World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Mass protests demand “second revolution” in Egypt

எகிப்தில் வெகுஜன எதிர்ப்புக்கள் இரண்டாவது புரட்சியை கோருகின்றன

By Patrick Martin
28 May 2011
Back to screen version

நாடெங்கிலுமுள்ள நகரங்களிலும் கெய்ரோவில் தஹ்ரிர் சதுக்கத்திலும் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி இராணுவ ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வேண்டும், முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியின் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இளைஞர்கள் முக்கியமாக இருந்த இந்த எதிர்ப்புக் குழுக்கள், வெள்ளியன்று நடந்த எதிர்ப்புக்களைசீற்றத்தின் இரண்டாம் நாள்என்று முத்திரையிட்டனர். முதல் சீற்ற தினம் ஜனவரி 27 அன்று நடைபெற்றது. அப்பொழுது ஆர்ப்பாட்டக்காரர்கள் முபாரக்கின் குண்டர்களை எதிர்கொண்டு தஹ்ரிர் சதுக்கத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காகக் கடுமையாகப் போராடி, சதுக்கத்தில் நீடிப்பதில் வெற்றி பெற்றிருந்தனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்களும் ஒரு இரண்டாவது புரட்சி தேவை என்னும் குரல்களை எழுப்பினர். முபாரக்கை வீழ்த்திய புரட்சி பெரும்பாலான தொழிலாளர்கள், சிறிய விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் எந்த அடிப்படை முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற பரந்த உணர்வை வெளிப்படுத்தினர்.

தஹ்ரிர் சதுக்கம் முபாரக்கை வீழ்த்திய வெகுஜனப் போராட்டங்கள் நடந்த காலத்தில் கொல்லப்பட்ட 840 பேரில் பலரின் புகைப்படங்களுடன் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோஷ அட்டைகளுடன் 30 ஆண்டு முபாரக் ஆட்சியில் ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றிற்குக் காரணமானவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோஷ அட்டைகளும் இருந்தன.

எகிப்திய புரட்சி இன்னும் முடிவடைந்துவிடவில்லை”, “பின்னர் இல்லை, இப்பொழுதேஎன்று அறிவித்த பதாகைகளும் இருந்தன. புதிய அரசியலமைப்பிற்கான கோரிக்கை, தேர்தல்களை கண்காணிக்க சிவில் ஜனாதிபதி சபையை அமைத்தல், பெப்ருவரி 11 முபாரக் இராஜிநாமாவை அடுத்து நாட்டை ஆண்டு வரும் ஆயுதப்படைத் தலைமை சபைக்கு பதிலாக வேறு ஒன்றைக் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளும் எழுந்தன.

மற்ற கோஷ அட்டைகள் தடையற்ற, தணிக்கையற்ற செய்தி ஊடகம், கவர்னர்கள், பல்கலைக்கழக தலைவர்கள் உட்பட ஊழல் அதிகாரிகளுக்கு பதிலாக மற்றவர்கள் நியமிக்கப்படல், குடிமக்களை இராணுவ நீதிமன்றங்கள் விசாரித்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறின. பொருளாதாரக் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன. அதில் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் உயர்த்தப்படவேண்டும் என்பவை அடங்கியிருந்தன.

பிற்பகல் கடைசியில், எகிப்திய செய்தி ஊடகம் கொடுத்துள்ள தகவல்படி, தஹ்ரிர் சதுக்கத்தில் இருந்து கூட்டம் 100,000 ஐத் தாண்டியது. இக்கூட்டம் நான்கு தனிப் பிரிவுகளாகக் கூடியது. அங்கு பல அரசியல் கருத்துக்கள் பற்றிப் பேச்சாளர்கள் பார்வையாளர்களுக்கு உரையற்றினர்.

பேச்சாளர்களில் முக்கிய பிரிவினர் இரண்டாவது புரட்சிக்கான அழைப்பை விடுத்து, ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னரும் தஹ்ரிர் சதுக்கம் ஆக்கிரமிப்பிற்கான திட்டங்கள் பற்றிப் பேசினர். கபேயா மாற்றத்திற்கான இயக்கம், முன்னாள் ஐ.நா. அதிகாரி மஹ்மத் எல் பரடெயின் மாற்றத்திற்கான தேசிய அமைப்பு, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், இளைஞர் புரட்சிக் கூட்டணி, ஜனநாயக முன்னணிக் கட்சி, எகிப்திய சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவற்றிலிருந்து பிரதிநிதிகள் கூட்டத்தினரை திட்டமிட்டபடி மாலை 6 மணிக்குக் கலையுமாறும் அடுத்த வெள்ளியன்று ஆளும் SCAF போக்கில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றமும் இல்லையென்றால் மற்றொரு ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்றும் கூறினர்.

எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான மத்தியதரைக்கடல் துறைமுகம் அலெக்சாந்திரியா, சூயஸ், செய்து துறைமுகம் மற்றும் இஸ்மைலியா, சூயஸ் கால்வாயை ஒட்டிய முக்கிய நகரங்களிலும் பேயோயும், மன்சௌரா என்று நைல் டெல்ட்டா, லக்சர், அஸ்வான் ஆகிய தெற்கிலுள்ள நகரங்கள், இன்னும் பல சிற்றூர்கள் நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர்.

