World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Unanswered questions on US raid that killed bin Laden

பின் லேடனைக் கொன்ற அமெரிக்கத் தாக்குதலில் விடையளிக்கப்படாத கேள்விகள்

By Patrick Martin 
3 May 2011
Back to screen version

பாக்கிஸ்தானில் அல் குவேடாத் தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்ற அமெரிக்கச் சிறப்புப் படைகள் மற்றும் CIA முகவர்கள் நடத்திய தாக்குதல் முடிந்து கிட்டத்தட்ட 24 மணி நேரம் கடக்கப்பட்டுவிட்டது; ஆனால் தாக்குதலின் சூழல் மற்றும் விவரங்களில் பலவும் இன்னும் தெளிவற்றதாக உள்ளன; குறிப்பாக பின் லேடனுக்குப் பாதுகாப்பு கொடுத்தது மற்றும் பின்னர் தாக்குதலுக்கு உதவியது என்ற வகையில் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகளின் பங்கு குறிப்பாகத் தெளிவற்றது.

பயங்கரவாதத்தின் மீதான போர்பற்றிய உத்தியோகபூர்வ அமெரிக்க பிரச்சாரத்திற்கும், தாக்குதல் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைக்கும்  இடையே உள்ள மிக வியப்பான முரண்பாடு பின் லேடன் மறைந்திருந்த இடத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எங்கோ ஒரு மலைக்குகையில், உலகில் இருந்து தனிமைபன்படுத்தப்பட்டு ஒதுங்கியிருந்தார் என்பதற்கு முற்றிலும் மாறாக அல் குவேடா தலைவர் அரண்மனை போன்ற வளாகம் ஒன்றில், பாக்கிஸ்தானின் இராணுவ உயர்கல்விக்கூடத்தில் இருந்து அரை மைல் தூரத்திற்குள்ளாக (வெஸ்ட் பாயின்ட்டிற்குச் சமமானது இது) இருந்தார்; இந்நகரம் ஓய்வு பெற்ற உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பலர் வசிக்கும் தாயகமாகும்.

பின் லேடன்  வசித்துவந்த இடம் பற்றிய கடந்தகாலக் கூற்றுக்களுக்கும்ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் கூறியவைஉண்மையில் அவர் வசித்து வந்த இல்லத்திற்கும் இடையே இருந்த வேறுபாடு பரந்த அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. டைம் இதழ் எழுதியது: “பல மாதங்கள், ஏன் ஆண்டுகள்கூட, முன்னாள் பாக்கிஸ்தானிய இராணுவ அதிகாரிகளினால் சூழப்பட்டு பின் லேடன் ஒரு ஆடம்பர வளாகத்தில் வசித்து வந்தார் என்பது இன்னமும் முற்றிலும் அறியப்படவில்லை.” ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், “பெரும் ஆடம்பரத்துடன் பின் லேடன் வசித்துவந்தார் என்பது பாக்கிஸ்தானிய அதிகாரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்; அவர்கள் கண்முன்னாலேயே அவர் எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்பதை அவர்கள் விளக்குவதற்கு அழுத்தம் பெறுவர்என்று கூறியுள்ளது.

பென்டகன், CIA மற்றும் வெள்ளை மாளிகை கொடுத்த விவரங்களைத் தளமாகக் கொண்ட அமெரிக்க செய்தி ஊடகத் தகவல்கள் பின் லேடன் கோட்டையை சித்தரித்துக் காட்டியிருப்பது கட்டிட மேற்பகுதியில் நியோன் வெளிச்சம் போட்டு அல்குவேடா இங்கு உள்ளது என்பதை மட்டும்தான் கூறவில்லை என்பது வெளிப்படையாகிறது. இது 2005ல் கட்டப்பட்டது, பயங்கரவாதத் தலைவர் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு இல்லம் என்ற குறிப்பான நோக்கத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.

