World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

China and Russia criticise Libyan bombing campaign

லிபியாவின் மீது குண்டுத் தாக்குதலை சீனாவும் ரஷ்யாவும் விமர்சிக்கின்றன

By John Chan 
25 March 2011
Back to screen version

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் லிபியாவில் நடத்தும் குண்டுத் தாக்குதல்களுக்கு ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து பெருகியமுறையில் வலுவான விமர்சனங்களை தூண்டியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய மூலோபாய நலன்கள் இதன் அடித்தளத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பின்னர், இந்த எதிர்ப்பு விமர்சனங்கள் உண்மையான மனிதாபிமான அக்கறைகள் அல்லது நவ காலனித்துவ போருக்கு எதிரான கொள்கையில் உந்துதல் கொண்டிருக்கவில்லை. மாறாக மாஸ்கோவும் பெய்ஜிங்கும் தங்கள் இழப்பில் மீண்டும் வாஷிங்டன் தன் மூலோபாய நலன்களுக்கு இராணுவ வலிமையை முன்வைத்துள்ளது பற்றித்தான் கவலை கொண்டுள்ளன.

மிகத்தீவிர விமர்சனம் திங்களன்று ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புட்டினிடம் இருந்து வந்துள்ளது. .நா. தீர்மானத்தை அவர்தவறானது, பிழைகள் மலிந்தவைஎன்று கண்டித்து லிபியா மீதான தாக்குதல்களை மத்தியகால சிலுவைப் போர்களைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறதுஎன ஒப்பிட்டார். “சர்வதேச விவகாரங்களில் வலிமையைப் பயன்படுத்துவதற்கான முடிவுகள் எளிதாக எடுக்கப்படுவது பற்றி நான் கவலைப்படுகிறேன். இது அமெரிக்கக் கொள்கையில் தொடரும் போக்காகியுள்ளதுஎன்றார் அவர். கிளின்டன் ஆட்சிக் காலத்தில் சேர்பியா மீது நேட்டோ குண்டுவீச்சை நடத்தியதை புட்டின் நினைவுகூர்ந்ததுடன், புஷ் காலத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புக்களையும் நினைவுபடுத்தினார். “இப்பொழுது இது லிபியாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதுவும் அமைதியாகவுள்ள ஒரு மக்களைக் காப்பாற்றுவது என்னும் போலிக்காரணத்தையொட்டி.”

 

செவ்வாயன்று People’s Daily – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடுவெளியிட்டுள்ள முதல் பக்கக் கட்டுரை ஒன்றில், “மனிதாபிமான தலையீடு என்பது மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் இராணுவத் தலையீட்டிற்கு ஒரு போலிக் காரணம்தான் என்று வரலாற்று அனுபவம் காட்டியுள்ளது….அவர்கள் அறநெறியினால் உந்தப்படுவதாகக் கூறுகின்றனர், ஆனால் உண்மையில் குறுகிய அரசியல், பொருளாதார நலன்களினால் தான் உந்துதல் பெறுகின்றனர்என்று ஐ.நா. தீர்மானத்தைக் குறைகூறிய வகையில் அறிவித்துள்ளது.

தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கு லிபியாவில் இராணுவத் தலையீட்டை அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் மேற்கொண்டுள்ளன என்பது உறுதிதான்அந்த நாட்டில் மட்டும் இல்லாமல், அண்டைய எகிப்து மற்றும் துனிசியா போன்ற நாடுகளில் வந்துள்ள புரட்சிகர இயக்கங்களை எதிர்க்கும் நோக்கத்தையும் அது கொண்டுள்ளது. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் கூட அதையேதான் செய்ய முற்படுகின்றன.

சீனா, ரஷ்யா இரண்டுமே ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தடுப்பதிகாரத்தை கொண்டவை, தீர்மானத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். மாறாக ஜேர்மனி, இந்தியா, பிரேசிலுடன் சேர்ந்து கொண்டு வாக்களிப்பில் பங்கு பெறவில்லை. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றிற்கு தங்கள் குற்றஞ்சார்ந்த நோக்கத்தை செயற்படுத்துவதற்கு திறமையுடன் பச்சை விளக்கு காட்டிவிட்டது. கடந்த மாதம் சீனாவும் ரஷ்யாவும் லிபியா மீதான பொருளாதாரத் தடைகளை சுமத்தும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இதனால் போலித்தனமானமனிதாபிமான வாதத்தைஎற்றன. ஏனெனில் அத்தகைய நடவடிக்கை கடாபியின் ஆட்சி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த உதவும் என்ற வாதம் ஏற்கப்பட்டது.

