World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Tsunami survivors endure freezing conditions and food shortages

சுனாமியில் தப்பிப்பிழைத்தவர்கள் குளிரையும், உணவு பற்றாக்குறையையும் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்

By Patrick O’Connor
17 March 2011
Back to screen version

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பின்னர், வீடில்லாதவர்களாகவோ அல்லது வெளியேற்றப்பட்டவர்களோ மதிப்பிடப்பட்ட 700,000 பேர்களில், சுமார் 430,000 பேர் அவசர முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் உணவு, மின்சாரம், வெப்பம் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் உள்ளனர். பாதிப்புக்குள்ளான நாட்டின் வட-கிழக்கு பகுதியில் பனிப்பொழிவு இருந்துகொண்டே உள்ளதோடு, இரவில் வெப்பநிலை -5 டிகிரி செல்சியஸுக்கு ( 23 ஃபாரன்ஹீட்) கீழ் சென்றுவிடுகிறது. இதனால் சுனாமியில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு, குறிப்பாக முதியவர்களின் உயிர்களுக்கு மிகுந்த ஆபத்தான நிலை காணப்படுகிறது

புதன்கிழமையன்று இரவில் பன்னிரெண்டு மாவட்டங்கள் (prefectures) முழுவதிலும் ஏற்பட்ட அதிகாரப்பூர்வமான சாவு எண்ணிக்கையை 4,314 ஆக ஜப்பானின் தேசிய போலீஸ் ஏஜென்சி உயர்த்திய அதே வேளையில், ஆறு மாவட்டங்களில் 8,606 பேர் கணக்கில் வராமலே இருந்தனர். நாடு முழுவதும் ஏறக்குறைய 2 மில்லியன் வீடுகள் இன்னமும் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அரசாங்கம் கூறிய அதேநேரத்தில், மில்லியனுக்கும் அதிகமானோர்  மின்தடைக்கு உள்ளாகினர். மேலும் 1.6 மில்லியன் மக்கள் தண்ணீர் இல்லாமல் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டது.

ஜப்பான் முழுவதும் வாழும் மக்கள், மேலும் பேரழிவை ஏற்படுத்தும் பின் அதிர்வுகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே உள்ளனர். நேற்று மதியம் டோக்கியோவை உலுக்கிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது.

சாவு எண்ணிக்கை இறுதியில் 10,000 அல்லது அதற்கு மேலாகவும் இருக்கக்கூடும். மீட்பு , தேடுதல் மற்றும் காப்பாற்றும் குழுவினர் தற்போதுதான் சுனாமி பாதித்த சில பகுதிகளுக்குள் நுழைந்துள்ளனர். இடிபாடுகள் மற்றும் பேரழிவு கொண்ட பெரிய பகுதிகள் ஊடாக தேடுதல் பணியை மேற்கொள்வது மிகவும் சிரமமாகவும், நேரத்தை விழுங்குவதாகவும் இருக்கும்.

 Miyagi மாவட்டத்திலுள்ள கடலோர நகரான Kesennuma ல் மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு 300 அவசர பணியாளர்கள் ஒரு மைல் நீளம் மற்றும் 450 கெஜம் அகலத்திற்கும் குறைவான ஒரு பகுதியில் நான்கு நாள் தேடுதல் பணியை மேற்கொண்டு, 81 சடலங்களை கைப்பற்றியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. "இங்கே சேதமடைந்த இடத்தின் சுமார் 20 சதவிகிதம் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது" என்று Kesennuma வின் அவசர நடவடிக்கைகளுக்கு தலைமை வகிக்கும் Ken-Ichi Sato என்பவர் புதன்கிழமையன்று தெரிவித்தார். "ஒரு பகுதிகளில் எங்களால் உள்ளே நுழைய முடியவில்லை என்பதால் அங்கு எங்களால் சென்றடைய முடியவில்லை, மற்றொரு பகுதிகளில் ஏராளமான இடிபாடுகளை அகற்ற வேண்டியதிருப்பதால் இன்னும் தேடுதல் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது." 

