சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Egyptian workers face US-backed counter-revolution

எகிப்தியத் தொழிலாளர்கள் அமெரிக்க ஆதரவுடனான எதிர்ப் புரட்சிக்கு முகம் கொடுக்கின்றனர்

Bill Van Auken
25 March 2011
Use this version to print | Send feedback

இந்த வாரத்தில் எகிப்தில் வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்கிற ஒரு தீர்ப்பு பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதானது அமெரிக்க ஆதரவுடனான சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கினைத் தொடர்ந்து வந்த இராணுவக் கட்டுப்பாட்டிலான ஆட்சியின் உண்மையான குணத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

தனியார் அல்லது அரசுக்கு சொந்தமான வணிகங்களுக்கு இடையூறு செய்கிற அல்லது எந்த வகையிலும் பொருளாதாரத்தைப் பாதிக்கிற வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் உள்ளிருப்புபோராட்டங்களை இந்தத் தீர்ப்பு குற்றமாக்கியுள்ளதாக AhramOnline தெரிவிக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுபவர்கள் அல்லது தூண்டி விடுபவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு கடுமையான தண்டனைகளை அளிக்கவிருக்கிறது. ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையோ அரை மில்லியன் பவுண்டுகள் வரை [84,000 அமெரிக்க டாலர்] அபராதமோ விதிக்கப்படலாம்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், முபாரக்கிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவும் 18 நாட்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அவரை பிப்ரவரி 11 அன்று அதிகாரத்தில் இருந்து துரத்தவும் மில்லியன்கணக்கான எகிப்தியர்கள் கையாண்ட அதே வழிமுறைகளைத் தான் இந்த ஆட்சி சட்டவிரோதமானதாக்கவும் குற்றமாக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

மேலும், தஹ்ரிர் சதுக்கத்தில் சென்ற மாதத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முந்தைய நான்கு வருட காலங்களின் போது தொடர்ந்து அதிகரித்து வந்திருந்த பெருந்திரள் வேலைநிறுத்தங்களை நடத்திய எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் தீரமிக்க போராட்டங்களை வன்மையாக ஒடுக்குவதற்கான சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்கி அமைப்பது தான் இந்தத் தீர்ப்பின் நோக்கம்.

முபாரக்கின் வீழ்ச்சியை அடுத்து, நாடெங்கிலுமான தொழிலாளர்கள் ஊதிய அதிகரிப்பு, வேலைவாய்ப்புக்கான உரிமை, முழு ஜனநாயக உரிமைகள், மற்றும் சர்வாதிகாரத்திற்கு சேவை செய்த மேலாளர்களையும் தொழிற்சங்க அதிகாரிகளையும் நீக்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்த முனைந்து வருகின்றனர்.

சமீப வாரங்களில் தொடர்வண்டித் தொழிலாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், எழுதுவினைஞர்கள், ஊடகத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் போலிசாரும் கூட வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உள்ளிருப்புபோராட்டங்களை நடத்தியிருக்கின்றனர், இவை எல்லாம் புதிய சட்டத்தின் படி கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படும். இந்தத் தீர்ப்பு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாகத் தான், சூயஸ் பெட்ரோலியம் நிறுவனமான பெட்ரோஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக் குறைப்பை எதிர்த்தும் முழு-நேர ஊழியர்களைப் போல் தாங்கள் நடத்தப்படக் கோரியும் வலியுறுத்தி ஒரு பாரிய உள்ளிருப்புபோராட்டத்தை நடத்தினர்.

நாட்டை 31 வருடங்களாக ஆண்டுவந்த ஒரு சர்வாதிகாரி வெற்றிகரமாய் தூக்கியெறியப்பட்டதை தங்களின் கோரிக்கைகளின் நியாயத்தை வலியுறுத்திய ஒரு வெற்றியாகவே தொழிலாள வர்க்கம் புரிந்து கொண்டிருக்கிறது.

