WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது
By Sarath Kumara
26 March 2011
இலங்கையில்
ஆளும்
ஐக்கிய
மக்கள்
சுதந்திர
முன்னணி,
மார்ச்
17
நடந்த
நாட்டின்
உள்ளூராட்சி
மன்றங்களுக்கான
தேர்தலில்
அதிகளவிலான
சபைகளை
வென்றுள்ளது.
எவ்வாறெனினும்,
ஜனாதிபதி
மஹிந்த
இராஜபக்ஷ
மற்றும்
சுதந்திர
முன்னணியில்
நம்பிக்கை
வைத்து
வாக்களிப்பதற்கு
மாறாக,
தேர்தல்
முடிவுகள்
ஐக்கிய
தேசியக்
கட்சி
(யூ.என்.பி.),
மக்கள்
விடுதலை
முன்னணி
(ஜே.வி.பி.)
ஆகிய
பிரதான
எதிர்க்
கட்சிகளின்
ஆதரவு
சரிந்திருப்பதை
பிரதிபலித்துள்ளது.
சுதந்திர முன்னணியானது தேர்தல்கள் நடைபெற்ற 234 உள்ளூராட்சி சபைகளில் 205 சபைகளை
வென்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்.எல்.எம்.சி), தேசிய காங்கிரஸ்
(என்.சி.) ஆகிய சுதந்திர முன்னணியின் இரு பங்காளிக் கட்சிகள், கிழக்கு மாகாணத்தில்
மேலும் 6 சபைகளில் பெரும்பான்மையை வென்றன. யூ.என்.பி. 9 சபைகளை மட்டுமே வென்றுள்ள
அதே வேளை, ஜே.வி.பி. தன்வசம் கொண்டிருந்த ஒரு சபையையும் இழந்துவிட்டது. தமிழ் தேசிய
கூட்டமைப்பு வடக்கில் அது போட்டியிட்ட 10 சபைகளில் 8 சபைகளையும், கிழக்கில் 4
சபைகளையும் வென்றுள்ளது.
உலக
கோப்பை கிரிக்கட் போட்டிகளை நடத்துவதில் தொந்தரவுகளை ஏற்படுத்தும் என்ற போலியான
காரணங்களின் அடிப்படையில், கொழும்பு மாநகர், காலி மற்றும் கண்டி உட்பட 19 பிரதான
மாநகரசபைகளில் தேர்தல்களை நடத்தாமல் இருக்க அரசாங்கம் எடுத்த முடிவால், தேர்தல்
முடிவுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளால் கடுமையாக
தாக்கப்பட்டுள்ள குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடம் இருந்து ஒரு பலமான
எதிர்தாக்குதல் வரும் என்பதையிட்டு அரசாங்கம் பீதிகொண்டிருந்தது. மேலும் 15
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் விளைபயனுள்ள விதத்தில் கொழும்பு மாநகர சபையை தூக்கியெறிந்துள்ளது.
கொழும்பில் குடிசை பகுதியில் வாழும் 66,000 குடும்பங்களை வெளியேற்றும் அதன்
திட்டத்துக்கு பரந்தளவில் வளர்ச்சியடைந்துவரும் எதிர்ப்பை அரசாங்கம்
எதிர்கொள்கின்றது. உள்ளூராட்சி சபை தேர்தல்கள் முடிவடைந்தவுடனேயே, அமைச்சரவை, ஒரு
நியமிக்கப்பட்ட ஆளுனரால் நிர்வகிக்கப்படும் கொழும்பு தலைநகர கூட்டுத்தாபனம் ஒன்றை
ஸ்தாபிக்க அங்கீகாரம் கொடுத்தது. இந்த புதிய சபையின் கீழ் பத்து உள்ளூராட்சி சபைகள்
இயங்கும்.
முல்லைத் தீவு மாவட்டத்தில் கடல்சார்ந்த மற்றும் புதுக்குடியிருப்பு சபைகளில்
தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்தப் பிரதேசத்தின் மீது, 2009 மே மாதம், பிரிவினைவாத
தமீழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைவதற்கு முன்னைய கடைசி மாதங்களில் இலங்கை
இராணுவத்தால் கடும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சுமார் 280,000 தமிழ் பொது
மக்கள் தடுப்பு முகாங்களுக்குள் அடைக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும்
மீளக் குடியேற்றப்படாமல் உள்ளனர். இந்த முகாங்களில் உள்ள வாக்காளர்களை வாக்குச்
சாவடிகளுக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை என தேர்தல்கள் செயலகம்
கூறிக்கொண்டது.
