World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greek crisis triggers fierce conflicts inside Europe

கிரேக்க நெருக்கடி ஐரோப்பாவிற்குள் கடுமையான மோதல்களைத் தூண்டுகிறது

By Peter Schwarz 
11 May 2011
Back to screen version

கிரேக்கம் ஒருவேளை யூரோவில் இருந்து விலகிக் கொள்ளக்கூடும் என்று ஐரோப்பிய நிதி மந்திரிகள் இரகசியமாகக் கூடிப் பேச்சுக்கள் நடத்தியது பற்றிய வதந்திகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கடுமையான மோதல்களைத் தூண்டிவிட்டுள்ளன. Spiegel Online கிரேக்கம் யூரோப் பகுதியை விட்டு விலகுவது மற்றும் ட்ராச்மாவை அதன் தேசிய நாணயமாக மறுபடி அறிமுகப்படுத்தல் பற்றிப் பரிசீலிப்பதாக வெள்ளியன்று தகவல் கொடுத்தது. மிகப் பெரிய யூரோ நாடுகளின் நிதி மந்திரிகள் லுக்சம்பேர்க்கில் யூரோக் குழுத் தலைவர் Jean-Claude Juncker, ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் Jean-Claude Trichet மற்றும் ஐரோப்பிய ஆணையர் Olli Rehn ஆகியோரைச் சந்தித்தனர்.

இத்தகவல் நிதியச் சந்தைகளில் கொந்தளிப்பைத் தூண்டியது. டாலர் மதிப்பிற்கு எதிராக கணிசமாக யூரோவின் மதிப்பு சரிந்தது. முதலில் கூட்டமே நடைபெறவில்லை என்று Jean-Claude Juncker மறுத்தார் இவர்தான் அழைப்புக்களை விடுத்திருந்தபோதிலும்கூட. கிரேக்கப் பிரதம மந்திரி ஜோர்ஜோஸ் பாப்பாண்ட்ரூ யூரோவை நீங்குவது பற்றிய திட்டங்கள் இல்லை என்று மறுத்து, கோபத்துடன் கூறினார், “அத்தகைய கருத்துக்கள் குற்றத்தின் எல்லையில் இருப்பவை.” மற்ற அரசாங்கங்களும் ECB யும் ஊக அத்தகைய வெளியேறும் திட்டங்களை மறுத்தன. “எந்த யூரோப்பகுதி உறுப்பினரும் யூரோவைக் கைவிட விரும்பவில்லைஎன்றார் ECB யின் நிர்வாக அதிகாரி Erkki Liikanen.

ஆயினும்கூட கிரேக்கம் யூரோப் பகுதியிலிருந்து விலகினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய ஊகங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார வல்லுனர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் ஆகியோர் அத்தகைய நடவடிக்கையின் நேரிய, எதிர்மறை விளைவுகளைப் பற்றி ஆர்வத்துடன் விவாதிக்கின்றனர்.

தலைநகரங்களில் நடக்கும் விவாதங்களில் ஒலிக்குறிப்பு கூடுதலான வகையில் சூடேறியுள்ளது. Spigel கருத்துப்படி பேர்லின் வேண்டுமென்றே இரகசியத் தகவலை பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. “ஜேர்மனியில் சிலர் வேண்டுமேன்றே வதந்திகளையும் அரை உண்மைகளையும் பரப்புகின்றனர்என்று Suddeutsche Zeitung ல் ஒரு விமர்சகர் மேற்கோளிட்டார். “அவர்கள் பொறுப்பற்று நடக்கிறார்கள் அல்லது தங்களுடைய செயற்பட்டியலின்படி நடக்கின்றனர்.”

மற்றொரு உயர்மட்ட யூரோ நாடுகளின் பிரதிநிதியை மேற்கோளிட்டு, பேர்லின், “கிரேக்கத்தையும் யூரோவையும் ஊகக்காரர்களின் பிடியில் தள்ளுகிறதுஎன்று ஒரு செய்தித்தாள் எழுதியுள்ளது.

