World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Major powers discuss Libyan intervention

லிபியாவில் தலையீடு குறித்து முக்கிய சக்திகள் விவாதிக்கின்றன

By Bill Van Auken
15 March 2011
Back to screen version

முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிநிதிகள் திங்களன்று லிபியாவில் இராணுவத் தலையீட்டிற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க பல கூட்டங்களை முன்னெடுத்தனர்.

எட்டு நாடுகள் குழுவின் வெளியுறவு மந்திரிகள்அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யாஏற்பாட்டாளராக இருக்கும் பிரான்ஸின் ஜனாதிபதி சார்க்கோசி இரு நாள் மாநாட்டை தொடங்கினார். நேரடி இராணுவ நடவடிக்கைக்கு லிபிய எழுச்சியை சுரண்டுவதற்கு மிக அதிகமாக குரல் கொடுக்கும் ஆதரவாளர்களில் ஒருவராக ஜனாதிபதி சார்க்கோசி உள்ளார்.

.நா.பாதுகாப்பு சபைக் கூட்டமும் திங்களன்று நடத்தப்பட்டது. நேட்டோ செவ்வாயன்று வட ஆபிரிக்க நாட்டின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதிக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது.

சார்க்கோசியும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி காமரோனும் பகிரங்கமாக ஒரு பறக்கக்கூடாத பகுதியை சுமத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது ஒரு போர்ச் செயலாகி, லிபியாவின் விமான நிலையங்கள், வான் பாதுகாப்பு முறைகள் மற்ற இலக்குகள் மீது பெரும் குண்டுத் தாக்குதலை தொடங்கிவிடும்.

பிரெஞ்சு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மற்ற G8 உறுப்பு நாடுகளை அத்தகைய இராணுவ நடவடிக்கைலிபிய மக்கள் அனுபவிக்கும் கொடூர வன்முறையை எதிர்ப்பதற்கு தேவையானதுஎன்று வலியுறுத்த முயற்சிக்கும் என்றார். இத்தகையமனிதாபிமானஉணர்வுகள், சமீபத்தில் பெறப்பட்டவைஅத்தகைய நடவடிக்கள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க குண்டு வீச்சுக்கள் மூலம் பல ஆண்டுகளாக நடத்தப்படும்கொடூர வன்முறைக்குஎதிராக லெபனான், காசா, ஈராக் அல்லது ஆபிரிக்க மக்களை காப்பாற்றுவதற்கு தேவையானவை என்று காணப்படவில்லை.

இடைமருவுகால அரசாங்கம் என அழைக்கப்படுவதை முறையாக அங்கீகரிக்கும் முதல் அரசாங்கமாக சார்க்கோசியுடையது இருந்தது. இதில் சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்த முன்னாள் செயற்பாட்டாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இக்கூறுகள் வெளிப்படையாக வெளிநாட்டு இராணுவத் தலையீட்டைக் கோரியுள்ளன. இது அமெரிக்க-நேட்டோ தலையீட்டிற்கு ஐ.நா. இசைவு இல்லாமலேயே எளிதில் செயல்படுவதற்கு உதவும்.

G8 மாநாட்டில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனும் கடாபியின் முன்னாள் நீதித்துறை மந்திரி முஸ்தாபா அப்டெல் ஜலீல் தலைமையிலுள்ள தேசிய மாற்றுக்கால சபையின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த உள்ளார். இக்கூட்டம் திங்கள் இரவு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடாபியின்  தேசியப் பொருளாதார வளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவர் மஹ்முத் ஜிப்ரிலும் அடங்குவார். விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு இரகசிய தகவல் ஆவணத்தின்படி ஜிப்ரில் திரிபோலியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தால்அமெரிக்க முன்னோக்கை உணரும்உரையாடல் திறன் உடையவர் என்று விவரிக்கப்பட்டார்.

தேசிய இடைமருவுகால சபையிலுள்ளவர்கள் தாங்கள் வாஷிங்டன் மற்றும் லண்டன், பாரிஸிலிருந்து ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஒரு பறக்கக்கூடாத பகுதி தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பது என்ற உறுதியைப் பெற்றுள்ளனர் என அல்ஜசிரா தெரிவிக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் கார்டியன் கருத்துப்படி, லிபிய பிரதிநிதிக்குழு கிளின்டனை பறக்கக்கூடாத பகுதிக்கு அமெரிக்க ஆதரவை நாடுவது மட்டும் இல்லாமல், கடாபி சார்புடைய தரைப்படைகள் அழிக்கப்படுதல், லிபிய சர்வாதிகாரியை படுகொலை செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதந்திரோபாயவான் தாக்குதல்களையும் நாடியுள்ளது.

