World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political issues in the fight against budget cuts

வரவு-செலவு திட்ட வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் பிரச்சினைகள்

28 February 2011
Joseph Kishore and David North
Back to screen version

ஆளுநர் ஸ்காட் வால்கர் நிர்வாகத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரிய தாக்குதலுக்கு எதிரான விஸ்கான்சன் தொழிலாளர்கள் போராட்டம், தற்போது அதன் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. சமூக செலவினங்களில் பெரும் வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளை ஒருதலைபட்சமாக வழக்கிலிருந்து ஒழித்தல் போன்றவற்றைக் கோரியிருந்த ஆளுநரின் கோரிக்கைகளுக்கு காட்டப்படும் எதிர்ப்பு தொடர்ந்து பாரியளவாக உள்ளது. கடுங்குளிருக்கு இடையிலும், சனியன்று மாநில தலைநகர் மாடிசனில் 10,000 ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர். சனியன்று நடந்த ஆர்ப்பாட்டங்கள் இதுவரை நடந்தவைகளிலேயே மிகப் பிரமாண்டமானதாக இருந்தன. மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார்துறை மற்றும் அரசுத்துறை தொழிலாளர்கள் கலந்துகொள்ளும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவான உணர்வு அங்கே அதிகரித்து வருகிறது.

இந்த மோதலின் முக்கியத்துவமும், தாக்கங்களும் விஸ்கான்சனையும் கடந்து பரந்து வருகின்றன. ஒரு சர்வாதிகார நாற்றம் வீசும் வால்கர் நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தொழிலாள வர்க்கத்தின்மீது தேசியளவிலான ஒரு கொடூர தாக்குதலுக்கு வழிகாட்டிகளாக உள்ளன. அமெரிக்காவை ஆளும் முதலாளித்துவ சிறுபான்மை ஆட்சியின், குற்றவியல் நிதியியல் ஊகவணிகங்களால் கொண்டு வரப்பட்ட, 1930களில் ஏற்பட்ட பெருமந்த நிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தீவிரமாக்கப்பட்டுள்ளது. 2008-2009இல் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்புகளில் ஆதாயம் பெற்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்கள், அதன் விளைவாக ஏற்பட்ட மாநிலங்கள் மற்றும் நாட்டின் திவால்நிலைமைக்கு ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கம் விலைகொடுக்க வேண்டுமென கோரிவருகிறது.

இதுதான் சம்பள உயர்வு நிறுத்தங்கள் மற்றும் தற்போதைய வெட்டுக்கள், போராடிபெற்ற மற்றும் முக்கிய நலன்களை இல்லாமல் ஒழிக்க, கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான வேலைகளை அழிக்க, சமூகரீதியில் அத்தியாவசிய சேவைகளை கைவிடக் கோரும் கோரிக்கைகளின் அரசியல்ரீதியான மற்றும் சமூகரீதியான சாரமாக உள்ளது. திட்டமிடப்பட்டுள்ள, கோரப்பட்டுள்ள  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வெட்டுக்கள், தொழிலாள வர்க்கத்தை மட்டுமல்ல, மாறாக தலைமுறைகளையே கூட பல தசாப்தங்களுக்குப் பின்னால் இழுத்து செல்லும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய வரலாற்று சூழலில், அமெரிக்காவின் சமூக மாற்ற இயக்கத்தை தொடக்கிவிட்ட 1930களின் பெரும் தொழிலாள வர்க்க எழுச்சிகளுக்கு முன்னரான 1920களுக்குள் திருப்பிவிடுவதில் தீவிரமாக குறியாய் இருக்கும் பெருநிறுவன மற்றும் நிதியியல் சிறுபான்மையாட்சியின் மிகக் கொடூரமான அரசியல் பிரதிநிதிகளில் ஒருவராக வால்கர் இருக்கின்றார். ஆசிரியர்களின் மற்றும் ஏனைய அரசு பணியாளர்களின் நலன்களை வெட்டுவது மற்றும் மருத்துவநல திட்டங்கள் மற்றும் சமூகநல திட்டங்களைக் காலிசெய்வது மட்டும் வால்கருக்குப் போதவில்லை. அவர் கூட்டு பேரம்பேசலின் எந்த வடிவத்தையும், அது இப்போதிருக்கும் தொழிற்சங்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயனற்ற மற்றும் கோழைத்தனமான வடிவத்தில் இருந்தாலும்கூட, அதையும் முடிவுக்குக் கொண்டு வர கோரி வருகிறார். வால்கரும், மற்றும் அவர் யாருக்காக பேசுகிறாரோ அந்த முதலாளித்துவ வர்க்கத்தின் இரக்கமற்ற பிரிவுகளும், வெறுமனே இப்போதிருக்கும் தொழிற்சங்கங்களை மட்டும் குறிவைக்கவில்லை. நிதியியல்-பெருநிறுவன சிறுபான்மையினர் ஆட்சியும், முதலாளித்துவ அரசும் அளிக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப, தொழிலாளர் வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பின் அனைத்துவிதமான வடிவத்தையும், சாத்தியத்திறனையும் ஒழித்துக்கட்டுவதே அவருடைய உண்மையான நோக்கமாகும்.         

