World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

No to unions’ capitulation to Walker! For a general strike by all Wisconsin workers!

தொழிற்சங்கங்கள் வால்கரிடம் சரணாகதியடைவது வேண்டாம்! அனைத்து விஸ்கான்சன் தொழிலாளர்களது பொது வேலைநிறுத்தத்திற்காக!

12 March 2011
Socialist Equality Party
Back to screen version

வெள்ளியன்று ஆளுநர் ஸ்காட் வால்கரால் கைச்சாத்திடப்பட்டு சட்டமாகியிருக்கும் மசோதா தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு வரலாற்றுத் தாக்குதல் ஆகும். வேலைகள், ஊதியங்கள், கல்வி மற்றும் பிற சமூக சேவைகள் அழிக்கப்படுவதன் மீதான எந்த ஒழுங்கமைத்த எதிர்ப்பையும் குற்றமாக்குவதை இச்சட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.  பெருநிறுவனங்களின் ஒரு பகிரங்கமான சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு முக்கிய அடியை இது குறித்து நிற்கிறது.

பெருநிறுவன இயக்குநர் அறைகளிலும் ஆடம்பர ஓய்வறைகளிலும் புதிய சட்டமானது அமெரிக்க தொழிலாளர்களுக்கு எதிரான வர்க்கப் போரில் ஒரு திருப்புமுனையாகப் போற்றப்படுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தனது பிரதான தலையங்கத்தில் விஸ்கான்சன் குடியரசுக் கட்சியினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு வால்கரின் வெற்றி” ”மற்ற மாநிலங்களது ஆளுநர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்கிறது.

விஸ்கான்சன் தொழிலாளர்கள் கோபத்துடன் பிரதிபலிப்பை காட்டினர். ஆயிரக்கணக்கானோர் மேடிசனில் மாநிலத்தின் தலைமை அலுவலகத்தில் புதன் இரவு வந்து இறங்கினர். ஒரு பொது வேலைநிறுத்த மனோநிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயினும், தொழிற்சங்கங்களோ, 1981ல் PATCO விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் மீது ரீகன் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு AFL-CIO பதிலிறுப்பு செய்த விதத்தைப் போல, கோழைத்தனத்துடனும் சரணாகதி மனப்பான்மையுடனும் பதிலிறுத்துள்ளன. மாநிலத்தின் ஜனநாயகக் கட்சியுடன் கூடிவேலை செய்கிற விஸ்கான்சன் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டிருப்பதோடு வேறெந்த கூடுதல் நடவடிக்கையும் கூடாது என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.  

மாநில சட்டமன்றத்திற்கான குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக் கொண்டு ஜனநாயகக் கட்சியினரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்வதைத் தவிர தொழிலாளர்களுக்கு வேறுவழி இல்லை என்பதாக விஸ்கான்சன் AFL-CIO தலைவர் பில் நியூவென்ஃபெல்ட்டும் மற்ற தொழிற்சங்க நிர்வாகிகளும் உபதேசித்து வருகின்றனர். வால்கரும் அவரது பெருநிறுவன ஆதரவாளர்களும் இந்த பரிதாபகரமான சரணாகதியை வரவேற்கின்றனர். இது இவர்களுக்கு தொழிலாளர்களிடம் இருந்து அவர்களது மிக அடிப்படையான உரிமைகளைப் பறிப்பதில் (ஞாயிறன்று 39,000 அரசு ஊழியர்களின் ஒப்பந்தங்கள் காலாவதியாகும்போது இந்த நிகழ்முறை தொடங்க இருக்கிறது) சுதந்திரத்தை அளிக்கிறது. புதிய சட்டத்தின் படி அரசு ஊழியர்களுக்கு சம்பள வெட்டு ஏற்படும், இது தொழிலாளர்களுக்கு பாரிய சமூக நெருக்கடியைத் தோற்றுவிக்கும்.

இதில் எதனைப் பற்றியும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்குக் கவலையே இல்லை. மிக ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்க நிர்வாகிகளின் கவலை எல்லாம் தங்களது சொந்த ஸ்தாபன மற்றும் நிதிய நலன்களின் மீது மட்டும் தான் இருந்தது. அவர்கள் தங்களது சட்டபூர்வ அங்கீகாரத்தையும் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தில் இருந்து தொகை வசூல்செய்யும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்ள வால்கர் அனுமதித்தால் அவரது 330 மில்லியன் டாலர் ஊதிய மற்றும் நல உதவி சலுகைகள் வெட்டுத் திணிப்பில் இணைந்து வேலை செய்வதாக உறுதியளித்தனர்.