திங்களன்று வாஷிங்டனில் பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா முந்தைய கருத்துக்களை எதிரொலித்து, கடாபிஅவருடைய நெறியை இழந்துவிட்டார், அவர் விலக வேண்டும்என்று அறிவித்தார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கடாபி ஆட்சியைச் சுற்றிதூக்குக்கயிற்றை இறுக்குவதற்கானவழிவகைகளைத் தொடரும் என்றாலும், பறக்கக் கூடாத பகுதி என்னும் கருத்து பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

.நா.பாதுகாப்பு சபை லிபியா மீதான முதல் நாள் விவாதத்தை அதன் 15 உறுப்பு நாடுகளும் கடந்த மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடைகள் என்னும் நடவடிக்கைகளை தவிர வேறு எப்போக்கு பற்றியும் ஒருமித்த உணர்வைக் கொள்ளாமலேயே திங்கள் கூட்டத்தை முடித்தது.

பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் பறக்கக் கூடாத பகுதி சுமத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுத்தனர். மூடிய கதவுகளுக்குப் பின் நடக்கவுள்ள கூட்டங்களுக்குச் செல்வதற்கு முன், பிரான்சில் ஐ.நா.விற்கான தூதர் கெராட் அரௌட் 22 உறுப்பினர்கள் கொண்ட அரபு லீக் இயற்றிய தீர்மானத்தைப் புகழ்ந்தார்அல்ஜீரியா, சிரியா எதிர்ப்பை மீறி, அது ஐ.நா. பாதுகாப்பு சபை பறக்கக் கூடாத பகுதிக்கு இசைவு கொடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையை வலியுறுத்தியிருந்தது. “இப்பொழுது இந்த அரபு லீக் அறிக்கை இருக்கையில், குழுவின் மற்றய உறுப்பினர்களையும் அது மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது என நாம் நம்புகிறோம்என்று அரௌட் கூறினார்.

இராணுவப் படை ஒரு பறக்கக்கூடாத பகுதியை நிறுவிச் செயல்படுத்துவதற்கும், “இராணுவத் தலையீட்டிற்கும்இடையே அபத்தமான வேறுபாட்டைக் காட்டிய அரபு லீக் அறிக்கையின் நோக்கம் ஒரு முன்னாள் இத்தாலியக் காலனித்துவப் பகுதியாக இருந்த லிபியாவில் தலையிடுவதற்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு அத்தி இலை மறைப்பை அளிப்பதாகும்.

சௌதி அரேபியா, பஹ்ரைன், யேமன், குவைத், ஈராக் போன்ற ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான நாடுகளால் ஏற்கப்பட்ட இத்தீர்மானம் ஒபாமாவாலும் ஐரோப்பிய தலைவர்களாலும் பாராட்டப்பட்டு மிகப் பரந்த செய்தி ஊடகத் தகவல்களையும் கொண்டது. இது ஏகாதிபத்திய தலையீட்டிற்குபிராந்திய ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்கிறது எனக் காட்டப்படுகிறது.

ஆனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ஒரு எதிர்க் கருத்துடைய தீர்மானம், திங்களன்று ஆபிரிக்க ஒன்றியம்எத்தகைய வெளிநாட்டுதலையீடும் லிபியாவில் கூடாது, “லிபியாவில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்த, முழுமையான உரையாடல் நடத்த மற்றும் ஆபிரிக்க ஒன்றியப் பங்காளிகளையும் இணைக்க வேண்டும்குறிப்பாக லிபிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குஎன்று கூறியதைத்தான்.

ஆபிரிக்க ஒன்றியத் தீர்மானம் ஆபிரிக்காவில் குறிப்பான பிராந்தியக் கவலைகளை மேற்கோளிடுகிறது. இதில் லிபியா ஒரு பகுதி ஆகும். அதில் ஆபிரிக்க குடியேறும் தொழிலாளர்கள் வன்முறையிலிருந்து தப்பி ஓடி இடர்களை எதிர்கொள்ளுவது, மற்றும்லிபிய அரசாங்கம் கூலிப்படைகளை பயன்படுத்துவதாகக் கூறப்படுவதுஆகியவையும் அடங்கும்.