இந்த தாக்குதலுக்கு விஸ்கான்சனிலும், தேசியளவிலும் உள்ள AFSCME, NEA மற்றும் AFL-CIO தொழிற்சங்க அமைப்புகள் காட்டும் விடையிறுப்பு, கோழைத்தனமாகவும், போலித்தனமாகவும், அரசியல்ரீதியாக திவாலாகியும் உள்ளது. தொடக்கத்திலிருந்தே, தொழிற்சங்க அமைப்புரீதியான நலன்களின்மீதான வால்கரின் தாக்குதலுக்கும், அதாவது கூட்டு பேரம்பேசுதலைக் கைவிடுதல் மற்றும் கட்டாய உறுப்பினர் சந்தா வசூல் முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கோரிக்கை போன்ற தாக்குதலுக்கும், பொதுச்சேவையில் உள்ள தொழிலாளர்களின் கூலிகள், நலன்கள் மற்றும் வேலைகளின் மீதான தாக்குதலுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாததைப் போன்று அவர்கள் நடிக்கிறார்கள். நீண்டகாலமாக இருந்துவரும் சங்கங்களின் சட்டப்பூர்வமான தனியுரிமைகளை ஆளுநர் தொந்தரவு செய்யாத வரையில், அவர்கள், இந்த அனைத்து தாக்குதல்களையும் ஏற்று கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

வால்கரின் தாக்குதலுக்கு தொழிற்சங்கங்கள் காட்டும் முதுகெலும்பற்ற விடையிறுப்புக்குப் பின்னால், ஒரு துல்லியமான அரசியல் கணிப்பு உள்ளது. வால்கர் நிர்வாகம் கோரும் பாரிய வரவு-செலவு வெட்டுக்களுக்குக் காட்டப்படும் எதிர்ப்பானது, ஏனைய பல மாநிலங்களின், சில பெரிய மாநிலங்களிலும் கூட, ஜனநாயக கட்சி ஆளுநர்களுடன் வேலைசெய்து பெற்ற உடன்படிக்கைகளை இல்லாமல் செய்துவிடும் ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடும் என்பது தொழிற்சங்க தலைவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.  NBCஇன் "Meet the Press” நிகழ்ச்சியின் ஞாயிற்றுக்கிழமை காலை நேர்காணலில் AFL-CIO தலைவர் ரிச்சர்டு ட்ரும்கா, பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்பைச் சங்கங்கள் ஏற்க விரும்புவதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தங்களின் தொழில்வழங்குனர்களோடு அமர்ந்து பேசித்தீர்க்க விரும்பும் ஆளுநர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவற்றை நம்மால் தீர்த்து வைக்க முடியும்,” என்றார்.  