சட்ட
முரண்பாடுகள் காரணமாக மேலும் 67 சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
பிரதானமாக மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக்கொண்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள
உள்ளூராட்சி சபைகள் மற்றும் நகர சபைகளுக்கே தேர்தல் நடத்தப்பட்டது. ஆயினும், தன்னை
யாராலும் வெல்ல முடியாது என்று காட்டிக்கொள்ள ஏங்கும் ஜனாதிபதி இராஜபக்ஷ, தேர்தலை
நெருங்கிய இரு வாரங்களில் சுதந்திர முன்னணிக்காக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர் தனது சகல அமைச்சர்களுக்கும் மற்றும் சுதந்திர முன்னணி பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கும் அவ்வாறே செயற்படுமாறு அறிவுறுத்தினார்.
இராஜபக்ஷ, விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றியை மீண்டும் மீண்டும்
சுட்டிக்காட்டுவதன் மூலம், ஏனைய விவகாரங்களில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு
வழிமுறையாக, சிங்கள இனவாதத்தை கிளறினார். கிராமப்புற பகுதியில் சீற்றத்தை தணிக்கும்
முயற்சியாக, அவர் தற்போது இருக்கும் உர மானியத்தை தொடர்ந்தும் பேணுவதாக
வாக்குறுதியளித்தார். எதிர்க் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த உள்ளூராட்சி சபைகளை
ஓரங்கட்டுவதற்காக அரசாங்கம் தேசிய ரீதியில் தனது அதிகாரத்தை
பயன்படுத்திக்கொள்ளுவதற்கு மறைமுகமாக அச்சுறுத்தியது.
சுதந்திர முன்னணி, தனது பலத்தை தூக்கி நிறுத்துவதற்காக, அச்சு மற்றும் இலத்திரனியல்
ஊடகங்கள் உட்பட அரச வளங்களை வெட்கமின்றி பயன்படுத்திக்கொண்டது. ஒத்திசைந்து போகின்ற
தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க, தேர்தல்கள் நியாயமாக நடைபெற்றதாக
உறுதிப்படுத்திய போதிலும், சுதந்திர முன்னணியை விமர்சிக்கத் தள்ளப்பட்டார்.
“அரசாங்க
வளங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்தமை வருந்தத்தக்கது”
என அவர் அறிவித்தார்.
இந்த
தேர்தல் முடிவுகள், இலங்கையில் வர்க்க உறவுகள் பற்றிய ஒரு மிகவும் உருக்குலைந்த
வெளிப்பாடாகும். அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உட்பட விலையேற்றம் மற்றும்
ஓய்வூதியம், பொதுத்துறை தொழில்கள் மற்றும் சேவைகள் மீதான வெட்டுக்களுக்கு
வழிவகுத்துள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக பரந்தளவில் அதிருப்தி
காணப்படுகின்றது. பல கிராமப்புற பிரேதேசங்களில், விவசாயிகள் உரம் போன்ற விவசாயப்
பொருட்களுக்கான செலவு அதிகரிப்பு மற்றும் தமது உற்பத்திகளுக்கான விலை வீழ்ச்சி
போன்ற பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
வாக்காளர்கள் யூ.என்.பி. மற்றும் ஜே.வி.பி. யில் நம்பிக்கை வைக்காததால் இந்த
எதிர்ப்பு நாட்டின் அரசியல் ஸ்தாபனத்தில் வெளிப்பாட்டைக் காணவில்லை. இரு கட்சிகளும்
புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு அரசாங்கத்தின்
சந்தை சார்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் ஆதரித்தன. சர்வதேச நாணய நிதியம் கொடுத்த
கடனுக்கு பிரதியுபகாரமாக, அது கோரிய சிக்கன நடவடிக்கைகளை எந்தக் கட்சியும்
எதிர்க்கவில்லை.
பிரச்சாரத்தின் போது, யூ.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வாழ்க்கைத் தரம்
மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பவராக காட்டிக்கொள்ள முயற்சித்த போதிலும்,
யாரும் அந்த வாய்வீச்சுக்கு அடிபணியவில்லை. யூ.என்.பி., 2002 முதல் 2004 வரையான
அதன் கடைசி ஆட்சிக் காலத்தில், தொழிலாளர்களதும் கிராமப்புற வறியவர்களதும்
வாழ்க்கைத் தரத்தின் மீது ஈவிரக்கமற்று தாக்குதல் தொடுத்த ஒரு பெரும்
வர்த்தகர்களின் கட்சியாகவே நன்கு அறியப்பட்டுள்ளது. விலை மானியங்களை வெட்டிக்
குறைப்பது மற்றும் பொதுத் துறை செலவைக் குறைப்பது மற்றும் தனியார்மயமாக்குவதில்
விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இழிபுகழ்பெற்றதாகும்.