இந்த இல்லம் மிகப் பெரியதாக உள்ளதுஅண்டை வீடுகள் எதையும்விட எட்டு மடங்கு பரந்து விரிந்தது ஆகும்; நகரத்தின் மையப்பகுதியில் இருந்து அதிக தூரமில்லாத செல்வத்தர் வாழும் பகுதியில் இது இருந்தது. பெரும் பாதுகாப்பு இதற்கு இருந்தது; சுவர்கள் சில இடங்களில் 18 அடி உயரம் என்று இருந்தன; முள் வேலிகள் போடப்பட்டிருந்தன; இதைத்தவிர மேல் தளத்தில் 7 அடி உயரச் சுற்றுச் சுவரும் இருந்தது; இது பொதுவாக ஒரு உயரமான இல்லத்துவாசியை (பின் லேடன் கிட்டத்தட்ட 6 அடி 5 அங்குல உயரம் என்று கூறப்படுகிறிது) மறைப்பதற்குப் போதுமானதாக இருந்தது.

இந்த வீட்டின் மதிப்பு 1 மில்லியன் டாலருக்கும் மேலானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் இதன் உரிமையாளர்கள் என்று குறிக்கப்படுபவர்களுக்குவிளக்கக்கூடிய வகையில் வருமானம் ஏதும் இல்லை”; கட்டிடத்தில் தொலைபேசியோ அல்லது இணையத்தள வசதியோ இல்லை; அதுவும் பாதுகாப்பிற்காகத்தான் அவ்வாறு இருந்திருக்கும். வசிப்பவர்கள் குப்பைகளை எரித்தனரே ஒழிய தெருக்களில் அள்ளப்படுவதற்காகப் போடவில்லை.

ஞாயிறு இரவு உரையில் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க உளவுத்துறை, வளாகத்தைப் பற்றி ஆகஸ்ட் 2010ல்தான் அறிந்தனர் என்று கூறினாலும், தூதரகத் தகவல் தந்திகள், விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புக்கள் மூலம் பெறப்பெற்றவை, அமெரிக்க அரசாங்கம் 2008 ஐ ஒட்டித்தான் அபோத்தாபாத் இடத்தைப் பற்றி அறிந்தது எனத் தெரிவிக்கின்றன; அதுவும் குவண்டநாமோ குடாவில் அல் குவேடா தலைவர் ஒருவர் அபு அல்-லிபியை விசாரணைக்கு உட்படுத்தியபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இது தெரிந்தது.

திங்களன்று விக்கிலீக்ஸ் ஒரு டிவிட்டர் தகவலை வெளியிட்டுள்ளது; இதில் அத்தகவல் தந்தி பற்றி கூடுதல் தகவல்கள் உள்ளன; ஆனால் முழுத் தந்தித் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலின்படி, அல்-லிபி 2003ல் அல் குவேடாவிற்காக சிறப்புத் தகவல் அளிப்பவராக இருக்க விரும்பினார் என்றும் அபோட்டாபாத்தில் தளம் கொண்டிருப்பார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருடைய குடும்பம் பேஷாவரில் இருந்து அபோத்தாபாத்திற்கு ஜூலை 2003ல் தான் இப்பணியைச் செய்வதற்காகக் குடிபெயர்ந்தது.

ஒரு வட்டார நகரம், பாக்கிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தின் தொலைப் புறநகர், ஹெலிகாப்டரில் சிறிது தூரம் போனால் வந்துவிடும் என்று பலவிதமாக அபோத்தாபாத் விவரிக்கப்படுகிறது. பாக்கிஸ்தானின் மிகப் பெரிய இராணுவக் கருவியின் செயற்பாடுகளுக்கு அது ஒரு குவிப்புமுனையாகும்; இராணுவம்தான் நாட்டின் 65 ஆண்டு வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி நடத்தியுள்ளது.

நூறாயிரம் மக்கள் வசிக்கும் இந்நகரம் மூலோபாய வகையில் நிலைப்பாடு கொண்டுள்ளது; கைபர் பாக்டுன்க்வா மாநிலப் பகுதியில் உள்ளது; இங்குத்தான் பாக்கிஸ்தானின் பெரும்பாலான பஷ்டுன் பேசும் மக்கள் வாழ்கின்றனர்; இனவழியில் இவர்கள் ஆப்கானிஸ்தானத்தின் மிகப் பெரிய இனவழி மக்களுடன் உறவு கொண்டவர்கள். இவ்விடம் பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள, அதிக இராணுவ நிலைப்பாடு கொண்டுள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து ஒரு சில மைல்கள் தொலைவில்தான் உள்ளது.