AFL-CIO தலைவரான ரிச்சார்ட் ட்ரும்கா வாஷிங்டன் டிசியில் தேசிய செய்தி நிறுவனத்தில் நிகழ்த்திய ஒரு உரையில் வால்கருக்கு கேலியாக நன்றி கூறினார். குடியரசுக் கட்சியின் ஆளுநரது அத்துமீறல் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவான ஒரு மனப்போக்கை உருவாக்கும் என்றும் மக்களில் இன்னும் நிறையப் பேரை தொழிற்சங்கங்களில் இணைய ஊக்குவிக்கும் என்றும் கூறினார். இந்த மசோதா தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டுவரக் கூடிய தாக்கத்தைக் குறித்த அலட்சியத்தோடு முட்டாள்தனமும் சேர்ந்ததாக இந்தப் பேச்சு இருந்தது. உண்மையில் வால்கர் வெற்றி பெற்றால் அது நாடெங்கிலும் உள்ள பெருநிறுவன ஆதரவு அரசியல்வாதிகளை இதேபோன்ற தாக்குதல்களைத் தொடுப்பதற்குத் தைரியம் கொடுக்கும். ஓஹியோ, இண்டியானா, மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களிலும் தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு வருகின்றன.

கடந்த மாதத்தில் மாநிலமெங்கும் பரவியிருக்கும் போர்க்குணமிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான கோரிக்கையை வாயடைப்பதும் தான் இந்த திருப்பியழைத்துக் கொள்ளும் பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கமாகும். ஜனநாயகக் கட்சியினர் தொழிலாளர்களை ஆதரிப்பதாகக் கூறும் பொய்யின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சியின் பின்னால் எதிர்ப்பை வழிமாற்றி விடுவது தான் இதன் மைய அரசியல் நோக்கமாய் உள்ளது. வால்கருக்கு முன் ஆளுநராக இருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம் டோயலின் காலத்தில் விஸ்கான்சன் தொழிலாளர்கள் எட்டு ஆண்டு காலம் ஊதிய உயர்வின்மையையும், தற்காலிக வேலைஇழப்புகளையும் மற்ற தாக்குதல்களையும் சந்தித்துள்ளனர்.

குடியரசுக் கட்சியினரைப் போலவே நாடெங்கிலும் உள்ள ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்களும் வரவுசெலவுப் பற்றாக்குறைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் ஊதியங்களிலான வெட்டுகள் மூலமாக தொழிலாள வர்க்கம் விலை செலுத்தும்படி செய்வதில் தீர்மானத்துடன் உள்ளனர். வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்களால் நேர்ந்த பொருளாதார உருக்குலைவு மற்றும் அதனைத் தொடர்ந்து பணக்காரர்களுக்கு மீட்புத்தொகைகளும் வரி வெட்டுகளும் வழங்கப்பட்டதன் விளைவாகத் தான் இந்தப் பற்றாக்குறைகள் ஏற்பட்டன. ஒபாமாவில் ஆரம்பித்து மாநில மற்றும் உள்ளூர் மட்டங்கள் வரை, ஜனநாயகக் கட்சியினர் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீது ஒரு நச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர், தொழிற்சங்கங்களுடன் உதவியுடன் தான் அவர்கள் இவ்வாறு செய்தனர். இவர்கள் சொல்வது போல ஒவ்வொரு குறிப்பிட்ட குடியரசுக் கட்சி அதிகாரத்தையும் ஜனநாயகக் கட்சியினரால் இடம்பெயர்ப்பது வெற்றிகரமாய் நடந்தால் கூட, ஊதியங்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் துறையிலான வெட்டுக்கள் அப்படியே தான் இருக்கும்.

விஸ்கான்சன் குறித்துக் கருத்துக் கூறிய ஒபாமாவின் ஊடகச் செயலாளர், “பொதுத்துறை ஊழியர்கள் உட்பட ஒவ்வொருவரும் தியாகத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி நம்புவதாய் தெரிவித்தார். பொதுத்துறை ஊழியர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக அவர்களையும் நிகழ்முறைக்குள் கொண்டுவருவதன் மூலம்”, அதாவது தொழிற்சங்கங்களுடன் கூடி வேலை செய்து அவற்றின் உறுப்பினர்களின் ஊதியங்களை வெட்டுவது மற்றும் சமூக வேலைத்திட்டங்களை வெட்டுவது ஆகியவற்றின் மூலம், நிதிச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நம்புவதாய் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

இந்தத் தாக்குதல்களுடன் தொழிலாளர்கள் வாழ முடியாது. தொழிற்சங்கங்களின் சரணாகதி நிராகரிக்கப்பட வேண்டும், அத்துடன் ஒரு பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாள வர்க்கத்தின் முழு வலிமையையும் ஒன்றுதிரட்ட தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும். பின்வரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இது அமைய வேண்டும்.

