World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN report verifies Sri Lankan government war crimes

ஐநா அறிக்கை இலங்கை அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்களை நிரூபிக்கின்றது

By Sarath Kumara
21 April 2011
Back to screen version

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக ஐநா செயலாளர் பான் கீ-மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, கொழும்பு அரசாங்கம் சர்வதேச சட்டங்களை "பரந்த அளவில் கடுமையாக மீறியுள்ளதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்களை கண்டுள்ளது". அவற்றில் சில எண்ணிக்கையானவை யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரானவை.

2009 மே மாதம் முடிவுக்கு வந்த, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்ட கால யுத்தத்தின் இறுதி மாதங்களில், இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தொகையான அட்டூழியங்களின் பின்னர், 2010 மார்ச்சில் மிகவும் தாமதாமாகவே இந்த மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

மொத்தமாக 196 பக்கங்கள் கொண்ட அறிக்கை இன்னமும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்ந சனிக் கிழமை ஆவணத்தின் முக்கியமான சுருக்கங்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளன. அது "பொதுமக்கள் உயிரிழப்பு பூச்சியமாக" இருக்கும் ஒரு கொள்கையுடன் "மனிதாபிமான விடுவிப்பு நடவடிக்கையிலேயே" இராணுவம் ஈடுபட்டிருந்தது, என்ற ஜனாதிபதி மகிந்த இராஜபஷவினதும் ஏனைய இலங்கை அரசியல்வாதிகளதும் கூற்றுக்களை பொய்யென நிரூபித்துள்ளது.

2008 செப்டெம்பர் முதல் 2009 மே வரையான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கை, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிராந்தியத்தின் மீதான இராணுவத் தாக்குதல்களில், "பெருந்தொகையான ஷெல்கள் பரந்தளவில் வீசப்பட்டதன் விளைவாக, பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்ற முடிவை எடுக்கின்றது. இந்த இராணுவப் பிரச்சாரம் வன்னியில் வெகுஜனங்களை கொலைசெய்வதை உள்ளடக்கியிருக்கின்றது. தொடர்ந்தும் சுருங்கிக்கொண்டிருந்த ஒரு பிரதேசத்துக்குள் இருந்த சுமார் 330,000 பொது மக்கள், ஷெல் தாக்குதல்களால் இடம்பெயர்ந்துகொண்டிருந்த போதிலும், புலிகளால் பணையக் கைதிகளாக வைக்கப்பட்டனர். ஆட்களை கடத்துவதற்காக வெள்ளை வான்களைப் பயன்படுத்துவது மற்றும் காணாமல் ஆக்குவது உட்பட பல்வகையான அச்சுறுத்தல்கள் மற்றம் நடவடிக்கைகளின் ஊடாக, ஊடகங்களையும் மற்றும் யுத்தத்தை விமர்சித்த ஏனையவர்களையும் அச்சுறுத்தி அடக்கி வைக்க அரசாங்கம் முயற்சித்தது."

தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்நாட்டு யுத்தத்தின் இனவாதப் பண்பினை கோடிட்டுக்காட்டுகிறது. தமது ஆட்சியைப் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக, உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதன் பேரில், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத வன்முறை மற்றும் திட்டமிட்ட பாகுபாடுகளை தசாப்தகாலங்களாக பயன்படுத்திய சிங்கள முதலாளித்துவ தட்டுக்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் போராடி வந்துள்ளன.

அறிக்கையின் சாராம்சம், பொது மக்களை பிராந்தியத்தில் இருந்து வெளியேற அனுமதிக்க மறுத்ததாகவும், கடைசி மாதங்களில் வெளியேற முயற்சித்தவர்களை சுட்டதாகவும், மற்றும் 14 வயதே ஆன சிறுவர்களையும் பலாத்காரமாக படையில் சேர்த்ததாகவும் புலிகள் மீதும் குற்றஞ்சாட்டுகிறது. இத்தகைய செயற்பாடுகள் புலிகளின் தோல்வி அடிப்படையில் அரசியல் தோல்வியே அன்றி இராணுவத் தோல்வி அல்ல என்பதை தெளிவாக்குகின்றது. அரசாங்கத்தின் ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்ட புலிகளால், இலங்கையிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாள வர்க்கம் ஒரு புறம் இருக்க, தமிழ் வெகுஜனங்களிடம் இருந்து கூட எந்தவொரு கணிசமான செயலூக்கமான அரசியல் ஆதரவையும் அணிதிரட்ட முடியாமல் போனது.