பாக்கிஸ்தான் இராணுவத்தின் இரண்டாம் பிரிவின் உட்பகுதி ஒன்று அதன் தலைமையகத்தை அங்கு கொண்டுள்ளது; அதைபோல் கடந்த ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாத கெரில்லாக்களின் தலைமையகமும் உள்ளது; அவர்கள்தான் இந்தியா நிலைப்பாடு கொண்டிருக்கும் காஷ்மீர் பகுதியில் ஊடுருவ முற்பட்டு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துகின்றனர். ஒரு பாக்கிஸ்தானில் பிறந்த கட்டுரையாளர் இந்நகரத்தை கொலரோடாவில் உள்ள கொலரோடோ ஊற்றுக்கள் உடன் ஒப்பிடுகிறார்; அங்கு அமெரிக்க விமானப்படை உயர்கல்விக் கூடம் உள்ளது; அங்கும் இதேபோன்ற உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் சமய அடிப்படைவாதிகளும் இழிந்த முறையில் இணைந்து வசிக்கின்றனர்.

உண்மைத் தாக்குதலில் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படையினரின் பங்கு பற்றி முரண்பாடான தகவல்கள் வந்துள்ளன. திங்களன்று பாக்கிஸ்தானிய அதிகாரிகள் தங்கள் படைகள் உண்மையில் தாக்குதலுக்கு உதவின என்று கூறினர்; ஆனால் அது ஒபாமா நிர்வாகத்தால் உதறித்தள்ளப்பட்டது; பின் லேடன் இறந்தபின்தான் இஸ்லாமாபாத்க்கு தகவல் கொடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

பிரிட்டிஷ் கார்டியன் கூறியுள்ளபடி, கடற்படை முத்திரைகளைக் கொண்ட நான்கு ஹெலிகாப்டர்கள் வடமேற்கு பாக்கிஸ்தானில் உள்ள காசி விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டன; அங்கு அவை கிழக்கு நோக்கி அபோத்தாபாத்திற்கு பறப்பது உறுதியாகக் கவனிக்கப்பட்டிருக்கும்; வழக்கமாக அமெரிக்கச் சிறப்புப் படைகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மேற்கே ஆப்கானிஸ்தானிய எல்லைப் பகுதிக்கு செல்லவில்லை என்பது புலப்பட்டிருக்கும். ஹெலிகாப்டர்கள் பாக்கிஸ்தானிய இராணுவத்தின் முக்கிய மையங்கள் ஒன்றினுள் நேரடியாக நள்ளிரவில் பறந்தன; இதை ஒருவரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தாக்குதலின் நேரம் பற்றிய முக்கியமான பிரச்சினை அமெரிக்க உளவுத்துறைக் கருவிக்கும் பாக்கிஸ்தானிய உளவுத்துறைக்கும் இடையே உள்ள சிக்கல் வாய்ந்த, தெளிவற்ற உறவு என்பது தெளிவாகும். தாக்குதல் திட்டத்திற்கும் ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்திலேயே பெரிய நகரமான லாகூரில் பாக்கிஸ்தானிய பொலிசால் அவர் காரைக் கடக்கும்போது இருவரைக் கொன்ற அமெரிக்க CIA முகவர் ரேமண் டேவிஸின் செயல்களை ஒட்டி அவர் கைது செய்யப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்பது ஒரு முக்கியப் பிரச்சினை ஆகும். டேவிஸ் விவகாரம் இரு மாதங்களுக்குப் பெருகிய முறையில் அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே பகிரங்க எரிச்சலை ஏற்படுத்தியது.