அதேபோல் லிபியாவின்நிலப்பகுதி இறையாண்மைக்குதன் ஆதரவையும் அது தெரிவித்து, நாட்டின் எப்பகுதியும் பிரிவினைக்கு உட்படுத்தும் முயற்சியை தான் நிறுத்தும் என்றும் அறிவித்தது. 1951 வரை லிபியா மூன்று தன்னாட்சி மாநிலங்களாக, டிரிபொலிடானியா, பெஜன் மற்றும் சைரேனிகா என்று இயங்கிவந்தது. ஆபிரிக்க ஆளும் உயரடுக்குக்குள் நெருக்கடியும் ஏகாதிபத்திய தலையீடுகளும் இவ்வகையில் நாட்டைச் சிதைவிற்குட்படுத்துவது விரைவுபடுத்தப்படலாம் என்றும், அது கண்டத்தின் மற்ற இடங்கள் பிரிவினைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னோடி ஆகலாம் என்ற கவலைகளையும் வெளிப்படுத்துகிறது.

திங்கள் பாதுகாப்புக் கூட்டத்திற்குப் பின்னர், ரஷ்ய தூதர் விடலி சுர்க்கின் திட்டமிடப்படும் பறக்கக்கூடாத பகுதி பற்றி மாஸ்கோ வெளிப்படையான பார்வையைக்கொண்டுள்ளது என்றாலும், சிலஅடிப்படை வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும்”, குறிப்பாக எப்படி, யாரால் அத்தகைய இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி என்றார்.

இதேபோல் ஜேர்மனியத் தூதர் பீட்டர் விட்டிங் தன் அரசாங்கம் பெப்ருவரி 26 அன்று சபை ஏற்ற பொருளாதாரத் தடைகள் இறுக்கப்பட விரும்புகிறது என்றும், பறக்கக் கூடாத பகுதி பற்றியபல வினாக்களுக்கு இன்னும் விடையில்லைஎன்றும் கூறினார். இதற்கு முன்தினம், ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர்வெல்லே இராணுவ நடவடிக்கை பற்றித் தயக்கத்தை வெளிப்படுத்தி, “வட ஆபிரிக்காவில் ஒரு உள்நாட்டுப் போரில் தொடர்பு கொள்ள நாங்கள் விரும்பவில்லைஎன்றார்.

விடையளிக்கப்படாத வினாக்களில் ஒன்று, ஒபாமா நிர்வாகமும் பென்டகனும் பறக்கக் கூடாத பகுதியை நிறுவிச் செயல்படுத்துவதில் என்ன துல்லியமான பங்கை எடுக்கத் தயார் என்பது வெளிப்படை. ஏற்கனவே வாஷிங்டன் ஐந்து போர்க் கப்பல்களை லிபிய கடலோரப்பகுதிக்குமனிதாபிமானஇலக்கு என்று கூறப்படுவதற்காக அனுப்பி வைத்துள்ளது. ஆனால் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்சும் மற்ற அதிகாரிகளும் ஒரு பறக்கக் கூடாத பகுதியைத் தோற்றுவித்தல் என்பதில் பரந்த அளவு குண்டுவீச்சுத் தாக்குதல் மற்றும் பெரிய அளவில் அமெரிக்கப் படைகளின் ஈடுபாடு இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு சபையின் ஒரு தூதரக அதிகாரி அமெரிக்கத் தூதர் சுசன் ரைஸ் வாஷிங்டனின் பறக்கக்கூடாத பகுதித் திட்டம் பற்றி விவாதிக்கதிறந்த மனதுடன்இருந்தாலும், தானே அது லிபியாவில் வன்முறையை நிறுத்தப் புறப்படாது எனக்கூறியதாக மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்துள்ளது. மேலும்அப்பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகள் ஒரு பறக்கக்கூடாத பகுதித் திட்டத்தில் பயனுடைய வகையில் பங்கு கொண்டால்தான் அமெரிக்காவும் பங்கு பெறும்என்று அவர் கூறினார்.

இராஜதந்திர ஆதாரங்களும் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்திற்குத் தான் ஆதரவு கொடுப்பதாக ஜேர்மனி குறிப்புக் காட்டியுள்ளது எனக்கூறியுள்ளன. முன்னதாக திங்களன்று, பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் கடாபி ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதங்கள் அளிப்பது பரிசீலிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் பிரதம மந்திரி டேவிட் காமரோன் இக்கருத்தை நிராகரித்து, லிபியாவிற்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள ஆயுதம் வழங்கல் தடையை அது மீறும் என்று சுட்டிக்காட்டி, சக்திகளின் சமநிலையை விரைவில் மாற்றுவதற்கு ஏதேனும் செய்யப்பட முடியுமா என்பது பற்றி அது ஐயத்திற்குரிய விடைதான் என்றார்.

சர்வதேச விவாதங்கள் பற்றிய முக்கிய ஏகாதிபத்தியத் தலைநகரங்களில் நடக்கும் விவாதங்களில் மேலாதிக்கம் கொண்டுள்ள பெருகிய அச்சம், ஒரு வாய்ப்பு ஜன்னல் மூடப்படுகிறது என்பதாகும், இதற்கு முக்கிய காரணம் கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் படைகள் எழுச்சியை அடக்குவதில் முன்னேற்றம் கண்டிருப்பதுதான்.

