரசியல் தீர்வுக்கு வருமாறும் கொழும்பு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றார். இது தமிழ் முதலாளித்துவத்துடனான அதிகாரப் பகிர்வு திட்டமே அன்றி வெறெதுவுமாக இருக்க முடியாது.

தமிழ் கூட்டமைப்புடன் கொழும்பு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் கோருவதைப் பற்றி நவசமசமாஜக் கட்சி தலைவர் புரிந்தே வைத்திருக்கின்றார். புலிகளின் தனிநாட்டுக்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த, பிரிவினைவாத புலிகளின் முன்னாள் ஊதுகுழலான தமிழ் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பாகும். இது அக்டோபர் கடைசியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திக்கவுள்ளது.

நவசமசமாஜக் கட்சி தமிழ் கூட்டமைப்புக்கு விடுக்கும் அழைப்பும், அதே போல் யூ.என்.பீ.க்கு விடுக்கும் அழைப்பும் ஒரே திசையமைவைக் கொண்டுள்ளன அதிருப்தியடைந்துள்ள தமிழ் வெகுஜனங்களை அரசியல் ஸ்தாபனத்துடன் கட்டிப்போட முயற்சிக்கும் அதே வேளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றது.

வாஷிங்டன் கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதற்கு, உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களை பயன்படுத்த முயற்சிக்கின்றது. சீனாவுடனான அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார மோதல்கள் உக்கிரமடைகின்ற நிலையில், ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான இராஜபக்ஷவின் அபிவிருத்தியடையும் உறவுகளை துண்டிக்க விரும்புகிறது.

இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஒத்துழைத்த அமெரிக்கா, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி எந்தவித அக்கறையும் கொண்டிருக்காததோடு, தனது மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களின் அடிப்படையில் மட்டுமே தனது கொள்கையை முன்னெடுக்கின்றது. 2009 டிசம்பரில், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி வெளியிட்ட அறிக்கை, இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியது. அது இந்து சமுத்திரத்தில் சீன மற்றும் இந்திய வர்த்தகத்துக்கான தீர்க்கமான கடற் பாதையை பற்றி மேற்கோள் காட்டியிருந்தது. இலங்கை இழக்கப்படுவதை அமெரிக்கா அனுமதிக்க முடியாது, என அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கின்றது.

லிபியாவில் இறுதியில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்த ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட லிபிய கிளர்ச்சியாளர்களை நவசமசமாஜக் கட்சி ஆதரிப்பதில் இருந்து அது ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக வளைந்து கொடுப்பது வெளிப்பட்டுள்ளது. கருணாரட்ன நேட்டோ குண்டுத் தாக்குதல்களைப் பற்றி வெறும் கடமைக்கு மட்டும் விமர்சனங்களை முன்வைத்த அதே வேளை, லிபிய மக்களுக்கு உதவுவதற்காக [கடாபி] சர்வாதிகாரத்துக்கான ஆயுத விற்பனைக்கு முழு தடை விதிப்பதற்கும், லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கும் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அவர் எழுதுகின்றார். துனிஷியா மற்றும் எகிப்தில் தொடங்கி, அராபிய மக்கள் மற்றும் இராணுவத்திடமிருந்து லிபியாவுக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுக்கின்றார்.

அதாவது, தமது சொந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்தும் நசுக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதரவிலான துனிஷிய அரசாங்கம் மற்றும் எகிப்து இராணுவ ஆட்சியும், லிபியாவில் புதிய ஏகாதிபத்திய-சார்பு அரசாங்கம் ஒன்றை அமைக்க மேற்கத்தைய சக்திகளுக்கு உதவ வேண்டும் என அவர் கோருகிறார். ஆயுத விற்பனையை தடை செய்யவும் லிபிய சொத்துக்களை முடக்குவதற்குமான தனது பிரேரணைகளை ஏகாதிபத்திய சக்திகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பது கருணாரட்ன அறிந்ததே. உண்மையில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சினால் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் முதன்மையான நலன்களை அதாவது லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவது மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்திய மூலோபாய நலன்களை பாதுகாப்பது- முன்னெடுக்கவே லிபியா மீது நேட்டோ யுத்தம் தொடுத்தது என்பது மேலும் மேலும் தெளிவாகின்ற நிலையிலேயே, கருணாரட்ன லிபியா பற்றி சிறிது மௌனம் காத்தார்.

