World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greece: The Syntagma Square movement—no real democracy

கிரீஸ்: சிண்டாக்மா சதுக்க இயக்கம் - உண்மையான ஜனநாயகம் இல்லை

By Peter Schwarz
24 June 2011

Back to screen version

ஏதேன்ஸின் சிண்டாக்மா சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும்  ”சீற்றமுற்றவர்கள்” (“Indignants) குறித்து செய்திகள் சேகரிப்பது எளிதானது அல்ல. இந்த இயக்கத்தின் தன்மை என்ன இலக்குகள் என்ன என்பது குறித்து நமக்கு கூறக்கூடிய பொறுப்பான யாராவது ஒருவர் கிடைப்பாரா என்று நாங்கள் சுமார் ஒருமணி நேரம் தேடிப் பார்த்தோம், எந்த பலனுமில்லை.

முதலில் “தகவல்” என பெரிய எழுத்துகளில் மேலே போடப்பட்டிருந்த ஒரு தகவல்நிலையத்திற்கு நாங்கள் சென்றோம். ஆனால், இது வெறுமனே புதிய குழுக்களை எப்படி உருவாக்குவது மற்றும் ஒழுங்கமைப்பது என்பது குறித்த தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதாக மட்டுமே இருந்ததைக் கண்டோம். நாங்கள் இன்னொரு தகவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டோம், அங்கிருந்து அவர்கள் எங்களை  இன் ஊடக மையத்திற்கு அனுப்பினார்கள்.

சிண்டாக்மா சதுக்கத்தில் உண்மையான ஜனநாயகம் இப்போது (Real Democracy Now) அமைப்பின் பதாகை

சரி, நாம் இலக்கை அடைந்துவிட்டோம் என்று நினைத்துப் போனோம், ஆனால் அங்கேயிருந்த ஒரு பெண்மணி இயக்கத்தின் சார்பாகச் செயல்படுவதற்கு அல்லது பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, வழிநடத்தும் குழுவின்  உறுப்பினர்களுக்குக் கூட கிடையாது என்று நம்மிடம் கூறி விட்டார். வழிநடத்தும் குழு மற்றும் “மக்கள் மன்றத்தின்” (“Popular Assembly“) அன்றாட விவாதங்கள் மற்றும் முடிவுகளைப் பதிவு செய்வதும் அவற்றை இணையத்தில் பதிவிடுவதும் மட்டுமே ஊடக மையத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்த பணியாம்.

வழிநடத்தும் குழுவின் அமைப்பே அன்றாடம் மாறிக் கொண்டிருக்கிறது - ஒரு தடவை 50 பேர் இருந்தார்கள், இன்னொரு முறை 500 பேர் இருந்தார்கள். நமக்கு விவரங்கள் தேவை என்றால், நாம் வலைத் தளத்தை தொடர்பு கொள்ள வேண்டுமென்றும், அதில் பல விடயங்கள் வேறுமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இயக்கத்தின் தனிநபர்களை நாம் நேர்காணல் செய்யலாம், ஆனால் அவர்கள் பேசுவது அவர்களின் சொந்தக் கருத்தாகவே இருக்கும் என்றார் அவர். இந்த இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் இலக்கு குறித்து விவரங்கள் அளிக்கவோ, அதற்கு பொறுப்பெடுக்கவோ ஒருவருக்கும் விருப்பமில்லை. ஒளிந்து விளையாடும் இந்த விளையாட்டு தற்செயலானதல்ல. ”உண்மையான” அல்லது “நேரடி ஜனநாயக”த்தின் கோட்பாட்டைக் குறிப்பிட்டுத் தான் இது நியாயப்படுத்தப்படுகிறது. அதன்படி எந்த அரசியல் பிரதிநிதிகள் அல்லது கட்சிகளின் மத்தியஸ்த வேலையும் இல்லாமல் முடிவுகளை மக்கள் நேரடியாக எடுக்க வேண்டும். உண்மையில் இது “சீற்றமுற்றோரின்” உண்மையான அரசியல் நோக்கங்களை மறைப்பதற்கே சேவை செய்கிறது. 

ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிக்கு சிண்டாக்மா சதுக்கத்தில் கூடும் “மக்கள் மன்றம்” என்கின்ற ஒன்று நெருக்கமாக அவதானித்தால் ஒரு கபடநாடகமாகத் தான் இருக்கிறது. போலி-இடதுகள் சிலவற்றால் ரஷ்ய சோவியத்துகளின் மறுஅவதாரமாகக் கொண்டாடப்படுகின்ற இவை உண்மையில் லண்டன் ஹைட் பார்க்கின் பேச்சாளர்களின் மூலையை (Speakers Corner) ஒத்ததாய் இருக்கின்றன. விவரிக்கமுடியாத கூச்சல் தான் அங்கு இருக்கிறது. பார்வையாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள். உரை நிகழ்த்துபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு வெறும் 30 விநாடிகள் கொடுக்கப்படுகிறது, அவர்கள் தங்களை அரசியல் போக்குகளின் பிரதிநிதிகளாய் கூடவும் அடையாளப்படுத்க்கூடாது. இந்த சூழ்நிலைகளின் கீழ், அரசியல் முன்னோக்குகளின் மீதான ஒரு தீவிர விவாதம் என்பது அதை பிரதிநிதித்துவப்படுத்துவது பற்றிய உண்மையான வாக்கெடுப்பினைப் போலவே சாத்தியமில்லாதது. இத்தகைய விடயங்கள் விரும்பத்தகாதவை. அந்த சதுக்கத்திற்கு தற்செயலாய் தலையைக் காட்டுபவர்கள் வாக்களிக்க தங்கள் கைகளை உயர்த்தலாம். தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளும் இல்லை அல்லது உத்தரவைப் பெற்ற பிரதிநிதிகளும் இல்லை; இது ஊடுருவலுக்கும் கைப்புரட்டு வேலைக்கும் தான் எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த வாக்கெடுப்புகளினதும் விவாதங்களினதும் உள்ளடக்கம் ஒழுங்கமைப்பு விடயங்களான அடுத்த ஆர்ப்பாட்டம் என்ன நேரம், எங்கு போன்ற பிரச்சினைகளையே சுற்றி வருகின்றன. கிரீஸின் அரசாங்கக் கடனை அடைப்பதற்கான மாற்று மாதிரிகள் அல்லது ஒரு புதிய அரசியல்சட்டத்திற்கான ஆலோசனைகளும் கூட கலந்துரையாடப்படலாம். ஆனால் ஒட்டுமொத்தமாய் அரசியலைப்போல ஒரு நன்கு சிந்தித்த மூலோபாயம் என்பதே ஒரு தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.

இதன் பிரதிநிதிகள் இயக்கத்தின் அரசியலற்ற தன்மையாக கருதப்படுவதைக் குறித்து தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இயக்கத்தின் தலைவர்கள் எங்கே என்று கேட்டால் ஒரே பதில் தான் எப்போதும்: “தலைவர்கள் கிடையாது, சாதாரண மக்கள் மட்டுமே”. ஆனால் உண்மையில் இந்த இயக்கம் ஒரு நனவான அரசியல் சித்தாந்தத்தையும் முன்னோக்கையும் கொண்டிருக்கிறது. அரசியலை நிராகரிப்பதென்பது ஒரு மாறுபட்ட முன்னோக்கு குறித்த, அல்லது இன்னும் துல்லியமாய் கூறுவதென்றால், ஒரு சோசலிச முன்னோக்கு குறித்த எந்த விவாதத்தையும் தடுத்து விடுகிறது.

