World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Police crack down on two strikes in China

சீனாவில் இரு வேலைநிறுத்தங்களுக்கு எதிராக கடுமையான பொலிஸ் அடக்குமுறை

By John Chan 
27 June 2011

Back to screen version

சீனாவின் தென் மாநிலமான குவாங்டோங்கில் கடந்த வாரம் இரு முக்கியமான தொழிலாளர் வேலைநிறுத்தங்களை முறியடிப்பதற்கு அதிகாரிகள் பொலிசாரை அனுப்பினர். ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் ஆகியவற்றில் சலுகைகளைக் கொடுப்பதற்கு பதிலாக இந்த வேலைநிறுத்தங்களின் விளைவுகள் கடந்த ஆண்டு ஹொண்டா கார்த் தொழில் வேலைநிறுத்தத்தில் காணப்பட்டது போல் பெய்ஜிங் ஆட்சி பரந்த போராட்டங்களை தூண்டக்கூடிய எவ்வித தொழிற்துறை நடவடிக்கையும் பொறுத்துக் கொள்ளாது என்பதைத்தான் காட்டின.

பொலிசாரின் அடக்குமுறை மாநிலத்தின் தலைநகரான குவாங்ஜௌவில் ஜெங்செங் பகுதியில் குடியேறியுள்ள ஆடைத்துறைத் தொழிலாளர்கள் பல நாட்கள் எதிர்ப்புக்கள் நடத்தி அரசாங்கக் கட்டிடங்களை தாக்கி கலகப்பிரிவுப் பொலிசாருடன் பொலிஸ் வன்முறை, உத்தியோகபூர்வ பாகுபாடு மற்றும் உயரும் விலைகள் ஆகியவற்றிற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இரண்டாவது வாரத்தில் வந்துள்ளது.

ஒரு தென் கொரிய நாட்டைச் சேர்ந்தவருக்கு சொந்தமான குவாங்ஜௌவில் பன்யு மாவட்டத்திலுள்ள கைப்பை ஆலை ஒன்றில் 4,000 தொழிலாளர்களின் நான்கு நாள் வேலைநிறுத்தம் பொலிசார் 6 தொழிலாளர்களை கைது செய்தபின் முடிவிற்கு வந்தது. உள் மாநிலங்களில் இருந்து வரும் பெண் தொழிலாளர்கள் சிமோன் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலாளர் தொகுப்பில் 80% என உள்ளனர். இது உயர்மட்ட சர்வதேச தரப் பொருட்களை Michael Kors, DKNY, Burberry, Kate Spade போன்ற நிறுவனங்களுக்காக தயாரிக்கிறது.

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட South China Morning Post ஆனது நிறுவனத்தின் ஹூவாலாங் ஆலையில் கடந்த திங்களன்று கூடுதல் ஊதியம், நிர்வாகத்தின் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர் என்று தகவல் கொடுத்துள்ளது. “ஆலைக்கு வெளியே நிறைய பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்; குறைந்தபட்சம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள் பாதுகாப்புக் காவலர்களால் செவ்வாயன்று தாக்கப்பட்டனர் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்என்று செய்தித்தாள் குறிக்கிறது. “ஒரு பெரிய போக்குவரத்து நிறுத்தம் ஆலைக்கு வெளியே இதையொட்டி ஏற்பட்டது; micro blog வலைத் தளங்களில் படங்கள் வெளியாயின.”

செய்தித்தாளிடம் தொழிலாளர்கள் தங்கள் சராசரி மாதாந்திர ஊதியம் 1,100 யுவன்தான் (US டொலர் 169) என்றனர்இது குவாங்ஜோவின் துணைத் தொழில் நகரங்களிலேயே மிகக் குறைந்த ஊதியம் ஆகும். அவர்கள் விரைவில் உயர்ந்துள்ள விலைவாசிகளை ஒட்டி, 1,300 யுவான் என்றாவது ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஹுனன் மாநிலத்தில் இருந்து வந்துள்ள 26 வயது ஆண் தொழிலாளர் விளக்கினார்: “எங்கள் ஊதியத்தில் இருந்து நிறுவனம் சமூகப் பாதுகாப்பிற்காக 200 யுவானையும் ஆலைக்குள் நாங்கள் சாப்பிட்டால் 100 யுவானையும் கழித்துவிடுகிறது. உள்ளே கொடுக்கும் உணவு குப்பை போல் உள்ளது; மனிதர்களால் உண்ண முடியாது, ஆனால் எங்களுக்கு வேறு விருப்புதெரிவுரிமை இல்லை.”

நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் தாங்கள் நிற்க வேண்டி இருப்பதாகவும், நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் கழிப்பறைக்குச் செல்ல முடியும் என்றும் இடைவேளையை தவிர மற்றய நேரங்களில் குடிநீர் அருந்தக்கூடத் தடை உள்ளது என்றும் தொழிலாளர்கள் கூறினர். சோங்பிங்கிலிருந்து வரும் ஒரு இளம் ஆண் தொழிலாளி, நிர்வாகம் தொழிலாளர்களைமனிதர்களைவிடக் குறைந்த தன்மையில்நடத்துகின்றது என்றார். “ஆண் மேலாளர்கள் பெண்கள் கழிப்பறையில் விருப்பம் போல் நுழைகின்றனர். எங்கள் கோபத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாதுஎன்று சேர்த்துக் கொண்டார்.

பெரும்பாலான தொழிலாளர்கள் வியாழன் காலை நிர்வாகத்திடமிருந்து எந்தச் சலுகையையும் பெறாமல் வேலைக்குத் திரும்பினர். ஆனால் 900 பேர் இன்னும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 6 வேலைநிறுத்தக்காரர்களுக்கு மேல் கடந்த வியாழன் பிற்பகல் பொலிசாரால் ஒரு பூசலின்போது அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர். சிமோன் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தும் முன்னறிவிப்பைக் கொடுத்துள்ளது; பணிக்குத் திரும்பாதவர்கள் வேலை ஒப்பந்தங்களை இழப்பர் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

South China Morning Post கொடுத்துள்ள தகவல்: “ஒரு 20 வயது பெண் தொழிலாளி கழுத்துபிடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு ஒரு சிலரால் இழுக்கப்பட்டார். இதற்குக் காரணம் அவர் மேலதிகாரியிடம் அவருடைய புகைப்படத்தை எடுக்காதீர்கள் என்று கூறியதுதான்.” அவருடைய 18 வயது சக ஊழியர் கூறினார்: “இவர்கள் குண்டர்கள்; எங்களை புகைப்படம் எடுக்கின்றனர், நினைத்தபடி அடிக்கின்றனர்.” பல அதிகாரிளால் ஒரு இளம் ஆண் தொழிலாளி கூட்டத்திற்கு இடையே விரட்டி அடிக்கப்பட்டு, இறுதியில் தரையில் சாய்க்கப்பட்டார்; பின்னர் அவர் எடுத்துச் செல்லப்பட்டார்.

தொழிலாளர்களிடையே அடித்தளத்திலுள்ள எதிர்ப்புணர்வு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஒரு 19 வயதுத் தொழிலாளி பல அருகிலுள்ள ஆலைகளில் உள்ளது போல் அவர்களும் ஊதிய உயர்வைக் கோருகின்றனர் என்று விளக்கினார். குய்ஜோவில் இருந்து வரும் 29 வயது தொழிலாளி ஒருவர், இரு மாதங்களுக்கு முன்பு இயந்திரத்தால் கட்டை விரல் நசுக்குண்டவர், நிர்வாகம் மருத்துவச் செலவுகளை இதற்காகக் கொடுக்க மறுத்துவிட்டது என்றும், காரணம் இழப்பீடு பெறுவதற்காக அவர் வேண்டும் என்றே காயப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்று கூறினர்.

சிமோன் வேலைநிறுத்தத்தை பொலிசார் முடித்தபோது, கடந்த வியாழன் அன்றே, குவாங்டோங்கிலுள்ள மற்றொரு பெரிய உற்பத்தி நகரமான டொன்க்குவானிலுள்ள Citizen Watch நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான பொலிசார் சென்று 2,000 தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த 10 நாட்கள் வேலைநிறுத்தத்தை முறித்தனர். ஹாங்காங்கின் Asiaweek இதழின் கருத்துப்படி, வேலைநிறுத்தம் செய்தவர்கள் கடுமையான பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வேலைக்குத்திரும்பும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