இராணுவச் சபையினரால் இந்த ஆர்ப்பாட்டங்கள் விரோதப் போக்காக கருதப்பட்டன. அதன் உறுப்பினர்கள் நீண்டகாலமாக முபாரக்கின் எடுபிடிகளாக இருந்தவர்கள். SCAF, “சந்தேகத்திற்குரிய நபர்கள் எகிப்தின் மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே கலகத்தை விதைக்க முற்படுகின்றனர்என்ற எச்சரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் விடுத்தது.

இராணுவப் பிரிவுகள் எதிர்ப்புத் தளங்களில் இருந்து ஒதுங்கி நிற்கும் என்றும் சபை கூறியது. இது இச்சபை நேரடியான, வெளிப்படையான அடக்குமுறை பற்றித் தனக்கு வலிமை இல்லை என்பதின் அடையாளம் ஆகும். சில ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளரிடம், தாங்கள் இராணுவத்தின் அறிக்கையை முபாரக் ஆதரவுடைய சீருடையற்றவர்கள் எதிர்ப்புக்களைத் தாக்குவதற்கு ஒரு அழைப்பு என்று கருதுவதாகக் கூறினர்.

தஹ்ரிர் சதுக்கத்தில், சில குண்டர் குழுக்களால் எதிர்ப்பை தடைக்கு உட்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த குழுக்கள் அமைத்திருந்த மக்கள் குழுக்கள் தீவிர பாதிப்பு இல்லாமல் அவர்களை அகற்றின.

இக்கட்டத்தில் நேரடி அடக்குமுறையைவிட, முதலாளித்துவ சக்திகளான முஸ்லிம் பிரதர்ஹுட் மற்றும் பிற தாராளவாதக் குழுக்களையும் தொழிற்சங்கங்கள், போலி இடது அமைப்புக்களையும் வெகுஜன இயக்கத்தை எகிப்திய ஆளும் உயரடுக்கிற்கு சவால் என்னும் அடிப்படைத் தன்மையில் இருந்து திசை திருப்ப ஜெனரல்கள் நம்பியுள்ளனர்.

முஸ்லிம் பிரதர்ஹுட் முபராக்கை வீழ்த்தும் இயக்கத்தின்போது அதிகம் வெளிப்படுத்தவில்லை. அதன் இளைஞர் பிரிவுதான் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிர்ப்பைகம்யூனிஸ்ட்டுக்கள், மதசார்பற்றவர்கள்என்று குறைகூறி பகிரங்க அறிக்கை கொடுத்து வெளியிட்டது.

இக்குழு எதிர்ப்பு பற்றிமிகவும் கவலை கொண்டுள்ளதாகக்கூறி, “எவரிடம் மக்கள் இப்பொழுது கோபம் கொண்டுள்ளனர்?” என்ற வினாவையும் எழுப்பியது. அந்த அறிக்கையில் எதிர்ப்பு என்பதுசீற்றம் மக்கள் தங்களிடம் அல்லது இராணுவத்திடம் காட்டுகின்றர் என்ற பொருளைத்தான் குறிக்கும்என்று அறிக்கை தொடர்ந்து கூறியது. முஸ்லிம் பிரதர்ஹுட்டின் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவிடம் ஆளும் SCAF க்குப் பதிலாக சிவிலியக் குழு வருவதை எதிர்ப்பதாகக் கூறியது.

முஸ்லிம் பிரதர்ஹுட் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து பின் ஆளும் இராணுவச் சபைக்கு ஆதரவு கொடுத்துள்ள முடிவு பற்றி பரந்த எதிர்ப்பு தோன்றியுள்ளது. “இங்கு புரட்சியாளர்கள் உள்ளனர், பிரதர்ஹுட் எங்கே உள்ளது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர். மற்றய கோஷங்களும் இஸ்லாமியவாத குழு வராதது பற்றிச் சுட்டிக்காட்டின.

முன்னாள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதர்ஹுட் உறுப்பினரான சொபி சலே எகிப்திய செய்தித்தாள் அல்-அஹ்ரமிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து முஸ்லிம் பிரதர்ஹுட்டும் இராணுவ சபையும் எகிப்தில் வருங்காலப் போக்குகள் பற்றிஓர் உடன்பாட்டை பகிர்ந்துகொள்ளும்என்று அறிவித்தார். SCAF புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவைக் கொண்டது ஒரு வரலாற்றுத் தன்மை நிறைந்த சிறப்பான முடிவு ஆகும்என்று அவர் கூறினார்.

இத்தகைய வரலாற்றை மீண்டும் எழுதும் முயற்சிதான் எகிப்திய வலதால் மட்டும் இல்லாமல், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பல தாராளவாத, போலி இடது அமைப்புக்களாலும் ஆதரிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே இராணுவம் முபாராக்கை பதவியிலிருந்து அகற்றியபோது பெரும் குருதி கொட்டுதலை தவிர்த்தது என்று கூறுகின்றன.

