World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hillary Clinton in Tahrir Square

தஹ்ரிர் சதுக்கத்தில் ஹிலாரி கிளிண்டன்

Bill Van Auken
17 March 2011
Back to screen version

கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் உலாவிய அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனின் மத்தியகிழக்கு விஜயம், ஓர் இணையில்லா போலித்தனத்தின் முழுவடிவத்தை வழங்குகிறது. இது எகிப்திலும், துனிசியாவிலும் அமெரிக்க ஆதரவு-பெற்ற சர்வாதிகாரங்களுக்கு மறு ஸ்திரப்படுத்தும், மற்றும் அப்பிராந்தியத்தில் வேறெங்கும் பரவும் புரட்சிகர போராட்டங்களை நசுக்கும் வாஷிங்டனின் தீர்மானத்தை அடிக்கோடிடுகிறது.     

அமெரிக்க மற்றும் எகிப்திய மெய்காவலர்களின் படைசூழ, மத்திய கெய்ரோ வளாகத்தின் வழியாக கிளிண்டன் விரைவாக கடந்து சென்றார். இதே இடத்தில் தான், முபாரக்கை விரட்டும் வரையில், 18 நாட்களுக்கு மில்லியன் கணக்கான எகிப்தியர்கள் அந்த ஆட்சியை எதிர்த்து நின்றார்கள். ஊடகங்களைச் சந்தித்து பேசுகையில், கிளிண்டன்  “புரட்சி நடந்த இந்த இடத்தைப் பார்ப்பதும், அது உலகிற்கு எடுத்துக்காட்டிய விஷயமும், என்னைப் பொறுத்தவரையில், அசாதாரணமானது.” “அந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தைப் பார்ப்பது, அவருக்கு சிலிர்ப்பூட்டுவதாக,” அந்த பெண்மணி குறிப்பிட்டார். அவருடைய அந்த விஜயம் "மிகவும் உணர்ச்சிகரமானதாகவும், உந்துதல் அளிப்பதாகவும்" இருந்ததாக அவர் பின்னர் விவரித்தார்.         

எகிப்திய மக்கள் குறுகிய-கால ஞாபகமறதியில் பாதிக்கப்பட்டிருப்பதாக, கிளிண்டன் நம்புகிறார் போலும். வெறும் ஏழு வாரங்களுக்கு முன்னர், அவர் ஹோஸ்னி முபாரக்கிற்கு அவருடைய முழு ஆதரவை அறிவித்தார். அது ஜனவரி 25ஆம் தேதி, வெறுக்கப்பட்ட அமெரிக்க ஆதரவு-பெற்றிருந்த அந்த சர்வாதிகாரியை வலுக்கட்டாயமாக விரட்டியடித்த புரட்சிகர போராட்டங்கள் வெடித்த நாளாகும்.

பத்தாயிரக்கணக்கான இளம் எகிப்தியர்கள் கெய்ரோவின் மையப்பகுதியில் கலக-தடுப்பு பொலிஸ் மற்றும் துணை-இராணுவ துருப்புகளின் ஆயுதந்தாங்கிய வன்முறையை எதிர்த்துக் கொண்டிருந்த போது, வாஷிங்டனிலிருந்து கிளிண்டன்: “எகிப்திய அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது; எகிப்திய மக்களின் சட்டபூர்வமான தேவைகள் மற்றும் நலன்களுக்கு பிரதிபலிப்பு காட்ட அது பாதையைக் காண முயன்று வருகிறது என்பதே எங்களின் மதிப்பீடாகும். என அறிவித்தார்.

வெறுமனே அதற்கு ஒரு வாரத்திற்குப் பின்னர், ஆர்ப்பாட்டங்கள் எகிப்து முழுவதிலும் அளவிலும், பரவிய விதத்திலும் வளர்ந்த போதும் கூட, "முபாரக்கின் ஆட்சி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்காவின் கூட்டாளியாக" இருந்து உதவியதற்கும், அது "பெரும் சவால்கள் நிறைந்த ஒரு பிராந்தியத்தை ஸ்திரப்படுத்த முயன்று வருவதற்கும்," இதே அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் தான் அதை புகழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த முக்கிய கணத்தில், முபாரக்கோ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவருடைய ஆட்சியின் ஆயுதந்தாங்கிய அடியாட்களைக் கட்டவிழ்த்துவிட்டு, கெய்ரோவை "ஸ்திரப்படுத்த" முயன்று கொண்டிருந்தார்.    

