World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Twelve children killed in another US massacre in Afghanistan

ஆப்கானிஸ்தானில் மற்றொரு அமெரிக்கப் படுகொலையில் 12 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்

By Patrick O’Connor
30 May 2011
Back to screen version

சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாநிலத்தில் நவ்ஜட் மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது இரவு நடந்த அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் 12 குழந்தைகளும் 2 பெண்களும் கொல்லப்பட்டனர். சமீபத்தில் மக்களின் இறப்புக்களுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் ஒன்றான இது சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நேட்டோப் படைகளால் செய்யப்பட்டுள்ள மற்றொரு பெரும் கொடூரம் ஆகும்.

உள்ளூர் ஆப்கானிய அதிகாரிகள் கூறியுள்ளபடி, ஹெல்மாண்ட மாநிலத்தின் தலைநகரான லஷ்கர் காவிற்கு வடக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலிருந்த ஒரு சிறு விவசாயிகள் சமூகத்தில் தூங்கிக்கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் இருந்த இரு வளாகங்களின் மீது குண்டு போடப்பட்டபோது 14 குடிமக்கள் உயிரிழந்தனர். இன்னும்  6 பேர் வான்தாக்குதலில் காயமுற்றதாகக் கூறப்படுகிறது. இறப்புக்கள், காயமுற்றோர் மொத்த எண்ணிக்கை பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஹமித் கர்சாயின் அலுவலகம் 10 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கொல்லப்பட்டனர் என்று கூறுகையில் நேட்டோ அதிகாரிகள் 9 குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் அண்டை வீட்டார்களும் சீற்றத்துடன் இந்நடவடிக்கையை கண்டித்தனர். தப்பிப் பிழைத்த ஒருவரான நூர் ஆகா ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “என்னுடைய வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டது, என்னுடைய குழந்தைகள் கொல்லப்பட்டுவிட்டனர்தலிபான்கள் என் வீட்டில் இருந்து தொலைவில் இருந்தனர். ஏன் என்னுடைய வீட்டின்மீது குண்டுவீசப்பட்டது?’

கிராமத்திலிருந்து ஒரு குழு கவர்னரின் மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகஎட்டு இறந்துவிட்ட குழந்தைகளின் சடலங்களுடன் லஷ்கர் காவிற்குப் பயணித்தது. சில குழந்தைகளுக்கு 2 வயதுதான் ஆகியிருந்தது. இக்குழுவினர்பாருங்கள், இவர்கள் ஒன்றும் தலிபான்கள் இல்லைஎன்று கோஷமிட்டதாக BBC தெரிவித்துள்ளது.

குண்டுவீச்சிற்கு முன், அமெரிக்கப் படைகளுக்கும் உள்ளூர் எதிர்ப்புப் போராளிகளுக்கும் இடையே மோதல் இருந்தன. உள்ளூர் முதியவர் ஒருவர் பிரிட்டனின் டெலிகிராப்பில் மேற்கோளிட்டுள்ளபடி, “இப்பகுதியில் மோதல் பரவியபோது அமெரிக்கர்களுடையது எனக் கருதப்பட்ட நேட்டோ ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. அவைகள் 10ல் இருந்து 20 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் திரும்பி ராக்கெட்டுக்களை ஏவியதில் அவருடைய உறவினர்கள் 12 பேர் இறந்துபோனார்கள்.”

ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நேட்டோப் படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜோன் டூலன் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் வான்தாக்குதல் அமெரிக்க தரைப்படை ரோந்துக் குழுவைத் தாக்கி ஒரு மரைனையும் கொன்ற ஐந்து எழுச்சியாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இது பின்னர் பொறுப்பற்ற முறையில் பதிலடி நடவடிக்கை என்ற முறையில் நடந்த வான்தாக்குதலுக்கு காரணத்தை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் மேஜர் ஜெனரல் டூலன் ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் படைகள்சிவிலியக் கேடயத்தைபயன்படுத்துகின்றன என்று கூறும் போலிச் சமாதானத்தை மீண்டும் கூற முற்பட்ட வகையில், எழுச்சியாளர்கள் ஒரு வளாகத்தின் உட்புறத்திலிருந்து தாக்கினர், பின்னர் வான்தாக்குதல் நடத்தப்பட்டது என்றார். “துரதிருஷ்டவசமாக எழுச்சியாளர்கள் வேண்டுமென்றே ஆக்கிரமித்திருந்த வளாகம் பின்னர் நிரபராதிகளான குடிமக்கள் உறைவிடம் என அறியப்பட்டதுஎன்று அவர் அறிவித்தார். இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதையும் நேட்டோ அளிக்கவில்லை. ஒரு முறையான விசாரணை தொடங்கி சில மணி நேரத்திற்குள்ளேயே, எப்படி இந்த உறுதியான முடிவிற்கு வந்தது என்பது பற்றியும் அது விளக்கவில்லை.