கூடுதல் ஊதியம் இல்லாமல் ஒரு வார இறுதியில் தொழிலாளிகளை வேலை செய்யுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்தியதை அடுத்து இந்த வேலைநிறுத்தம் வெடித்தது. முந்தைய புதன் அன்று மின் வெட்டு இருந்ததால் உற்பத்தி நின்று போய் இருந்தது. எனவே அதுவிடுமுறை நாளாககருதப்பட்டது. ஆனால் சமீபத்திய மாதங்களில் அடிக்கடி மின்வெட்டு இருப்பதால், இது தொழிலாளர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களோ ஒவ்வொரு நாளும் 5 முதல் 6 மணி நேரம் கூடுதல் வேலைசெய்ய வாடிக்கையாக கட்டாயப்படுத்துப்படுகின்றனர்.  ஒரு பணிமுறைக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் அவர்களுடைய ஊதியங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. கையுறைகள் போன்ற அடிப்படைப் பாதுகாப்புக் கருவிகள் கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

ஜூன் 13ம் திகதி உள்ளூர் சாங்கன் நகராட்சி அரசாங்கத் தலைமையகத்திற்கு வெளியே கொட்டும் மழையில் ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்றுகூடி தொழிலாளர் சட்டங்களை மீறுவதற்காக Citizen Watch ற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நூறு பொலிசார் அங்கு அனுப்பப்பட்டனர், அரசாங்கத்தின் தொழிலாளர் துறையும் குறுக்கிட்டது.

தொழில் தினங்கள் மறு சீரமைக்கப்படும் வகையில்முன்னேற்றம் இருக்கும்என்ற தெளிவற்ற உறுதிமொழியை நிர்வாகம் கொடுத்தபின், 600 தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். கடந்த செவ்வாயன்று நிர்வாகம் மூன்று நாள் ஊதியங்களை ஒவ்வொரு வேலைநிறுத்த நாளுக்காகவும் குறைப்பதாக அச்சுறுத்தி, பெரும்பாலான தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு வரச்செய்தது. கிட்டத்தட்ட 200 மெருகூட்டும் பிரிவுத் தொழிலாளர்கள் கலங்காமல் வியாழன் பொலிஸ் நடவடிக்கை வரை உறுதியாக இருந்தனர்.

இரு வேலைநிறுத்தங்களிலும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் கொடுக்கப்படவில்லை என்பது கடந்த ஆண்டு ஹொண்டா வேலைநிறுத்தத்தின்போது நடந்ததற்கு முற்றிலும் மாறானது ஆகும். ஹொண்டா தொடக்கத்தில் குவாங்ஜௌக்கு அருகே ஒலிபரப்பு சாதனங்கள் செய்யும் ஆலையில் நடந்த வேலைநிறுத்தத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஊதிய உயர்வை நிராகரித்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இல்லை என்ற உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் நிலைமையை சமாளிப்பதற்கு நிர்வாகம் இறுதியில் குறைந்த ஊதிய உயர்விற்கு ஒப்புக் கொண்டது. இது பிற ஹொண்டா ஆலைகள் மற்றும் கார், மின்னணு நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்களையும் அதே போன்ற நடவடிக்கையை எடுக்க வைத்தது. இதையொட்டி அலையென வேலைநிறுத்தங்கள் வெளிப்பட்டன. நாடு முழுவதும் பெய்ஜிங்கை குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் கட்டாயத்தை ஏற்படுத்தியது.

சீன ஸ்ராலினிச ஆட்சி ஓராண்டிற்கு முன் நடந்த வேலைநிறுத்தங்களால் எதிர்பாராமல் தடுமாறியது. ஆனால் இப்பொழுது மத்திய கிழக்கில் பெரும் புரட்சிகள் நடப்பதற்கு இடையே, உலகப் பொருளாதாரத்தில் இன்னும் கீழ்சரிவுள்ள நிலையில், சீனாவின் பணவீக்கத்தில் எழுச்சி ஏற்பட்டிருக்கும்போது, தொழிலாளர்கள் இயக்கம் எதையும் முளையிலேயே கிள்ளி எறிய பெய்ஜிங் உறுதி கொண்டுள்ளது.

இம்மாதம் ஜெங்செங்கில் நடந்த கலவரங்களின்போது, 6,000 பரா இராணுவப் பொலிசார், கவச வண்டிகளில் இருந்து 10,000 தொழிலாளர்களை தாக்கி, குறைந்த பட்சம் 19 பேரைக் கைதும் செய்தனர். கடந்த வாரம் பொலிசார் சந்தேகத்திற்குரிய எதிர்ப்பாளர்கள் பற்றித் தகவல் கொடுக்கும் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு 10,000 யுவான் ரொக்கப் பரிசுவெகுமதியாகவும்உள்ளூர் நகர்ப்புற வீடு ஒதுக்குதலில் முன்னுரிமையும் அளிப்பதாக அறிவித்துள்ளனர்.