சீனா மற்றும் ரஷ்யா ஐ.நா.வில் செய்யும் காய்நகர்த்தல்கள் தங்களுடைய சொந்த நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும் தவிர்க்க முடியாத மேற்கத்தைய தலையீட்டை தாமதப்படுத்தும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெளிப்படையாக கடாபியை அகற்றுவது பற்றிப் பேசத் தொடங்கியபின்தான், சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை லிபிய மக்கள் மீது குண்டுவீசுவது குறித்துவருத்தம்தெரிவித்து போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கும் அழைப்பு விடுத்தன.

உண்மையில் சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளைப் போல்தான் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் நடக்கும் புரட்சிகர எழுச்சிகளை அடக்குவதில் அக்கறை கொண்டுள்ளன. அங்கு நீடித்த அமைதியின்மை என்பது உலகின் எண்ணெய் அளிப்புக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்பது மட்டும் இல்லாமல், இதேபோன்ற எழுச்சிகளை சீனா, ரஷ்யா உட்படப் பல இடங்களில் ஊக்கம் கொடுக்கக்கூடும். ஆனால் அமெரிக்க தலைமையிலான இராணுவத் தலையீடு அவற்றின் பொருளாதார, மூலோபாய நலன்களை அச்சறுத்துகிறது.

குறிப்பாக சீனா தன்னுடைய பொருளாதார வளர்ச்சிக்காக மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளுக்காக உலகத்தை தேடும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் மோதலுக்கு வருகிறதுஇதில் ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கும் அடங்கும். லிபியாவில் அமெரிக்க, ஐரோப்பிய சக்திகள் நடத்தும் இராணுவ நடவடிக்கையின் கூறப்படாத நோக்கம் ஆபிரிக்காவில் சீனாவின் பெருகும் செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது ஆகும்.

மார்ச் 15 அன்று, லிபியத் தலைவர் முயம்மர் கடாபி ரஷ்ய, சீன, இந்திய தூதர்களை சந்தித்து லிபிய எண்ணெய் தொழில் துறையில் அந்நாடுகளுடைய நிறுவனங்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். அதே வாரத்தில் பெய்ஜிங்கானது சீன நிறுவனங்கள் விரைவில் லிபியாவிற்கு திரும்பும் என்றும், கடாபி ஆதரவு சக்திகள் அவற்றின் எதிர்ப்பாளர்களை நசுக்கும் இறுதி நிலையில் உள்ளனர் என்றும் அறிவித்தது. ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய குண்டுத் தாக்குதல்கள் லிபியாவில் ஏற்கனவே கணிசமான நலன்களைக் கொண்ட சீனா வருங்காலத்தில் அவற்றை விரிவாக்குவதற்கான வாய்ப்புக்களை சிதைத்துவிட்டன.

2009ல் சீனாவானது ஆபிரிக்காவின் உயர்மட்ட வணிகப் பங்காளி என்னும் அமெரிக்க நிலையை மாற்றியது. மேலும் தாதுப்பொருட்கள் இருப்புக்கள், உள்கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளிலும் கணிசமான முதலீட்டாளராயிற்று. லிபியாவே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 2009ல் இருந்து சீனா லிபியாவின் பெரிய வணிகப் பங்காளியாகி மிக அதிகமாக உள்கட்டுமானம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் முதலீடு செய்துள்ளது. சீன வணிக அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று கூறிய கருத்துப்படி குண்டுவீச்சுத் தாக்குதல் 18.8 பில்லியன் டொலர் மதிப்புடைய அந்நாட்டிலுள்ள 50 முக்கிய சீனத் திட்டங்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன.

சீன நிறுவனங்கள் இன்னும் லிபிய எண்ணெய் துறையில் அதிகமாக ஈடுபடவில்லை என்றாலும், சீனா நாள் ஒன்றிற்கு லிபியாவில் இருந்து கடந்த ஆண்டு 150,000 பீப்பாய் எண்ணெயை, அதாவது அந்நாட்டின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 11 சதவிகிதத்தை இறக்குமதி செய்தது. மேலும் எண்ணெய் இன்னும் பிற தாதுப் பொருட்கள் ஆதராங்களை அருகிலுள்ள சாட்டிலிருந்து எடுக்க சீனா முற்படுகிறது. அதன் எண்ணெய் நிறுவனங்கள் சூடானை சீனாவிற்கு முக்கிய எண்ணெய் வழங்கும் நாடாக மாற்றிவிட்டன.

லிபியாவில் சீனாவின் பிரசன்னத்தின் அளவு கடாபி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்கள் வெடித்தவுடன் அந்நாட்டிலிருந்து முன்னோடியில்லாத வகையில், 36,000 சீனத் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. முதல் தடவையாக சீனா மத்தியதரைக்கடல் பகுதிக்கு மக்கள் வெளியேற உதவுவதற்கு போர்க் கப்பல் ஒன்றை அனுப்பியது. இந்நடவடிக்கையில் மற்ற கப்பல்களும் நான்கு இராணுவப் போக்குவரத்து விமானங்களும் அடங்கியிருந்தன.

