World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US threatens Sri Lankan government over war crimes

யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தை அமெரிக்கா அச்சுறுத்துகிறது

By Sampath Perera
15 March 2011
Back to screen version

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதம் முடிவுக்கு வந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கடைசி கட்டங்களில் இருந்து தோன்றியுள்ள சர்வதேச யுத்தக் குற்ற குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெப்பிரவரி 28, கொழும்பில் ஏ.எஃப்.பி. ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில், லிபியாவைப் பற்றி குறிப்பாக பேசிய பிளேக், மும்மர் கடாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தீர்ப்புக்கு விடப்படும் என சுட்டிக்காட்டினார்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும், உள்நாட்டு யுத்தத்தின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றுவது சம்ந்தமாகவும் அமெரிக்காவின் பாசாங்குத்தனமான அக்கறையை வெளியிட்ட பிளேக் தெரிவித்ததாவது: இந்த விவகாரங்கள் தொடர்பாக இலங்கை சர்வதேச தரத்தை அடைவதற்கு முயற்சிக்காமால் இருக்குமானால், இந்த விடயங்கள் பற்றி பார்ப்பதற்கு சர்வதேச ஆணைக்குழு வகையிலான ஒன்றை நியமிப்பதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும்.

பிளேக்கின் அறிக்கைகள் முற்றிலும் பாசாங்கானவையாகும். ஒபாமா நிர்வாகம், பொதுமக்கள் மீதான அதனது சொந்த அட்டூழியங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய இடங்களிலும் அது தொடர்ச்சியாக இழைத்துவரும் ஏனைய யுத்தக் குற்றங்களுக்கு மட்டும் பொறுப்பாளி அல்ல. இலங்கையில் நடந்தவற்றுக்கும் அது உடந்தையாக இருந்துள்ளது.

வாஷிங்டன், இராணுவ மற்றும் புலனாய்வு ஒத்துழைப்புக்களை வழங்கி, புலிகளுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவு கொடுத்தது. ஐ.நா. மதிப்பீடுகளின் படி, 2009 ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட கொடூரமான குண்டுத் தாக்குதல்களில் 7,000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். சர்வதேச நெருக்கடி குழுவானது, 30,000 க்கும் 75,000 இடைப்பட்ட தொகை என இந்த எண்ணிக்கையை காட்டியுள்ளது. யுத்தத்தின் முடிவில், 280,000 இடம்பெயர்ந்த மக்கள் சட்ட விரோதமான முறையில் இராணுவத்தால் நடத்தப்படும் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இரகசிய தடுப்பு முகாங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும், யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் மட்டுமே மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளை எழுப்பின. அது தமிழர்கள் மீதான அக்கறையினால் அல்ல, மாறாக, கொழும்பில் பெய்ஜிங்கின் செல்வாக்கை கீழறுப்பதற்கேயாகும். சீனா, தனது பொருளாதர மற்றும் அரசியல் செல்வாக்கை பலப்படுத்துவதற்காக நிதி மற்றும் ஆயுதங்களை கொடுத்து இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்துக்கு பெரும் ஆதரவாளனாக உருவெடுத்தது.

தனது பேட்டியில் பிளேக் மேலும் தெரிவித்ததாவது: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, சனிக்கிழமை இரவு லிபியாவுக்கு எதிராக தீர்மானமொன்றை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றியது. கடாபியை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டு செல்வது அந்தத் தீர்மானங்களில் ஒன்றாகும். எனவே அவர்களால் அவரது மக்களுக்கு எதிராக செய்த யுத்தக் குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க முடியும். எனவே இது ஒரு பொது விடயமாகும்.

இலங்கையின் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த பிளேக், தான் இலங்கையை நேரடியாக ஒப்பிடுவதை அர்த்தப்படுத்தவில்லை எனக் கூறிக்கொண்டார். இழைக்கப்பட்டுள்ள குற்றங்களுக்கு பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதில் உலகம் பூராவும் ஒரு ஆர்வம் இருக்கின்றது, என அவர் மேலும் குறிப்பிட்டார்.

யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புடைமையை தரைவிரிப்பின் கீழ் கூட்டித்தள்ளிவிட முடியாது என மேலும் வலியுறுத்திய பிளேக் சுட்டிக்காட்டியதாவது: சேர்பியாவில் நடந்ததைப் போன்ற நீண்டகால வழக்குகளை மற்றும் அது போன்ற வழக்குகளை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால், அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக குற்றவாளிகள் தவிர்க்க முடியாமல் நீதியின் முன் கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிடுவது, பலாத்காரமாக விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடான் மிலோசெவிக்கையே ஆகும். உண்மையில், நாட்டை துண்டாடியதோடு இனவாத வன்முறைகளை விளைவுகளாக்கியமைக்கு மிலோசெவிக் மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளும் முன்னாள் யுகோஸ்லாவியாவில் இருந்து அவர்களது வாடிக்கை அரசாங்கங்களும் பொறுப்பாளிகளாகும்.

இராஜபக்ஷவும் அவரது ஆளும் குழுவும் மற்றும் இராணுவ உயர் மட்டத்தினரும் யுத்தக் குற்றங்களை இழைத்தது உண்மையே. ஆயினும், தொழிலாள வர்க்கத்தாலும் தமிழ் வெகுஜனங்களாலும் ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து எந்தவொரு நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. இராஜபக்ஷவும் அவருடன் நெருக்கமாக ஒத்துழைப்பவர்களும், அமெரிக்காவின் பாதையில் அடியெடுத்து வைக்காவிட்டால் ஒரு சர்வதேச விசாரணையின் முன் நிறுத்தப்படக்கூடும் என்ற ஒரு மெல்லிய மறைமுகமான அச்சுறுத்தலே பிளேக்கின் அறிக்கைகளாகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான குவிந்துவரும் அமெரிக்க அழுத்தங்களின் இன்னொரு அறிகுறியாக, மார்ச் 1 அன்று, யுத்தக் குற்ற அறிக்கைகள் பற்றி ஆராய்வதற்கு, ஒரு சுயாதீன சர்வதேச பொறுப்புடைமை இயங்குமுறையை ஒழுங்கமைக்க அழைப்பு விடுத்து, பென்சில்வேனியாவின் ஒரு சிரேஷ்ட ஜனநாயகக் கட்சி செனட்டரான ரொபர்ட் காசே முன்வைத்து ஒரு இணைப்பற்ற தீர்மானத்தை அமெரிக் செனட் சபை ஒருதலைப்பட்சமாக ஏற்றுக்கொண்டது.

2009 கடைப் பகுதியில், கொழும்பு தொடர்பாக ஒரு கொள்கை மாற்றத்தை சமிக்ஞை செய்த, வெளிநாட்டு உறவுகள் பற்றிய அமெரிக்க செனட் கமிட்டி அறிக்கை, சீனாவின் செல்வாக்கை எதிர்த்துப் போரிட மனித உரிமைகள் விவகாரம் பயன்படுத்தப்பட வேண்டும் என யோசனை தெரிவித்தது. அமெரிக்கா இலங்கையை இழக்க வழிவகுக்க முடியாது என பிரகடனம் செய்ததோடு மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கடற் பாதையில் தீவு அமைந்திருப்பதை மேற்கோள் காட்டிய அந்த குழு, அமெரிக்க மனித உரிமைகள் என்ற ஒரே நிகழ்ச்சித் திட்டத்தை மட்டும் கொண்டிருக்கக் கூடாது என பிரேரித்தது. அந்த அறிக்கை, இலங்கையுடனான சீனாவின் நெருக்கமான உறைவைப் பற்றி விசேடமாக குறிப்பிட்டிருந்தது.

இருந்த போதிலும், ஒபாமா நிர்வாகம் கொழும்பு அரசாங்கத்துக்கு எதிராக பயன்படுத்துவதற்கு, மனித உரிமை மீறல் முறைப்பாட்டை தொடர்ந்து பயன்படுத்தும் அதே வேளை, தேர்வு செய்யப்பட்ட ஒரு சிலர் அடங்கிய நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலம் இராஜபக்ஷ மேற்கொள்ளும் சொந்தமான விசாரணைகளையும் அங்கீகரித்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் சீனாவை நோக்கி இழுபடுவதையிட்டு அமெரிக்க கவலைகொண்டுள்ளதையே பிளேக்கின் தலையீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த நவம்பரில், இலங்கை அரசாங்கத்தின் பங்குப்பத்திரங்களை சீன வங்கிகள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதாக லண்டனை தளமாகக் கொண்ட டைம்ஸ் கண்டறிந்துள்ளது.