சிண்டாக்மா சதுக்கத்தின் வழியே கடந்து செல்கின்ற குறைந்தளவு அரசியல் அனுபவம் கொண்டிருக்கக் கூடிய எவரொருவரும் கூட இந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் கைதேர்ந்த அரசியல்வாதிகள் என்பதைத் துரிதமாய்க் கவனித்து விடுவார்கள். அவர்கள் பேரளவில் SYRIZA, ANTARSYA போன்ற போலி-இடது அமைப்புகளில் இருந்தும் அவற்றுக்குள்ளான போக்குகளில் இருந்தும் தான் வருகிறார்கள், தங்கள் அரசியல் அடையாளத்தை திறம்பட மறைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நம்பகமான தகவல்கள் நமக்கு உறுதிப்படுத்தின.

ஜேர்மன் இடது கட்சியுடன் இணைந்த அமைப்பான Synapsismos இன் ஒரு முன்னணி உறுப்பினர் Yiannis Bournous ஒரு நேர்காணலில் பெருமிதம் பொங்கக் கூறினார்: “சதுக்கங்களில் நடைபெறும் இயக்கத்தில் இணைவதற்கு உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், மற்றும் அனுதாபிகளுக்கும் அழைப்பு விடுத்த முதல் கட்சியாக நாங்கள் இருந்தோம்.”

SYRIZA இன் செய்தித் தொடர்பாளரான Stratos Kersanidis எங்களிடம் உறுதி செய்தார்: “எங்கள் அனைவருக்குமே சிண்டாக்மா சதுக்க இயக்கம் ஆச்சரியம் அளித்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட இது பெரிதாய் இருந்தது. ஆனால் நாங்கள் உடனடியாய் எங்கள் ஆதரவை வழங்கினோம்...நாங்கள் எப்போதும் அங்கே இருக்கிறோம்...இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறோம்.”

கிரேக்கத்தின் போலி-இடது அமைப்புகள் SYRIZA மற்றும் ANTARSYA உடன் நெருக்கமாய் இணைந்து வேலை செய்கின்றன. ஜேர்மனியில் SAV உடனும் இங்கிலாந்தில் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்படுவதான தொழிலாளர் அகிலத்திற்கான குழு (CWI) என்கிற அமைப்பின் கிரேக்கப் பிரிவு சற்று காலம் முன் வரை SYRIZA உடன் இணைந்த குழுக்களில் (இதில் Synaspismos முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது) ஒன்றாய் இருந்தது. சர்வதேச சோசலிசப் போக்கு (IST) மற்றும் பப்லோவாத ஐக்கிய செயலகம் (United Secretariat)  ஆகியவற்றின் கிரேக்கப் பிரிவு தான் ANTARSYA இல் தீவிரப் பங்குபெற்றிருக்கும் பகுதியாகும்.

இந்த அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இடது முதலாளித்துவ அரசியலில் அனுபவமிக்க நடைமுறையாளர்கள். இவர்கள் PASOK உடன் தங்களது சொந்த இணைப்புகளைக் கொண்டுள்ளதோடு சர்வதேச அளவிலும் நெருக்கமாய் வேலை செய்கின்றனர். ஜேர்மனியில் நாடாளுமன்றத்தில் இவர்களுக்குப் பிரதிநிதிகள் உண்டு என்பதோடு அவர்கள் கிரீசுக்கான புதிய நோக்கத்துடனான சிக்கன நடவடிக்கைகளை ஆர்வம்பொங்க ஆதரிக்கின்ற அரசாங்கம் மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். பிரான்சில் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி சிலகாலமாக அரசியல் ஸ்தாபகத்தின் முன்னணி வட்டாரங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது. இவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டிருக்கக் கூடியவர்கள். இவர்கள் எல்லோரும் ஒரே சர்வதேசக் கூட்டங்களில் தோற்றமளித்து வருவதோடு ஒரே செய்தி ஏடுககளுக்காகவே எழுதி வருகின்றனர்.