Iwate, Miyagi and Fukushima ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் போலீஸார் பலியானவர்களின் பெயர்களை, உறுதியான தடயவியல் அடையாளம் கண்டறியப்படுவதற்கு முன்னரே, அவர்களது உடைமைகளின் அடிப்படையில் அறிவித்து "விதிவிலக்கான நடவடிக்கையை" மேற்கொண்டதாக ஜப்பானின் Kyodo News தெரிவித்தது. சில சவக்கிடங்குகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்ட சுனாமியால் சேதமடைந்த பொது கட்டிடங்களில் தற்காலிக சவக்கிடங்குகள் அமைக்கப்பட்டன. Miyagi மாவட்டத்திலுள்ள பல மயானங்களில் உடல்களை எரியூட்டுவதற்கான எரிபொருள் விரைவிலேயே தீர்ந்துபோனதாக Kyodo News தெரிவித்தது. Ishinomaki நகரின் Miyagi மாவட்டத்தில் உடல்களை மொத்தமாக போட்டு புதைக்கலாமா என உள்ளூர் அரசாங்கம் பரிசீலித்ததாக  The Guardian பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இயற்கை பேரழிவு ஏற்பட்ட ஆறு தினங்கள் கழித்து, தப்பிப்பிழைத்தவர்கள் மிகக் கடுமையான சூழ்நிலைகளை சகித்துக்கொண்டிருந்தார்கள். வெளிச்சமோ அல்லது வெப்பமேற்றியோ இன்றி அவர்கள் வாழ்ந்ததோடு, இந்த துன்பத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக வெப்பநிலை வெகுவாக குறைந்து, அந்நாளில் குளிர் மற்றும் பனி மழையும் பொழிந்ததாகவும் கூறப்பட்டது. மக்கள் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள மெல்லிய பிளாஸ்டிக் சுருள் மற்றும் செய்தி காகிதத்தை உடலில் சுற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஒலிபரப்பு ஊடகமான NHK தெரிவித்தது.

 " "கடுமையான பனிப் பொழிவு இருந்துகொண்டு இருப்பதால், அது ஒட்டுமொத்த தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இடையூறாக உள்ளது" என்று சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை கிளைச் சங்கங்களை சேர்ந்த Pat Fuller என்பவர், Otsuchi யிலிருந்து, இங்கே மொத்தமுள்ள 19,000 மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது என்று வெளியான தி கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்தார். " தப்பிப்பிழைத்தவர்களுக்கு கஷ்டங்கள் இருமடங்காகி இருக்கின்றன. தரை மீது அட்டை விரிப்புகளில் படுத்துக்கிடக்கும் அவர்கள், நாள் முழுவதும் தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒரே இடத்தில் குழுவாக குவிந்துள்ளனர். வெப்ப நிலை -5 டிகிரி செல்சியஸிக்கு கீழ் இருப்பதோடு, இன்று -1 டிகிரி செல்சியஸாக இருந்தது." 

ஒவ்வொரு நாளும் கோல்ப் பந்து அளவுக்கும் சிறிது அதிகமான அளவு கொண்ட சோறே ஏராளமானோருக்கு வழங்கப்படுகிறது. தஞ்சமடைந்தவர்களுக்கு மாலையில்தான் சூடான சாப்பாடு கிடைக்கிறதே தவிர, காலை உணவோ அல்லது மதிய உணவோ கிடைப்பதில்லை என்று மற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. Miyagi மாவட்டத்திலிருக்கும் Ayukawahama நகரிலுள்ள ஒரு முகாமில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உணவுக்காக உணவுகள், ஊட்டச்சத்து பானங்கள் அடைக்கப்பட்ட பெட்டிகள் மற்றும் சோயா சோஸ் பாட்டில்களை மண்ணைக் கிளறி சகதி நிறைந்த வாளி தண்ணீரைக் கொண்டு அலசி அதனை அருந்தியதாக Asahi Shimbun தெரிவித்தது.

ஏனெனில் அங்கே தண்ணீர் ஓட்டமும் இல்லை, குளிப்பதற்கான வசதிகளும் இல்லை, மேலும் ஏராளமான மக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அணிந்திருந்த ஆடைகளையே அணிந்திருந்தார்கள். தொலை தொடர்புகளும் செயலிழந்துவிட்டன என்றாலும், முகாம்கள்களிலுள்ள சிலருக்கு குறைவான அளவில் தொலைபேசிச் சேவைகள் அளிக்கப்பட்டிருந்ததோடு, மற்றவர்கள் தங்களது மொபைல் போன்களை பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் மூலமான மின்சார கடத்திகளில் சார்ஜ் செய்து கொள்ள முடிந்தது.

குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக சீக்காளிகளும், முதியவர்களும் குறிப்பாக நோய் தாக்குதல் மற்றும் சுகாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதற்கும் மேலாக, தப்பி பிழைத்தவர்களில் ஏராளமானோர் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை நிலநடுக்கத்திலும், சுனாமியிலும் தொலைத்துவிட்டனர். குழந்தைகளும் ஆபத்தில்தான் உள்ளனர். இடம்பெயர்ந்தோர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்றும், அவர்களில் பலர் அநாதைகளாகலாம் என்றும் சிறுவர் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் (The Save the Children) எச்சரித்துள்ளது.