ஏகாதிபத்தியத்துக்கும் அரசியல் உரிமைகளுக்கும் நவசமசமாஜக் கட்சியின் அசைக்க முடியாத ஆதரவு, அது ஒரு ட்ரொட்ஸ்கியக் கட்சியல்ல என்ற உண்மையை பிரதிபலிக்கின்றது. லங்கா சமசமாஜக் கட்சி, சோசலிச அனைத்துலகவாத கொள்கையையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுத்து, 1964ல் ஸ்ரீ.ல.சு.க.யின் கூட்டணி அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டது. இதற்குப் பின்னரான லங்கா சமசமாஜக் கட்சியின் காலப் பகுதியிலிருந்தே நவசமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஆதரவளித்த தலைவர்களும் மற்றும் கருணாரட்னவுமே நவசமசமாஜக் கட்சியை பின்னர் ஸ்தாபித்தனர்.

அப்போது லங்கா சமசமாஜக் கட்சி பப்லோவாத இயக்கத்தின் இலங்கைப் பகுதியாக இருந்தது. பப்லோவாத இயக்கமானது சுயாதீன ட்ரொட்ஸ்கியக் கட்சிகளை கட்டியெழுப்பும் போராட்டத்தை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவ மற்றும் புரட்சிகர வகிபாக நிலைப்பாட்டை மறுத்து, ட்ரொட்ஸ்கிஸத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு அரசியல் போக்காகும். ட்ரொட்ஸ்கிஸக் கட்சிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஸ்டாலினிஸ மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டும் என பப்லோவாதிகள் வலியுறுத்தினர். பின்தங்கிய நாடுகளில் அவர்கள் தேசிய முதலாளித்துவக் கட்சிகளுடன் கூடஐக்கிய முன்னணி அமைக்கப் பிரேரித்தனர். இதனால் ஸ்ரீ..சு.. நோக்கி சரிந்துகொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் வளர்ச்சியடைந்து வந்த சந்தர்ப்பவாத அரசியலை மூடி மறைத்த அவர்கள், 1964ல் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு...) 1968ல் இந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிராகவும் லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவுக்கு எதிராகவும் ஸ்தாபிக்கப்பட்டது. அது 1964ல் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான, மற்றும் சர்வதேச ரீதியில் பப்லோவாதத்தின் ட்ரொட்ஸ்கிஸ-விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தில் காலூண்றியிருந்தது. அப்போதிருந்து, பு.../சோ... ட்ரொட்ஸ்கிஸத்தையும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான அதன் சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தையும் பாதுகாக்க, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட சகல வடிவிலான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராகப் போராடி வந்துள்ளது.

ஸ்ரீ..சு.. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பங்குபற்றிய கருணாரட்னவும் அவரது பங்காளிகளும், இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆதரித்தனர். அந்த அரசாங்கம் 1971ல் இளைஞர்களின் கிளர்ச்சியை நசுக்கி, 15,000 இளைஞர்களைக் கொன்று மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்த போதும் அவர்கள் அதிலேயே இருந்தனர். பௌத்த மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்த 1972 அரசியலமைப்புச் சட்டத்தை அந்த கூட்டணி அரசாங்கம் அமுல்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒரு பெரும் இனவாத தாக்குதலை நடத்தியது. கருணாரட்னவும் அவரது பங்காளிகளும் இந்த தாக்குதலை அங்கீகரித்தனர்.

லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவத்துக்கு இத்தகைய சேவைகளை செய்த பின்னர் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரே நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறி 1978ல் தமது சொந்தக் கட்சியை அமைத்தனர். இந்தக் கட்சி முதலில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என காட்டிக்கொண்டு சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகளைப் முன்னெடுத்த தொழிலாளர் அகிலத்துக்கான குழுவில் இணைந்து கொண்டது. நவசமசமாஜக் கட்சி 1991ல் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பகுதியாகியது.

இந்தக் கட்சி இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் பூராவும் கொள்கையற்ற பிற்போக்கு சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது. 1983ல் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் தொடங்கிய நிலையில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் யூ.என்.பீ. அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்ட போது, அவர் ஏனைய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து வட்ட மேசை மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் உத்வேகத்துடன் அதில் பங்குபற்றினர்.

1987ல் தமிழர்களை ஒடுக்குவதற்கும் புலிகளை நிராயுதபாணிகளாக்கவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்திய அமைதிப் படைகள் நுழைவதற்கு வழி வகுத்த இந்திய-இலங்கை உடன்படிக்கையையும் நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.