2010 நடுப்பகுதியளவில், இலங்கைக்கான சீனாவின் மொத்தஉதவி” 3 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது. ஆடம்பர சுற்றுலா ஹோட்டல்களைக் கட்டுவதற்கு ஷாங்ரி லா மற்றும் சீனா ஏரோ-டெக்னொலொஜி ஏற்றுமதி இறக்குமதி கூட்டுத்தாபனம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதை அடுத்து, இந்த ஆண்டு முற்பகுதியில் சுற்றுலா தொழிற்துறையில் சீனாவின் முதலீடு 1 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

சீனா பிரதான வர்த்தகப் பங்காளியாகி உள்ளது. 2009ல் 59 மில்லியனாக இருந்த சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி, 2010ல் 80 மில்லியனாக உயர்ந்தது. அதே ஆண்டு காலப்பகுதியில், இலங்கையுடனான இரு வழி வர்த்தகமானது, மொத்தம் 2 பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதோடு, இலங்கைக்கான சீனாவின் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

அமெரிக்காவையும் மற்றும் இந்தியாவையும் கூட கவலையடையச் செய்துள்ள இன்னுமொரு கவலை எதுவெனில், சீன கடற் போக்குவரத்துப் பாதையை பாதுகாக்க இந்து சமுத்திரத்தின் ஊடாக துறைமுக வசதிகளை கட்டியெழுப்பும் அதன் திட்டத்தின் பாகமாக, இலங்கையின் தெற்கில் ஹம்பந்தொட்டையில் ஒரு பெரும் துறைமுகமொன்றை சீனா கட்டிமுடித்துக் கொண்டிருப்பதேயாகும்.

மேலும், லிபியாவில் கடாபி அரசாங்கத்துடனான இலங்கை அரசாங்கத்தின் நெருக்கமான உறவுகளும் வாஷிங்டனை தொல்லைக்குள்ளாக்கும் ஒரு காரணியாகும். 2009 ஏப்பிரல் மற்றும் செப்டெம்பரிலுமாக இராஜபக்ஷ லிபியாவுக்கு இரு தடவை பயணித்து, அபிவிருத்தி திட்டங்களுக்காக 500 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான வாக்குறுதியையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், பாராளுமன்ற உறுப்பினரான இராஜபக்ஷவின் மகன் நாமல், திருபோலியில் கடாபியை சந்தித்து இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 5 அன்று, இராஜபக்ஷவின் ஊடக செயலாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கை, கடாபி ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக தெரிவித்தார். அந்த அறிக்கையின்படி, லிபியாவில் விரைவில் அமைதியை நிலைப்படுத்துமாறும் லிபிய மக்களின் வாழ்வைப் பாதுகாக்குமாறும் இராஜபக்ஷ லிபிய சர்வாதிகாரிக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இது தனது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பை நசுக்கும் கடாபியின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதை பகட்டாக பிரகடனம் செய்வதாகும்.

இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தக் குற்ற விசாரணை பற்றிய அறிகுறியைக் கூட தவிர்ப்பதற்கு ஏங்குகிறது. பெப்பிரவரி 23, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் வெளி விவகார செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் மற்றும், இலங்கையில் யுத்தக் குற்றச் குற்றச்சாட்டுக்கள் பற்றி அவருக்கு ஆலோசனை கூறும் ஐ.நா. குழுவையும் இரகசியமாக சந்தித்தது.  இந்த பிரதிநிதிகள் குழு பாதகமான ஒரு அறிக்கையை வைக்க வேண்டாம் என ஐ.நா. வை வேண்டிக்கொண்டது. கடந்த ஆண்டு, ஐ.நா. குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரகடனம் செய்த அரசாங்கம் அதனுடன் ஒத்துழைக்க மறுத்தது.

கொழும்பு அரசாங்கம் பிளேக்கின் அச்சுறுத்தல் பற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. அது அமெரிக்க செனட் தீர்மானத்தை பற்றி வருத்தம் தெரிவித்தது, ஆனால் கண்டனம் செய்யவில்லை. வாஷிங்டனை சாந்தப்படுத்தும் மேலுமொரு முயற்சியாக, அமெரிக்க தூதுவர் பற்றீசியா புடெனிஸ்ஸை மார்ச் 8 அன்று இராஜபக்ஷ சந்தித்தார். இது இராஜபக்ஷ ஒபாமா நிர்வாகத்துடன் ஒத்துப்போவதாக சமிக்ஞை செய்தார். அமெரிக்க அரசாங்கத்தின் உண்மையான அக்கறை அதன் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களே அன்றி, யுத்தக் குற்றங்கள் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.