World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Greece faces new austerity package

புதிய சிக்கனப் பொதியை கிரேக்கம் எதிர்கொள்கிறது

By our correspondents in Athens                 
21 June 2011

Back to screen version

சமீப நாட்களில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஏதென்ஸில் நடைபெறும் பரபரப்பான அரசியல் தந்திர உத்திகள் ஒரு புதிய சுற்று வங்கி பிணை எடுப்புக்கள் மற்றும் சமூகநலக் குறைப்புக்களை பேரழிவிற்கு உட்பட்டுள்ள கிரேக்க மக்கள் மீது சுமத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தன.

2010 வசந்தக் காலத்தில் கிரேக்க அரசாங்கம் டிரோய்கா (முக்கூட்டு) என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய மத்திய வங்கி (EBC) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றில் இருந்து 110 பில்லியன் யூரோக்கள் கடனைப் பெறுவதற்காக  ஏற்கனவே கடுமையான சிக்கன நடவடிக்கைகள் பற்றி முடிவெடுத்து இருந்தது. இந்தச் சிக்கன நடவடிக்கைகள் பரந்த சமூகப் பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்களைப் பெரிதும் குறைத்து, வேலையின்மையை உயர்த்தியதோடு ஓர் ஆழ்ந்த மந்த நிலையையும் தூண்டி விட்டன.

இப்பொழுது அரசாங்கம் 2015க்குள் 28.4 பில்லியன் யூரோக்களைச் சேமிப்பதற்கு (6.4 பில்லியன் யூரோக்கள் இந்த ஆண்டு) மற்றொரு சிக்கனப் பொதியை நாடுகிறது. மேலும் அரச நிறுவனங்களை விற்பதின்மூலம் மற்றும் ஒரு 50 பில்லியன் யூரோக்களைப் பெறவும் இது விரும்புகிறது.

2010ன் சிக்கன நடவடிக்கைகளுக்கே பரந்த எதிர்ப்புக்கள் இருந்தன. ஆனால் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக PASOK அரசாங்கம் தொழிற்சங்கங்களின் உதவியுடன் அதன் திட்டத்தைச் செயல்படுத்த முடிந்தது. தொழிற்சங்கங்கள் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி அவற்றை பயனற்ற ஒரு நாள் எதிர்ப்புக்கள் என்ற வரம்பிற்குள் உட்படுத்தின.

ஆனால் இப்பொழுது மற்றொரு சேமிப்புத் திட்டம் பற்றிய அறிவிப்பு மக்கள் உணர்வில் மாபெரும் மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. முன்பு PASOK க்கு வாக்களித்தவர்கள் பலர் பெரும் தயக்கத்துடன் வெட்டுக்கள் தவிர்க்க முடியாத, தற்காலிகத் தேவை என்று ஏற்றுக் கொண்டனர். இப்பொழுது தொடர்ச்சியான சமூகச் சரிவு என்ற முடிவில்லாத பள்ளத்தில் தாங்கள் தள்ளப்படுகிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இரண்டாவது சிக்கனப் பொதிக்குப் பரந்த எதிர்ப்பு இதையொட்டி வந்துள்ளது.

Public Issue ஆய்வுப் பயிலகம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின் முடிவு, ஒரு வாரம் முன்னர் வெளியிடப்பட்டது, ஆளும் கட்சிக்கான ஆதரவு பெரிதும் சரிந்துவிட்டதைக் காட்டுகிறது. PASOK கடந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 44 சதவிதம் பெற்றிருந்தது. இப்பொழுது அதற்கான ஒப்புதல் விகிதம் 27% என்று சரிந்துவிட்டது. விடையளித்தவர்களில் 10க்கு 9 பேர் நாடுதவறான பாதையில் செல்கிறதுஎன்று நினைக்கின்றனர். 80 சதவிகிதத்தினர் தங்கள் வாழ்க்கையில்அதிருப்திஅடைந்துள்ளனர், 70 சதவிகிதத்தினர் தங்கள் சொந்த பொருளாதார நிலை வரவிருக்கும் மாதங்களில் தொடர்ந்து சரியும் எனக் கவலைப் படுகின்றனர்.

கன்சர்வேடிவ் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகம் (ND) PASOK விற்கு முன்னால் 31% ஆதரவுடன் உள்ளது. ஆனால் ND யும் நெருக்கடியில் இருந்து ஆதாயம் எதையும் பெற்றுவிடவில்லை. வாக்களித்தவர்களில் 92% அரசாங்கத்திடம் அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கையில் 88% எதிர்க்கட்சியுடனும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்துவதற்கு பலரும் தெருக்களில் வந்து ஆர்ப்பரிக்கின்றனர். ஒவ்வொரு மாலையும் பாராளுமன்றத்திற்கு எதிரேயுள்ள சின்டகமா சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிச் சிக்கனப் பொதிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர். ஜூன் 5ம் திகதி நூறாயிரக்கணக்கான மக்கள் தொழிற்சங்கத்தின் பிடியில் என்று இல்லாமல் தன்னிச்சையாக ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். இதில் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் முன்னாள் PASOK க்கு வாக்களித்தவர்களும் அடங்குவர்.

