World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

German interests in Libya

லிபியாவில் ஜேர்மனின் நலன்கள்

By Ulrich Rippert
4 March 2011
Back to screen version

துனிசியா, எகிப்து மற்றும் இப்பொழுது லிபியாவில் ஏற்பட்டுள்ள புரட்சி எழுச்சிகள் ஜேர்மனிய அரசாங்கத்தை விரைவான இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டியுள்ளன. அந்த இடத்தில் முதன்முதலாக மேற்கு அரசியல்வாதி என்ற முறையில் வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே துனிசுக்கு விரைந்து சென்று அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த மஹ்மத் கன்னொச்சிக்கு ஜேர்மனிய ஆதரவை உத்தரவாதம் செய்தார்.

வெளியுறவு அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவல் ஒன்றின்படி, வெளியுறவு மந்திரி ஆழ்ந்த விவாதங்களைபொருளாதார, பொது சமூகத்தின் பிரதிநிதிகளிடம் மேற்கோண்டார்.” “ஒரு மாறுதலுக்கான-பங்காளித்துவம்அமைக்கப்படுவது பற்றி வெஸ்டர்வெல்லே கருத்துத் தெரிவித்து அதற்கு தாராளமான நிதி உதவி அளிப்பதாகவும் கூறினார். பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்களின் உயர் பிரதிநிதியான காத்தரின் ஆஷ்டன் ஐரோப்பிய ஒன்றியமும் €258 மில்லியனை துனிசியாவிற்கான அவசரக்கால உதவி நிதிக்கு அளிக்கும் என்று அறிவித்தார்.

ஆனால் ஒரு சில நாட்களில், வீழ்ச்சியுற்ற ஜனாதிபதி ஜைன் அல்-அபிடைன் பென் அலியின் அரசாங்கத்திற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தலைமை தாங்கிய கன்னூச்சி மீண்டும் எழுந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து இராஜிநாமா செய்தார்.

ஜேர்மனிய அரசாங்கம் இதைத் தைரியமாக எடுத்துக் கொண்டு சர்வாதிகாரி ஆட்சியுடனான அதன் நெருக்கமான உறவு மறக்கப்பட்டுவிடும் என்று நம்பியது. உத்தியோகபூர்வமாக அதுகளிப்புத் தரும் ஜனநாயக இயக்கத்திற்குஆதரவு என்பது பற்றிப் பேசுகிறது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வெஸ்டர்வெல்லே மத்திய கிழக்கில்ஒரு ஜனநாயக சீர்திருத்தத்தின் ஆரம்பம்பற்றிப் புகழ்கிறார். ஆனால், உண்மையில் அரசாங்கம் தீவிர கவலை கொண்டு  அதன் நலன்களைக் பாதுகாக்க அனைத்து பலத்தினையும் பயன்படுத்தும் உறுதியைக் கொண்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இது லிபிய நிகழ்வுகளுக்கு நன்கு பொருந்தும். இந்நாடு துனிசியாவிற்கும் எகிப்திற்கும் இடையே ஜேர்மனிய நலன்களின் மையத்தானத்தில் உள்ளது. பல தசாப்தங்களாக ஜேர்மனிக்கு மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதிகளை செய்கிறது. ஜேர்மனிய நிறுவனங்கள் அங்கு மில்லியன் கணக்கில் முதலீடு செய்துள்ளன; கடாபியின் ஆட்சி அங்கு ஐரோப்பிய ஒன்றியத்தினுள்  தஞ்சம் கோரும் வறியவர்களை வந்துசேராது ஒதுக்குவதில் மையப் பங்கைக் கொண்டுள்ளது.

