World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government condemns Channel 4 war crimes documentary

இலங்கை அரசாங்கம் செனல் 4 யுத்தக் குற்ற ஆவணத்தை கண்டனம் செய்கின்றது

By K. Ratnayake
21 June 2011
Back to screen version

இலங்கை கொலைக் களம் என்ற ஆவணத்தை காட்சிப்படுத்தியமைக்குப் பிரதிபலித்த இலங்கை அரசாங்கம், தனதும் தனது வீர ஆயுதப் படைகளதும் நற்பெயரையும் களங்கப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும்சர்வதேச சூழ்ச்சியில் பாதிக்கப்பட்ட நாடாக சித்தரிக்கும் அதன் நாட்டுப்பற்றுப் பிரச்சாரத்தை உக்கிரப்படுத்தியுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அதன் தாக்குதல்களின் கடைசி மாதங்களில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றிய அனைத்து சான்றுகள் சம்பந்தமாகவும் கொழும்பு அரசாங்கத்தின் நிலையான பிரதிபலிப்பாக சர்வதேச சூழ்ச்சி என்ற பெரும் பொய்யே பயன்படுகின்றது.

பிரிட்டனில் செனல் 4 உருவாக்கிய மற்றும் ஜெனீவாவில் ஜூன் 14 காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஒரு மணித்தியால வீடியோ காட்சி, இறுதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட 2008 செப்டெம்பர் முதல் 2009 மே மாதம் வரையான காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் எடுக்கப்பட்ட துண்பகரமான சம்பவங்களை அம்பலப்படுத்துகிறது. இலங்கை இராணுவத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொது மக்கள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தபடுவதையும் அதே போல், ஆஸ்பத்திரிகள் மீண்டும் மீண்டும் இலக்கு வைக்கப்படுவதையும் அது காட்டுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் அவதூறுக்கு உள்ளான ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கையின் படி, ஷெல் வீச்சுக்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் பத்தாயிரக்கணக்கான தமிழ் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விவரணப் படம், சரணடைந்த புலிகளின் சிப்பாய்கள் மற்றும் தலைவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக கொல்லப்பட்டமை, அதே போல, இராணுவத்திடம் பாதுகாப்பு தேடி வந்த தமிழ் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பான மேலும் ஆதாரங்களை கொடுக்கின்றது. பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொது மக்கள் உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பற்றாக்குறை போன்ற பயங்கரமான நிலைமைகளை எதிர்கொண்டிருந்ததையும் அது காட்சிப்படுத்துகிறது. சகல ஊடகங்களும் முன்னரங்குப் பகுதிக்கு செல்வது தடை செய்யப்பட்டதோடு பாதுகாப்பு வலயத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்க ஒரு சில தன்னார்வ ஊழியர்களைத் தவிர வேறு எவரும் அனுமதிக்கப்படாத காரணத்தால், இத்தகைய காட்சிகளை எடுப்பது கடினமானதாக இருந்தது.

ஐ.நா. அறிக்கை விடயத்தில், அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டிய குற்றங்கள் தொடர்பான வெறுக்கத்தக்க ஆதாரங்களை நிராகரிக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. மாறாக, எதிர்க் கட்சிகள் அல்லது ஊடகங்களால் மறுக்கப்பட மாட்டாது என தெரிந்து கொண்ட அரசாங்கம், இராணுவம் பொது மக்களை கொல்லவில்லை, மாறாக அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையையே முன்னெடுத்தது, மற்றும் இந்த காட்சிகள் வெறும் புலிகளின் பிரச்சாரம்தான் என்ற அதன் கருத்தை சாதாரணமாக மீண்டும் மீண்டும் கூறி வந்தது.

இந்த விவரணம் காட்சிப்படுத்தப்பட்ட மறு நாள், அதற்கு எதிராக பலமான தாக்குதலை முன்னெடுத்த பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, அதை வெளியிடுவதற்காக செனல் 4 நிறுவனத்துக்கு புலிகள் இலஞ்சம் கொடுத்துள்ளனர் என கூறிக்கொண்டார். இலங்கை அரசாங்கம், அதே போல் இராணுவத்தினதும் நற்பெயரை களங்கப்படுத்துவதன் பேரில், மீண்டும் ஒரு முறை சில புலிகள்-சார்பு சக்திகள் செனல் 4 செய்திச் சேவைக்கு பணம் கொடுத்து பயன்படுத்திக்கொண்டுள்ளனர். என கூறினார். அந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் ஆதாரம் காட்டவில்லை.