புதிய அரசாங்கம் எங்களை ஆதரிக்கும், எங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கும் என்கிற நம்பிக்கைகள் உண்மையாகவே எங்களுக்கு இருந்தது என்று அரசுப் போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராக வேலை செய்யும் அலி பதா AhramOnline வசம் கூறினார். உங்கள் நியாயமான அனைத்து கோரிக்கைகளும் எமது மேஜை மேல் இருக்கின்றன, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கால அவகாசம் கொடுத்தால் அவை எல்லாம் நிறைவேற்றப்படும் என்று சொல்வார்கள் என்று தான் நாங்களெல்லாம் எதிர்பார்த்திருந்தோம்.....இது நியாயமில்லை, எங்கள் கோரிக்கைகளைத் தீர்த்தால் நாங்கள் ஏன் வேலைநிறுத்தத்திற்குப் போகப் போகிறோம். அந்த தொனி முபாரக்கின் பழைய நாட்களை எனக்கு நினைவுபடுத்துகிறது, அந்த ஆட்சி பயன்படுத்திய அச்சுறுத்தல்களும் ஒடுக்குமுறையும் நினைவில் வருகிறது.

முபாரக்கிற்கு அடுத்து வந்த, அவரிடம் இரண்டு தசாப்தங்கள் பாதுகாப்பு அமைச்சராக வேலைபார்த்து வந்த இராணுவ தளபதி முகமது ஹூசைன் தந்தாவி தலைமையிலான உயர் ஆயுதப்படைகள் குழுவில் (Supreme Armed Forces Council) ஒழுங்கமைந்திருந்தவர்கள் ஒரு நேரெதிரான முடிவினை வரைந்துள்ளனர். இராணுவத் தலைமையானது எகிப்தின் ஊழலடைந்த செல்வம் படைத்த உயரடுக்குடன் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது, அதன் ஒரு பாகம் தான் இது. சர்வாதிகாரியின் வீழ்ச்சியை, உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஒரு அசுரத்தனமான பாதுகாப்பு எந்திரத்தைச் சுற்றி ஆட்சியை திடப்படுத்துவதற்குரிய ஒரு சமிக்கையாக இது பார்க்கிறது, அதே சமயத்தில் இதற்கு ஒரு ஜனநாயக மறைப்பைக் கொடுப்பதற்கு முஸ்லீம் சகோதரத்துவம் முதல் முகமது எல்பரேடேய் மற்றும் அமர் மௌசா போன்ற மனிதர்கள் வரையான முதலாளித்துவ எதிர்க்கட்சிக் கூறுகளின் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்கிறது.

கடந்த சில வாரங்களில், இராணுவ தளபதி தந்தாவியின் தலைமையிலான ஆட்சியின் எதிர்ப்புரட்சி நோக்கங்களும் வழிமுறைகளும் முன்பை விடவும் பகிரங்கமானவையாகவும் பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அடக்குவதை நோக்கி செலுத்தப்பட்டவையாகவும் ஆகியிருக்கின்றன.

தஹ்ரிர் சதுக்கத்தில் ஜனவரி 28 முதல் இருந்து வருகிற ஆர்ப்பாட்டக்காரர்களை மார்ச் 9 அன்று, ஆயுதமேந்திய துருப்புகளும் சீருடையில்லாத அடியாட்களும் உலோக பைப்புகள், தடிகள் மற்றும் மின்சார வயர்களைக் கொண்டு  அடித்துத் தாக்கி வன்முறையின் மூலம் காலி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் ஒரு திடீர் கைதி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டும், அடித்து உதைக்கப்பட்டும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்படுத்தப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். 

ஒரு தேவாலயம் எரிக்கப்பட்டது தொடர்பாக கெய்ரோவில் அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலிக் கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த எகிப்தியக் கிறிஸ்தவர்களைக் கலைப்பதற்கும் இதேபோன்றதொரு வன்முறை பயன்படுத்தப்பட்டது. சமூகப் போராட்டங்களை திசைதிருப்புவதற்கான முயற்சியாக பிரிவினைவாதப் பிளவுகளை ஆட்சி திட்டமிட்டுத் தூண்டி விடுவதற்கான ஆதாரம் பெருகி வருகிறது.

