World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

New “super bug” threatens Australian hospitals

புதிய "தொற்றுக்கிருமி" ஆஸ்திரேலிய மருத்துவமனைகளை அச்சுறுத்துகிறது

By John Mackay
19 May 2011
Back to screen version

கனடாவில் 2003-2004இல் குறைந்தபட்சம் சுமார் 2,000 நோயாளிகளைப் பலிகொண்ட தொற்றுக்கிருமியான, மருத்துவமனைகளில் இருந்து பரவும் ஒரு பாக்டீரியா தொற்றுநோய் முழுவீச்சில் ஆஸ்திரேலியாவை வந்தடைந்திருப்பதாக Medical Journal of Australia இதழின் கடந்த மாத பதிப்பு ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டது.

அந்த நுண்ணுயிரி ஐரோப்பாவிலும் பரவியுள்ளது என்பதுடன் ஆசியா மற்றும் மத்திய அமெரிக்காவிலும் கூட இப்போது அந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நுண்ணுயிரியினால் தோன்றும் தொற்றுநோய்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளில் ஏற்படுகின்றன என்ற போதினும், அந்த தொற்றுக்கிருமியால் பாதிகாப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை சமூகத்திற்குள்ளேயும் அதிகரித்து வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வெளியாகி வரும் செய்திகள், மருத்துவநல மையங்களுக்கு வெளியில் உள்ள தனிநபர்களுக்கும் பரவக்கூடிய அந்த "தொற்றுக்கிருமியின்" தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

Clostridium difficile (C. difficile) பாக்டீரியாவின் பலத்தை எடுத்துக்காட்டும் ஓர் ஆய்வறிக்கையை The Journal இதழ் வெளியிட்டது. விக்டோரியா மாகாணத்தின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான மெல்போர்னில் உள்ள எப்வொர்த் மருத்துவமனையில், ஒரு வயதானவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பின்னர், ஜனவரி 2010இல் அவருக்கு இந்த தொற்றுநோய் ஏற்பட்டது.

அதே மருத்துவமனையில் அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் மூன்று C. difficile நோய்கள் ஏற்பட்டிருந்ததால், இந்த நோயாளி முக்கியத்துவம் பெறுகிறார். அந்த சமயம் அந்த நோயாளிகளின் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருந்ததை மருத்துவமனையால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் இரண்டாவது சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை அதன் தொற்றுநோய் கட்டுப்பாட்டு வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யுமென்று அது அறிவித்தது.

ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட தொற்றுநோய், 2009ஆம் ஆண்டு பெர்த்தில் தான் அறிவிக்கப்பட்டது. அங்கே ஒரு நோயாளி அமெரிக்காவிலிருந்து வந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்டிருப்பதாக கருதப்பட்டார்.

இந்த நோயாளிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள் என்றபோதினும், இந்த ஆற்றல்மிக்க தொற்றுநோயின் விளைவுகளோடு அதிகளவிலான பலவீனம் மற்றும் இறப்புவிகிதமும் தொடர்புபட்டுள்ளது. அத்துடன் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பதும் பெரும் சிரமமாக உள்ளது. ஆகவே முறையான முன்னெச்சரிக்கை முறைமைகளை ஆஸ்திரேலியா முழுவதும் செய்யவில்லையென்றால் கனடாவில் அனுபவித்ததைப் போன்ற ஒரு தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியமிருப்பதை மருத்துவத்துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்த பாக்டீரியா ஆரோக்கியமானவர்களின் ஜீரண உறுப்பு பகுதியில் (gastrointestinal tract) தான் அரிதாக கண்டறியப்படுகிறது. ஆனால் அது அவ்விடத்தில் மருத்துவ பிரச்சினைகளை உருவாக்குவதில்லை. ஆனால் ஆன்ட்டி-பயாடிக் மற்றும் நோய் எதிர்ப்பைத் தடுக்கும் மருந்துகளை பயன்படுத்தி வந்திருப்பது, வயது முதிர்ச்சி மற்றும் நீண்டகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ஆகியவை பலவீனமானவர்களுக்கு அபாயகரமான காரணிகளாக உள்ளன. நீண்டகாலமாக வயதுமுதிர்ந்த வீட்டு-நோயாளிகளும் கூட அபாயத்திற்குட்படுகிறார்கள். அவர்கள் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பதாலும், தொடர்ந்து ஆன்ட்டி-பயாடிக் எடுத்துக் கொள்வதாலும் அந்த அபாயத்திற்கு உட்படுகிறார்கள்.