கடாபியின் ஆட்சியுடன் ஜேர்மனியின் நெருக்கமான ஒத்துழைப்பு நீண்டகால மரபைக் கொண்டுள்ளது. ஓராண்டிற்கு முன், வெளியுறவு அலுவலகம் கீழ்க்கண்டவற்றை வெளியிட்டது: “லிபியாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே உள்ள அரசியல் உறவு நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் நேரடித் தொடர்பு மூலமே பேர்லினில் 1986ல் ‘La Belle’  இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட ஜேர்மனியப் படுகொலையில் பாதிக்கப்ட்டவர்களுக்கு லிபிய அரசாங்கம் இழப்புத் தொகைகள் கொடுப்பதை சாத்தியமாக்கியது.”

செப்டம்பர் 2004ல் இழப்பீட்டுத் தொகைக்கான உடன்பாட்டில் கடாபி கையெழுத்திட்ட உடனேயே, அப்பொழுது சான்ஸ்லராக இருந்த ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) டிரிபோலிக்கு சென்று பொருளாதார ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனிய-லிபிய வணிகக் கூட்டம் நடைபெறுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் டிரிபோலி சர்வதேச வணிகச் சந்தையில் ஜேர்மனி பங்கு பெறுவதும் உள்ளது.

ஜேர்மனிக்கு முக்கியமான கச்சா எண்ணெய் அளிப்பதில் மூன்றாம் இடத்தை லிபியா பெற்றுள்ளதுடன் கிட்டத்தட்ட அதன் மொத்தத் தேவையில் 11% த்தைக் கொடுக்கிறது. லிபிய கச்சா எண்ணெயை வாங்கும் நாடு என்னும் முறையில், ஜேர்மனி இத்தாலிக்கு அடுத்துத்தான் உள்ளது. எண்ணெய்த் தொழில் துறையில் இருந்து லிபியா மிக அதிக உபரி நிதிகளைப் பெறுகிறது. கடந்த ஆண்டில், எண்ணெய்த் தொழில்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவிகிதம் கொண்டிருந்தது-இதையொட்டி கணிசமான பெரிய உள்கட்டுமானத் திட்டங்களில் முதலீடு செய்ய முடிந்தது; இதில் ஜேர்மனிய பெருநிறுவனங்கள் கணிசமான தொடர்பைக் கொண்டிருந்தன.

உதாரணமாக, Siemens நிறுவனம் லிபியாவின் பெரிய நீர்த்திட்டமான “Great Man-Made River” (மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய ஆற்றுத் திட்டம்) கட்டமைக்கபட்டதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. உலகம் முழுவதிலும் குடிநீர்த் திட்டம் அளிப்பதில் மிகப் பெரிய திட்டமாக இது இருந்தது. மொத்தத்தில் 2009ல் கிட்டத்தட்ட 23% என ஜேர்மனிய வணிகங்கள் லிபியாவிற்கு தங்கள் ஏற்றுமதிகளைக் கணிசமாக அதிகரிக்க முடிந்தது.

BASF ன் துணை நிறுவனமான Wintershall ஏற்கனவே 1958ல் இருந்து லிபியாவில் தீவிரமாகச் செயல்படுகிறது; தற்போது லிபியப் பாலைவனங்களில் எட்டு எண்ணெய் வயல்களில் செயற்பாட்டைக் கொண்டுள்ளது. அதன் கணக்கின்படியே, அதன் மூலதனச் செலவு அமெரிக்க $2 பில்லியனையும் விட அதிகம் ஆகும். எனவே லிபியாவில் மிக அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் வெளிநாடாக அது உள்ளது. Dea என்னும் Essen நகரத்தில் உள்ள RWE நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துணை நிறுவனம் 40,000 சதுர கிலோமீட்டர் பரப்புடைய பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கான உரிமங்களைக் கொண்டுள்ளது. ஆபிரிக்காவிலேயே கண்டறியப்பட்டுள்ள மிக அதிக கச்சா எண்ணெய் இருப்புக்கள்மீது லிபியா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது; ஐரோப்பாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை முக்கிமாக அளிக்கும் நாடுகளில் அதுவும் ஒன்றாகும்.