மிகத் தீவிர தூதரகமுறை அழுத்தம் ஒபாமா நிர்வாகத்தால் செலுத்தப்பட்டபின், டேவிஸ் மார்ச் 16ல் பாக்கிஸ்தானிய பாதுகாவலில் இருந்து வெளியே விடப்பட்டு விரைவில் நாட்டை விட்டு விமானத்தில் அனுப்பப்பட்டார்; அபோத்தாபாத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஒபாமாவினால் வெள்ளை மாளிகையில் ஐந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன; அவற்றில் முதலாவது நடந்த இரு நாட்களுக்குப் பின்னர் டேவிஸ் வெளியேற்றப்பட்டார்.

தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் தொடர்பு உடைய உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் தாக்குதலுக்கு முந்தைய உடனடியான வாரங்களில் பாக்கிஸ்தானில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினர்; வெள்ளை மாளிகையில் செயற்பாட்டுத் திட்டக் கூட்டங்களை அடுத்து இவை நிகழ்ந்தன. CIA வின் இயக்குனர் லியோன் பானெட்டா, செயற்பாட்டிற்கு முழுப் பொதுக் கட்டுப்பாட்டைக் கொண்டவர் எனக் கருதப்படுபவர், ஏப்ரல் 11ம் தேதி பாக்கிஸ்தானிய ISI ன் தலைவர் அஹ்மத் ஷூஜாவைச் சந்தித்தார்.

இரு வாரங்களுக்குப் பின்னர் தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஆப்பாக் அரங்கில் அமெரிக்க தளபதியாக இருப்பவர், பாக்கிஸ்தானுக்கு வருகை புரிந்து பாக்கிஸ்தானின் தற்போதைய இராணுவத் தலைவரான ஜேனரல் அஷ்ரப் காயனியைச் சந்தித்தார். இக்கூட்டம் நடந்து இரு நாட்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகை, பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸுக்குப் பதிலாக பனேட்டா இருப்பார் என்பதை அறிவித்தது; தளபதி பெட்ரீயஸ் CIA தலைவராக பனேட்டாவிற்கு அடுத்து வருவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பின் லேடன் கைப்பற்றப்படுவதற்கு ஒரு வாரம் முன் ஜெனரல் காயானி அபத்தோபாத்திற்குச் சென்று, பாக்கிஸ்தான் இராணுவ உயர் கல்விக்கூடத்தில் புதிதாகப் பட்டம் பெறும் வகுப்பிற்கு துவக்க உரை கொடுத்தார். பட்டதாரிகளுக்கு அவர் தன்னுடைய படைகள் இஸ்லாமிய அடிப்படைவாதப் போராளிகளின்முதுகெலும்பை முறித்துவிட்டதாகக் கூறினார். “பாக்கிஸ்தான் இராணுவத்தில் உள்ள எங்களுக்கு நம் நாட்டிற்கு உள்ளிருந்தும், வெளியேயிருந்தும் வரும் அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு தெரியும் என்று உங்களுக்கு உறுதியளிப்பேன்.” இவ்வாறு அல் குவேடா தலைவரின் வீட்டில் இருந்து ஒரு சில நூறு மீட்டர் தொலைவில்தான் காயானி உரையாற்றினார்.

இன்னும் குறைந்தது இரு உயர்மட்ட அல் குவேடா நபர்களாவது முன்னால் அபோத்தாபாத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்பிரான்சில் பிறந்த போராளிகள் பலரைச் சந்தித்திருந்த அல்குவேடாவின் இடைத்தரகர் எனப்படும் தஹிர் ஷேஜட், மற்றும் சமீபத்தில் ஜனவரி 2011ல் கைது செய்யப்பட்ட இந்தோனிசிய அல் குவேடா இணைப்புப் பிரிவான Jemaah Islamiya வின் ஒரு தலைவருமான உமர் பாடெக்குமே ஆகும்.

