World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

E
urope one year after the bailout of Greece

கிரீஸ் பிணையெடுப்பிற்கு ஓராண்டிற்கு பின்னர் ஐரோப்பா

Stefan Steinberg
10 May 2011
Back to screen version

ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் கிரீஸை பிணையெடுக்க110 பில்லியன் கடன் ஒதுக்கீடு செய்து ஓராண்டு முடிவடைவதை இம்மாதம் குறிக்கிறது.

2008 வங்கியியல் நெருக்கடிக்கு விடையிறுப்பாக ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச நிதியியல் மேற்தட்டு காட்டிய எதிர்ப்பின் ஒரு புதிய கட்டத்தை அந்த பிணையெடுப்பு குறித்தது. செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸின் தோல்வியை தொடர்ந்து, பொறிவின் அச்சுறுத்தலுடன் அமெரிக்க மத்திய வங்கிகளின் கூட்டமைப்பும்,  உலகம் முழுவதிலும் உள்ள மத்திய வங்கிகளும் பிரதான வங்கிகளின் இழப்பை ஈடுகட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர்களை கட்டுப்பாடகற்றி விட்டன. அரசு கையிருப்புகளிலிருந்து இந்த பெரும் தொகைகள் வங்கிகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்ட பின்னர், கடன் சுமைகளையும், நிதியியல் நெருக்கடிகளையும் தீர்க்க ஆளும் வர்க்கங்கள், முதலில் ஐரோப்பாவில், சிக்கன நடவடிக்கைகளை காட்டுமிராண்டித்தனமாக தொழிலாள வர்க்கத்தின் முதுகில் திணிக்க திரும்பின.    

சர்வதேச நாணய நிதியத்தால் ஆலோசனை வழங்கப்பட்டு, கிரீஸின் சமூக ஜனநாயக அரசாங்கத்தால் (PASOK) நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக செலவினவெட்டு நடவடிக்கைகளின் தொடர்ச்சியானது  தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நாசகரமாக ஆகியுள்ளது. கிரீஸ் ஆழ்ந்த மந்தநிலை சேற்றில் சிக்கியுள்ளது. அதன் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதம் சுமார் 15 சதவீதத்திலும், இளைஞர் வேலைவாய்ப்பின்மை 30 சதவீதத்திலும் நிற்கிறது. அரசுக்கான வருமானங்கள் பொறிந்து போயுள்ளது; குடிமக்கள் பலர்-குறிப்பாக ஓய்வூதியம் பெறுபவர்கள்-இலவச உணவுக்கூடங்களின் (soup kitchens) வரிசையில் நிற்பது தீவிரமாக அதிகரித்துள்ளது.       

அதே நேரத்தில், பெருநிறுவனங்களின் இலாபங்களும், தலைமை செயலதிகாரிகள் மற்றும் பிரதான முதலீட்டாளர்களின் வருமானங்களும் உயர்ந்து கொண்டே போகிறது. அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும், செயலதிகாரிகளின் கொடுப்பனவுகள் 2008 நிதியியல் நிலைகுலைவிற்கு முன்னர் இருந்ததைப் போலவே விண்ணைமுட்டும் அளவுகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளன.

ஆளும் வர்க்கத்தின் குற்றவியல்தனமான பொறுப்பற்ற சொந்த-செல்வகொழிப்பிற்கு இடையில், அடியாழத்தில் தங்கியிருக்கும் ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியானது தீர்க்க முடியாதது மட்டுமல்ல; அது தீவிரமடைந்தும் வருகிறது. கிரீஸ் பொதுவான ஐரோப்பிய செலாவணியான யூரோவைக் கைவிடக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையில் (இது செலாவணி பொறிவிற்கும் இட்டுச் செல்லக்கூடும் என்பதால்), கிரேக்க கடன் செலுத்தமதியின்மையை அடைந்துவிடாமல் தடுக்க, மே 6இல், ஓர் அறிவிக்கப்படாத அவசர கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தைத் தொடர்ந்து, Standard & Poor நிறுவனம் அதன் பட்டியலில் கிரேக்க கடனைக் தரம்குறைத்துக் காட்டியது.

