WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை
அரசாங்கம் திருத்தப்பட்ட ஓய்வூதிய மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது
By W.A. Sunil
9 June 2011
சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்களின் மாபெரும் எதிர்ப்பை எதிர்கொண்ட இலங்கை
அரசாங்கம், கடந்த வாரம் தனியார் துறை ஓய்வூதிய மசோதாவை நிறைவேற்றுவதை
“இடை
நிறுத்தத் தள்ளப்பட்டது. ஆயினும், ஞாயிற்றுக் கிழமை, தொழில் அமைச்சர் காமினி
லொகுகே, சுதந்தர வர்த்தக வலயங்களில் (சு.வ.வ.)
“சாதாரண
நிலைமையை மீண்டும் ஸ்தாபிதம்”
செய்த பின்னர், “திருத்தங்களுடன்
மற்றும் தொழிற்சங்கங்களுடனான ஆலோசனையுடன்”
அந்தச் சட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மே 24
அன்று, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி கட்டுநாயக்க சு.வ.வலயத்தில் தொடங்கிய
பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், ஆளும் வர்க்கம் பூராவும்
ஒரு அதிர்வை எற்படுத்தியிருப்பது தெளிவு. மே 30 அன்று, அரசாங்கத்தால் நிலை
நிறுத்தப்பட்ட பொலிசார், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது வன்முறைத்
தாக்குதல்களை தொடுத்து, ஒரு தொழிலாளியைக் கொன்று, ஏனைய பலருக்கு காயமேற்படுத்தியதை
அடுத்து, 40,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த நிலையில், முழு சு.வ.வலயமும்
ஸ்தம்பித்துப் போனது.
இந்த
மசோதாவைக் கொண்டுவருவதன் குறிக்கோள், தனியார் துறை தொழிலாளர்களுக்கு நியாயமான
ஓய்வூதியத்தை வழங்குவது அல்ல. மாறாக, பங்குச் சந்தைக்கும் ஏனைய வடிவிலான தனியார்
முதலீடுகளுக்கும் நிதியை உட்செலுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட, கட்டாய சேமிப்பு
வடிவமாகவே இது திணிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, சர்வதேச நாணய நிதியத்தால்
கட்டளையிடப்பட்ட சந்தை-சார்பு சீர்திருத்த பொதியின் ஒரு பாகமாகும்.
சர்வதேச
நாணய நிதியமும் உலக வங்கியும் 2002ல் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அரசாங்க
மற்றும் தனியார் துறை ஓய்வூதியத் திட்டத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முதலில்
அழைப்பு விடுத்தது. அரசாங்கத் துறை ஓய்வூதியத் திட்டத்துக்கு அதிக தாராளமாக
கொடுக்கப்படுவதாக கருதப்படும் அதன் நிதி வழங்கலை இலங்கை அரசாங்கம் நிறுத்த
வேண்டியுள்ளது. தனியார் துறையிலும் அரச கூட்டுத்தாபனங்களிலும் ஊழியர்களுக்கு
வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதியையும் அது மறு சீரமைக்கத் தள்ளப்பட்டுள்ளது.
2007ல்,
அரசாங்கம் ஓய்வூதிய சீர்திருத்தத்தை அமுல்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியம்
விமர்சித்தது. 2009ல் கூர்மையடைந்திருந்த அந்நிய செலாவனி நெருக்கடியை
தவிர்ப்பதற்காக, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்
கடனைப் பெற தள்ளப்பட்டது. இந்தக் கடன், பொதுச் செலவுகளை வெட்டிக் குறைக்கவும்
பொருளாதார மறு சீரமைப்பை திணிக்கவும் அழுத்தத்தை உக்கிரப்படுத்தியது. ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், கடந்த ஆண்டின் கடைப் பகுதியில்,
“தனியார்
துறை மூப்பு ஓய்வூதிய நிதிக்கான ஒரு ஒழுங்குபடுத்தல் வரைவை”
முன்வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தது.
தனியார்
துறையிலும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களிலும் உள்ள 6.5 மில்லியன் ஊழியர்களைப்
பொறுத்தவரையில், இந்த உத்தேச ஓய்வூதியத் திட்டம், சம்பள வெட்டு மற்றும் இலாபங்களில்
கணிசமானளவை குறைப்பதற்கு சமமானதாகும். அவர்கள் ஓய்வூதிய நிதிக்காக தமது சம்பளத்தில்
இருந்து 2 வீதத்தை கொடுக்கவும், அதே போல் தாம் ஓய்வுபெறும்போது கிடைக்கும்
பணத்துக்காக ஒரு பகுதியையும் கொடுக்கத் தள்ளப்படுவார்கள். இவை ஊழியர் சேமலாப
நிதிக்காக 2 வீதம், ஓய்வுபெறும் போது கிடைக்கும் பணத் தொகைக்கு 10 வீதம் மற்றும்
ஊழியர் நம்பிக்கை நிதிக்காக 10 வீதம் என்ற முறையில் அறவிடப்படவுள்ளன.