எவ்வாறாயினும், அறிக்கை கூறுவது போல், ''யுத்தத்தின் இறுதி நிலையில் அரசாங்கத்தின் செல் தாக்குதல்களாலேயே பெரும்பாலான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்." இராணுவம், தனது சொந்த ''பாதுகாப்பு வலயத்துக்குள்ளேயே'' குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இராணுவம் இந்த பாதுகாப்பு வலயத்துக்குள் ஒன்றுகுவியுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டதோடு அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இருப்பதாகவும் கூறியது. இருப்பிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த போதும் கூட, அரசாங்கம் ''ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டு மையத்தின் மீதும் பிரதான உணவு விநியோக பாதை மீதும் மற்றும் காயப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் ஏற்றிச் செலவதற்காக கடற்கரைக்கு வந்தகொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) கப்பலுக்கு அருகிலும் செல் தாக்குதல்களை நடத்தியிருந்தது.''

அரசாங்கம் அடையாளப்படுத்தப்பட்டிருந்த வைத்தியசாலைகள் மீதும் செல் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், மற்றும் "மோதல் வலயத்திற்குள் உணவு மற்றும் மருத்துவ விநியோகங்கஙள், குறிப்பாக சத்திர சிகிச்சைக்குத் தேவையானவை விநியோகங்கள் போன்ற மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு சென்றடைவதை திட்டமிட்டு தடுத்து அவர்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்ததாகவும் அறிவிக்கப்பட்டது''.

செல் தாக்குதல்களினால் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காக, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே அரசாங்கமும் இராணுவமும் குறைமதிப்பீடு செய்தன. ''2009 மே மாதத்தில் இருந்து பத்தாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர், அவர்களில் அநேகமானவர்கள் யுத்தத்தின் இறுதி நாட்களில் அநாமதேயமாக உயிரிழந்துள்ளனர்" என்று ஐநா அறிக்கை மதிப்பிட்டுள்ளது. 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னர் ஐ.நா. வெளியிட்ட மதிப்பீட்டை விட இந்த புள்ளிவிபரம் கணிசமானளவு உயர்ந்த எண்ணிக்கையாகும்.

புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக சுமார் 280,000 பொதுமக்கள் இராணுவத்தினால் நடத்தப்பட்ட நலன்புரி முகாம்கள் என்று அழைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் பலாத்காரமாகவும் சட்ட விரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டார்கள். ''கைதிகளின் அடிப்படை சமூகப் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு பயங்கரமான நிலமைகளின் கீழ் பெருந்தொகையில் கூட்டமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு அங்கு பலர் தேவையற்ற விதத்தில் உயிரிழந்தனர்,'' என அறிக்கை குறிப்பிடுகிறது. அவர்களில் சிலர் தனியாகப் பிரிக்கப்பட்டு ''புலி சந்தேக நபர்களாக'' சித்திரவதை செய்யப்பட்டதுடன் இரகசியமாக கொல்லப்பட்டனர் மற்றும் எஞ்சியவர்கள் இரகசிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

புலிகள் தோல்வியடையந்து ஏறக்குறைய இரண்டு வருடங்ளுக்குப் பின்னர், இராணுவத்தின் ஊடுருவும் வகிபாகமும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் தொடர்கின்றன. இன்னமும் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டங்கள் போலவே, "முன்னைய மோதல் வலயங்களில் இராணுவமயமாக்கல் தொடர்வதையிட்டும் மற்றும் பீதி, அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சூழலைப் பேணுவதற்காக வடிவமைக்கப்பட்ட, துணை இராணுவக் குழுக்களின் பயன்பாடு குறித்தும் அந்த அறிக்கை கவணத்தை திருப்புகிறது.

இந்தக் குற்றங்கள் பாரதூரமானவையாக இருந்தாலும், நிபுணர் குழுவின் சிபார்சுகள், விளைபயனுள்ள வகையில் பொறுப்பாளிகளை சட்டத்துக்கு வெளியில் விட்டுவைக்கின்றது. இந்த அறிக்கை இலங்கையில் உள்ள நீதி மன்ற முறமைகளின் குறைந்த கடமைப் பொறுப்பினை கடுமையாக குறை கூறுவதோடு, அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில் ''சுதந்திரமும் மற்றும் நடுநிலமையும்" இல்லை எனவும், அதன் அங்கத்தவர்களில் சிலரின் ஆழமான நலன்களுடன் சமரசம் செய்துகொள்ளப்படுவதாகவும்" விவரிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையின் சிபாரிசுகள் யுத்தக் குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கத்திடமே, அதாவது குற்றவாளிகளிடமே கொடுத்துள்ளது. நிபுணர் குழுவால் இனங்காணப்பட்ட, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ''நம்பகமான குற்றச்சாட்டுக்கள்'' பற்றி "நேர்மையான விசாரணைகள்" உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என அது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கை அரசாங்கத்தை கண்காணிக்வும் அதற்கு உதவுவதற்கும் ஒரு தனியான சர்வதேச பொறிமுறை முன்மொழியப்பட்டுள்ளது.

இராஜபக்ஸ நிர்வாகம் ஐநா அறிக்கையை உடனடியாகவே அலட்சியத்துடன் நிராகரித்தது. வெளிவிகார அமைச்சு தனது சுருக்கமான அறிக்கையில், ''ஐநா அறிக்கை பல விடயங்களில் அடிப்படையில் குறைபாடு உள்ளது'' என தெரிவித்துள்ளது. ''ஏனைய குறைபாடுகளின் மத்தியில், அந்த அறிக்கை எந்தவொரு உறுதிப்படுத்தல்களும் அற்ற வெளிப்படையாகவே பக்கச்சார்பான விடயங்களை அடிப்படையாக கொண்டுள்ளது," என அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதிபலிப்பை பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஜனாதிபதி இராஜபக்ஷ ஆரம்பத்தில் இருந்தே ஐநா நிபுணர் குழுவை நிராகரித்திருந்ததுடன், அதன் அங்கத்தவர்கள் இல்ங்கைக்கு வந்து பொதுமக்களையோ அல்லது இராணுவத்தினரையோ விசாரிப்பதை அனுமதிக்கவும் மறுத்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அரசாங்கம் ஆதாரங்களை சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு செயலில் தடைவிதித்தது. இதே முறையிலேயே, யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஊடகங்களும் அநேகமான தொண்டு நிறுவனங்களும் யுத்த வலயத்துக்குள் செல்வதை தடுத்தது. அது பொதுமக்கள் மரணம் தொடர்பாக பதிலளிப்பதையும் தொடர்சியாக மறுத்து வருக்கின்றது.

அதே சமயம், நாடு ஒரு பெரும் சர்வதேச சதியை எதிர்கொள்கின்றது எனக் கூறி, அரசாங்கம் ஒரு குரூரமான மேற்கத்தைய-எதிர்ப்பு பிரச்சாரத்தை குவிக்கின்றது. ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கும் மற்றும் எந்தவொரு யுத்தக் குற்ற விசாரணைக்கும் எதிராக "பலத்தைக் காட்டும்" ஒரு மே தின ஊர்வலத்தினை ஒழுங்கு படுத்துமாறு தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இராஜப்கஷ அழைப்பு விடுத்தார்.

புலிகளைத் தோற்கடித்தமைக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று மேற்கு நாடுகள் பிரச்சாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறன என இராஜபக்ஷ குற்றஞ்சாட்டுகின்றார். இந்தக் கூற்று வேடிக்கையானது. யுத்தத்தின் இறுதி மாதங்கள் வரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள், இராஜபக்ஷவின் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்கும், 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இராணுவம் வெளிப்படையாக மீறியதற்கும், அது பொது மக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதற்கும், கடத்தல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கும் மௌனமான ஆதரவை வழங்கி வந்தன.