பாதி அரசிலாக்கோட்பாட்டாளர்களின் (பாதி-அராஜகவாத) சிந்தனைகள் மற்றும் ஜனநாயகப் பிரமைகளின் அத்தனை வகைகளும் சிண்டாக்மா சதுக்கத்தில் கூடியிருக்கும் சாதாரணக் காரியாளர்களிடையே காணத்தக்கதாய் இருக்கிறது.

அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரமோ அரசாங்கமோ அல்ல, மாறாகஒவ்வொரு தனிநபரும் தங்களை மாற்றிக் கொள்வதற்கான பொறுப்பை உணர்வது தான் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும் என்று நிகோஸ் என்கிற வேலைதேடும் கணிதவியல் அறிஞர் நம்மிடம் தெரிவித்தார். கடன் நெருக்கடிக்குஊழல் அரசியல்வாதிகள் தான் முக்கியக் காரணம் என்று அவர் கருதினார் என்றாலும், பல சாதாரண மக்களும் கூட கடனைப் பெற்றுள்ளனர், அவர்களும் கொஞ்சம் பொறுப்பாகின்றனர். ”சீற்றமுற்றோரின் இலக்கானநேரடி ஜனநாயகத்திற்கான மாதிரியாக நிகோஸ் சர்வதேச நிதி மூலதனத்தின் கோட்டையாக சேவை செய்கின்ற ஒரு நாடான சுவிட்சர்லாந்தை  உதாரணமாக காட்டினார்.

கடன் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைக்கும் ஒரு அரசியல்சட்டத் திருத்தமும் சமூக சூழ்நிலையை மேம்படுத்துவதுமே இந்த இயக்கத்தின் பிரதான இலக்குகள் என பரிமாறும் ஊழியராக வேலை செய்யும் டிமிட்ராஸ் தெரிவித்தார். இதற்கு ஒரு அரசாங்கம் தேவையில்லையாம், மாறாக குழுக்களும் பிரச்சாரங்களுமே வேண்டுமாம். “அரசியலில் என்ன நடக்கிறது என்பதில் எங்களுக்கு அக்கறையில்லை, விடயங்களை நாங்களாகவே மாற்றிக் கொள்ள விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார். பழங்காலத்தில் கிரீஸ் தான் ஐரோப்பிய நாகரிகத்தின் தொட்டிலாய் இருந்தது. “இப்போது கிரீஸ் தான் ஐரோப்பா முழுவதற்குமான நேரடி ஜனநாயகத்துக்கான மாதியாக ஆகும் என்று அவர் முடித்தார்.

இந்தக் குழப்பமான காரியாளர்களைப் போலல்லாமல், போலி இடது அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் மிக நனவுடன் இருக்கிறார்கள். சென்ற வருடத்தில் இவர்கள் ஆளும் PASOK அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்து கொண்டிருந்த தொழிற்சங்கங்களை ஆதரித்தனர். இப்போது தொழிற்சங்கங்கள் மதிப்பிழந்து போய், PASOK தனது வெகுஜன ஆதரவை இழந்திருக்கும் நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குசீற்றமுற்றோரின் பின் மறைந்து கொள்கின்றனர்.

அரசியல் வேண்டாம் என்பதே ஒரு அரசியல் வேலைத்திட்டம் தான், அதிலும் ஒரு இழிவான வகைப்பட்டதாகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உண்மையான இடதுசாரி முன்னோக்கிற்கு எதிராக இது பிரத்யேகமாய் செலுத்தப்படுகிறது. இதுதான் பிரதமர் பாப்பான்ரூவை அதிகாரத்தில் பராமரிக்கிற ஒரு அதிமுக்கியக் காரணியாகும். இந்தசீற்றமுற்றோரின் எதிர்ப்பினை அடையாள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சீர்திருத்தவாதப் பிரமைகளுடன் மட்டுப்படுத்துகின்ற வரை, பாப்பான்ட்ரூ சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து திணித்துக் கொண்டிருக்க முடியும்.

முடிவில்லாத மற்றும் பலன்தராத போராட்டங்கள், சிந்தனை அலை மாறி கடுமையாய் பாதிப்புற்ற குட்டி முதலாளித்துவப் பிரிவுகள் தீவிர வலதுக்கு மாறும் அபாயத்தையும் கொண்டிருக்கவே செய்கின்றன. இந்த விடயத்தில் சிண்டாக்மா சதுக்கத்தில் தேசியவாத அடையாளங்கள் காட்சியளிப்பது ஒரு எச்சரிக்கை ஆகும். தொழிலாள வர்க்கம் பொதுமக்களது வாழ்க்கையை முடக்கி, ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறனற்றதாய் நிரூபணமானால், தீவிரமயப்பட்ட குட்டி முதலாளித்துவ வர்க்கமானது வலதுநோக்கி நோக்குநிலை பெற்று, ஒரு இரும்புக்கரத்துக்கு அழைப்பு விடும் என்பதை வரலாற்று அனுபவம் திரும்பத் திரும்பக் காட்டியிருக்கிறது.

கிரீசுக்கு வலதுசாரி சர்வாதிகாரங்கள் பற்றிய ஒரு நெடிய வரலாறு இருக்கிறது, கடைசியாய் இராணுவ ஆட்சிக்குழு நாற்பதுக்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் ஆட்சியில் இருந்தது என்கின்ற நிலையிலும் கூட, நாங்கள் பேசிய போலி-இடது கட்சிகள் அனைத்தின் பிரதிநிதிகளுமே ஒரு இராணுவ சர்வாதிகார அபாயத்தினை உதாசீனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி SYRIZAவின் செய்தித் தொடர்பாளரான Kersanidis முன்வைத்த வாதங்கள் சிடுமூஞ்சித்தனமானவையும் அற்பத்தனமானவையும் ஆகும். ஆளும் வர்க்கத்திற்கு இனியொரு சர்வாதிகாரம் அவசியமில்லை என்றும் ஏனென்றால் எப்படியாயினும் அவர்கள் தான் ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றனர், அரசியல்சட்டத்திற்கு நேரெதிரான முடிவுகளைத் தான் நாடாளுமன்றம் எடுத்துக் கொண்டிருந்தது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நிதி மூலதனத்தால் உத்தரவிடப்படுகிற பாப்பன்ட்ரூவின் சிக்கன வேலைத்திட்டம் அடையாள ஆர்ப்பாட்டங்களாலும் பொது அரங்க விவாதங்களாலும் நிறுத்தப்பட்டு விட முடியாது. சமீபத்து மாதங்களின் அனுபவம் இதனை மிகத் தெளிவாய்க் காட்டுகிறது. தொழிற்சங்கங்களால் அழைப்பு விடப்பட்ட 15 ஒருநாள் பொது வேலைநிறுத்தங்கள் எல்லாம் பாப்பன்ட்ரூ அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட வெட்டுகளை நிறுத்தியிருக்கவில்லை, அதேபோல்சீற்றமுற்றோரின்ஆர்ப்பாட்டங்களும் அதைச் செய்ய முடியவில்லை.

பாப்பன்ட்ரூவின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு நன்கு சிந்தித்த, சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கும் மற்றும் ஒரு அனுபவம் வாய்ந்த தலைமையும் கொண்ட சக்திவாய்ந்த ஒரு தொழிலாளர் கட்சிக்கு அழைப்பு விடுகிறது. நடப்பு ஆட்சியை தூக்கியெறிவதும், ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதும், அத்துடன் இந்தப் போராட்டத்தினை ஐரோப்பா முழுமைக்கும் நீட்டிப்பதுமே ஒரு சமூகப் பேரழிவை தடுக்க முடியும். ஆனால் அத்தகையதொரு முன்னோக்கினை இந்தசீற்றமுற்றோர் ஆவேசமாய் நிராகரிக்கின்றனர்.