தேர்தல்
முடிவுகள் சம்பந்தமாக கசப்பான மீள் விமர்சனத்தின் மத்தியில் கடந்த வாரம்
விக்கிரமசிங்க மீண்டும் கட்சித் தலைமைத்துவத்தை தக்கவைத்துக்கொண்டார். யூ.என்.பி.
பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க, 2010 பாராளுமன்ற தேர்தலில் கட்சி பெற்ற 29 வீத
வாக்குகளை விட, இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 34 வீதம் வரை அதிக வாக்குகளை
பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, உறுப்பினர்களை சாந்தப்படுத்த முயற்சித்தார். சுதந்திர
முன்னணி உள்ளூராட்சி சபைகளில் பெற்றுள்ள 1,839 ஆசனங்களுடன் ஒப்பிடும் போது,
யூ.என்.பி. இன்னமும் 892 உள்ளூராட்சி சபை ஆசனங்களை கொண்டுள்ளது என அவர் கூறினார்.
ஆனால், தேர்தல் இன்னுமொரு அழிவுகரமான இழப்பு என்ற உண்மையை ஒழிப்பதற்கு ஒன்றுமில்லை.
ஜே.வி.பி. யைப் பொருத்தளவில் முடிவுகள் அழிவுகரமானது. அது 2002 முதல்
கட்டுப்பாட்டில் வைத்திருந்த திஸ்ஸமாஹாராம பிரதேச சபையை இழந்தது. இந்த உள்ளூராட்சி
சபையில் அது யூ.என்.பி. க்கு அடுத்து மூன்றாவதாக வந்துள்ளது. தேசிய ரீதியில் அதனது
வாக்குகள் வெறும் 181,200 ஆக குறைந்துள்ளதுடன் உள்ளூராட்சி சபைகளில் 57 ஆசனங்களை
மட்டுமே வென்றுள்ளது.
நேஷன்
பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சியின்
தோல்விக்கு அரசாங்கத்தின் குண்டர் நடவடிக்கையையும் அது அரச வளங்களை துஷ்பிரயோகம்
செய்ததையும் காரணம் காட்டினார். ஆயினும், மிகவும் அடிப்படையான நிகழ்வுகளின்
விளைவாகவே கட்சியின் ஆதரவு சரிந்தது.
யூ.என்.பி. மற்றும் சுதந்திர முன்னணி கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மீதான பரந்தளவிலான வெகுஜன அதிருப்தியின்
மத்தியிலேயே 1990களின் கடைப் பகுதியிலும் மற்றும் 2000ங்களின் முதற் பகுதியிலும்
ஜே.வி.பி. யின் தேர்தல் ஆதரவு அதிகரித்ததற்கு பிரதான காரணியாகும். இரு பிரதான
முதலாளித்துவ கட்சிகளுக்கு இதரான பகைமையின் காரணமாக பல வாக்காளர்கள் ஜே.வி.பி.க்கு
வாக்களித்தனர்.
ஆயினும், 2004ல், ஸ்ரீ.ல.சு.க. யின் ஆட்சியினுள் நுழைந்துகொண்ட ஜே.வி.பி. அமைச்சுப்
பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டது. அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சந்தை-சார்பு
வேலைத் திட்டங்களுக்கு ஜே.வி.பி. யின் அமைச்சர்கள் ஆதரவளித்த நிலையிலும் மற்றும்
அது வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலும் அதற்கிருந்த
ஆதரவு சரிந்தது.
ஜே.வி.பி. எப்போதும் சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு தீவின் தமிழ்
சிறுபான்மையினருக்கு எதிரான நீண்டகால உள்நாட்டு யுத்தத்தின் கடும் ஆதரவாளராக
இருந்தது. அது, 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இராஜபக்ஷ
கிழித்தெறிந்துவிட்டு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை புதுப்பிப்பார் என்ற
அடிப்படையிலேயே, 2005 ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை ஆதரித்தது. கடந்த ஆண்டு நடந்த
ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், இராஜபக்ஷவின் ஈவிரக்கமற்ற யுத்தத்தை
நடைமுறையில் நடத்தியமைக்குப் பொறுப்பான, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்
பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்தது.
அண்மைய
உள்ளூராட்சித் தேர்தலில், பொன்சேகாவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்ட ஜே.வி.பி., ஒரு
இடது முகத்தை காட்டுவதன் மூலம் சரிந்துகொண்டிருக்கும் ஆதரவை தூக்கி நிறுத்த
முயற்சித்தது. யூ.என்.பி. போலவே, ஜே.வி.பி. யும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஜனநாயக
உரிமைகள் சம்பந்தமாக பிரச்சாரம் செய்தது. ஆனால், அரசாங்கம் பற்றிய அதன்
வாய்ச்சவாடல் விமர்சனங்கள் அல்லது அதன் வாக்குறுதிகள் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதற்கே என ஒரு சில வாக்காளர்களே நம்பினர்.