ஜேர்மனியக் கட்டிட மற்றும் சேவைகள் நிறுவனமான Bilfinger Berger லிபியாவில் விரைவுதெருக்களை கட்டமைக்கிறது; மேலும் ஒரு பெரிய எரிவாயு விசை சக்தி நிலையத்திற்கான தலைநகர் டிரிபோலிக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள தொழில்துறை நகரான ஜவியாவில் பொறியியல் பணியையும் செயல்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தில் மின்னாக்கிகள் மற்றும் விசையாழிகள் நீர் குளிர்ச்சிக் கோபுரம் மற்றும் நீர்த்தொட்டிகளுக்காக நிறுவுவதற்கு அஸ்திவாரப்பணிகளும் அடங்கியுள்ளன.

ஏப்ரல் 2009ல் Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை அப்பொழுது பொருளாதார மந்திரியாக இருந்த கார்ல் தியோடோர் சூ கூட்டன்பேர்க் ஜேர்மனிய பொருளாதாரத்திற்காகலிபியப் பொருளாதார அதிசயத்தில் ஒரு பங்கைபெற மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. “கடாபியிடம் ஆதரவு நாடல் என்னும் தலைப்பில் FAZ எழுதியது: “நெருக்கடிக்காலத்தில்கூட லிபியாவில் தேவைக்கு அதிகமான பணம் உள்ளது; இதற்கிடையில் அங்குள்ள அதிகார குழுக்களுக்கு இடையே உள்ள உறவுகளை உறுதிப்படுத்துவதற்காக என்றாலும் அதை நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தும் நோக்கமும் உள்ளது; ”

லிபிய தலைமைவிசை உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு, சூரிய ஆற்றல் பயன்பாடு உட்படஆயிரக்கணக்கான மில்லியன்களை முதலீடு செய்ய விரும்பியது பற்றிச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. முழு உள்கட்டுமானம் புதுப்பிக்கப்படல், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நாட்டை விரைவில் தொழில்மயமாக்குதல் ஆகியவற்றிற்கு அது முயன்றது. வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அதையொட்டிய தொழில்நுட்பத்திறன் ஆகியவைபெரிதும் வரவேற்கப்படும்-அனைத்தும் கடாபியின் குடும்பத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் வரை.”

லிபியாவில் தனக்கு கூடிய பங்கு கிடைக்கும்என்பதை பிரான்ஸ் ஏற்கனவே உறுதி செய்துவிட்டது. அதேபோல், அமெரிக்கர்களும் இப்பொழுதுகிறுக்கு நாய் என்று (ரோனால்ட் ரேகன் அப்படி முத்திரையிட்டிருந்தார்) நடத்தும் கடாபியைஇளவரசரின் நாய்க்குட்டியைப் போல்தான்நடத்தியது. ஒரு பின்னணியான நோக்கம் இல்லாமல் பெர்லுஸ்கோனி ஒன்றும்சர்வாதிகாரியை ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு அழைத்துவிடவில்லை”, ரஷ்யர்கள் எப்பொழுதும்தங்கள் எரிவாயுமீதான ஏகபோக உரிமை அச்சுறுத்தப்பட்டபோதுதயாராக இருந்தனர்.”

எனவே பேர்லினும் தன் நிறத்தைக் காட்டும் நேரம் வந்துவிட்டதுஎன்று FAZ குறிப்பிட்டது. கடாபியைக் சந்திப்பதற்காக ஒரு நாள் முழுவதும் எப்படி கூட்டன்பேர்க் காத்திருந்தார். ஆனால் கர்னலின் மனைவியின் சகோதரர் ஒருவரை மட்டுமே அணுக முடிந்ததுஎன்றும் அது குறிப்பிட்டுள்ளது.