எகிப்தின் முன்னாள் அமெரிக்க தூதர் பிராங் விஸ்னரை, கெய்ரோவிற்கான ஒபாமா நிர்வாகத்தின் சிறப்பு தூதராக கிளிண்டன் தேர்ந்தெடுத்தது, முபாரக்கிற்கு அமெரிக்கா காட்டிய ஆதரவிற்கு இன்னொரு சந்தேகத்திற்கிடமில்லாத அறிகுறியாகும். விஸ்னர் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள், எகிப்திய ஆட்சிக்கும் முபாரக்கிற்கும் வாஷிங்டனின் முக்கிய பிரசாரகாரராக இயங்கிவந்திருக்கின்றார்.

தீவிரப்பட்ட மக்கள் போராட்டங்கள் முபாரக் நிலைத்திருப்பதை மேலும் மேலும் சந்தேகத்திற்கு உள்ளாக்கிய போது, அந்நாட்டின் நீண்டகால இராணுவ உளவுத்துறை தளபதியும், முதிர்ச்சிபெற்ற சித்திரவதையாளருமான ஓமர் சுலெய்மானின் இரும்பு கரங்களின்கீழ் ஒரு "முறையான அரசுமாற்றத்தைச்" செய்ய, கிளிண்டன் அந்த நிர்வாகத்தின் முக்கிய ஆலோசகராக ஆகியிருந்தார்.   

பாதையின் ஒவ்வொரு படிக்கட்டிலும், கிளிண்டனால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க கொள்கை, முபாரக்கின் சக்தியின் மற்றும் இறுதியாக சுலெய்மானின் சக்தியின் அரசுமாற்றத்திற்கான மதிப்பீட்டின்படி, மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், அமெரிக்க ஆதரவு-பெற்ற ஆட்சியை சேதமடையாமல் காப்பாற்றவும், மிக கவனமாக, துல்லியப்படுத்தப்பட்டு வந்தன. இறுதியில், ஏற்கனவே ஏற்பட்டுவிட்டிருந்த முபாரக்கின் நீக்கத்திற்கு ஆதரவாக, அவரும் ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.   

செவ்வாயன்று அமெரிக்க தூதரகத்தில் அளித்த ஓர் உரையில், எகிப்தில் எழுந்த மக்கள் எழுச்சியை "மிக முக்கியமான வரலாற்று திருப்புமுனைகளில் ஒன்றாக" கிளிண்டன் வர்ணித்தார். “இந்த புரட்சியை கடத்திச்செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை, மீண்டும் பழைய காலக்கட்டத்திற்குத் திருப்ப யாரும் அனுமதிக்கப்படவில்லை,” என்று அவர் முழங்கினார்.

யாரை ஏமாற்றுவதாக அவர் நினைத்து கொண்டிருக்கிறார்? அவருடைய விஜயத்தின், மற்றும் பொதுவாக அமெரிக்க கொள்கையின் ஒட்டுமொத்த நோக்கமும், மக்கள் பேரெழுச்சியிலிருந்து வெடித்தெழும் எந்த ஆட்சியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் அதன் முக்கிய கூட்டாளி இஸ்ரேலின் நலன்களைத் நிலைப்படுத்துவதை உறுதிசெய்ய, எகிப்திய சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகளின், அதாவது இராணுவ மற்றும் செல்வவளம்மிக்க மேற்தட்டின், பிடியை வலுப்படுத்துவதே ஆகும்

எகிப்தை சர்வதேச மூலதனத்தின் தலையீட்டிற்கு இன்னும் திறந்துவிடும் வகையில், அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் திசையில் ஒரு பொருளாதார உதவி திட்டத்தையும் கிளிண்டன் இந்த விஜயத்தின் போது அறிவித்தார். முபாரக் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தைப் பெற்றிருக்கும் இராணுவப் படைகளின் உயர் ஆணையத்தின் தலைவர், முதன்மை தளபதி மார்ஷல் மொஹம்மத் தன்தாவி உடனான சந்திப்பு தான், கெய்ரோவில் கிளிண்டனின் மிக முக்கியமான சந்திப்பாக இருந்தது.

ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியுடன், (இதிலிருந்து அவர்களால் பெரும் இலாபம் எதிர்பார்க்க முடியும் என்பதால்) அதிகாரத்திலிருக்கும் அந்த சர்வாதிகார இராணுவ ஆட்சியை தக்கவைப்பதே, தன்தாவி மற்றும் அவரின் உடனிருக்கும் மூத்த அதிகாரிகளின் நோக்கமாகும். அதற்காக அவர்கள், இந்த ஆட்சிக்கு அரசியலமைப்புரீதியான ஒரு போர்வை அளிக்கும் ஒரு வெகுஜன வாக்கெடுப்பை ஆதரித்து நிற்கிறார்கள். அதேவேளையில், ஒடுக்குமுறையையும் அதிகரித்து வருகிறார்கள்.  

மக்கள் எழுச்சியின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகக்கு இராணுவ ஆட்சி இணங்கி நடக்க அழைப்புவிடுக்கும் போராட்டக்காரர்களை துடைத்தழிக்க, மார்ச் 9இல், சீருடை அணியாத இரகசிய பொலிஸ் மற்றும் சிப்பாய்களும் தஹ்ரிர் சதுக்கத்திற்குள் அனுப்பப்பட்டனர். நீண்டநேரம் நீடித்திருந்த ஒரு தாக்குதலில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உருட்டுக் கட்டைகளால், உலோக கம்பிகள் மற்றும் இரும்பு தடிகளால் அடித்து விரட்டப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தபட்சம் 190 நபர்களாவது, பயங்கரவாத குற்றச்சாட்டுகளின்மீது இராணுவ நீதிமன்றங்களை முகங்கொடுத்து சிறையில் உள்ளனர்.     

தஹ்ரிர் சதுக்க மக்கள் போராட்டங்களில் எகிப்திய இளைஞர்களை ஒன்றுதிரட்டிய ஓர் அரை டஜன் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புரட்சிகர இளைஞர் பேரவை (The Coalition of the Youth of the Revolution), கிளிண்டனுடன் ஒரு "பேச்சுவார்த்தைக்காக" விடுக்கப்பட்ட வெளிவிவகாரத்துறையின் அழைப்பை மிகவும் சரியாக நிராகரித்தது.

அதன் முடிவை விளக்கும் ஓர் அறிக்கையில், "எகிப்திய மக்களின் விருப்பத்திற்கு மாறாக, எகிப்திலும் மத்தியகிழக்கிலும் அவர்களின் சொந்த நலன்களின் அடித்தளத்தில்" அமெரிக்க அரசாங்கம் தான், இந்தவொரு "பேச்சுவார்த்தையைக்" கோருகிறது என்று அந்த பேரவை எடுத்துக்கூறியது.

"அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்ட ஜனாதிபதி முபாரக்கின், மற்றும் முந்தைய ஆட்சியின் மூத்த அதிகாரிகளின் மிக முக்கிய கூட்டாளிகள் மற்றும் தனிப்பட்ட நண்பர்களில்" ஒன்றாக அமெரிக்க நிர்வாகமும் இருந்து வந்துள்ளது. அத்துடன், "அப்பிராந்தியதில் பல ஜனநாயகமற்ற ஒடுக்குமுறை ஆட்சிகளுக்கும்" அது ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்தது, என்று அது குறிப்பிட்டது