இந்த வாரத்தில் ஆட்சியானது உயர் இராணுவப் படைகளின் குழு நியமனம் செய்த ஒரு ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அரசியல்சட்டத் திருத்தங்களை திணித்ததோடு அதற்கு அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் ஒப்புதலும் பெற்றது. இந்த புதிய இடைக்கால விதிகள் தேர்தல் இறுதியாய் எப்படி எப்போது ஏற்பாடு செய்யப்படும் என்பதை முடிவு செய்யாமல் விட்டு விடுவதோடு, 1981ல் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டது முதல் எகிப்தில் இருந்து வந்திருக்கக் கூடிய அவசரநிலை நிலைமையை உறுதிபட நிலைநிறுத்துவதையும் அத்துடன் முபாரக் ஆட்சிக்கு அரசியல்சட்ட அச்சாணியாக இருந்த ஜனாதிபதிக்கான முற்றுமுதல் அதிகாரங்களைத் தொடர்வதையும் செய்து முடித்திருக்கிறது. 

எகிப்தின் அபிவிருத்திகளோடு சேர்ந்து, யேமன், பஹ்ரைன் மற்றும் சிரியாவிலான இரத்தக் கறை படிந்த அடக்குமுறைகள், அத்துடன் இப்போது லிபியாவில் ஒரு ஏகாதிபத்தியப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது ஆகியவை தெளிவாய்க் காட்டுவது என்னவென்றால் அரபு வசந்தம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்பதைத் தான். அமைதியான எதிர்ப்பு மற்றும் வெறுப்பைச் சம்பாதித்த ஒரு சர்வாதிகாரியைத் தூக்கியெறிவது இவை மட்டுமே உண்மையான ஜனநாயகத்தையும் சமூகமாற்றத்தையும் கொண்டு வந்து விட முடியும் என்பதான பிரமைகளுக்கான, அல்லது தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அரவணைப்பின் கீழ் தான் எட்டப்பட முடியும் என்பதான நப்பாசைகளுக்கான எந்த அடிப்படையையும் இவை தரைமட்டமாக்கியுள்ளன.  

முபாரக்கை வெளியேற்றியது என்பது எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் சந்தேகத்திற்கிடமற்ற வெற்றியும் அதன் பாரிய சமூகசக்திக்கான எடுத்துக் காட்டும் ஆகும். முபாரக், இராணுவம், எகிப்தின் ஆளும் உயரடுக்கு, மற்றும் அமெரிக்காவில் இருக்கும் ஆட்சியின் பிரதான அரவணைப்பாளர்கள் இவர்கள் யாராலும் தாங்கள் முன்னெடுத்த ஒழுங்குமுறைப்பட்ட இடைமருவலை திணிக்கவியலாது போனது, அது சாத்தியமாகி இருந்தால் அதிகாரத்தில் இருந்த சர்வாதிகாரிக்கு தனக்கு அடுத்து வரும் ஆட்சியை நேரடியாக வடிவமைக்க முடிந்திருக்கும். எகிப்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பாரிய இயக்கத்தைக் கண்டபின் அவர்கள் அவமானகரமான தந்திரப் பின்வாங்கலை செய்வதற்குத் தள்ளப்பட்டார்கள். ஆயினும் இந்த பெருந்திரள் போராட்டங்கள் எழுவதற்குக் காரணமாய் அமைந்த பிரதான பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே தான் இருக்கின்றன. ஜனவரி 25 அன்று தொடங்கிய புரட்சி இன்னும் நிறைவுபெறாததாய் உள்ளது. முபாரக் வெளியேற்றம் என்பது அதன் முதல் படி மட்டுமே.

பெரும் வேலைவாய்ப்பற்ற நிலைமைகள் - குறிப்பாக இளம் எகிப்தியர்களுக்கு - மாற்றமின்றித் தொடர்கின்றன, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டிருக்கும் நிலையில் வீழ்ச்சி கண்டிருக்கக் கூடிய வாழ்க்கை நிலைமைகளின் கதியும் அது தான். வறுமையில் வாழுகின்ற பத்து மில்லியன்கணக்கான மக்களுக்கும் அந்நிய மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தைச் சூறையாடியிருக்கிற பணம்படைத்த உயரடுக்கிற்கும் இடையிலான இடைவெளி எப்போதும் போல் மிகப் பெரியதாகவே உள்ளது. அத்துடன் உலக முதலாளித்துவ நெருக்கடியால் கொண்டுவரப்பட்ட மோசமடைந்த சமூக நிலைமைகளும் அவ்வாறே தொடர்கின்றன.