பாராளுமன்றத்தில் பேசிய காமரோன் பறக்கக் கூடாத பகுதியை செயல்படுத்துவதில்காலம் கடக்கக் கூடாது என்பது முக்கியமானது ஆகும் என எச்சரித்தார்.

விரைவில் செயல்பட விரும்புகிறோம், குழுவிலுள்ள நம் பங்காளிகளும் நாம் கொண்டுள்ள அவசர உணர்வைப் பெற வேண்டும் என விரும்புகிறோம்என்று பிரான்ஸின் தூதர் அரௌட் ஐ.நா. திங்கள் கூட்டத்திற்குப் பின் அறிவித்தார்.

இங்கு வெளிவரும் கவலை லிபியக் குருதி கொட்டுவது பற்றி அல்ல, மாறாக நேரடி ஏகாதிபத்திய தலையீட்டைத் துவக்குவதற்கான போலிக்காரணத்தை இழப்பது பற்றித்தான். அதுவோ திரிபோலியின் இன்னும் வளைந்துகொடுக்கும் தன்மையுடைய ஆட்சியை நிறுவி, நாட்டின் எரிசக்தி அளிப்புக்களுக்கு இன்னும் தடையற்ற அணுகுதலை அடைவதை நோக்கம் கொண்டது ஆகும். முக்கியச் சக்திகளிடையேயுள்ள அச்சம் கடாபி நாட்டின் மீது கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவருவதில் வெற்றிபெறக்கூடும், அதையொட்டி அவற்றிற்கு குருதி கொட்டப்படுவதை நிறுத்த தலையிடுவதற்கான போலிக்காரணம் இழக்கப்பட்டுவிடும் என்பதுதான்.

கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் இராணுவப் படைகள் கடந்த சில நாட்களில் கிழக்குப்புறம் 125 மைல்கள் கைப்பற்றிவிட்டதாகவும், திரிபோலி ஆட்சி மீண்டும் பெரெகா, ரஸ் லனுப் மூலோபாய எண்ணெய் சிறுநகரங்களை ஞாயிறன்று கைப்பற்றி விட்டது என்றும் தகவல்கள் வந்துள்ளன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, இந்த முன்னேற்றம் கடாபி ஆட்சிக்கு எதிராக எழுச்சி செய்துள்ளதில் வலுவான கோட்டையாகவுள்ள கிழக்கு பெங்காசி நகரத்தில்பீதியைப் பரப்பும்தூண்டுகோலாக உள்ளது. இச்செய்தித்தாள் எதிர்ப்புச் சக்திகள்கடாபி ஆதரவாளர்களை வளைத்துப் பிடிக்கின்றனஎன்றும் மேலைத்தேய உதவிக் குழுக்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் நகரத்திலிருந்து எகிப்திய எல்லைக்கு அருகேயுள்ள டோப்ருக் நகரத்திற்கு மாற்றத் தொடங்கிவிட்டன என்றும் தெரிவிக்கிறது. அவற்றின் அச்சத்திற்குக் காரணம் கடாபியின் படைகள் பெங்காசியைச் சூழ்ந்துவிடும் என்பதுதான்.

மேலைத்தேய சக்திகளை வலுவிழக்கச் செய்து அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்ட பிரச்சார நடவடிக்கையாக சீன, ரஷ்ய, இந்தியத் தூதர்களை ஞாயிறன்று அழைத்துலிபிய எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புக்களை இந்நாடுகளிலுள்ள நிறுவனங்களுக்கு அளிக்க முன்வருகிறதுஎனக் கடாபி கூறியுள்ளார். லிபிய அரசாங்கச் செய்தி நிறுவனம் ஜானா இதைத் தெரிவித்துள்ளது.

கடாபியின் வலதுசாரி சர்வாதிகாரம் முன்னதாக பெரும் இலாபகர உடன்பாடுகளை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ConcoPhilips, Hess, Marathon, இத்தாலியின் ENI, பிரான்சின் Total, ஜேர்மனியின் BASF-Wintershall ஆகியவற்றிற்கு அளித்திருந்ததுஇது நாட்டின் பெரும் எண்ணெய், எரிவாயு உற்பத்தியை வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தியிருந்தது.

லிபியாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதிகள் பெப்ருவரி 19ம் திகதி முதல் நிறுத்தப்பட்டுவிட்டன. ஏனெனில் துறைமுகங்களும் எண்ணெய் உற்பத்தியின் பெரும் பகுதிகளும் எழுச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ளன.