C.difficile பாக்டீரியாவின் அதீத-ஆற்றலின் சில குறிப்பிட்ட தீவிர தன்மைகளும் உள்ளன. இது Ribotype 027 என்றழைக்கப்படுகிறது. இதன் இந்த ஆற்றல் பல்வேறு ஆன்ட்டி-பயோடிக் மருந்துகளை எதிர்க்கும் சக்தியைப் பெற்றுள்ளதுடன், ஜீரணப்பகுதியில் குறிப்பிட்ட திசுக்களைப் பாதிக்கும் இரண்டு முக்கிய நச்சுத்தன்மைகளை உருவாக்கும் திறனையும் பெற்றுள்ளது. இந்த பாக்டீரியா, தொற்றுநோய் பரவுவதை அதிகரிக்கும் வகையில், மருத்துவமனை சூழ்நிலைகளில் நீண்டகாலம் தங்கியிருக்கும் வகையில், பிரிந்துபிரிந்து உற்பத்தியைப் பெருக்கக்கூடியதாகவும் உள்ளது.

2008இல், மருத்துவநல பாதுகாப்பு மற்றும் தரத்திற்கான ஆஸ்திரேலிய ஆணையம் (Australian Commission on Safety and Quality in Healthcare) அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களிலும் மருத்துவமனை கண்காணிப்பு திட்டங்களுக்குப் பரிந்துரை செய்தது. ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை மந்திரிகளும் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால் இதுவரையில் அத்திட்டம் எந்தவொரு மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ நடைமுறைப்படுத்தப்படவில்லையென்று Medical Journal of Australia தெரிவிக்கிறது. கண்காணிப்பானது, இத்தகைய நோய்கள் அறிவிக்கப்பட்டுள்ள சில மருத்துவமனைகளில், விரல்விட்டு எண்ணக்கூடிய சட்ட அதிகாரங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Journal இதழில் வெளியான ஒரு தலையங்கத்தில், அக்கட்டுரையின் ஆசிரியர்கள் Dr Rhonda Stuart மற்றும் Dr Caroline Marshall குறிப்பிட்டதாவது: “அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் என்ன ஏற்பட்டுள்ளதோ, அது முழுவீச்சிலும், உடனடியாகவும் நம்முடைய வாசலில் வந்து நிற்கிறது என்பதை சிந்திக்கவே கலக்கமாக உள்ளது. அந்நாடுகள் பெற்ற அதேபோன்ற அனுபவங்களை ஆஸ்திரேலியா தவிர்க்க வேண்டுமானால், அந்நாட்டு வல்லுனர்களின் அனுபவங்களில் இருந்து நாம் பாடங்களைப் பெற வேண்டும்.”

கண்காணிப்பு மற்றும் அறிவிப்பு முறைகள் தற்போது இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நடைமுறையில் உள்ளன. அமெரிக்காவில், இப்போது பெரும்பாலும் C. difficile நுண்கிருமி என்பது பொதுவாக காணப்படும் எதிர்ப்பைத் தடுக்கும் staphylococcis aures அல்லது " golden staph” என்றழைக்கப்படும் MRSA பாக்டீரியாக்களைப் போன்று ஆகிவிட்டது.

மெல்போர்னில் இந்த இந்நிலைமை வெடித்ததில் இருந்து, சந்தேகத்திற்குரிய நோயாளிகளை பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு சுகாதார வல்லுனர்கள் பல அழைப்புகளை விடுத்துள்ளதுடன், தொற்றுநோய் விகிதங்களைக் கண்காணிக்க தேவைப்படும் ஒரு தேசிய பதிவுமுறைக்கும், ஏற்படக்கூடிய சாத்தியமிருக்கும் எவ்வித தொற்றுநோயையும் வராமல் அல்லது பரவாமல் தடுப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறியவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்நோயால் தாக்கப்பட்டிருந்ததாக உறுதிசெய்யப்பட்ட முதல் நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், நடவடிக்கைகள் போதியளவிற்கு இல்லையென்று Australian இதழுக்கு தெரிவித்தார். பெர்த்தில் உள்ள சர் சார்லஸ் கார்ட்னெர் மருத்துவமனையில் மருத்துவத்துறை நுண்-உயிரியியல் மற்றும் தொற்றுநோய்களுக்கான மூத்த ஆலோசகர் கிளேடன் கொலெட்ஜ் கூறியது: “நாம் தாமதமாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிஷ்டவசமாக நாம் இதுவரை ஒரு பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக நாம் செயல்படாவிட்டால், இந்த நிலைமை இன்னும் மோசமடையக்கூடும்.”