ஐரோப்பிய ஒன்றியம் தெருக்களிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது என்று கிரேக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. திங்கள் அதிகாலை வரை கூடிப் பேச்சு நடத்திய யூரோப் பகுதியின் நிதி மந்திரிகள் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள 110 யூரோ பில்லியன் கடனின் அடுத்த தவணையை கிரேக்கப் பாராளுமன்றம் புதிய சிக்கனப் பொதிக்கு இசைவு கொடுத்தால்தான் கொடுக்க முடியும் என்ற நிபந்தனையை போட்டுள்ளனர். ஜூலை நடுப்பகுதிக்குள் 12 பில்லியன் யூரோக்கள் கொடுக்கப்படாவிட்டால், கிரேக்கம் அரச திவால் நிலையை எதிர்கொள்கிறது.

கொள்கை அளவில் இன்னும் ஒரு 120 பில்லியன் யூரோ நிதிப் பொதி, தற்பொழுதுள்ள கடனுக்கு அடுத்தாற்போல் கொடுப்பதற்கு நிதி மந்திரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். புதிய பொதியில் பாதி புதிய கடன்கள் என்ற வடிவத்தில் இருக்கும், கால் பகுதி தனியார்மயமாக்கப்படுதல் மூலம் கிடைக்கும், எஞ்சிய கால்பகுதி தனியார் துறையின் அளிப்புக்களில் இருந்து பெறப்படும். நிபந்தனைகள் ஜூலையில் இறுதிசெய்யப்படவுள்ள இப்பொதியும் நிபந்தனை அற்ற முறையில் திட்டமிடப்படும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால்தான் கொடுக்கப்படும்.

முக்கூட்டின் இறுதி எச்சரிக்கையைச் செயல்படுத்துவதற்குப் பிரதம மந்திரி பாப்பாண்ட்ரூ தன்னால் இயன்றதைச் செய்துள்ளார். இரண்டாவது சிக்கனப் பொதியையும் பாராளுமன்றத்தில் பல அரசியல் உத்திகளைப் பயன்படுத்தி இயற்றிவிட்டார். PASOK 300 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 5 வாக்குகள் கூடுதல் என்ற நிலையில்தான் பெரும்பான்மையைக் கொண்டுள்ளதுஇப்பெரும்பான்மையும் பெருகிய முறையில் பல தனிப்பட்ட PASOK பிரதிநிதிகளின் ஊசலாடும் தன்மையினால் இடருக்கு உட்பட்டுள்ளது.

கடந்த வாரம் கன்சர்வேடிவ் ND உடன் இணைந்த ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கத்தயார் என்று பாப்பாண்ட்ரூ கூறினார். அக்கட்சியோ இரு ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் இருந்து அகற்றப்பட்டது. தன்னுடைய அரசாங்கத் தலைவர் என்னும் பதவியைக் கூட சிக்கனப்பொதிக்குத் தேவையான தெளிவான பெரும்பான்மையை அடையக் கைவிடத்தயார் என்றும் அவர் அறிவித்தார்.

ND யின் தலைவர் அன்டோனிஸ் சமரஸ் இக்கோரிக்கையை உடனடியாக நிராகரித்து முன்கூட்டிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாப்பாண்ட்ரூமக்கள் செல்வாக்கு பெறுவதற்காக நாடகம் ஆடுவதாகவும்”, “ஒருமித்த கருத்துஎன்ற பெயரைச் சுற்றி இது நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நம்பிக்கைத் தீர்மானத்தின் முடிவு எப்படி இருந்தாலும், அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை நிரந்தரமாக இழந்துவிட்டது, இது இனி மாற்றப்பட முடியாததுஎன்று அவர் கூறினார்.

மக்களைத் திருப்தி செய்யும் வகையில் சமரஸும் முக்கூட்டுடன் கடன் விதிகள் பற்றி மறு பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். ஆனால் ND சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கிறது என்பது நன்கு அறியப்பட்டுள்ளதோடு அது தனியார்துறைக்கு துன்பம் நேராமல் இருப்பதற்காக, பொதுப்பணிகள் மற்றும் சமூகநலச் செலவுகள் மீதான தாக்குதல்களையும் உண்மையில் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆதரவும் கொடுக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சீற்ற அலையில் அதிகாரத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது என்று சமரஸ் காண்கிறார் என்பது வெளிப்படை. அப்படித்தான் போர்த்துக்கல்லில் கன்சர்வேடிவ்கள் வெற்றிபெற்றனர்.

தன் வேண்டுகோளை சமரஸ் நிராகரித்தபின், பாப்பாண்ட்ரூ தன்னுடைய அமைச்சரவையை மாற்றி அவருடைய மிக முக்கியமான கட்சிப் போட்டியாளர் Evangelos Venizelos ஐ புதிய நிதி மந்திரியாக நியமித்தார். வக்கீலான வெனிஜெலோஸிற்கு அதிக பொருளாதாரத்துறை அனுபவம் கிடையாது. ஆனால் தொழிற்சங்கங்களுடன் நல் உறவுகள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நிதி அமைச்சரகப் பொறுப்பு இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளமையானது PASOK க்குள் உள்ள உட்கட்சி பூசல்களை தீர்க்கும் வழிவகை என்பது வெளிப்படை.