கடாபி ஆட்சியுடனான உடன்பாடு உள்பாதுகாப்பு, இராணுவத் தளவாடங்கள் ஆகியவற்றிலும் இருந்தது. செய்தி ஊடகத் தகவல்கள்படி, 1960களில் இருந்தே தொடங்கிய பாதுகாப்பு-அரசியல் பங்காளித்தனங்கள் இருந்தன. 1965க்கும் 1983க்கும் இடையே, சில இடைவேளையைத் தவிர, லிபிய படையினர் ஜேர்மனியின் ஆயுதப் பிரிவினரால் பயிற்சி பெற்றனர்; லிபியப் பொலிஸ் அதிகாரிகள் ஜேர்மனியின் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பாடத்திட்டங்களைக் கற்றனர்.

செப்டம்பர் 2003ல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டபின், ஜேர்மனி லிபியப் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அது அளித்த பயிற்சியைத் தீவிரப்படுத்தியது. பல நேரங்களில் கடாபி இனக்குழுவின் உறுப்பினர்கள் ஜேர்மனிய அரசாங்கத்தின் உதவியை லிபியப் பொலிஸுக்குப் பயிற்சி அளிக்க நாடினர். அத்தகைய ஒத்துழைப்பு உத்தியோகபூர்வமாக நிராகரிக்கப்பட்டது; ஆனால் உண்மையில் திரைக்குப்பின் முடுக்கிவிடப்பட்டு நடைபெற்றது. உதாரணமாக ஏப்ரல் 2008ல் Berliner Zeitung பத்திரிகை ஒரு ஜேர்மனிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் நூற்றுக்கணக்கான லிபிய அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் இல்லாத கடாபியின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நெருக்கமான போர், இரகசியமான இடத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்துதல், நிலத்தடி மறைவிடங்கள் அமைத்தல், நகர்ப்புறப் போர்முறை, சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்தல் போன்றவற்றில் பயிற்சி அளித்தனர். என குறிப்பிட்டது.

இதன் பின் இச்சிறப்புப் படைகள் லிபிய மக்களையும் அகதிகள் என அழைக்கப்படுவோரைத் தடுக்கவும், நசுக்கவும் பயன்படுத்தப்பட்டன. பயிற்சியுடன் ஆயுதங்களும் பொலிஸிற்குத் தேவையான கருவிகள் வினியோக்கிக்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் லிபியா €80 மில்லியன் மதிப்புடையஅனுமதிதேவைப்படும் ஜேர்மனிய ஏற்றுமதிகளைபெற்றது. அதில் முக்கியமாக தொடர்புத் துறை, பொலிஸ் கருவிகள் பிரிவுகளிலும், ஹெலிகாப்டர்களுக்கும் அடங்கும்..

சமீபத்திய நாட்களில் லிபிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை, படுகொலைக் கொடூரங்கள் நீண்டகாலமாகவே இந்த ஆட்சியின் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் கையிருப்பாக இருந்தவைதான். மனித உரிமைகள் அமைப்புக்கள் தென் சகாராப் பகுதிகளில் இருக்கும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறும் வறிய அகதிகள் கடாபி ஆட்சியினால் எப்படி மிருகத்தனமாக நடத்தப்படுகின்றனர் என்பது பற்றி பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அத்தகைய நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான மக்களை வாகனங்களின் திணித்து அவர்களைப் பாலைவன முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு அவர்கள் அதிக உணவோ, குடிநீரோ இன்றி நெரிசலான அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டனர்.

கடாபிக்கும் ஜேர்மனிய அரசாங்கத்திற்கும் பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகளில் இருந்து நெருக்கமான ஒத்துழைப்பு எந்த அளவிற்கு ஜேர்மனிய வணிகம் டிரிபோலி அடக்குமுறையில் இருந்து நலன்களைப் பெற முடிந்தது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. மேலும் கடாபியின் ஊழல் மிகுந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள், ஐரோப்பிய, அமெரிக்க ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு எதிராகவும் இருக்கவேண்டும் என்பதையும்  நிரூபித்தன. இந்த போராட்டத்தில் லிபிய கிளர்ச்சியாளர்களின் முக்கிய நண்பர்கள் ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாள வர்க்கம்தான்.