மற்றொரு விந்தையான பிரச்சினை பின் லேடன் சடலத்திற்கு ஏற்பட்ட நிகழ்வு ஆகும். அமெரிக்க இராணுவம் 24 மணி நேரத்திற்குள் சடலத்தைக் கடலில் மூழ்கடித்துவிட்டதற்குக் காரணம் அதன் முஸ்லிம் சமயக் கோட்பாடுகளுக்கு அது கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையினால் என்று கூறப்படுவது நகைச்சுவைச் சோதனையில் தேறாது. உடல் பின் லேடனுடையதுதான் என்பது உறுதியாகத் தெரிகிறது; ஏனெனில் அவருடைய ஆதரவாளர்கள் செய்தி ஊடகத்திற்குக் கொடுத்துள்ள அறிக்கைகளில் அல் குவேடா தலைவரின் மரணத்தை உறுதிபடுத்தியுள்ளனர்; ஆனால் சடலத்தை அவசர அவசரமாக எங்கோ தூக்கி எறிந்தது ஒரு குண்டர் படையின் வேலையை ஒத்துள்ளது.

இவ்வகையில் சிதறுண்ட தகவல்களை ஒன்று சேர்த்துள்ளதின்மூலம், குறைந்தபட்சம் ஒரு முடிவுரையாவது வெளிப்படை: வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவை தத்தம் தனித்தனிக் காரணங்களுக்காகக் கூறும் உத்தியோகபூர்வத் தகவல், அமெரிக்க உளவுத்துறை வளாகம் பற்றி கடந்த ஆகஸ்ட்டில்தான் அறிந்தது என்பது பில் லேடன் அங்கு சில மாதங்களாக வசித்ததை உறுதிபடுத்துகிறது.

பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகளின் கைதியாக இல்லாவிட்டாலும் விருந்தாளியாக லேடன் இருந்தார் என்பது வெளிப்படை. பாக்கிஸ்தானில் பின் லேடன் வாழ்வுச் சூழலைப் பற்றி அமெரிக்க செய்தி ஊடகம் உண்மையில் ஆராய வேண்டும், பென்டகன் மற்றும் CIA கூறுபவற்றை வெறுமே கிளிப்பிள்ளை கூறுவதுபோல் எடுத்துரைக்கக் கூடாது என்றால், பாக்கிஸ்தானியர்கள் மட்டும் இன்றி, எந்த அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள், பின் லேடனின் கடந்த 9 ஆண்டுகள் நிலைப்பாடு பற்றி அறிந்திருந்தனர் என்ற வினா எழுப்பப்பட வேண்டும்.

ஒபாமாவின் ஞாயிறு உரையில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதி என்பது ஜனவரி 2009ல் வரவிருக்கும் CIA இயக்குனர் லியோன் பனேட்டாவிற்கு பின் லேடனைத் தேடிக் கண்டுபிடித்து அழிப்பது அமைப்பின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தான் கூறியதை நினைவுகூர்ந்ததுதான். இதன் வெளிப்படையான உட்குறிப்புகிட்டத்தட்ட அமெரிக்க செய்தி ஊடகம் முற்றிலும் புறக்கணித்துவிட்டதுபுஷ் நிர்வாகத்தின்கீழ் பின் லேடனை இலக்கு கொள்ளுவது என்பது முன்னுரிமையாக இல்லை என்பதாகும்.

இது இன்னும் அதிக வினாக்களை, பின் லேடன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களுக்கும் இடையே உள்ள நீண்ட காலத் தொடர்புகளைப் பற்றி எழுப்புகிறது; ஏனெனில் அவர் தன் துவக்கப் பயிற்சிகளை பயங்கரவாத வழிகள் பற்றி CIA ஒப்பந்தக்காரர் என்ற முறையில் 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் நடத்திய முஜாகிதீன் போரில்தான் பெற்றிருந்தார். 9/11 தாக்குதல்கள் பற்றிய எத்தீவிரப் பகுப்பாய்வும் அமெரிக்க உளவுத்துறைக் கருவிகளின் சில பிரிவுகள் அல் குவேடா முகவர்கள் சிலரைக் காத்தனர், சதித்திட்டம் உருவாகையில் மறுபுறம் திரும்பிக் கொண்டனர் என்ற முடிவைத் தவிர்க்க முடியாது.