அத்துடன் முபாரக்கின் ஆட்சிக்கு பெரும் முட்டுத்தூணாக அமைந்திருந்த இராணுவம் அதிகாரத்தில் உறுதியாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது, அதற்கு அமெரிக்காவின் ஆழமான ஆதரவும் இருக்கிறது. வேலைநிறுத்தங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்கிற தீர்ப்பு, “ஸ்திரநிலையை பராமரிக்கும் எகிப்து இராணுவத்தின் ஆக்கப்பூர்வமான பாத்திரத்தைப் போற்றவும் அமெரிக்காவின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு உதவியாய் பில்லியன்கணக்கான டாலர்கள் அமெரிக்க உதவியை இறைப்பதை தொடர இருப்பதாக உறுதியளிக்கவும் அமெரிக்க பாதுகாப்புச் செயலரான ராபர்ட் கேட்ஸ் கெய்ரோவில் வந்திறங்கிய அதே நாளில் அறிவிக்கப்பட்டது என்பது வெறுமனே ஒரு தற்செயல் அல்ல.

முபாரக் ஆட்சிக்கு எதிராக எகிப்திய மக்களின் பெருந்திரள் போராட்டங்களால் வெல்லப்பட்டிருக்கும் பலன்கள் அச்சுறுத்தப்படுகின்றன. எகிப்திய மற்றும் அந்நிய மூலதனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற இராணுவ ஆட்சியைத் தூக்கியெறிவதற்கும் அதனை ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைக் கொண்டு இடம்பெயர்த்துவதற்குமான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தின் மூலமாக மட்டுமே இந்த பலன்கள் பாதுகாக்கப்படவும் முன்னேறிச் செல்லவும் முடியும்.

எகிப்திய நிகழ்வுகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான அடிப்படைக் கோரிக்கைகளுக்கான போராட்டம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்காகப் போராடுவதன் மூலமும் மட்டுமே எட்டப்பட முடியும் என்று நிறுவிய, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை மீண்டுமொருமுறை நிரூபணம் செய்துள்ள்ளன.

எகிப்திய நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியை எடுத்துக் காட்டியிருக்கும் அதே சமயத்தில் ஒரு நனவான புரட்சிகர சோசலிசத் தலைமையின் இன்றியமையாத் தன்மையையும் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

அத்தகையதொரு தலைமையும் ஒரு தெளிவான புரட்சிகர முன்னோக்கும் இல்லாதிருப்பதானது எகிப்திய முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன், சூழ்நிலையை தனக்குச் சாதகமாய்த் திருப்பிக் கொள்வதற்கு அனுமதித்திருக்கிறது. அது தஹ்ரிர் சதுக்கத்தைச் சுற்றித் திரண்ட பரந்த இயக்கத்திற்குள்ளாக இருந்த வர்க்கப் பிளவுகளைச் சுரண்டி, முபாரக்கை அகற்றுவதற்கு அப்பால் புரட்சி செல்வதில் விருப்பம் கொண்டிராத கூடுதல் சிறப்புரிமை படைத்த அடுக்குகளின் மீது தன்னை நிறுத்திக் கொள்கிறது.

எகிப்தில் பரந்துவரும் போராட்டத்தின் வர்க்கத் தன்மை முன்னெப்போதையும் விடத் தெளிவாய் எழுந்து நிற்கிறது. எகிப்தியத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக மற்றும் சமூகக் கோரிக்கைகள் சோசலிசக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதன் மூலமாகத் தான் எட்டப்பட முடியும் என்பதையும், எகிப்தில் புரட்சி வெற்றி பெறுவதற்கு அரபு முதலாளித்துவம், இஸ்ரேலின் சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் ஆகியவற்றைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்தில் எகிப்தியத் தொழிலாளர்களை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுபடச் செய்யும் திறன்படைத்த ஒரு சர்வதேச மூலோபாயம் அவசியமாய் இருக்கிறது என்பதையும் விளக்குவதற்கு ஒரு புதிய தலைமை அவசியமாய் உள்ளது.

இந்த முன்னோக்கிற்காகப் போராடவும் அதன்மூலம் வரவிருக்கும் தீவிரமான வர்க்கப் போர்களுக்கு எகிப்தியத் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக  ஆயுதபாணியாக்கவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய கட்சியை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவினை, கட்டுவது இதற்கு அவசியமாய் உள்ளது.