அரச
வங்கி ஊழியர்களுக்கு இந்த அறவீடு மிகவும் அதிகமாக இருக்கும். அரச வங்கிகளுக்கு
புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் 1996 இலேயே தமது ஓய்வூதிய உரிமையை
இழந்துவிட்டனர். இப்போது இத்தகைய ஊழியர்கள் ஓய்வூதிய நிதிக்காக தமது மாத
சம்பளத்தில் 5 வீதமும் அதே போல் ஊழியர் சேமலாப நிதிக்காக 5 வீதமும் கொடுக்க
வேண்டும் என அரசாங்கம் பிரேரிக்கின்றது. இந்த மசோதாவின் கீழ், ஓய்வுபெறும் போது
கிடைக்கும் பணத்தையும் இந்தத் தொழிலாளர்கள் இழந்துவிடுவர்.
சு.வ.வ.
தொழிலாளர்களின் சீற்றம் புரிந்துகொள்ளக்கூடியதாகும். திரும்பக் கிடைக்கக்
கூடியவாறும் மற்றும் திருமணத்துக்கு செலவிடக்கூடிய வகையிலும் சில சேமிப்புகளை
செய்துகொள்வதற்காக ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை உழைப்பதற்காக கிராமப்புற நகரங்கள்
மற்றும் கிராமங்களில் இருந்து வந்த அதிகளவான இளம் பெண்களே இந்த சு.வ.வலயங்களில்
வேலை செய்கின்றனர். உத்தேச ஓய்வூதியத் திட்டத்துக்கு குறைந்தபட்சம் கடைசி 10
ஆண்டுகளுக்காவது ஊழியர்கள் பங்களிப்புச் செய்யவேண்டியுள்ள நிலையில், அவர்கள்
நீண்டகால நன்மைகளைப் பெறப்போவதில்லை. குறுகிய காலத்தில், ஏற்கனவே பற்றாக்குறையாக
உள்ள அவர்களது ச்ம்பளம் மேலும் குறைவடையவுள்ளதோடு அவர்கள் ஓய்வு பெறும் போது ஊழியர்
சேமலாப நிதியில் இருந்து கிடைக்க வேண்டிய பெருந்தொகைப் பணமும் குறைவானதாகவே
இருக்கும்.
தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது ஒய்வூதியத்துக்குத் தகமையுடையவர்களாக இருந்தாலும்,
அவர்கள் 55 வயதாகும் போது அவர்களது சம்பளத்தில் இருந்து அதிகபட்சம் 60 வீதத்தையே
பெறுவர். மற்றும் பல சமயங்களில் கணிசமானளவு குறைவாகவே பெறுவர். ஊழியர்களுக்கு 60
வயதாகும் போது மட்டுமே அவர்களின் கைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த
ஓய்வூதிய நிதியை மத்திய வங்கியே நிர்வகிப்பதோடு அது எங்கு முதலீடு செய்யப்பட
வேண்டும் என்பதையும் அதுவே தீர்மானிக்கும். ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ், அரசாங்கம்
மத்திய வங்கி ஊடாக ஏற்கனவே ஊழியர் சேமலாப நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து,
மூர்க்கமான ஊகவாணிபத்துக்கும் மற்றும் பெருமளவில் ஊதிப் பெருகியுள்ள பங்கு
விலைகளுக்கும் பங்களிப்பு செய்துள்ளது.
சட்டத்தை திருப்பிச் சுருட்டிக்கொள்ள எடுத்த தீர்மானமும், மற்றும் திருத்தப்பட்ட
சட்டத்தை வரைவதில் தொழிற்சங்கங்களையும் எதிர்க் கட்சிகளையும்
ஈடுபடுத்திக்கொள்வதும், எந்தவொரு அடிப்படை மாற்றங்களையும் ஏற்படுத்தப் போவதில்லை.
கூட்டுத்தாபன தட்டுக்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்ள
முடியும் என்பதை முழுமையாக உணர்ந்துள்ள வர்த்தக குழுக்கள், தொழிற்சங்களின்
ஈடுபாட்டுக்கு ஊக்குவிப்பு கொடுக்கின்றன. நேற்று டெயிலி நியூஸ்
பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் மஹேந்திர அமரசூரிய,
“ஓய்வூதிய
சட்டத்தை வெற்றிகொள்வதற்காக, தொழிற்சங்கங்களதும் மற்றும் ஏனைய பந்தயப்
பொறுப்பாளர்களதும் கருத்துக்கள் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்”
என தெரிவித்தார்.
தொழிற்துறை பொலிஸ்காரனுக்கும் மேலான வகிபாகத்தை ஆற்ற தொழிற்சங்கங்கள்
விரும்புகின்றன. அரசாங்க அதிகாரிகள், முதலாளிமாரின் குழுக்கள் மற்றும்
தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுத்தாபன சபையான தேசிய தொழில் ஆலோசனை சபையை
(தே.தொ.ஆ.ச.) அரசாங்கம் கூட்ட வேண்டும் என தொழிற்சங்கங்கள் சு.வ.வ. தொழிலாளர்களின்
போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக கோரின.