கருணாரட்ன 1990களின் நடுப் பகுதியில், சிங்கள அதி தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஒரு முற்போக்கான கட்சி என்ற மாயையை பரப்பி அதனுடன் ஒரு கூட்டணியை அமைத்தார். 2002ல் பெரும் வர்த்தகர்களாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட, யூ.என்.பீ. ஆரம்பித்த புலிகளுடனான சமாதான முன்னெடுப்புகளை நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.

அடுத்து அடுத்து அமைக்கப்பட்ட இத்தகைய கூட்டணிகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப்போடுவதையும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

கருணாரட்ன இப்போது பேரினவாத வாய்ச்சவாடல்களுடன் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கின்றார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில், “உள்ளூர் முதலாளித்துவவாதிகளை மாற்றீடு செய்ய முயற்சிக்கும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு எதிரான தேசிய முதலாளித்துவத்துடனேயே நான் இருக்கின்றேன். உள்ளூர் முதலாளித்துவவாதிகள் இருக்கின்றார்கள், அவர்களைப் பலப்படுத்த வேண்டும், எங்கள் முன் உள்ள ஜனநாயகப் பணி அதுவே என நாம் நம்புகிறோம், என விளக்கியுள்ளார்.

தொழிலாள வர்க்கம் பெரும் வர்த்தகர்களின் கட்சிகளின் அங்கமாக இருக்க வேண்டும் மற்றும் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரும் வறியவர்களும் முதலாளித்துவத்தைப் பலப்படுத்த இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் அணிதிரள வேண்டும் என்றே இங்கு அவர் குறிப்பிடுகின்றார். கருணாரட்னவின் அறிக்கைகள், நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தையும் நிரந்தரப் புரட்சியையும் எதிர்ப்பதையும் மற்றும் அது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பாதுகாக்கும் வகிபாகத்தை ஆற்றப் பொறுப்பேற்றிருப்பதையும் தெளிவாக அறிவிக்கின்றன.

நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தை எதிர்ப்பதும் மற்றும் ட்ரொட்ஸ்கிஸத்தின் மீதான அதன் தாக்குதல்களும், முழு சர்வதேச பப்லோவாத இயக்கமும் ஏகாதிபத்திய அரசியல் மண்டலத்துக்குள் நுழைந்துகொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றது. பிரான்சில் பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (எல்.சி.ஆர்.), ட்ரொட்ஸ்கிஸத்துடனான எந்தவொரு தொடர்பையும் உத்தியோகபூர்வமாக கைவிட்டு 2009ல் புதிய முதலாளித்துவ-விரோத கட்சியுடன் (என்.பீ.ஏ.) தன்னை கரைத்துவிட்டது. இது முதலாளித்துவக் கட்சிகளுடன் நேரடியான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பாகமாகும்.

இந்த சகல குட்டி முதலாளித்துவக் கும்பல்களும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர எழுச்சிக்கு எதிராக முதலாளித்துவ முகாமுக்குள் நுழைந்து வருகின்றன. நவசமசமாஜக் கட்சியைப் போலவே, என்.பீ.ஏ.யும் லிபியா மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஆதரவளிக்கின்றது. அது இந்த இராணுவத் தலையீடு கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டது என துரோகத்தனமாக கூறிக்கொண்டது. எகிப்திலும் துனிஷியாவிலும் வெகுஜன எழுச்சிகளின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கங்கள் என சொல்லப்படுவதற்கு ஆதரவளிக்கும் என்.பீ.ஏ., அந்த இரு நாடுகளிலும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் ஜனநாயகப் பாசாங்குகளையும் மிகைப்படுத்துகின்றது.

நவசமசமாஜக் கட்சியும் அதன் சக சிந்தனையாளர்களும் ட்ரொட்ஸ்கிஸத்தை உத்தியோகபூர்வமாக கைவிட்டுள்ளமை, உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை எழுச்சிபெறுகின்ற நிலையில், இத்தகைய கட்சிகள் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்கு அணிதிரள்வதையே எடுத்துக் காட்டுகின்றது. இது சகல வடிவிலுமான பப்லோவாத மற்றும் ட்ரொட்ஸ்கிஸ-விரோத அரசியலுக்கு எதிராக சோ.ச.க. முன்னெடுத்த தசாப்தகால போராட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த வரலாற்று அனுபவங்களை கிரகித்துக்கொண்டுள்ள, இலங்கையிலும் தெற்காசியாவிலும் ட்ரொட்ஸ்கிஸத்தினதும் சோசலிசத்தினதும் ஒரே பாதுகாவலனாக இப்போது நிற்கின்றது. சோ.ச.க. தெற்காசியாவிலும், உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. நாம் சோ.ச.க.யை ஒரு வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.