World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Amidst divisions, G8 meeting pledges austerity and war

பிளவுகளுக்கு இடையே, சிக்கன நடவடிக்கைகளுக்கும் போருக்கும் ஜி-8 கூட்டம் உறுதியளிக்கிறது

Stefan Steinberg
28 May 2011
Back to screen version

பிரான்சின் ஓய்விட நகரமான டோவில் இல் நடந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டுக்குப் பின்னர், ஜி-8 தலைவர்கள் உலகெங்கும் சிக்கன நடவடிக்கையை தீவிரப்படுத்தக் கோரினர். ஒத்துழைப்பு அளிக்காத ஆட்சிகளை போரின் மூலம் தூக்கியெறியும் தீர்மானத்துடன் தாங்கள் இருப்பதையும் அவர்கள் மறுவலியுறுத்தம் செய்தனர்.

இந்த இரண்டு திட்டநிரல்களுக்கும் இடையில் ஆழமானதொரு தொடர்பு இருக்கிறது. 1930களுக்குப் பிந்தைய காலத்தின் மிகத் தீவிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாளர்களால் சாதிக்கப்பட்ட அத்தனை நல உதவிகளையும் துடைத்தழித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகையதொரு வேலைத்திட்டம் எகிப்து, துனிசியா, கிரீஸ், போர்த்துக்கல், மற்றும் சமீபத்தில் ஸ்பெயின் ஆகியவற்றில் ஏற்கனவே கண்டிருப்பதைப் போல பெருந்திரளான எதிர்ப்பை தூண்டிவிடும் என்பது அந்த சக்திகளுக்கு நன்கு தெரியும். அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கமும் மீண்டும் இயக்கம் பெறத் தொடங்கியுள்ளது.

பதிலிறுப்பாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், உலகத்தையும் அதன் ஆதாரவளங்களையும் மறுபங்கீடு செய்யும் நோக்குடனான திறந்த முனை காலனித்துவ போர்கள் ஏராளமானவற்றை நடத்திக் கொண்டு அதே சமயத்தில், தங்களது கொள்கைக்குப் பெருகி வரும் உள்நாட்டு எதிர்ப்பைக் கையாள்வதற்கு தங்கள் சொந்த இராணுவ எந்திரத்தை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

சமூக வாழ்க்கை இராணுவமயமாதல் என்பதை இந்த உச்சிமாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மிகப் பெரும் பாதுகாப்பு நடவடிக்கையிலேயே வெளிப்படக் காணலாம். வெளி உலகில் இருந்து உச்சிமாநாட்டில் பங்கேற்றவர்களைப் பாதுகாப்பது தான் 200 மில்லியன் யூரோக்கள் செலவிட்டு டோவில் இல் நிறுத்தப்பட்ட போலிஸ், சிப்பாய்கள் மற்றும் சிறப்பு முகவர்களின் படையின் வேலையாக இருந்தது.

சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத் திட்டநிரலைத் திணிப்பதற்கான அவசியத்தில் முன்னணி ஏகாதிபத்திய அரசாங்கங்கள் உடன்பட்ட அதே சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகளை தங்களது சொந்த தேசிய நலன்களுடன் எவ்வாறு இணக்கமுறச் செய்வது என்கிற விடயத்தில் அவை கூர்மையாய் பிளவுபட்டு நிற்கின்றன. புன்னகைகளும், முத்தங்களும் கைகுலுக்கல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வச் சித்திரங்களுக்குப் பின்னால் கடுமையான மோதல்கள் இருந்தன. உச்சிமாநாட்டில் சர்வதேச நிதி நெருக்கடிக்கென அர்ப்பணிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இது வெளிப்படையாய் காணத்தக்கதாய் இருந்தது. 

ஐரோப்பியத் தலைவர்கள் முதலில் தங்கள் இருப்பிடத்தை ஒழுங்கில் வைக்கட்டும் என்றும் யூரோ மீது தீவிரமடையும் நெருக்கடியை நிறுத்துவதற்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கட்டும் என்றும் ஐரோப்பாவிற்கு வெளியிலான நாடுகளிடம் இருந்து கடும் அழுத்தத்திற்கு முகம் கொடுத்தனர்.

ஜப்பானின் துணைத் தலைமை கேபினட் செயலரான டெட்சுரோ ஃபுகியாமா செய்தியாளர்களிடம் கூறினார்: “ஐரோப்பாவின் கடன் பிரச்சினை, எண்ணெய், உணவு மற்றும் பிற பொருட்களின் விலை உயர்வுகள் மற்றும் எழுச்சியுறும் பொருளாதாரங்களின் மிகைசூடு ஆகியவை எல்லாம் உலகப் பொருளாதாரத்தின் மீது கீழ்நோக்கி அழுத்தம் செலுத்தும் காரணிகளில் இடம்பெற்றிருப்பதாய் பல தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.”

மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்கப் பிரதிநிதிகளும் தங்கள் பங்கிற்கு தொடர்ந்த ஐரோப்பியக் கடன் நெருக்கடியானது டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பை மேலும் மேலும் கீழே இழுத்துச் சென்று அமெரிக்க ஏற்றுமதித் துறையை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாய் எச்சரிக்கை விடுத்தனர்.

கிரேக்க அரசாங்கம் இன்னொரு சுற்று சிக்கன நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கங்களையும் மேற்கொள்வதற்கு அதன் மீது நெருக்குதலை அதிகப்படுத்துவதன் மூலமாக இந்த சர்வதேச விமர்சனத்திற்கு ஐரோப்பிய தலைவர்கள் எதிர்வினையாற்றினர். கிரேக்கக் கடனின் திருப்பிச் செலுத்தவியலா நிலையோ அல்லது மறுசீரமைப்போ ஐரோப்பிய மற்றும் சர்வதேசிய வங்கி அமைப்பிற்கு பேரழிவூட்டும் விளைவுகளுடனான ஒரு தொடர் வினையை தொடக்கி வைக்கும் என்று ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னணி உறுப்பினர்கள் விடுத்த எச்சரிக்கைகளுக்குப் பின்னர்தான், பெரும் கடனில் தத்தளிக்கின்ற ஐரோப்பிய நாடுகளது சங்கிலியில் மிகவும் பலவீனமான கண்ணியாக இருக்கும் கிரீஸில் கடன் நெருக்கடி மோசமடைவது குறித்த கவலைகள் வருகின்றன. கிரீஸ், அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினின் கடன்களில் சுமார் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கான ஒரு பெரும் பகுதி ஐரோப்பிய வங்கிகளுக்கு செலுத்த வேண்டியதாகும்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில், கிரேக்கப் பிரதமரான ஜோர்ஜ் பாப்பான்ரூ சிக்கன நடவடிக்கைகளின் ஒரு புதிய சுற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து ஆதரவைப் பெற இயலாமல் போனது. வாழ்க்கைத் தரங்களிலும் வேலைகளிலும் இன்னும் கூடுதலாய் வெட்டுக்கள் செய்வதை எதிர்த்து கிரீஸில் ஏறக்குறைய நாள்தோறும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்தேறி வரும் பின்னணியில், உழைக்கும் மக்கள் மீதான கூடுதலான தாக்குதல்களை மேற்கொள்ளும் தனது உறுதிமொழியில் கிரேக்க அரசாங்கம் பின்வாங்கக் கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலையுற்றிருக்கின்றனர். 

ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களது சொந்த நாடுகளில் அமலாக்க நோக்கம் கொண்டிருக்கின்ற சிக்கன நடவடிக்கை வகைகளுக்கான ஒரு சோதனைக் களமாக கிரீஸ் ஆகியிருக்கிறது. அத்துடன், இத்தகைய கொள்கைகள் எல்லாம் நாட்டை இன்னும் ஆழமான மந்தநிலைக்குள் தள்ளுவதோடு பொருளாதாரப் பிரச்சினைகளை மோசமாக்க மட்டுமே செய்கின்றன என்பதை கிரீஸ் உதாரணம் விளங்கப்படுத்துகிறது. கிரேக்கக் கடனை மறுசீரமைக்க ஜேர்மன் நிதி மற்றும் அரசியல் உயரடுக்குகள் கடின முயற்சி செய்து வரும் நிலையில், முன்னேறிச் செல்வதற்கான சிறந்த வழி எது என்பதில் ஐரோப்பிய உயரடுக்குகள் பிளவுபட்டு நிற்கின்றன.

உலகத்தின் எஞ்சிய பகுதிகளுக்கு அமெரிக்கா கொண்டுள்ள கடனுடன் ஒப்பிட்டால் ஐரோப்பியக் கடன் என்பது முற்றுமுதலான அளவிலும் சரி சார்பியல் அளவிலும் சரி குட்டையாகி விடும். அமெரிக்க அரசாங்கம், தனது பங்கிற்கு, மெடிக்கேர் மற்றும் மெடிக்கெய்ட் உள்ளிட்ட ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய வேலைத்திட்டங்களில் வரலாற்றுப் பெரும் வெட்டுக்களை அமல்படுத்த தீர்மானத்துடன் உள்ளது. இந்த வெட்டுக்களை எட்டுவதற்கான மிகத் துல்லியமான வகைமுறையை ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் செதுக்கிக் கொண்டிருக்கின்றன.