வடக்கில், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது தமிழர்கள் மத்தியில் நிலவும் பரந்த பகைமையை
சுரண்டிக்கொண்டு அநேக சபைகளை தமிழ் கூட்டமைப்பு வெற்றிகொண்டது. ஆனால், தேசிய
ரீதியில் சராசரியாக அளிக்கப்பட்ட சுமார் 64 வீத வாக்களிப்புடன் ஒப்பிடும் போது,
சுமார் 52 வீதம் என்ற குறைந்த வாக்களிப்பானது தமிழ் கூட்டமைப்பு மீது நம்பிக்கை
குறைந்திருப்பதை பிரதிபலிக்கின்றது.
இலட்சக்
கணக்கான தமிழர்கள் யுத்தத்தின் போது இடம்பெயர்க்கப்பட்டதோடு, அடிப்படை வசதிகள்
இன்றி
“மீண்டும்
குடியேற்றப்பட்டுள்ளனர்.”
அநேகமானவர்கள் ஒரு ஆண்டுக்கும் முன்னர் சர்வதேச மனிதாபிமான முகவரமைப்புக்களால்
வழங்கப்பட்ட கூடாரங்களிலேயே இன்னமும் வாழ்கின்றனர்.
“புலி
சந்தேகநபர்கள்”
என வகைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் இரகசிய இடங்களில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது நிலவும் இராணுவ
ஆக்கிரமிப்பினால் சீற்றம் அதிகரித்து வருகின்றது.
முதலாளித்துவ தமிழ் கட்சிகளின் ஒரு கூட்டணியான தமிழ் கூட்டமைப்பு, அரசாங்கத்துடனான
அதன் பேச்சுவார்த்தைகளில் அதன் கைகளை பலப்படுத்துமாறு வாக்காளர்களிடம் ஆதரவு
கோரியது. ஆனால் அநேக வாக்களர்களுக்கு தமிழ் கூட்டமைப்பு அல்லது அரசாங்கத்துடனான
அதன் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக பெருமளவில் நம்பிக்கை இல்லை. நாட்டின் அரசியல்
ஸ்தாபனத்தில் தமிழ் முதலாளித்துவத்துக்கு ஒரு அங்கீகார நிலையை தக்கவைத்துக்கொள்வதே
தமிழ் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாக உள்ளது.
கொழும்பில் உள்ள ஊடகங்களின் தலைப்புக்கள், இராஜபக்ஷவின்
“ஒட்டுமொத்த
வெற்றி”
மற்றும் அவரது
“வரம்பற்ற
சக்தி”
பற்றி பாராட்டியதோடு அடிநிலையில் உள்ள வர்க்க பதட்ட நிலைமைகளை அலட்சியம் செய்தன.
சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, உணவுப் பொருட்களின் விலை
அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவை, அரசாங்கத்தின்
அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக பின்வரிசைக்கு சென்றுள்ளதையே இந்த
தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன எனக் கூறிக்கொண்டார்.
“மக்கள்
மேலும் அபிவிருத்திகளை விரும்புகிறார்கள் என்பதன் அறிகுறியே இந்த தேர்தல் முடிவுகள்”
என அவர் கூறினார்.
எவ்வாறெனினும், அரசாங்கத்தின்
“அபிவிருத்தியில்”
நன்மையடைபவர்கள் ஒரு குறுகிய தட்டினரான வர்த்தகர்களும் மத்தியதர
வர்க்கத்தினருமேயாவர். இவர்கள் யுத்தத்தின் முடிவின் பின்னர் ஊற்றெடுக்கும்
மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு உதவி மற்றும் முதலீட்டில் இலாமடைபவர்களாவர்.
ஜனத்தொகையில் பெரும்பான்மையினருக்கு, பணவீக்க அதிகரிப்பு மற்றும் வேலையின்மையினால்
வாழ்க்கை மிகவும் கடினமாகியுள்ளது.
உழைக்கும் மக்களின் தேவைகள் பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் இதனுடன் தவிர்க்க
முடியாமல் கட்டுண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை
அமுல்படுத்தியவாறு அரசாங்கம் முன் செல்கின்ற நிலையில், எதிர்ப்பும் சீற்றமும்
வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, தவிர்க்கமுடியாமல் வர்க்கப்
போராட்டத்தை உருவாக்கியே தீரும். |