தேசியளவில் அதி-தீவிர ஆற்றல்மிக்க பாக்டீரியாக்களைக் கண்டறியும் இரண்டேஇரண்டு ஆய்வகங்கள் மட்டுமே இருப்பதாக The Australian இதழ் ஓராண்டிற்கு முன்னர் தெரிவித்தது. இதுபோன்ற ஆய்வகங்கள் ஒவ்வொரு தலைநகரிலும் உருவாக்கப்பட வேண்டுமென்பதை இத்தகைய ஆய்வகங்களில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர். அதேசமயம், விக்டோரியா மாகாண சுகாதாரத்துறையின் தர மற்றும் பாதுகாப்பு இயக்குனர் அலிசன் மெக்மில்லன், அனைத்து C. difficile நோயாளிகளையும் குறிப்பிடுவது அவசியமில்லை என்று கூறியதுடன் கைகளை சுத்தமாக கழுவுதல், நோயாளிகள் தங்கியுள்ள அறைகளை நுண்கிருமிகள் தாக்காத அளவிற்கு வைத்திருத்தல், நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை முறைமைகளே போதுமானதென்று அறிவித்தார்.

இதுபோன்ற தொற்றுநோய் கட்டுப்பாட்டு முறைமைகள் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு அவசியமாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சுகாதாரத்துறை நிதி ஒதுக்கீடு வெட்டுக்கள் இந்த முறைகளுக்கு குழிபறிக்கின்றன. மருத்துவமனை பணியாளர்களின் வேலைபளு அதிகரிக்கும் போது, கைகளை சுத்தமாக வைத்திருப்பதும், ஏனைய சுகாதார முறைகளும் குறையக்கூடும். மேலும் நோயாளிகள் தங்கும் அனைத்து அறைகளும் முக்கிய நோய்-பாதிப்புகளைப் பெறாத வகையில், போதியளவிற்கு தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் மருத்துவமனைகளில் இல்லை.

சுகாதார பணிகள் குறைந்ததும், செவிலியர்களின் வேலைபளு உயர்வும் கனடாவின் C. difficile தொற்றுநோயோடு சம்பந்தப்பட்டிருந்தது. கியூபெக் அரசாங்கத்தின் வரவு-செலவு கணக்கு வெட்டுக்களோடு இந்த பாதிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் தொடர்புபடுத்தவில்லை. (பார்க்கவும்: “Canada: Budget cuts have contributed to spread of superbug”). மேலும், 2006இல் கியூபெக்கின் ஒரு மருத்துவமனையில் நிகழ்ந்த C. difficile சம்பவவிளைவின் பிரேதபரிசோதனை அறிக்கை, ஒரு தனியார் சுத்தப்படுத்தும் ஒப்பந்ததாரரால் சுத்தப்படுத்துதல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளில் செய்யப்பட்ட குறைப்புகளை எடுத்துக்காட்டியது.

மருத்துவத்துறை வல்லுனர்களின் ஆலோசனைகள் இருந்தபோதினும், ஆஸ்திரேலிய அரசாங்கம் போதிய விடையிறுப்பைக் காட்டுவதாக இல்லை. இது மருத்துவ செலவினங்களைக் குறைக்கும் அதன் இரக்கமற்ற முயற்சிகளோடு பின்னிபிணைந்துள்ளது.

சுகாதாரத்துறை சீர்திருத்தம்" என்ற முழுக்கத்தின்கீழ் இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டும், மாநில மற்றும் பிராந்திய தலைவர்களும் ஒரு புதிய சந்தை சார்ந்த மருத்துவமனை நிதி ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வர நெறியற்ற உடன்படிக்கை ஒன்றை செய்தனர். ஜூலை 12இல் இருந்து, பொது மருத்துவமனைகளுக்கான வளாக மானியங்கள் (block grants) கைவிடப்படும்; மருத்துவமனைகள் அவற்றின் நிதி தேவைகளுக்காக ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கான ஒரு தேசிய "நிர்ணய கட்டணம்" என்பதன் அடிப்படையில், போட்டியில் இறங்க வேண்டும். நோயாளிகளைக் கவனிப்பதில் ஏற்படும் தாக்கத்தைக் குறித்து கவலைப்படாமல், செலவு குறைப்பிற்காக மருத்துவத்துறையின் அனைத்து பிரிவுகளும் பெரும் அழுத்தத்தின்கீழ் வரும்.

இதன் விளைவாக, மருத்துவமனை அமைப்புமுறையானது C. difficile உட்பட தொற்றுநோய் பாதிப்புகளுக்கு இன்னும் அதிகப்படியாக சாய்ந்து கொடுக்க வேண்டியதிருக்கும்.