ஜி-8 திட்டநிரலில் இரண்டாவது முக்கிய விடயமான வட ஆபிரிக்காவிலான ஏகாதிபத்திய கொள்கை விடயத்திலும் முன்னணி ஜி-8 நாடுகளுக்கு இடையேயான பெருகி வரும் பதட்டங்கள் வெளிப்பட்டன. உச்சிமாநாட்டின் முடிவில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அவரது பிரான்ஸ் சகாவான நிக்கோலோ சார்க்கோசி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகிய அனைவரும் லிபியத் தலைவரான முமார் அல்-கடாபியை பதவியில் இருந்து பலவந்தமாய் வெளியேற்றுவதற்கு இடைவிடாத பிரச்சாரத்தைத் தொடர தாங்கள் கொண்டுள்ள மன உறுதியை வெளிப்படுத்தினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு லிபியாவில் நேட்டோ தாக்குதல் தொடங்கிய சமயத்தில் இருந்து நடத்தப்பட்டவற்றில் மிகத் தீவிரமான குண்டுவீச்சு தாக்குதலை பிரிட்டிஷ் போர்விமானங்கள் தலைமையிலான நேட்டோ படைகள் சென்ற செவ்வாயன்று நடத்தின. அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை அனுப்புவதற்கு பிரிட்டன் இப்போது தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது, தாங்களும் அதை விரைவில் பின்பற்ற இருப்பதாக பிரான்ஸ் கூறியிருக்கிறது.

கடாபியை அகற்றுவதற்கு நேட்டோ கூட்டணியின் மிகச் சக்தி வாய்ந்த சாதனமாக அபாச்சி ஹெலிகாப்டர்கள் இருக்கும் என்று கார்டியன் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆயினும், உச்சிமாநாட்டின் முடிவில் விடுத்த அறிக்கைகளில் ஒபாமா மற்றும் கேமரூன் இருவருமே, லிபியா பிரச்சாரத்தை ஆதரிப்பதில் இருந்து ஒதுங்கி நின்ற ஜேர்மனி உள்ளிட்ட பிற நாடுகள் தங்களது இராணுவச் சாகசங்களுக்கான தொகைக்குப் பங்களிக்க வேண்டும் என்பதையும் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பிரதான நாட்டுப் பொருளாதாரங்களைத் திறந்து விடும் நோக்குடனான அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வர்த்தக நலன்களுக்கு பணமளித்து உதவ வேண்டும் என்பதையும் தெளிவாக்கி விட்டனர். 

லிபியாவுக்கு எதிரான நேட்டோ பிரச்சாரத்தில் முன்னணி சக்தியாக அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு இராணுவ அச்சு ஒன்று எழுந்திருப்பது சர்வதேச சக்திகளிடையேயான சமநிலையை மாற்றியமைத்திருக்கிறது. சமீபத்தில் ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஒபாமா இக்கண்டத்தின் மிகப் பெரும் பொருளாதாரமான ஜேர்மனியை தனது சுற்றுப்பயண அட்டவணையில் திட்டமிட்டு தவிர்த்து விட்டார் என்பதை ஜேர்மனியை சேர்ந்த பார்வையாளர்கள் உடனடியாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

அயர்லாந்தில் பயணத்தைத் தொடங்கிய ஒபாமா அங்கிருந்து பிரிட்டன் சென்றார். அங்கு கண்டம் கடந்த இரு கூட்டாளிகளுக்கு இடையிலான பாரம்பரியமான ”சிறப்பு உறவு” குறித்து புகழ்பாடினார். பிரான்சுக்குப் பயணம் செய்து அங்கு டோவில் உச்சிமாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதியுடன் புகைப்படங்களுக்குக் காட்சியளித்து விட்டு பின் தன்னுடைய பயணத்தின் கடைசி நிறுத்தமாக, ஜேர்மனியின் மிக நெருக்கமாய் கிழக்கில் அமைந்திருக்கின்ற போலந்திற்கு ஜேர்மனியின் மேலாக பறந்து சென்றார்.

சர்வதேச நிதி உயரடுக்கின் நலன்களை திருப்திப்படுத்துவதற்காக, தாயகத்தில் சமூக எதிர்ப்புரட்சி--வெளிநாடுகளில் காலனித்துவ போர் என்னும் ஒரு கொள்கையில் உலகின் முன்னணி ஏகாதிபத்திய சக்திகள் அதிகமான முறையில் இறங்கி வருகின்றன. இதுதான் ஜி8 நாடுகளின் சமீபத்திய கூட்டத்தில் இருந்து எழக் காணுகின்ற செய்தியாகும். தங்களது வேலைத்திட்டத்தை அமல்படுத்தும் பாதையில், பெரிய சக்திகளும் அதிகாரக் கூட்டங்களும் பெருமளவில் ஒருவருக்கொருவர் மோதலுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற சர்வதேசப் பிளவுகள் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி தீவிரமயப்பட்டுக் கொண்டிருக்கும் பின்புலத்தில் மீண்டும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது தான் இதற்கான ஒரே முற்போக்கான மாற்று ஆகும்.