இணைந்த
தொழிற்சங்க கூட்டமைப்பு (ஜே.டீ.யூ.ஏ.) மற்றும் எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை
முன்னணியின் (ஜே.வி.பீ.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்கமும்
(ஐ.சி.இ.யூ.), தமது ஓய்வூதிய பிரேரணைகளைப் பற்றிக் கலந்துரையாட இந்தச் சபை
கூட்டப்பட வேண்டும் என இப்போது வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன.
“தொழிற்சங்கங்கள்
மற்றும் ஏனைய விடயம் சார்ந்த சக்திகளின் யோசனைகளை”
கருத்தில் கொள்ளவேண்டும் எனக் கூறி, எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும்
(யூ.என்.பீ.) அரசாங்கத்துடன் ஒத்துழைப்தற்கு தனது விருப்பத்தை
வெளிப்படுத்தியுள்ளது.
ஜே.டீ.யூ.ஏ. சார்ந்த சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைகள் சங்கத்தின் (FTZGSU)
தலைவர் அன்டன் மாகஸ் நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், அரசாங்கம் தனது
தொழிற்சங்கத்தின் கருத்துக்களையும் சர்வதேச ஒழுங்குகளையும் கருத்தில்கொள்ள வேண்டும்
என வலியுறுத்தினார். பிரேரணைகளை சூத்திரப்படுத்துவதற்காக மூன்று பேர் அடங்கிய
குழுவொன்றை ஜே.டீ.யூ.ஏ. அமைத்துள்ளது.
இந்தப்
பேச்சுவார்த்தைகள் தமக்கு நன்மையளிக்கும் என்ற மாயை தொழிலாளர்களுக்கு இருக்கக்
கூடாது. அரசாங்கம் மற்றும் எதிர்க கட்சிகள், அதே போல் தொழிற் சங்கங்களும் ஏதாவதொரு
வடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளன.
சு.வ.வ. தொழிலாளர்ள் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என பொய்யாகக் கூறிக்கொள்ளும்
தொழிற் சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீது திருத்தப்பட்ட சட்டத்தை திணிப்பதில்
இன்றியமையாத வகிபாகமொன்றை ஆற்றுகின்றன.
ஓய்வூதியத் திட்டத்துக்கு 2 வீதம் பங்களிப்புச் செய்யத் தள்ளப்பட்டிருப்பது
சம்பந்தமாக ஏற்கனவே தொழிலாளர்கள்
“கவலை”
தெரிவித்துள்ளனர். ஜூன் 4 அன்று வெளியான ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர்
தலையங்கம் ஒன்று, பொதுத் துறை ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறும் வயது சம்பந்தமாக
மீண்டும் கவணம் செலுத்துமாறும், அதே போல், தற்போதைய தனியார் துறை ஓய்வூதியத்
திட்டம் சம்பந்தமாக முதலாளிமாருடனும் தொழிற்சங்கங்களுடனும் ஆலோசனை செய்யுமாறும்
அழைப்பு விடுத்தது.
எந்தவொரு தனியார் துறை சட்டமும் ஆராய்ந்து கணக்கிடப்பட வேண்டும் என வலியுறுத்திய
அந்த பத்திரிகை, “இலவச
பகல் உணவு போன்ற எதுவும் இதில் இல்லை என்பது இதில் நன்மையடைபவர்களுக்கு புரிய
வேண்டும்... தனியார் துறை அக்கறை காட்டுவது போல், அரசாங்கமும் அதே போல்
தொழிற்சங்கங்களும் சுமையை முதலாளிமாரின் மீது சுமத்துவதற்கு எதிர்பார்க்கின்றன. இது
யதார்த்தமற்றதாகும்.”
உண்மையில், தவிர்க்க முடியாமல் புதிய சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும்
வழிமுறைகளாகவே இந்தப் பேச்சுக்கள் உள்ளன. தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பின்
மீதும் நடவடிக்கை எடுக்க, அரசாங்கம் பரந்தளவில் அரச ஒடுக்குமுறைக்குத்
தயாராகிக்கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. தனது ஆசிரியர் தலைப்பின்
முடிவில், சு.வ.வ. ஆர்ப்பாட்டங்கள் பற்றி ஐலண்ட் பின்வருமாறு கருத்துக்
கூறியுள்ளது: எந்தவொரு மற்றும் எல்லாவிதமான எதிர்ப்புக்களுக்கும் இப்போது
வாய்ப்புத் திறந்துள்ளது என எவரும் திரிபுபடுத்தினால், அவர்கள் ஆபத்தான தவறை
செய்கின்றார்கள். ஒரு வெல்வெட் கையுறைக்குள் முதலில் ஒரு இரும்பைக் காண முடியும்”. |