ஆப்கானிய மக்களின் உயிர்கள் தொடர்பாக ஆக்கிரமிப்புப் படைகள் முற்றிலும் இழிந்த பார்வையை அடிக்கோடிடும் வகையில் டூலன், “மனித உயிருக்கு விலை இல்லை என்பதை நான் அறிவேன் ஆயினும், ஆப்கானிய கலாச்சாரத்தையொட்டி குடும்பங்களுக்கு சற்று ஆறுதல்கள் அளிக்க நாங்கள் உறுதி செய்வோம்.” அமெரிக்க இராணுவத்திற்குசற்று ஆறுதல்கள் அளித்தல்என்பது அது கொலைசெய்த குடும்பங்களுக்கு ஒரு சிறு நிதியை அளித்தல், ஒரு கொலைக்கு கிட்டத்தட்ட 2,500 டொலர் என்பதாகும்.

இச்சமீபத்திய குடிமக்கள் படுகொலை அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பிற்கு ஆப்கானிஸ்தானில் பெரும் எதிர்ப்பு இருப்பதற்கு இன்னும் எழுச்சியைத் தூண்டும். ஆரம்ப படையெடுப்பு நடந்து கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ஆக்கிரமிப்பிற்கான பல போலிக்காரணங்கள் நீண்ட காலம் முன்னரே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. இப்போர் எப்பொழுதுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய உலக மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ சக்தியைப் பயன்படுத்துதலின் ஒரு பகுதியாக மூலோபாயவகையில் முக்கியமானதும் ஆதார வளங்களில் செழிப்புடையதுமான மத்திய ஆசியா மீது கட்டுப்பாட்டைக் கொள்வதற்கான உந்துதலில்தான் நடத்தப்படுகிறது. இக்கொள்கைமுறை நோக்கங்கள்தான் ஆப்கானிய போரில் காலனித்துவ போரின் தன்மையை நிர்ணயித்துள்ளனஅதன் மத்திய நோக்கங்களில் ஒன்று ஆக்கிரமிப்பிற்கு எதிரான அனைத்துச்செயல்களிலும் ஈடுபடாமல் மக்களை பெரும் அச்சுறுத்தலில் வைப்பதாகும்.

காபூலிலுள்ள அமெரிக்க எடுபிடிகளின் தலைவர் ஜனாதிபதி ஹமித் கர்சாய் பகிரங்கமாக ஜனாதிபதி பராக் ஒபாமாவின்விரிவாக்கத்தைத்தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டுள்ள இந்தப் பெரும் வன்முறையைக் கண்டிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். சமீபத்திய குடிமக்கள் கொலைக்கு விரைவில் விடையிறுக்கும் வகையில், அவர் இதைஆப்கானியக் குழந்தைகள் மற்றும் பெண்கள் கொலைசெய்யப்பட்டு இருப்பதுஎன்று விவரித்தார். கர்சாயியின் செய்தித் தொடர்பாளர், ஆப்கானிய மக்களின் சார்பில் இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்தவரை தான் அவருடைய கடைசி எச்சரிக்கையை அமெரிக்கத் துருப்புக்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் அளிப்பதாகக் கூறினார்.

சனி இரவு ஹெல்மாண்டில் வான்தாக்குதல் நடத்துவதற்குச் சற்று முன்பு, கர்சாய் தன் பாதுகாப்பு அமைச்சரகம் இரவுநேர வீட்டுச்சோதனைகள் மீது கட்டுப்பாடு எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இவைஆப்கானிய படைகளால் சுயாதீனமாகச் செய்யப்பட வேண்டும், அமெரிக்க-நேட்டோ படைகளால் அல்ல”. நேட்டோ தலைமையிலான சர்வதேசப் பாதுகாப்பு உதவிப் படை (ISAF) உடனடியாக இந்த ஆணையை உதறியதுகர்சாய் முறையாகஇறைமைபெற்ற நாட்டின் அரசாங்கத் தலைவர் என்பதைப் போலித்தனமாகக் கூட மறுக்கும் வகையில். “இன்றுவரை நாம் அடைந்துள்ள ஆதாயங்கள் மற்றும் முன்னேற்றங்கள் இலக்கு வைக்கப்பட்ட, உளவுத்துறை உந்துதல் பெற்ற இரவு நடவடிக்கைகளை நடத்தாமல் ஏற்பட்டிருக்க முடியாதுஎன்று ISAF  செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிவித்தார்.