போர்ச்சுக்கல்78 பில்லியன் கடனைக் கோரும் என்ற அறிவிப்புடன், அது கடந்தவாரம் நிதியியல் கும்பலுக்கு சமீபத்தில் இரையானது. இது மீண்டுமொருமுறை சமூக திட்டங்களின், வேலைகளின் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் கடுமையான வெட்டுக்களில் போய் முடியும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் நேரடி இலக்காக இருக்கும் நாடுகளுக்கு அப்பால், ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் கிரேக்ககடன் நெருக்கடியால் கேள்விக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார கொள்கை துறையில், பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையில் அதிகரித்து வரும் விரோதங்கள் ஏற்கனவே கிரேக்க பிணையெடுப்பு பற்றிய போட்டியில் மிகவும் வெளிப்படையாக இருந்தன. பிரதான சர்வதேச வங்கிகள் மற்றும் கடன் பட்டியலிடும் நிறுவனங்களால் கிரேக்க பங்கு பத்திரங்கள் மீது நடத்தப்பட்ட ஓர் ஒருங்கிணைந்த தாக்குதலுக்குப் பின்னர், ஐரோப்பிய தலைவர்கள் யூரோவைக் காப்பாற்ற அவசரஅவசரமாக ஒரு கூட்டத்தில் ஒன்றுகூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.  

வடக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழுவின் சார்பாக ஜேர்மனி, கிரேக்கத்திலும், கடுமையான கடன்களில் சிக்கியிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் காட்டுமிராண்டித்தனமான சமூக செலவினகுறைப்பு கொள்கையைக் கொண்டு வர கோரியது. அக்கண்டத்தின் செல்வச்செழிப்பான நாடுகளிடமிருந்து-முதலாவதும், முக்கியமானதுமாக ஜேர்மனியிடமிருந்து-அதிக நிதியுதவியைக் கோரும், மற்றும் அத்துடன் சமூக செலவினவெட்டுக்களை கோரும் ஒரு கொள்கையை பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவை முன்னெடுத்தன

ஜேர்மன் அதன் எதிர்ப்பை கைவிடவில்லையானால் யூரோவிலிருந்து விலகிக்கொள்வதாக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அச்சுறுத்தல் விடுத்த பின்னர் தான், ஐரோப்பிய அரசு தலைமைகள் கிரேக்க பிணையெடுப்பிற்கு ஒருமனதாக முடிவுக்கு வந்தன. ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலைவர் ஜோன்-குளோட் திரிஷ்சே இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை "இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் அல்லது முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக சிக்கலான நிலைமை" என்று குணாம்சப்படுத்தினார். இந்த அறிக்கை சர்வாதிகாரம் மற்றும் உலக யுத்தத்தை நோக்கி செல்வதற்கு மறைமுகமாக தூண்டிவிடுவதாக உள்ளது.

ஆனால் இறுதியில் கிரேக்கத்திற்கு கடன் வழங்கும் சர்வதேச நாணயநிதியத்தினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உடன்படிக்கை  தண்டனைக்குரிய வட்டிவிகிதங்களுடனும், கடுமையான சமூக சிக்கனவெட்டு முறைமைகளை நடைமுறைப்படுத்துவதுடனும் பிணைந்திருந்தது.   

நிதியியல் பிரபுத்துவத்தை எவ்வாறு சிறப்பாக மீட்டெடுப்பது என்பதன்மீது நடக்கும் கசப்பான விவாதங்கள், ஐரோப்பாவில் அரசியல் மற்றும் இராணுவ உறவுகளில் ஆழமாக அடித்தளமிடப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் இரண்டு அணுஆயுத சக்திகளாக விளங்கும் பிரான்ஸூம் பிரிட்டனும் நேட்டோ கட்டமைப்பிற்கும், ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பிற்கும் வெளியே ஓர் இருதரப்பு இராணுவ கூட்டுறவை கடந்த நவம்பரில் தீர்மானித்தன. இது லிபியாவிற்கு எதிராக நேட்டோ யுத்தத்தில் எழுந்துள்ள ஐரோப்பாவிற்குள் நிலவும் முரண்பாடுகளின் முன்னுரையாக இருந்தது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் தலைமையிலான நவ-காலனித்துவ யுத்தத்தை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் வாக்கெடுப்பில் ஜேர்மனி கலந்துகொள்ளாதிருந்தது.  