பாதுகாப்புச் செயலாளரும், தனது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவைப் போலவே, இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் நேரடியாக குற்றங்காணப்பட்டுள்ளார்.

ஜூன் 17 அன்று பேசிய கோடாபய இராஜபக்ஷ, தாய் நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சர்வதேச சவால்களை எதிர்க்க தேசப்பற்றுள்ள மக்கள் அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. சர்வதேச அளவில் உள்ள புலிகளின் எச்சங்கள், புலிகள்-சார்பு சக்திகளுடன் தமது பிரிவினைவாத இயக்கத்தை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர் என பிரகடனப் படுத்தினார்.

பெரும் வல்லரசுகளின் கொள்ளையடிக்கும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சிறிய தீவின் சாதனையாளனாக அரசாங்கத்தை சித்தரிப்பது நகைப்புக்கிடமானதாகும். குற்றவியல் யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி இராஜபக்ஷ, அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற அனைத்து பெரும் மற்றும் பிராந்திய வல்லரசுகளின் ஆதரவை நாடியதோடு ஆதரவையும் பெற்றிருந்தார். இந்த வல்லரசுகள், 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் வெளிப்படையாக மீறியதையும் மற்றும் 2006 நடுப் பகுதியில் மோதல்களை புதுப்பிக்கத் தொடங்கிய இராணுவத்தின் அட்டூழியங்களையும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுமாக அனைத்தும் இலங்கை இராணுவத்துக்கு உதவிகள் வழங்கின.

யுத்தத்தின் கடைசி மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் பற்றி அமெரிக்காவும் ஐரோப்பாவும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியது, தமிழ் பொது மக்களின் தலைவிதி பற்றிய கவலையினால் அல்ல. மாறாக, தனது செலவில் சீனா கொழும்பில் செல்வாக்கை பெற்றுக்கொள்ளும் என வாஷிங்டன் பீதி கொண்டது. அமெரிக்கா இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வழிமுறையாக யுத்தக் குற்ற விசாரணை அச்சுறுத்தலை பயன்படுத்திக்கொண்டது. துரோகியாக மாறி அரசு மாற்றப் பிரச்சாரத்துக்கு உள்ளாகும் அமெரிக்கப் பங்காளிகளில் இராஜபக்ஷ முதலாவது மனிதர் அல்ல.

செனல் 4 விவரணத்தைப் பற்றிக்கொண்ட தெற்காசியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட், அச்சுறுத்தலை புதுப்பித்தார். [மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கான அழைப்புக்கு] இலங்கை அரசாங்கம் பதிலிறுக்காவிட்டால், நாங்கள் [ஐக்கிய இராச்சியம்] இலங்கை அரசாங்கத்தின் கடப்பாடுகளை இட்டு நிரப்ப அதற்கு அழுத்தம் கொடுக்க, கிடைக்கக் கூடிய சகல தேர்வுகளையும் மீண்டும் நோக்க சர்வதேச சமூகத்துக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பிரகடனங்கள் முற்றிலும் பாசாங்கானதாகும். இலங்கை இராணுவத்தைப் போலவே, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளும், விமானத் தாக்குதல்கள் மற்றும் அதிரடிப் படை நடவடிக்கைகளிலும் பொது மக்களை கொலை செய்தல் மற்றும் எதேச்சதிகாரமான கைதுகள், சித்திரவதை, சட்டத்துக்குப் புறம்பான கொலைகளுக்கு பொறுப்பாகும். இந்த பாசாங்கையே இலங்கை அரசாங்கம் தனது குற்றங்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப தூக்கிப்பிடிக்கின்றது.