கர்சாயியின் அறிக்கை நாட்டின் வடக்கு தக்கர் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்களை கொன்ற நேட்டோ இரவு நேரத் தாக்குதலைத் தொடர்ந்து வந்தது. அந்நிகழ்வு பல எதிர்ப்புக்களை தூண்டின. அவற்றில் 12 குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றும் 85 பேர் ஆப்கானிய பொலிசாரால் காயமுற்றனர். (See “Afghans killed in protest over NATO night raids”).

தக்கர் மாநிலம் முன்பு ஆப்கானிஸ்தானில் மிகப் பாதுகாப்பான பகுதிகளில் ஒன்று எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால் சனிக்கிழமையன்று தலிபான் தக்கர் தலைநகரான தலோக்கனில் மாநில கவர்னர் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இத்தாக்குதல் வடக்கு ஆப்கானிஸ்தானில் பொலிஸ் தளபதியான ஜெனரல் மஹமத் தாவுதைக் கொன்றது. தாவுத் 2001 படையெடுப்பின்போது அமெரிக்க இராணுவத்துடன் சேர்ந்து செயல்பட்ட மிருகத்தனமாக வடக்குக் கூட்டின் முன்னாள் தளபதி ஆவார். இன்னும் இரண்டு ஆப்கானிய பொலிசாரும் இரு ஜேர்மனிய படையினர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்களில் வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதியான ஜெனரல் மார்க்கஸ் நீப்பும் ஒருவர் ஆவார். இவர் சிறு காயங்களுடன் தப்பியதாகத் தெரிகிறது.

தலிபான் நடவடிக்கை மீண்டும் ஆக்கிரமிப்புச் சக்திகளின் சார்பில் செயல்படும் ஆப்கானியப் படைகளின் பாதிப்பிற்குட்படும் தன்மையை நிரூபித்தது. ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகள் உயர்மட்டக் கூட்டத்தைப் பற்றி முன்கூட்டியே தகவலைத் தெளிவாக அறிந்திருந்து, பொலிஸ் சீருடை அணிந்த ஒரு தற்கொலைப் படை நபரின் மூலம் பாதுகாப்பை முறியடிக்க முடிந்தது.

இதற்கிடையில் ஆப்கானியக் குடிமக்களை நேட்டோ படைகள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு நிகழ்வைப் பற்றி விசாரணை நடக்கிறது. வடகிழக்கு நூரிஸ்தான் மாநிலத்தின் கவர்னர் ஜமாலுதின் பட்ர் நேற்று Agence France Presse இடம் 18 குடிமக்களும் 20 பொலிசாரும் கடந்த புதன் அமெரிக்க friendly fire வான் தாக்குதல் என்று அழைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றார்.

தலிபானுக்கும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான மோதலைத் தொடர்ந்து, தலிபான் போராளிகள் தாங்கள் ஆக்கிரமித்திருந்த பகுதியிலிருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் உள்ளூர் குடிமக்கள் அமெரிக்க ராக்கெட்டுக்களால், அவர்களின் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியே வந்தபோது, கொல்லப்பட்டனர். அவர்களுடைய கட்டிடங்களுக்கு சாதாரண உடையில் திரும்பிய பொலிசாரும் இலக்கு வைக்கப்பட்டனர். ISAF யின் செய்தித் தொடர்பாளர் மேஜர் டிம் ஜேம்ஸ் உண்மையறியும் குழு ஒன்று குற்றச்சாட்டுக்களைப் பற்றி ஆராய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். ஆனால்அந்த வான் தாக்குதலில் குடிமக்கள் இறப்பு ஏற்பட்டதாக எங்களுக்கு வந்துள்ள முதல் தகவல்கள் கூறவில்லைஎன்று வலியுறுத்தினார்.