* அனைத்து பொருளாதாரச் சலுகைகளையும் சமூகச் செலவின வெட்டுக்களையும் மொத்தமாய் நிராகரிப்பது. வெட்டுக்களுக்கு பதிலாக, நாடெங்கிலும் மில்லியன்கணக்கான மக்கள் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலைக்குப் பதிலிறுப்பாய் சமூகச்  செலவீனங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

* தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் வேலைநிறுத்தம் செய்வதற்கும் கொண்டிருக்கக் கூடிய சட்டபூர்வ உரிமையின் மீதான எந்தத் தடையையும் மற்றும் எல்லாத் தடைகளையும் தெளிவாக நிராகரிக்க வேண்டும்.

* வரவு செலவுப் பற்றாக்குறையைக் குறைக்கவும் புதிய அத்தியாவசிய சமூகச் செலவினங்களுக்கு நிதியாதாரம் திரட்டவும் பெருநிறுவன வருவாய்கள் மீதும் செல்வந்தர்களின் வருவாய்கள் மீதுமான வரிகளில் ஒரு கணிசமான அதிகரிப்பு செய்யப்பட வேண்டும்.

* வால்கரும் அவரது பிற்போக்குத்தனமான நிர்வாகமும் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆளுநர் தொழிலாள வர்க்கத்தின் மீதான பெருநிறுவனத் தாக்குதலுக்கும் சர்வாதிகார வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குமான அரசியல் தாக்குதல் நடத்தும் ஆளாக தன்னை முன்நிறுத்திக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிற்சங்க அமைப்பல் இருந்து சுயாதீனப்பட்டு சாமானியத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தக் குழுக்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் தான் இத்தகையதொரு போராட்டத்திற்கான தயாரிப்பு தொடங்கியாக வேண்டும். இந்தக் குழுக்கள் அரசு மற்றும் தனியார்துறைத் தொழிலாளர்கள், இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள், ஊதியங்கள் மற்றும் சமூக சேவைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான அனைவரது ஆதரவையும் அணிதிரட்ட வேண்டும்.

சர்வதேச சோசலிச அமைப்புகள் (International Socialist Organizations) போன்ற போலி இடது குழுக்கள் இத்தகையதொரு போராட்டத்தைத் தடுக்க முனைகின்றன. வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கு அர்ப்பணித்துக் கொண்ட வலதுசாரி அமைப்புகளாய் உள்ள தொழிற்சங்கங்களை நெருக்குதலளிப்பதன் மூலம் போராடச் செய்யலாம் என்பதான கற்பனையை ஊக்குவித்து அவற்றின் அதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கின்றன. இந்த வகையில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விட அவை முனைகின்றன.

தொழிற்சங்கங்கள் உடனடியாக சரணாகதியடைந்ததும் எந்த தீவிரமான போராட்டத்தையும் தடுப்பதற்கான அவற்றின் முயற்சிகளும் அடிக்கோடிட்டுக் காட்டும் உண்மை என்னவென்றால் இந்த காலாவதியாகிவிட்ட அமைப்புகளால் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க முடியாது என்பது தான். வரும் நாட்களில் தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களுக்கும் அரசுக்கும் தங்களது பயனை எடுத்துக் காட்டும் பொருட்டு விஸ்கான்சிலும் மற்ற மாநிலங்களிலும் தொழிலாளர்கள் மீதான இன்னும் பெரிய தாக்குதல்களையும் ஆதரித்து மேலும் வலதுக்கு நகரும்.

விஸ்கான்சன் போராட்டம் என்பது ஒரு குடியரசுக் கட்சி ஆளுநருக்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக மக்கள்தொகையில் செல்வம் படைத்த வெறும் இரண்டு சதவீத மனிதர்களின் செல்வத்தை அதிகரிப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளுகின்ற ஒரு அமைப்புமுறைக்கு எதிரானதாகும். முதலாளித்துவ அமைப்புமுறை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகமெங்கிலுமே தோல்வியடைந்திருக்கிறது.

அரசியல் அதிகாரத்தை தனது கரங்களில் எடுப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே நிதிய உயரடுக்கின் பொருளாதார சர்வாதிகாரத்தை நொருக்கவும் பாதுகாப்பான வேலைகள், கண்ணியமான வாழ்க்கைத் தரங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சமூக உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு சோசலிசப் பாதைகளில் பொருளாதாரத்தை மறுஒழுங்கு செய்யவும் முடியும்.

இந்தப் போராட்டத்திற்கான தலைமைக்கு தயாரிப்பு செய்வதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (ISSE) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை இன்று சோசலிசத்திற்கான போராட்டம் என்கிற தலைப்பில் நாடெங்கிலும் கருத்தரங்குகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க விரும்பும் அனைத்து தொழிலாளர்களும் இளைஞர்களும் இதில் பங்கேற்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.