பர்ட்ஸின் கருத்துக்களுக்கு பதிலளித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர், அச்சுறுத்தல் விடுப்பதற்கு மாறாக, கடந்த மூன்று தசாப்தங்களாக இழந்தவற்றை மீண்டும் ஸ்தாபிக்க அவகாசமும் ஆதரவும் கொடுக்க வேண்டும் என நேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், யுத்தக் குற்றங்கள் பற்றி கணக்கில் எடுக்கக் கூடாது என்பதே ஆகும். நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளும் நோக்கத்துடன் நிலையான நலன்களைக் கொண்ட குறிப்பிட்ட பகுதியினரின் உத்தரவின் பேரில், சர்வதேச ஊடகத்தின் ஒரு சிறிய தட்டினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த வீடியோ காட்சி என இந்த அமைச்சு கண்டனம் செய்தது.

மேற்கத்தைய பாசாங்கை விமர்சிப்பதில் கொழும்பு ஊடகம் அதிகம் வெளிப்படையாக இருந்தது. ஞாயிறு வெளியான திவயின பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், செனல் 4 ஆசனிக் என தலைப்பிடப்பட்டிருந்தது. மேற்கு நாடுகள் பின் லாடனை எவ்வாறு கொன்றன என்பதையிட்டு எவரும் கேட்கவில்லை. ஆனால், இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்தது பற்றி மேற்கு திருப்தியடையவில்லை. இந்த ஆசனிக் நஞ்சு, பாசாங்கு மற்றும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்து தோன்றுகின்றது, என அது பிரகடனப்படுத்தியுள்ளது.

ஜூன் 15 வெளியான ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு, இந்த வீடியோ டிஜிடல் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மாயையாகும் எந்தவொரு ஆதாரமும் காட்டாமல் இந்தக் காட்சிகள் டிஜிடல் முறையில் சோடிக்கப்பட்டுள்ளன, என அது தெரிவித்தது. ஈராக்கில் தமது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரும் பொய்களையே பயன்படுத்தினர் என சரியாக சுட்டிக்காட்டிய அது, அதன் [செனல் 4] திடீர் தாக்குதல் பிரச்சாரம், [புலிகளின் தலைவர்] பிரபாகரனின் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை சர்வதேச யுத்தக் குற்ற நீதி மன்றுக்கு முன்னால் இழுத்துச் செல்வதை மட்டுமன்றி, வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சரிவை ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்டதாகும், என மேலும் கூறியது.

இத்தகைய ஆசிரியர் தலையங்களின் கருத்துக்கள், அவற்றுக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகின்றன. கொழும்பில் உள்ள முழு அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனமும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நவ-காலனித்துவ படையெடுப்புக்களை ஆதரிக்கின்றன. மேலும், இந்தப் பிரதிபலிப்பு, வாழ் மற்றும் வாழ விடு என்று, குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் தமது பெரும் சகோதரர்களுக்கு யுத்தக் குற்றவாளிகள் குழுவொன்று விடுக்கும் குரூரமான வேண்டுகோளுக்குச் சமனானதாகும்.

கொழும்பில் ஒட்டு மொத்த ஊடகங்ளும் செய்தியாக வெளியிட்ட இந்த சர்வதேச சூழ்ச்சிக்கு எதிரான போலிப் பிரச்சாரம், யுத்தக் குற்றத்துக்காக அல்லது அரசாங்க மாற்றத்துக்காக இலங்கை அரசாங்கம் இலக்கு வைக்கப்படும் சாத்தியம் பற்றிய நுண்னுணர்விலிருந்து மட்டும் தோன்றவில்லை. இந்த யுத்தமே, தசாப்த காலங்களாக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தமிழர்-விரோத பாகுபாட்டின் விளைவாகும். தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் மற்றும் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி நிறுத்தவும் இனவாத உணர்வுகளை கிளறி விடுவதற்காக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இந்த தமிழர் விரோத பாகுபாட்டை பயன்படுத்திக்கொண்டன.

புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த இராஜபக்ஷ அரசாங்கம், அதே பிற்போக்கு அரசியல் தேவைக்காக, அதாவது ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக மீறுவதையும் இனவாத பகைமைகளை கிளறிவிடுவதையும் நியாயப்படுத்துவதற்காக, சர்வதேச சூழ்ச்சி என்பதை புணைந்துள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூர்க்கம், அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் ஆழத்தை சுட்டிக்காட்டுகிறது. இராஜபக்ஷ உழைக்கும் மக்கள் மீது சிக்கன நடவடிக்கைகளை திணித்து வருகின்ற நிலையில், அவர் கடந்த கால் நூற்றாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் போது அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை தொழிலாள வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை.