World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind the battle over new IMF chief

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மோதலுக்குப் பின்னால்

Nick Beams
21 May 2011
Back to screen version

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ் கானைக் கைது செய்து சிறையில் அடைத்தமை மற்றும் அதைத் தொடர்ந்து அவர் இராஜினாமா செய்தது ஆகியவை அவருக்கு அடுத்ததாக யாரை நியமிப்பது என்பதில் பிரதான சக்திகள் மத்தியில் ஒரு மோதலுக்கு களம் அமைத்துள்ளது.

பிரான்ஸ் நிதிமந்திரி கிறிஸ்டீன் லகார்ட் அப்பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்கின்ற நிலையில், புதிய நிர்வாக இயக்குனர் ஒரு ஐரோப்பியராக இருக்க வேண்டுமென ஐரோப்பிய சக்திகள் வலியுறுத்துகின்றன. 1944இல் சர்வதேச நாணய நிதியம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக ஓர் ஐரோப்பியர் இருக்க வேண்டும், அதேவேளை அதன் துணை அமைப்பான உலக வங்கி ஓர் அமெரிக்கரால் தலைமையேற்கப்பட வேண்டுமென்ற தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் மரபினை இது ஒத்திருக்கிறது.

இந்த மரபையும் விட ஐரோப்பிய நிதியியல் நெருக்கடியானது, மிகவும் சக்திவாய்ந்த காரணியாக உள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற வாதத்தை ஒப்புக்கொண்ட பின்னர், ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், “யூரோவிற்கு கணிசமான பிரச்சினை நிலவுகின்ற நிலையில், தற்போதைய நிலைமை ஓர் ஐரோப்பிய வேட்பாளரை பரிந்துரைக்கிறது,” என்று அறிவித்தார்.

அமெரிக்க கருவூலத்துறை செயலர் திமோதி கெய்த்னர், குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது அதன் பொறுப்பை ஏற்குமாறு தொடக்கத்தில் அமெரிக்க துணை நிர்வாக இயக்குனர் ஜோன் லிப்ஸ்கிக்கு அழைப்புவிடுத்தார். அவ்வாறே முன்னாள் அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் லிப்டனை துணை நிர்வாக இயக்குனராக பதவியேற்குமாறும் அழைப்புவிடுத்தார். பின்னர் அவர், "காலந்தாழ்த்தாமல் அந்த பொறுப்பில் ஒருவரை அமர்த்த இட்டுச்செல்லும், ஒரு வெளிப்படையான நடைமுறைக்கு" அழைப்புவிடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தெற்கு ஆபிரிக்கா உட்பட எழுச்சிகண்டுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளும் கூட ஒரு நியாயமான, வெளிப்படையான நடைமுறைக்கு அழைப்புவிடுக்கின்றன. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பும் மாற்றப்பட வேண்டுமென இந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன. தென்னாபிரிக்க நிதிமந்திரி பிரவீன் ஜோர்தன், “உலகில் நிகழும் மாற்றங்களுக்கு ஐரோப்பியர்கள் கண்களை திறந்திருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்

ஸ்ட்ராஸ் கான் நெருக்கடிக்கு மத்தியில், இத்தகைய பிரச்சினைகள் உலக வங்கியால் இந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அடிக்கோடிடப்பட்டன. உலக பொருளாதாரத்தின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் நடந்து வருவதை, அதாவது வரவிருக்கும் பலவற்றில் அடுத்த சர்வதேச நாணய நிதிய தலைவர் பற்றிய மோதலும் ஒன்றாகும் என்பதைக் குறிக்கும் மாற்றங்களை, அது சுட்டிக்காட்டி இருந்தது.

2025ஆம் ஆண்டு வரையிலான எதிர்கால போக்குகளைக் காட்டும் வகையில், Global Development Horizons அறிக்கை பின்வரும் குறிப்புகளை எடுத்துக்காட்டி தொடங்கியது: “வளர்ந்துவரும் சந்தைகளின் அதிகரித்துவரும் செல்வாக்குடன் உலக பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் அடியெடுத்து வைக்கின்றனஇது அதிகப்படியான பல-துருவ குணாம்சத்துடன் கூடிய ஓர் உலக பொருளாதாரத்திற்கு பாதை அமைக்கிறது.”   

யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உலக பொருளாதார அமைப்புமுறையானது "அபிவிருத்தி அடைந்து வந்த நாடுகளின் முக்கிய பங்களிப்புகளோடு, அமெரிக்காவிற்கும் அதன் முக்கிய கூட்டாளிகளுக்கும் இடையில், மறைமுகமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு துணை அமைப்பின் மீது கட்டப்பட்டது.” இது வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி இயக்கவாற்றலில் இருந்து (dynamism), ஆதாயமளிக்கும் கண்ணோட்டத்தோடு அவற்றின் கொள்கைகளை வடிவமைத்திருந்தது.    

அந்த சகாப்தம் நிஜமாகவும், முழுமையாகவும் கடந்துவிட்டது. அடுத்த 15 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 2010இல் எட்டிய அளவுகளையும் விட கணிசமாக குறைந்த அளவுகளை எட்டும் என்றும், “வளரும் நாடுகள்… 2011க்கும் 2025க்கும் இடையில் சராசரியாக ஆண்டுக்கு 4.7 சதவீதத்துடன் (வளர்ந்த நாடுகளின் 2.3 சதவீத விகிதத்தையும் விட இரண்டு மடங்கு அதிகமாக) ஒட்டுமொத்தமாக விரிவடையும் என்றும்" அந்த அறிக்கை கண்டறிந்தது

இதன் விளைவாக, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய ஆறு பிரதான "வளரும் நாடுகள்" மொத்த உலக வளர்ச்சியில் பாதிக்கும் அதிகமான அளவிற்கு ஒட்டுமொத்தமாக பங்கு வகிக்கும் என அந்த அறிக்கை மதிப்பிட்டது. உலக வளர்ச்சிக்கான மையங்கள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்படும். இது "பல-துருவ உலகத்திற்கு" (multipolar world) வளர்ச்சியை அளிக்கும்.

இந்த மாற்றங்கள் உலக நாணய அமைப்புமுறையில் நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும். அவ்வறிக்கையின்படி, “அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ரென்மின்பி [சீன செலாவணி, இது யான் என்றும் அழைக்கப்படுகிறது] ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு பல-செலாவணி முறைசாத்தியமாக கூடிய சூழல் உள்ளது. அந்த சூழலின்கீழ், 2025வாக்கில் கேள்விக்கு இடமில்லாத முதன்மை சர்வதேச செலாவணி என்ற அதன் நிலைப்பாட்டை டாலர் இழந்துவிடலாம். இது யூரோவிற்கு ஒரு பரந்த சர்வதேச பாத்திரத்தையும், ரென்மின்பிக்கு விரிவாக்கமடையும் பாத்திரத்தையும் அளிக்க பாதை அமைத்துக் கொடுக்கக்கூடும்.” 

ஆனால் அந்த அறிக்கை ஒரேயொரு பன்முக மத்திய செலாவணிக்கான ஒரு மாற்று சூழல் இருப்பதை முற்றிலுமாக கைவிட்டிருந்தது. ஏனென்றால், "பிரதான சக்திகளால் நிர்வகிக்கப்படும் ஒரேயொரு பன்முக மத்திய செலாவணியானது தேசிய நாணய கொள்கையைப் பாதுகாக்கும் நாடுகள் அவற்றின் முழுக்கட்டுப்பாட்டையும் அதிலிருந்து கைவிட கோரும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஓர் உலகளாவிய செலாவணிக்கான இத்தகைய ஒரு திட்டம் பிரதான சக்திகளின் தேசிய நலன்களைக் கொண்ட கற்களால் ஸ்தாபிக்கப்படும். இது 1944இல் சர்வதேச நாணய நிதியத்தை அமைத்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதிநிதிகளின் தலைவர் ஜோன் மேனார்ட் கெய்னெஸ் (John Maynard Keynes) முன்வைத்த ஒரு முன்மொழிவைப் போன்றதே ஆகும்.

ஒரு மூன்றாவது மாற்றீடென்பது, அதாவது அமெரிக்க டாலரின் அடிப்படையில் தற்போதைய அமைப்புமுறையையே தொடர்வதென்பது, நிதியியல் நெருக்கடிக்கு இட்டுச் சென்ற உலகளாவிய சமநிலையின்மைக்கான காரணங்கள் நீடித்துக்கொண்டிருப்பதையே காணும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஆனால் ஓர் உலகளாவிய மூன்று-ஊன்றுகால் நாணய முறைக்காக அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விபரக்குறிப்பு ஸ்திரப்பாட்டை வழங்காது. அதற்கு முரண்பட்ட வகையில், அத்தகைய ஒரு அமைப்புமுறையின் கீழ், மூன்று முன்னனி செலாவணிகளையும் சுற்றி வர்த்தக மற்றும் முதலீட்டு அணிகள் உருவாகும் ஓர் உடனடி திருப்பம் உருவாகும். அந்த அறிக்கையிலேயே கூறப்பட்டிருப்பதைப் போல, செலாவணி ஏற்ற-இறக்கங்களில் ஒருங்கிணைந்த சர்வதேச கட்டுப்பாடுகள் இல்லாத போது, நிதியியல் அபாயங்களைக் குறைக்க நாடுகள் "ஒரு செலாவணி உறுதிப்படுத்தல் அல்லது நாணய ஒன்றியம் ஆகியவற்றின் மூலம், முன்னணி செலாவணி நாடுகளில் ஒன்றோடு ஒரு கூட்டணி" அமைக்கும் போக்கிற்கு அந்நாடுகளைக் கொண்டு வரும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்னும் பெரிய வெடிப்பார்ந்த வடிவத்தில், ஒரு பல-துருவ உலக பொருளாதாரத்தின் ஸ்தாபகம் 1930களில் எழுந்த நிலைமையையே மீண்டும் கொண்டு வரும். அப்போது உலகம் போட்டி செலாவணி மற்றும் போட்டி வர்த்தக அணிகளுக்குள் பிரிந்து நின்றது. அது தவிர்க்க முடியாமல் இரண்டாம் உலக யுத்தத்திற்கு இட்டுச் சென்ற ஆழ்ந்த பொருளாதார முரண்பாடுகளை வளர்த்துவிட்டது.

உலக வங்கி அறிக்கை அதன் சொந்த பகுப்பாய்வின் தாக்கங்களைத் தொகுத்துப் பார்க்கவில்லை என்பதும் உண்மை தான். உலக நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் கோரிக்கைகளைக் கண்காணிப்பதும், முதலாளித்துவ அமைப்புமுறைக்கு மாற்றீடு கிடையாது என்ற மத்திய சித்தாந்த கருத்துருவிற்கு பலம் சேர்க்கவும், சர்வதேச நாணய நிதியத்தோடு சேர்ந்து தலையாய அரசியல் மற்றும் பொருளாதார செயல்பாட்டைக் கொண்டிருக்கும் ஓர் அமைப்பிற்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது.   

ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அபாயங்களின் போது இத்தகைய நிகழ்முறைகளின் தாக்கங்களைக் கவனிக்காது. உலக பொருளாதாரத்தின் அடித்தள அடுக்குகளில் ஏற்படும் ஆழ்ந்த அசைவுகள், போட்டி நிறைந்த முதலாளித்துவ தேசிய-அரசுகளுக்குள் உற்பத்தி சக்திகளின் உலகளாவிய அபிவிருத்திக்கும், உலக பிரிவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டின் ஆழம் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன.   

இந்த முரண்பாடு முதலாளித்துவத்தை சந்தைகளுக்காகவும், இலாபத்திற்காகவும், ஆதாரவளங்களுக்காகவும் ஒன்றுக்கொன்று எதிரான இன்னும்-நீண்ட வெறிகொண்ட போராட்டத்திற்குள் தள்ளுகின்றன. இது இறுதியில் இராணுவ மோதலுக்கும், மனிதயின நாகரீகத்தின் மீதான ஓர் அச்சுறுத்தலுக்கும் கூட இட்டுச் செல்கிறது. இதை ஒரு முற்போக்கான அடித்தளத்தில், அரசியல் அதிகாரத்திற்காகவும் மற்றும் வரலாற்றுரீதியாக காலங்கடந்துவிட்ட  தேசிய-அரசு மற்றும் இலாப அமைப்புமுறையின் தடைகளைக் கிழித்தெறியும் ஓர் உலகளாவிய திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்காகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் ஒரு போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.   

உலக வங்கி அறிக்கை குறிப்பிடும் மாற்றங்கள், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமையை முடிவுக்குக் கொண்டு வந்து ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா எழுச்சி பெற்ற போதிருந்தே, உலக பொருளாதாரத்தில் மிகவும் அடிப்படையானவையாகும். இந்த மாற்றங்கள் 1914இல் உலக முதலாளித்துவ நிலைமுறிவிற்கும், மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் புரட்சிக்கும் இட்டுச் சென்றுள்ளது. யுத்தங்கள் மற்றும் புரட்சிகளுக்கான ஒரு புதிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இதில் உலக சோசலிசப் புரட்சிக்கான வேலைத்திட்டத்தின் மீது ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதே தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கான அடிப்படை முன்நிபந்தனையாக உள்ளது. துதான்  நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் முன்னோக்காகும்.