மூர்க்கத்தனத்தின் அளவு வெளிப்படையானதோடு சர்வதேச ரீதியில் எதிர்ப்பை ஏற்படுத்திய பின்னர் மட்டுமே அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், யுத்தத்தின் கடைசி மாதங்களில் இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றி கவலை எழுப்பத் தொடங்கின. அப்போதும் கூட மேற்கத்தைய சக்திகள் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை வெளியிட்டதன் நோக்கம் படுகொலைகளை முழுமையாக நிறுத்துவது அல்ல. மாறாக, கொழும்பில் தமது அரசியல் செல்வாக்கை பலப்படுத்திக்கொள்வதற்கே ஆகும்.

குறிப்பாக அமெரிக்கா, தனது எதிரி நாடான சீனா இராணுவ, நிதி மற்றும் அரசியல் ஆதரவுகளை வழங்குதன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்த மோதல்களை சுரண்டிக்கொண்டுள்ளது என்பதையிட்டு ஆழமாக கவலை கொண்டுள்ளது. சீனா தீவின் தென்பகுதியான அம்பாந்தோட்டையில் ஒரு வசதியான நவீன துறைமுகத்தினைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தினை ஏற்கனவே பெற்றுள்ளது. இந்த துறைமுகம், ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கில் இருந்து வடகிழக்கு ஆசியாவுக்கான பிரதான கப்பல் பாதைகளுக்கு அருகில் துறைமுகங்கள் அமைக்கும் சீனாவின் பரந்த திட்டத்தின் ஒரு பாகமாக அமைக்கப்படுகின்றது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் ரொபேட் பிளாக், ஏப்ரல் 5ல் வெளிவிவகாரக் குழு சபையில் தெரிவித்த கருத்தில், இலங்கையில வாஷிங்டனின் இன்றியமையாத நலன்கள் பற்றி சுட்டிக் காட்டினார். "வளைகுடாவில் இருந்து பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் ஏனைய வர்த்தகங்களை கிழக்கு ஆசியாவுக்கு  கொண்டுவரும் கப்பல் பாதைகளில் நேரடியாக அமைந்துள்ளதால், இலங்கை அமெரிக்கவின் மூலோபாய நலன்களில் உள்ளடங்கியுள்ளது"' என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மனித உரிமை பதிவுகளும் ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைகின்றமையும் "கவலையளிக்கின்ற" அதே வேளை, "இலங்கை வன்முறையான அதி தீவிரவாதத்துக்கு, வணிகத் தடைக்கு மற்றும் கடற்கொள்ளைக்கு எதிராக விளைபயனுள்ள வகையில் போராட விரும்பும், இயலுமைகொண்ட பங்காளியாக விளங்கக்கூடியதாக நிற்கின்றதுடன், அதன் மூலம் பிராந்தியத்தில் கடற் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவக் கூடியதாகவும் உள்ளது," என பிளேக் பிரகடனம் செய்தார். 2009 கடைப் பகுதியில் இருந்து, வாஷிங்டன் இராஜபக்ஷ அராசங்கத்தை ஒரு பொருத்தமான அமெரிக்க பங்காளியாக ஸ்தாபித்துக்கொள்வதன் பேரில், ஏனைய வழிமுறைகளை நாடிய நிலையில், அது "மனித உரிமைகள்" விவகாரத்தை மேலும் பயன்படுத்திக்கொண்டது.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் உட்பட, பொது மக்களைப் பாதுகாப்பதற்கு ஐநா பாதுகாப்புச் சபையும் ஏனைய ஐநா சபைகளும் "நடவடிக்கைகள் எடுக்கத் தவறிவிட்டன" என்பதை ஐநா அறிக்கேயே கூட ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தவறு, பெரும் வல்லரசுகள் ஒவ்வொன்றும், தனது அரசியல் தேவைகளுக்காக இந்த விவகாரங்களை சுரண்டிக்கொள்கின்ற நிலையில், அவற்றின் பக்கம் பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் தலைவிதி பற்றி எந்தவொரு உண்மையான அக்கறையும் கிடையாது என்பதையே அம்பலப்படுத்தியுள்ளது. இதே குறிக்கோள்களே நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.