இதற்கிடையில், இராணுவ ஆட்சி வெள்ளி ஆர்ப்பாட்டத்திற்கு சுவரொட்டிகளை ஒட்ட முயன்ற நான்கு செயற்பாட்டாளர்களை காவலில் வைத்தது. இதில் ஒரு ஓவியர் மஹ்மத் பஹ்மி, திரைப்பட இயக்குனர் அய்டா அல் கசெப், இசைக் கலைஞர் அப்டெல் ரஹ்மான் அமின் மற்றும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்க உறுப்பினர் இப்ராஹிம் அப்த் ஆகியோர் அடங்குவர். இவர்கள் இராணுவ பொலிசால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

SCAF வெள்ளி எதிர்ப்பின் பாதிப்பை தொடர்ச்சியான பூச்சு அடையாள செயல்களில் ஒன்றைக் காட்டி மழுங்க வைக்க முயன்றது. இச்செயல்கள் மக்கள் சீற்றத்தை சமாதானப்படுத்தும் நோக்கம் கொண்டவை. அதே நேரத்தில் அதிகாரத்தையும் ஆளும் உயரடுக்கின் செல்வத்தையும்இதில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் உள்ளனர்பாதிப்பு இல்லாமல் செய்யவும் முயல்கின்றனர்.

புதன்கிழமையன்று ஆட்சி வார இறுதியில் காசாப் பகுதிக்குச் செல்லும் எல்லையை நிரந்தரமாகத் திறந்து வைக்க உள்ளதாக அறிவித்தது. இஸ்ரேல் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்களின் தாயகமான காசாவை முற்றுகையிட எகிப்து ஒத்துழைக்கிறது என்னும் மிகச் செல்வாக்கற்ற நிலையை இது முடிவிற்குக் கொண்டு வருகிறது. SCAF உத்தியோகபூர்வ பேச்சுக்களை காசாவை ஆளும் ஹமாஸ் தலைவர்களுடனும் கொண்டுள்ளது. மேலும் ஹமாஸும் ஃபதாவும் ஒரு கூட்டுப் பாலஸ்தீனிய அரசாங்கம் அமைக்க உடன்பாடு காணுவதற்கும் உதவுகிறது.

செவ்வாயன்று எகிப்தின் உயர்மட்ட அரசாங்க வக்கீல் முபாரக் அவருடைய சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்பு இயக்கத்தின்போது எதிர்ப்பாளர்களை கொன்றதற்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்படுவார் என்று அறிவித்தார். இக்குற்றச்சாட்டிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இதைத் தவிர, ஷர்ம் எல் ஷேக்கிலுள்ள கடலோர மாளிகை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் அவர் எதிர்கொள்ளக்கூடும். அதேபோல் இயற்கை எரிவாயுவை இஸ்ரேலுக்கு விற்பதற்கான ஒரு உடன்பாட்டில் பொது நிதியியிலிருந்து 714 மில்லியன் டொலரை திருடுவதற்கு உதவி செய்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படலாம்.

உள்துறை மந்திரி ஹபிப் அட்லியுடன் சதித்திட்டத்தில் சேர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்தல், “சில அதிகாரிகளையும் பொலிஸ் உறுப்பினர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தங்கள் ஆயுதங்கள் மூலம் குண்டு வீசத் தூண்டியது, வாகனங்களை அவர்கள் மீது ஓட்டிக் கொன்றது, மற்றவர்களை அச்சுறுத்துவதற்காக சிலரைக் கொன்றது, கோரிக்கைகளைக் கைவிட வலியுறுத்தியதுமுபாரக்  திட்டமிட்டது ஆகியவையும் குற்றச்சாட்டுக்களில் இடம் பெறும்.

வெள்ளிக்கிழமை நடந்த எதிர்ப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தி ஊடகத்திடம் முபாரக்கிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இன்னும் வரக்கூடிய எதிர்ப்புக்களைத் தவிர்ப்பதற்குத்தான் என்றனர். அவர்கள் இப்பொழுது 82 வயதாகியுள்ள அகற்றப்பட்ட சர்வாதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார் என்ற அவநம்பிக்கையைத்தான் வெளிப்படுத்தினர்.

சமீபத்திய வாரங்களில் இராணுவத்தால் எடுக்கப்பட்ட மற்ற நடவடிக்கைகளில் கீழ்க்கண்டதும் அடங்கும்: முபாரக் நியமித்த 10 மாநில கவர்னர்களை பதவியில் இருந்து அகற்றியது. முபாரக் மற்றும் அவருடைய இரு மகன்களையும் காவலில் வைத்துள்ளது. அவருடைய ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியைக் கலைத்தது. முன்னாள் பிரதம மந்திரி அஹ்மத் நஜிப் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் குற்றச் சாட்டுக்களை பதிவு செய்துள்ளது. முபாரக்கின் பெயரை நூற்றுக்கணக்கான பொதுக் கட்டிடங்கள் நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து அகற்றியது.