அப்படியானால், AFL-CIOஇன் அடிப்படையான வாதம் தான் என்ன? அது கூறுகிறது, தொழிற்சங்கங்களின் சட்டபூர்வமான தனியுரிமைகளையும், சந்தா வசூலிப்பையும் தாக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேமாதிரியான ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினரின் மாநில அரசாங்கங்கள் அவற்றின் நிதியியல் நோக்கங்கள் மற்றும் வரவு-செலவு கணக்கின் நோக்கங்களை எட்டுவதற்கு, AFL-CIO முழுமையாக ஒத்துழைக்க விரும்புகிறது; அதற்கு அது முழுமையாக தயாராகவும் உள்ளது.

ஆனால் இது தொழிலாள வர்க்கத்தை எங்கே கொண்டு போய்விடும்? பதில் என்னவென்றால்: வேலைகள் இல்லாமல், போதிய கூலிகளும் சம்பளங்களும் இல்லாமல், அத்தியாவசிய நலன்கள் மற்றும் சமூக சேவைகள் இல்லாமல், போதிய பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லாமல், அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாமல், ஓர் எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில் தொழிலாள வர்க்கம் அதன் போராட்டத்தைத் தொடர்வதை, மற்றும் விரிவாக்குவதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை. ஆனால் அது எதனோடு போராடுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்; எதற்காக போராடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் வெறுமனே பல்வேறு பிற்போக்கான ஆளுநர்களை மட்டும் எதிர்த்து நிற்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கே எதிரான ஒரு பிரமாண்டமான வர்க்க போராட்டத்தில் அதனை ஈடுபடுத்தியுள்ளது. இந்த முரண்பாடு நீண்டகாலவிளைவுகளை கொண்ட அரசியல் தாக்கங்களையும், இறுதியாக புரட்சிகர தாக்கங்களையும் கொண்டுள்ளது

ஆளுநர் வால்கர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் மாநில நிர்வாகங்களாலும், மற்றும் ஒபாமா நிர்வாகத்தாலேயே நீடிக்கப்படவிருக்கும் ஒரேமாதிரியான கோரிக்கைகள், முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையின் தோல்விக்கு சாட்சியமாக உள்ளது. தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களையும், பெரும் சிக்கல் நிறைந்த ஒரு நவீன சமூகத்தின் அத்தியாவசிய சமூக தேவைகளையும் முதலாளிகளுக்கு அடிபணிய வைக்க, இலாபத்திற்காக மற்றும் தனிநபர் செல்வவள திரட்சிக்காக செய்யப்படும் அதிருப்திகரமான செயலை இனியும் சகித்துக்கொள்ள முடியாது.

அமெரிக்காவிலும், உலகமெங்கிலும் நிலவும் நிலைமைகளுக்கு பிரதிபலிப்பைக் காட்டும் உழைக்கும் மக்கள், சமூகத்தின் பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பின் ஓர் அடிப்படை மாற்றத்திற்கு, அதாவது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாற்றத்திற்கு, குறைவில்லாத ஒன்று அவசியப்படுகிறது என்ற தீர்மானத்திற்கு வரவேண்டும்.

விஸ்கான்சனில் தொழிலாளர்கள் போராட்டத்தின் அபிவிருத்தியும், நாடு முழுவதிலும் மற்றும் உலகமெங்கிலும் அதன் விரிவாக்கமும், ஒரு சோசலிச வேலைதிட்டம் மற்றும் முன்னோக்கிற்கான போராட்டத்தைச் சார்ந்துள்ளது. தொழிலாள வர்க்க போராட்டத்தின் இந்த புதிய காலக்கட்டத்திற்குத் தேவையான அமைப்புரீதியிலான வடிவங்களையும், அரசியல் திட்டங்களையும் விவாதிக்க, சோசலிச சமத்துவ கட்சியும், உலக சோசலிச வலைத்தளமும் மற்றும் சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பும் நாடு முழுவதிலும் ஒரு தொடர்ச்சியான கூட்டங்களை <http://www.fightforsocialism.org/> ஏப்ரலில் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தவிரும்புபவர்கள் அனைவரும், மற்றும் நமது அனைத்து வாசகர்களும் அக்கூட்டங்களில் பங்குபெற இன்றே திட்டமிடுமாறு <http://www.fightforsocialism.org/> கேட்டுக் கொள்கிறோம்.