சுனாமி தாக்குதலுக்குள்ளான ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்ட சென்டாய் நகரில், தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய சென்டாய் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே நிற்கும் ஒரு வரிசை 700 மீட்டர் தொலைவுக்கு நீள்வதாகவும், உறைய வைக்கும் குளிரிலும், கடுமையான பனியிலும் அங்கே அந்த மக்கள் நின்றுகொண்டிருப்பதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்டாய்க்கு வெளியே Kashshimagai ல் உள்ள மளிகை கடை ஒன்றில் மற்றொரு வரிசையில் தனது கணவர் மற்றும் 16 வயது மகளுக்கு பக்கத்தில்  நின்றுகொண்டிருந்த 55 வயதுடைய  Yoshiko Tsuzuki என்ற குடும்ப பெண் ஒருவர் கூறினார்: "நேற்று நாங்கள் கொஞ்சம் சாதமும், ஒரு முட்டையும் சாப்பிட்டோம். நாங்கள் பசியில் உள்ளோம். தண்ணீர் மற்றும் சாப்பிட ஏதாவது வாங்க நான் விரும்புகிறேன். ஒவ்வொன்றும் எங்களுக்கு தேவையாக உள்ளது." 

ஜப்பானின் விவசாய, வன மற்றும் மீன் பிடித்துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, Iwate, Miyagi  மற்றும் Fukushima உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு சனிக்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை 1.24 மில்லியன் சாப்பாடுகளும், 700,000 பானங்கள் பாட்டில்களும் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சுனாமி பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட அவசர விநியோக பொருட்கள் நகராட்சி அரசாங்க கட்டிடடங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கிடங்குகளிலுமே குவிந்து கிடந்ததாகவும், அவசர முகாம்களுக்கு சென்றடையவில்லை என்றும் Yomiuri Shimbun தெரிவித்துள்ளது. இந்த இந்த பிரச்சனைகளுக்கு பெட்ரோல் பற்றாக்குறையும், சாலை  மற்றும் போக்குவரத்து இணைப்புகள் சேதமடைந்ததே காரணம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.  

புகுஷிமா அணு உலை நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பீதியால் மக்கள் அதிகமாக வாங்குவதால், மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பாலும் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை பரவிக்கொண்டிருக்கிறது.

"இடர்பாடு ஏற்பட்ட பிறகு முதல் சில தினங்கள் குழப்பங்களும், பேரழிவு காட்சிகளும் அரங்கேறிய கடலோரப் பகுதிக்கும், அங்கிருந்து சில மைல் தொலைவில் செல்வந்தர்கள் வசிக்கும் தீவுக்கும் இடையே தொடர்பற்று போனது போன்றும், இந்நிகழ்வுகளால் அவர்கள் சஞ்சலபடாதது போன்றும் காணப்பட்டது "கார்டியன் பத்திரிகை நிருபர் குறிப்பிட்டார். "பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் அப்பகுதிக்கு பத்திரிகையாளர்களால் பகலில் செல்ல முடிந்துள்ளது. பின்னர் அவர்கள் அன்று மாலையே ஹோட்டல்களுக்கும், உணவு விடுதிகளும் திரும்பியுள்ளனர். ஆனால் அதன் தாக்கம் தற்போது ஏற்பட்டுள்ள விநியோகத்  தட்டுப்பாடால் வெளி இடங்களுக்கும் பரவி வருகிறது.

அந்தச் செய்தி தொடர்கிறது:" பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசை நிற்பதால், வட-கிழக்கு முழுவதுமுள்ள சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் சில்லரை கடைகளில் முதலில் விற்பனை ஆனது திரவ எரிபொருள் கேன்கள்தான், அடுத்ததாக மின்வெட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததும், பேட்டரிகள் தீர்ந்து போயின. புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட முதல் வெடிப்பை தொடர்ந்து வாங்கும் பீதி ஏற்பட்டு, 'நபர் ஒருவருக்கு இரண்டு பேக்கறி பொருட்கள்தான்' என்ற கட்டுப்பாட்டை கடைகள் விதித்தன. பேரழிவுக்காக தேவைப்படும் என்று மக்கள் தயாரானதால் போர்வைகள், சுகாதார பட்டைகள்,நேப்பிஸ், கழிவறை காகிதங்கள், உடனடி நூடுல்ஸ், டார்ச் லைட்டுகள், மற்றும் எந்த வேறு ஒரு பொருளும் ஏராளமான கடைகளில் விற்று தீர்ந்தன."