கிரீஸ், அயர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயினின் கடன்கள் 2012 வாக்கில் இன்னும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக ஆர்ஜென்டினாவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மரியோ ப்ளிட்ஜெர் கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் குறிப்பிட்டார். அதன் கடன்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் கரங்களின்கீழ் ஒரு பெரும் மறுகட்டமைப்பிற்குள் போகவிருக்கும் கடைசி நாடாக ஆர்ஜென்டினா உள்ளது.

அவர் நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரதிபலிப்பை தவிர்க்கமுடியாமல் செலுத்துமதியின்மைக்கு" சென்று கொண்டிருக்கும் பொன்ஜி திட்டத்தோடு (Ponzi scheme) ஒப்பிட்டார். அவர் முடிவாக குறிப்பிட்டதாவது: “ஒரு பிரமிட் முறையைப் போல, முழுமையாக இழப்பை ஏற்கவிருக்கும் "உடைமைகளைக்" கொண்டிருந்த கடைசி நாடாகும். இந்த விஷயத்தில், முதலீடு செய்வதில் தவறாக முடிவெடுத்த உண்மையான பங்குப்பத்திர உரிமையாளர்களை போல இல்லாமல், கடன் கணக்கை தீர்க்கும் வரிசெலுத்துவோராக அது இருக்கும்.”  

இந்த சம்பவங்களில் இருந்து முக்கியமான அரசியல் பாடங்களைப் பெற வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் இருக்கும் எந்த கட்சியும் நிதியியல் மூலதனம் தொடுக்கும் தாக்குதலுக்கு இம்மியளவும் கூட எதிர்ப்பு காட்டவில்லை. உத்தியோகபூர்வ "இடது" சோசலிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சிகள் உட்பட ஒவ்வொரு கட்சியும் வங்கிகளின் நலன்விரும்பிகளாக அவற்றை வெளிப்படுத்தி உள்ளன.  

பெரும் வெட்கக்கேடான விதத்தில், ஐரோப்பிய நாடுகளின் அனைத்து ஆளும் கட்சிகளும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னொருபோதும் இல்லாதவகையில் தாக்குதலை நடத்துகின்றன. மேலும் மக்களின் எதிர்ப்பை அடக்க, அவை அரசின் ஒடுக்குமுறையை பயன்படுத்த நாடுகின்றன. சமூக நெருக்கடிகளின் போது தொழிலாளர்களைப் பிளவுபடுத்தவும், அவர்களின் சொந்த சிக்கல்களிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் இத்தகைய இதே கட்சிகள், பொதுமக்களின் வாழ்க்கைக்குள் தேசியவாத மற்றும் இனவாத விஷத்தை அள்ளித்தெளிக்க விரும்புகின்றன. இது ஆளும் வர்க்கத்தின் செல்வாக்குமிக்க பிரிவுகளின் ஆதரவுடன் விளங்கும் சீற்றம்மிக்க தேசியவாத மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கட்சிகளுக்கு, அந்த கண்டம் முழுவதிலும் அவற்றின் அடித்தளத்தை தக்கவைக்க உதவியுள்ளது.