சீனா ஏற்கனவே ஒரு நீலக்-கடற்படையையும் துருப்புக்களையும் விமானத்தில் அனுப்பும் திறனையும் கட்டமைத்துக் கொண்டு வருகிறது. இது வெளிநாடுகளில் செயல்படும் சீன நிறுவனங்களைப் பாதுகாக்கவும் முக்கிய கடற்பாதைகளை பாதுகாக்கவும் உதவும். லிபிய வெளியேற்றத்தை தொடர்ந்து, தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தளபதி ஜி மிங்குல் சீன இராணுவத்தின் புதிய பணிகள் மக்களை அழைத்துவருவதற்கு போர்க் கப்பல்களை அனுப்புவது மட்டும் அல்ல, “மற்ற வழிவகைகளிலும் வெளிநாட்டிலுள்ள நம் நலன்களை காப்பதற்கு தேவையானவற்றை செய்வதும்தான்என்று அறிவித்தார்வேறுவிதமாகக் கூறினால், தேவையானால் வலிமை பயன்படுத்துப்படும் என்று.

இதேபோல் ரஷ்யாவும் கடாபி அகற்றப்பட்டால் ஒரு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். லிபியாவுடனான பெரிய ஆயுத ஒப்பந்தங்களை அது இழக்கக்கூடும் என்று ரஷ்யச் செய்தி நிறுவனமான Interfax கூறியுள்ளது. 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள இராணுவத் தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களை ரஷ்யாவுடன் லிபியா கொண்டுள்ளது. மற்றும் ஒரு 1.8 பில்லியன் டொலர் உடன்பாடு இராணுவ விமானம் மற்றும் விமான-எதிர்ப்பு ஏவுகணைகளுக்கானது பேச்சுவார்த்தைகளின் இறுதி நிலையில் உள்ளது. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் லிபிய எண்ணெய் ஆய்வில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைச் செலவழிக்கின்றன. ஒரு ரஷ்ய ரயில்வே நிறுவனம் 2.2 பில்லியன் யூரோ மதிப்புடையதும் இப்பொழுது வினாவிற்கு உரியதாகிவிட்டது.

லிபியாவிற்கு எதிரான குண்டுத் தாக்குதல்களைப் பற்றித் தன் விமர்சனத்தை கூற புட்டின் ஒரு பாலிஸ்டிக் (ballistic) ஏவுகணைத் தயாரிப்பு ஆலையை தேர்ந்தெடுத்தார். பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தி 2012ம் ஆண்டில் இருந்து இருமடங்கு ஆகும் என்றும், இது 2011-2020 காலத்தில் ஆயுதங்களுக்கான மாபெரும் 637 பில்லியன் டொலர் திட்டத்தின் ஒரு பகுதி என்று அறிவித்தார். சீனாவைப் போல் ரஷ்யாவும் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பையொட்டி தன் இராணுவத்தில் கூடுதல் முனைப்பைக் காட்டியுள்ளது.

மாஸ்கோவில் அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ரஷ்ய இராணுவத்துடன் உறவுகளை முன்னேற்றுவிப்பதற்காக வந்த நேரத்தில் புட்டின் தன்னுடைய அறிக்கையைக் கொடுத்தார். ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் சற்று மென்மையான போக்கைக் கொண்டு, புட்டினின் கருத்துக்களில் இருந்து பகிரங்கமாக ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வகையில், “அடிப்படையில் நாகரிகங்களின் மோதலுக்கு வழிவகை செய்யும் சொற்கள் பயன்படுத்தப்படுவது, சிலுவைப் போர்கள் போன்றவை, ஏற்கப்பட முடியாதவைஎன்றார். தந்திரோபாயங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் ஸ்தாபனம் முழுவதும் ரஷ்ய நலன்கள் அமெரிக்கத் தலைமையிலான மற்றொரு இராணுவ தலையீட்டினால் சமரசத்திற்கு உட்படுவது பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை லிபியாவிற்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய இராணுவ நடவடிக்கைகள் பற்றிக் காட்டியுள்ள எதிர்கொள்ளல், மீண்டும் ஆதாரங்கள், சந்தைகள் மற்றும் புவிசார் மூலோபாய நிலைப்பாட்டிற்கான போட்டிகள் இறுதியில் மோதல், போர் என பெரும் சக்திகளுக்கு இடையே ஏற்படக்கூடிய உண்மையைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.