உண்மையில், கெய்ரோவில் "ஜனநாயகம்" மற்றும் "புரட்சிக்கு" அவரின் பேரார்வத்தை கிளிண்டனே வலியுறுத்தி கொண்டிருந்தபோது, அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் இரண்டு மிக நெருங்கிய கூட்டாளிகளான பஹ்ரெயினில் உள்ள அல்-கலிபா முடியாட்சியும், யேமனில் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலாஹின் சர்வாதிகாரமும், அவர்களின் சொந்த நாடுகளில் எழுந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அமெரிக்க Fifth Fleet இன் தளமான பஹ்ரெயினில், பாதுகாப்பு படைகளும், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் துருப்புகளின் ஆதரவுடன், கண்ணீர் புகைகுண்டுகள், இரப்பர் தோட்டாக்கள், தயார்நிலையில் இருக்கும் படைத்தளவாடங்களைப் பயன்படுத்தி, பேர்ல் சதுக்கத்திலிருந்து நூறு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியது. காயப்பட்டவர்களுக்கு மருந்திட்டு கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைத் தாக்கி, பாதுகாப்பு படைகள் மருத்துவமனைகளை ஆக்கிரமித்த நிலையில், அமெரிக்காவால் வினியோகிக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. ஒரு குறுங்குழுவாத வெறித்தனமான வன்முறையில், கண்மூடித்தனமாக நூற்றுக்கணக்கானவர்களை சுட்டுக் கொண்டே, ஷியா கிராமங்களுக்குள் துருப்புகள் அனுப்பப்பட்டன.    

தன் பாதுகாப்பு படைகளுக்கு அமெரிக்க நிதியுதவியாக 250 மில்லியன் டாலரை பெற்றுவரும் யேமனில் துருப்புகளும் ஆட்சியின் அடியாட்களும், 32 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துவரும் சலாஹை வெளியேறக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியாக துப்பாக்கிசூட்டை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றனர்.  

இது தான் மத்தியகிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகம். ஈராக் ஆட்சியின்மீதும், அதன் எரிசக்தி வளங்கள் மீதும் அதன் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்காக நூறுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை கொல்லவும் அது தயாராக இருப்பதை, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஈராக் யுத்தத்திலேயே ஏற்கனவே காட்டியுள்ளது.

முபாரக்கின் வீழ்ச்சி, எகிப்திய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் பாரிய போராட்டத்தின் ஓர் அளப்பரிய வெற்றியையும், எகிப்திய ஆளும் மேற்தட்டின் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இழிவார்ந்த பின்னடைவையும் எடுத்துக்காட்டியது. ஆனால் அதைத் தொடர்ந்து எகிப்திலும், அப்பிராந்தியம் முழுவதிலும் நடந்து வரும் சம்பவங்கள், முபாரக்கின் வீழ்ச்சி முடிவல்ல, அது புரட்சியின் ஆரம்பம் மட்டுமே என்பதை தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றன

எகிப்திலும், மத்தியகிழக்கு முழுவதிலும் புரட்சிக்கு எதிரான ஒரு மூலோபாயத்தை பின்பற்ற தீர்மானித்திருக்கும் வாஷிங்டனின் ஆதரவுடன் இருக்கும் ஒரு கைக்கூலி ஆளும் மேற்தட்டின் மற்றும் இராணுவ தளபதியின் கரங்களில் அதிகாரம் தங்கியுள்ளது.

இந்த மூலோபாயத்தை தோற்கடிக்க முடியும்; ஜனநாயக உரிமைகள், சமூக சமத்துவம், மேம்பட்ட வாழ்க்கைத் தரங்கள், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு முடிவு என போராட்டத்தில் மில்லியன் கணக்கானவர்களை இழுத்து வந்த கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அதிகாரம் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னிலையுடன், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்று திரட்டுவதன் மூலமாக மட்டுமே இதை செய்ய முடியும்.

இறுதியாக, இந்த புரட்சியின் வெற்றி எகிப்தின் எல்லைகளையும் தாண்டி விரிவுபடுத்துவதிலும், எகிப்திய தொழிலாளர்களின் போராட்டத்தை மத்தியகிழக்கு முழுவதிலும் மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதையும் சார்ந்துள்ளது. அப்பிராந்தியம் முழுவதிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கட்சிகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய புரட்சிகர சர்வதேச தலைமையைக் கட்டியெழுப்புவதே மிகவும் முக்கியமாக பணியாக உள்ளது