முதலாளித்துவத்தின் சமூக செலவினவெட்டு முறைமைகளுக்கு எதிராக எழும் மக்களின் எதிர்ப்பை ஒடுக்க, அதன் ஆயுதக்கிடங்கில் இன்றியமையாத ஆயுதமாக தொழிற்சங்க இயந்திரம் ஆகியுள்ளது. முதலாளித்துவத்திற்கும் தேசிய அரசிற்கும் அது அளிக்கும் ஆதரவானது, நிதியியல் பிரபுத்துவத்தைப் பறிப்பது, பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களைச் சோசலிச அடிப்படையில் தேசியமயமாக்குவது மட்டும் தான் தொழிலாள வர்க்கத்தின் வேலைகளையும், வாழ்க்கை நிலைமைகளையும், மற்றும் சமூக உரிமைகளையும் காப்பாற்றும் என்ற நிலைமைகளின்கீழ், எவ்வித எதிர்ப்பையும் முன்னெடுக்க அது கையாளாகாமல் இருப்பதைக் காட்டுகிறது.     

அதனால் தான் ஒவ்வொரு நாட்டிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்குவதற்கும், அவ்விடத்தில் தொழிலாளர்களின் ஓர் அரசாங்கத்தைக் கொண்டு வருவதையும் செய்யாமல், மாறாக வேலைநிறுத்தங்கள் மற்றும் பாரிய போராட்டங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிப்பது என்ற அளவிற்கு உழைக்கும் மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த கோருகின்றன. சில விஷயங்களில், பெயரிட்டு கூறுவதானால் கிரீஸ் பாரவூர்தி ஓட்டுனர்கள் விஷயத்தில், பிரான்சில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் விஷயத்தில், மற்றும் ஸ்பெயினில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் விஷயத்தில், முதலாளித்துவ அரசிற்கு ஆதரவளிக்கவும், தொழிலாள வர்க்க போராட்டத்தை அடக்குவதற்காகவும் அவை வேலைநிறுத்தங்களை உடைப்பதற்கும், வேலைநிறுத்த போராட்டக்காரர்களை குற்றவாளிகளாக்குவதற்கும் அரசாங்கத்தோடு இணைந்து வேலை செய்துள்ளன.

தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதில், கிரீஸில் SYRIZA, ஸ்பெயினில் ஐக்கிய இடது, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி என பல முன்னாள்-தீவிரவாத கட்சிகளின் அரசியல் ஆதரவை தொழிற்சங்கங்கள் சார்ந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூக செலவினகுறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்களை நடத்திய ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள், அரசாங்கங்களோடு சமூக வெட்டுக்களை பேரம்பேசியிருந்த இந்த மத்தியவர்க்க போலி-இடது அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களால், அவர்களின் கோரிக்கைகள் காட்டிக்கொடுக்கப்பட்டதையே கண்டனர்.

கிரேக்க பிணையெடுப்பிற்கு ஓராண்டிற்கு பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியை தீர்க்க அது முற்றிலும் தகுதியற்று இருப்பதை அது நிரூபித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இரண்டு முறை, மத்தியமாக பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு இடையில் ஏற்படும் முரண்பாடு உட்பட, முதலாளித்துவத்தின் அதே அடிப்படை முரண்பாடுகள் உலக யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. ஒரு புரட்சிகர வேலைதிட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தைத் தூக்கியெறியவும், உலக சோசலிச புரட்சியின் ஒரு பாகமாக ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளை ஸ்தாபிக்கவும், ஐரோப்பாவை ஒரு முற்போக்கான வகையில் ஐக்கியப்படுத்தும் திறன் படைத்த ஒரே சக்தியாக, தொழிலாள வர்க்கமே உள்ளது.

தலைமை குறித்த பிரச்சினையும், தொழிலாள வர்க்கத்தின் முன்னோக்கும் தான் மிகவும் அவசர பிரச்சினையாக உள்ளன. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பானது, கடந்த நூற்றாண்டு போராட்டத்தின் முக்கியமான அரசியல் படிப்பினைகளின் அடித்தளத்தில் அமைக்கப்பட்ட ஒரு நனவுபூர்வமான புரட்சிகர வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புதிய கட்சிகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

ஐரோப்பா மற்றும் உலகமெங்கிலும் இந்த முன்னோக்கிற்காக போராட, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதன் தேவையே, கடந்த ஆண்டின் கசப்பான அனுபவங்களில் இருந்து பெறப்பட்ட மத்திய படிப்பினையாக உள்ளது.