ஓராண்டிற்கு முன் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் 110 பில்லியன் யூரோ மீட்புப் பொதி கிரேக்கத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என ஒப்புக் கொண்டன. இதற்கு ஈடாக கிரேக்க அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று கோரின. இப்பொழுது கிரேக்கம் அத்திட்டதைச் செயல்படுத்தியும், ஒருவேளை அதனால்தானோ என்னவோ, இன்னும் ஆழ்ந்த கடனில் சரிந்துள்ளது.

பொதுநலச் செலவுகளில் தீவிர வெட்டுக்களை பாப்பாண்ட்ரூ அரசாங்கம் நடத்தியுள்ளது. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்கள் 30 சதவிகிதம் சரிந்து விட்டன. ஆனால் கடும் சிக்கன நடவடிக்கைகள் அவற்றின் தன்மையில் மந்த நிலையைக் கட்டவிழ்த்துள்ளன. இது அனைத்துச் சேமிப்புக்களையும் விழுங்கி வருகிறது. நிதி அமைச்சரகத்தின் கருத்துப்படி, இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் அரசாங்க வருமானங்கள் 15.1 பில்லியன் யூரோக்களாக, EU மற்றும் IMF நிர்ணயித்தை தேவையைவிட 1.3 பில்லியன் யூரோக்கள் குறைவாக இருந்தன.

கடந்த ஆண்டு பொருளாதார உற்பத்தி 4.5 சதவிகிதம் குறைந்த, மொத்தக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 142 சதவிகிதம் என அதிகரித்தது. 65,000 திவால் பதிவுகள் நிகழ்ந்துள்ளன, 200,000 மக்களுக்கும் மேலானவர்கள் வேலைகளை இழந்துள்ளனர். ஏதென்ஸ் நகரில் ஐந்து கடைகளில் ஒன்று இப்பொழுது காலியாக உள்ளது. கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

இப்புள்ளி விபரங்கள் மந்தநிலை ஆழ்ந்துவிட்டதைத் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் கட்டிடம் கட்டுவதற்காக உரிமங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே மாதம் இருந்ததைவிட 62 சதவிகிதம் குறைவாகும். புதிய கார்களின் விற்பனை முதல் நான்கு மாதங்களில் கடந்த ஆண்டு இதே காலத்தை ஒட்டிய முறையில் பாதியாகக் குறைந்துவிட்டது.

EU மற்றும் IMF திட்டம் கிரேக்கத்தின் கடன் தேவைகள் 2013 வரை 10 பில்லியன் யூரோ பிணை எடுப்பின் மூலம் அடையப்பட முடியும் என்று எதிர்பார்த்தது. அதன்பின் கிரேக்கம் படிப்படியாக மூலதனச் சந்தையில் அரசாங்கப் பத்திரங்கள் வெளியிடுவதின் மூலம் கடன்களை வாங்க முடியும் என்று கருதப்பட்டது. ஆனால் மீட்பு நிதியின் பாதிக்கு மேல் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள 55 பில்லியன் யூரோக்கள் 2012 வசந்தகாலம் வரைதான் தாக்குப்பிடிக்கும். அதே நேரத்தில் நிதியச் சந்தைகள் கிரேக்கத்திற்குக் கடன் கொடுக்க மறுக்கின்றன. தரம் பிரிக்கும் நிறுவனங்கள் நாட்டின் தரத்தை மிக மிகக் குறைத்து வைத்துள்ள நிலையில் அது இரண்டு ஆண்டுப் பத்திரங்களுக்கு 25 சதவிகித வட்டி கொடுக்க வேண்டும் அது நிலைத்திருக்கக் கூடிய செயற்பாடு இல்லை.

எதுவும் நடக்கவில்லை என்றால், கிரேக்கம் அரசாங்கத் திவாலை அடுத்த வசந்த காலத்தில் அறிவிக்க வேண்டும். அது மற்ற ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது குறிப்பிடத்தக்க செலவினங்களை விளைவிக்கும்.

பிணை எடுப்பின் பொருள், கிரேக்க அரசாங்கக் கடனின் பெருகும் பகுதி தனியார் வங்கிகளில் என்று இல்லாமல் பொது நிறுவனங்களால் வைத்திருக்கப்படும் என்பதாகும். 2009ல் தனியார் கடன்கொடுப்போர் கிரேக்கப் பொதுக் கடனில் 100 சதவிகிதத்தையும் கொண்டிருந்தனர். இப்பொழுது 37 சதவிகிதம் EU, IMF, ECB ஆகியவற்றுடன் உள்ளது. “சுமை பெரும் முறையில் தனியாரிடம் இருந்து பொதுக் கரங்களுக்கு வந்துள்ளதுஎன்று Unicredit வங்கியாளர் Andreas Rees கூறினார்.

கடனில் பொதுப் பங்கு 2013க்குள் 50 சதவிகிதம் என உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்கள் பின் கிரேக்கக் கடனான 180 பில்லியன் யூரோக்களைத்தான் வைத்திருப்பர்: இது 2009ல் இருந்து 300 பில்லியன் யூரோக்களுடன் ஒப்பிடத்தக்கது. கிரேக்கத்திற்கான மீட்புத் திட்டம் தனியார் வங்கிகள் மீட்புத் திட்டம் என்று மாறிவிட்டது.

கிரேக்க அரசாங்கம் திவாலாகக் கூடும் என்னும் அச்சுறுத்தல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக ஜேர்மனியில் கிரேக்கத்திற்கான கடன் திட்டம் இயற்றுதல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பெருகிய முறையீடுகள் வந்துள்ளன. இல்லாவிடின் கிரேக்கம் யூரோப் பகுதியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன.

பல சமீபத்திய பேட்டிகளில் Ifo Insititute ன் தலைவர் Hans-Werner Sinn கிரேக்கம் அதன் தேசிய நாணயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். “கிரேக்கத்திற்கு உறுதிப்பாடு தர நினைக்கும் எந்த முயற்சியும், அதை யூரோப் பகுதிக்குள் தக்க வைக்க வேண்டும் என்ற எந்த முயற்சியும் காண முடியா ஆழத்தைக் கொண்டுள்ள பள்ளம் போன்றது. கிரேக்கம் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டால், அது யூரோவின் உறுதிப்பாட்டைத் தகர்த்துவிடும்என்றார் அவர். ட்ரச்மாவிற்கு அது திரும்பபுவது கிரேக்கம் தன் நாணயத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி மீண்டும் வணிகத்தின் போட்டித் தன்மையைப் பெற உதவும்.

Worms ல் உள்ள University of Applied Sciences ன் பொருளாதாரப் பேராசிரியர் Max Otte இதேபோல்தான் வாதிடுகிறார். “யூரோவை விட்டு நீங்குதல் கிரேக்கத்திற்கு அதன் போட்டித் தன்மையை மீண்டும் வெளிப்புற நாணய மதிப்புக் குறைப்பின் மூலம் ஈடுகட்டும். ஒரு சில காலத்தில் நாடு வெளிநாட்டிலிருந்து வரும் ஆணைகளுக்கு உட்படாமல் தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் Handelsblatt நாளேட்டில் எழுதியுள்ளார்.

தடையற்ற சுதந்திரக் கட்சியின் (FDP) பாராளுமன்றப் பிரிவின் நிதிய வல்லுனர் Frank Schäffler “கிரேக்கம் யூரோப் பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு சாதகமான ஆதரவு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் கிரேக்கப் பிணையெடுப்பு, சேமிப்பு நடவடிக்கைகள் நெருக்கடியை விரைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகும்என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் மற்ற வல்லுனர்கள் அத்தகைய நடவடிக்கையின் பெரும் வெடிப்புத் தன்மை நிறைந்த விளைவுகள் பற்றி எச்சரிக்கின்றனர்: பெரும் விலை உயர்வு, எரிசக்தி மற்றும் பிற இறக்குமதிகளுக்கு; கிரேக்க வங்கிகள் மீது சேமிப்பாளர்கள் பணம் திருப்பிக் கேட்டு முற்றுகையிடல், மாபெரும் மூலதன இடப்பெயர்ச்சி ஆகியவை. மேலும் பொது, தனியார் கடன்களும் அப்பொழுதும் யூரோக்களில் குறிக்கப்படலாம். “கடன்களுக்கு வட்டி கொடுத்தல் போன்றவை இயலாமற் போகக்கூடும், கிரேக்க அரசாங்கம் உடனடியாகத் திவாலாகிவிடும்என்று Gustav Horn, Institute fro Macro Economics and Crisis Research (IMK) இன் இயக்குனர் எழுதியுள்ளார்.

இது கிரேக்க வங்கிகள் மற்றும் ஓய்வூதிய நிதியங்களையும் திவால்படுத்தும். அவை கிரேக்க அரசாங்கத்திற்கு 75 பில்லியன் யூரோக்கள் கடன் கொடுத்துள்ளன. ஏற்றமதிப் பிரிவிற்கு நாணய மதிப்புக் குறைவினால் அதிக நலன் இருக்காது. ஏனெனில் ஏற்றுமதிகள் தொழில்துறையில் வலுவற்ற இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவிகிதம் தான் கொண்டுள்ளன.

வேறுவிதமாகக் கூறினால், ட்ரச்மா அறிமுகம் செய்யப்படுவது அரசாங்கத் திவால் மற்றும் பெரும் பணவீக்கத்தை தோற்றுவிக்கும். மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களை இது சிதைத்துவிடும். 1923ல் மிகப் பெரிய பண வீக்கம் ஜேர்மனியல் ஏற்பட்டபோது அப்படித்தான் நடந்தது.

அரசாங்கப் பிரதிநிதிகள் யூரோப் பகுதியிலிருந்து கிரேக்கம் வெளியேறுவது என்பது அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவற்றையும் புயலுள் இழுக்கும், அது யூரோவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எச்சரித்துள்ளனர். “யூரோப் பகுதி காரணமில்லாமல் வெடித்துப் போவதை நாங்கள் விரும்பவில்லைஎன்று யூரோக் குழுத் தலைவர் Jean-Claude Junker கருத்துத் தெரிவித்தார்.

ஆயினும்கூட, ஜேர்மனியில் ஒரு சிறிய ஆனால் செல்வாக்குப் படைத்த சிறுபான்மை, கிரேக்கம் யூரோப் பகுதியில் இருந்து கட்டாயமாக அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. கிரேக்கக் கடன்கள் மறு திட்டமிடப்படுவதற்கான அழைப்பிற்குப் பரந்த ஆதரவு உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையை பேர்லின் வெளிப்படையாக வாதிடவில்லை. ஏனெனில் அப்படிச் செய்தால் நிதியச் சந்தைகள் காட்டும் தீவிர எதிர்விளைவு அயர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினைக் கடுமையாகப் பாதிக்கும்.

மற்ற நாடுகளுடன்கூட இப்பிரச்சினை குறித்துத் தீவிர மோதல்கள் உள்ளன. அவற்றின் வங்கிகளும் அரசாங்கங்களும் கிரேக்கத்திற்கு அதிகமான கடன்கள் கொடுக்க உத்தரவாதம் அளித்துள்ளன. முந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு மாறாகஅவை கிரேக்கத்திற்கு கடன்களை மட்டுமே கொடுத்தனஇப்பொழுது கடன்கள் மறு திட்டமிடப்பட்டால் பில்லியன்கள் இழக்கப்பட்டுவிடும்.

ஜேர்மனிய வங்கிகள் தாங்கள் கடன்களை மறு திட்டம் செய்யக்கூடிய நிலையில் உள்ளோம் என்ற முடிவிற்கு வந்துள்ளன. அப்பொழுது கிரேக்கத்தின் கடன்களில் 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்யும். பிரான்ஸ் இன்னும் மற்ற நாடுகளை பொறுத்தவரை அத்தகைய மறு திட்டம் தாங்குவதற்கு இயலாதது ஆகும். கிரேக்க மக்களைப் பொறுத்தவரை தற்போதைய மீட்புப் பொதியில் வந்துள்ளதைப் போல் இதையொட்டி மேலும் வெட்டுக்களும் வாழ்க்கைத் தரங்களில் தாக்குதல்களுமே வரும்.

Spiegel Online கருத்துப்படி 50 சதவிகிதம் கடன் தள்ளுபடி என்பது ஜேர்மனிய வங்கிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும். கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் கூட்டாட்சி வங்கிக்கும் மொத்தம் 27 பில்லியன் யூரோக்கள் என இருக்கும். ஆனால் 9 பில்லியன் யூரோக்கள் மட்டுமே தனியார் வங்கிகளின் இழப்பாக இருக்கும். இதில் பெரும் பங்கு Hypo Real Estate இடம் உள்ளது. அதுவோ அரசாங்கத்திற்கு சொந்தமானது.

இந்த தொகை ஒப்புமையில் அதிகம் ஆகும். ஆனால் ஜேர்மனிய மறுஇணைப்பின் செலவினங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த 20 ஆண்டுகளில் இது ஒரு டிரில்லியின் யூரோக்கு மேல் ஆகியுள்ளது, இது நிதானமானதுதான். ஜேர்மனியின் ஆண்டு வணிக உபரி 200 பில்லியன் யூரோக்கள் என்பது அத்தொகையின் பெருக்கம் ஆகும். இதைத்தவிர, கடன் திருப்பிக் கொடுக்கும் திட்டம் நீடித்து ஏற்பாடு செய்யப்படும்போது, அது ஜேர்மனிக்கு இன்னும் அதிக செலவைக் கொடுக்கும்.

சில விமர்சகர்கள் கிரேக்க நெருக்கடியின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரம் அல்ல, அரசியல் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். சர்வதேச நிதிய நெருக்கடியின் அழுத்தம் பெருகிய முறையில் ஐரோப்பாவில் தேசிய நலன்களுடன் மோதலைக் கொண்டுவந்துள்ளது.

கட்டுரையாளர் Wolfgang Münchau, பைனான்சியல் டைம்ஸில் எழுதுகிறார்: “யூரோப் பகுதி நெருக்கடியில் அடிப்படைப் பிரச்சினை, சுற்றியுள்ள நாடுகளின் அரசாங்கக் கடனின் மொத்த அளவு அல்ல. இது ஒப்புமையில் நிதிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகச் சிறியதுதான். இப்பகுதியில் மொத்தக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் என்பது பிரிட்டன், அமெரிக்கா அல்லது ஜப்பானைவிட குறைவுதான். சிறு பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இது தேனீர்க் கோப்பைக்குள் ஒரு புயல் போன்றது ஆகும். யூரோப் பகுதி அரசியலளவில் இப்பொழுது தொற்றாகிவிட்டுள்ள, பெரும் இணைச் சேதங்களை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ள நெருக்கடியைக் கையாளும் திறனைப் பெற்றிருக்கவில்லை என்பதுதான் பிரச்சினை.”

முன்னாள் ஜேர்மனிய சான்ஸ்லர் Helmut Schmidt இதேபோன்ற வகையில்தான் Die Zeit ல் வாதிடுகிறார். யூரோவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நெருக்கடிஐரோப்பிய ஒன்றியம் அனைத்தும் முழுமையாகச் செயல்படவேண்டிய திறனின் நெருக்கடி ஆகும்என்று அவர் எழுதுகிறார். “பொதுப் பொருளாதார அல்லது நிதியக் கொள்கை இல்லை, அதே போல் பொது வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கையும் இல்லை (லிபியா பற்றிக் காணுங்கள்!), அல்லது பொது எரிசக்திக் கொள்கையும் இல்லை.”

சமீபத்திய செய்தி நிறுவனத் தகவல்களின்படி ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது கிரேக்கத்திற்கான மீட்புப் பொதி உடன்பாட்டின் அளவை 30ல் இருந்து 60 பில்லியன் யூரோக்கள் என உயர்த்த தயாரிப்புக்களை நடத்துகிறது. இது கிரேக்க அரசாங்கத்தின் செலவுகளில் மேலும் குறைப்புக்களுடன் இணைக்கப்படும். ஆனால் இது பிரச்சினையை ஒத்திவைக்கும், நெருக்கடியை ஆழமாகச் செய்யுமே அன்றி தீர்க்கப்போவதில்லை.