வெனிஜெலோஸ் தான் தன் ஆற்றல் முழுவதையும் சிக்கன நடவடிக்கைகளை மக்களுக்கு எதிராகச் செயல்படுத்துவதில் செலவழிக்க உள்ளதைத் தெளிவுபடுத்தினார். அவர் இப்பொழுதுஉண்மையான போரில்நுழைந்துள்ளதாக அவர் கூறினார். இது முன்பு அவர் பாதுகாப்பு மந்திரிப் பதவியை வகித்தது பற்றிய குறிப்பு ஆகும்.

ஞாயிறு முதல் ஒரு மூன்றுநாள் பாராளுமன்ற விவாதம் சிக்கனப் பொதி பற்றி நடந்து கொண்டிருக்கிறது. இது செவ்வாயன்று பாப்பாண்ட்ரூ மீது நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்புடன் முடியும். அரசாங்கத் தலைவருக்கு எதிராக PASOK பிரதிநிதிகள் வாக்களிப்பர் எனக் கருதுவது இயலாத ஒன்றாகும். அது புதிய தேர்தல்களுக்கு வழிவகுக்கும். நம்பிக்கை வாக்கின் விளைவை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அதன் பின் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இரண்டாவது சிக்கனப் பொதிக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்ற விவாதம் தொடங்கியபோது, பாப்பாண்ட்ரூ தேசிய ஒற்றுமைக்கான தன் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். “திடீரென திவாலாதல் அல்லது யூரோப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுதல் என்பதில் விளைவுகள் கிரேக்க குடும்பங்கள், வங்கிகள், நாட்டின் நம்பகத் தன்மை ஆகியவற்றிற்குப் பேரழிவு தரும்என்று அவர் அச்சுறுத்தினார். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்பூசலிடுவதை இந்த நெருக்கடியான நேரத்தில் நிறுத்த வேண்டும். நாடு சிதைவு பெறுகிறது என்ற தோற்றத்தைக் கொடுப்பதை நிறுத்த வேண்டும்என்று அவர் முறையிட்டார்.

இலையுதிர்காலத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இது அரசாங்கத்தில் ஊழல் இருப்பதை நன்கு கண்காணிக்கும் வகையில் இருக்கும். ஆனால் தீவிர வலதுசாரி LAOS கட்சித் தலைவர்கள்தான் ஒரு ஐக்கிய அரசாங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

 

ND தலைவர் சமரஸ் புதிய தேர்தல்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். இதே கோரிக்கைதான் கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) மற்றும் SYRIZA எனப்படும் தீவிர இடது கூட்டணியினாலும் எழுப்பப்பட்டுள்ளது. இவை இரண்டும் சமீப மாதங்களில் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்திற்கு வரும் எதிர்ப்பைச் சமாதானப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. ஆனால் பாராளுமன்ற உத்திகள் எவற்றையும் காட்டிலும் முக்கியமானது Aganaktismeni அல்லது  சீற்றமுற்றவர்கள்  என அழைக்கப்படுபவர்களின் பங்குதான் சிக்கனப் பொதிக்கு எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த இயக்கம்எகிப்திய தஹ்ரிர் சதுக்கம், ஸ்பெயினின் Puerta del Sol இயக்கங்களின் மாதிரியில் நடப்பதுமூன்று வாரங்களுக்கு சின்டக்மா சதுக்கத்தில் கூடார முகாம்களை நிறுவியது. இது தன்னை சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான முன்னணி எதிர்ப்பை நடத்தும் அமைப்பு என்று காட்டிக் கொள்கிறது. ஆனால் அதன் உண்மைப் பங்கு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க இயக்கம் வளர்ச்சியுறுவதை தடுப்பதுதான்.

இந்த இயக்கம் ஸ்தாபனமயப்பட்ட அரசியல் கட்சிகள் பரந்த அளவில் நிராகரிக்கப்படுவதைப் பயன்படுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் சின்டக்மா சதுக்கத்திற்குள் வருவதை தடைக்குட்படுத்தப்பட வேண்டும்இடது மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள்கூடஎன்று செய்துள்ளது. இத்தகைய தணிக்கை முறையைநேரடி ஜனநாயகம் என்ற பெயரிலும்மக்கள்தீர்மானிப்பர் என்ற அடிப்படையிலும் அது நியாயப்படுத்தியுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளுக்கு வரவேற்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இது, வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னோக்குகள் என்று காத்திரமான ஜனநாயக விவாதங்களிலும் உள்ள சாரத்தைப் பற்றிய விவாதத்தைத் தடுத்து விடுகிறது. பங்கு பெறுபவர்கள் சிக்கனப்பொதி பற்றி தங்கள் சீற்றத்தை வனப்புரையாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தொழிலாள வர்க்கம் பாப்பாண்ட்ரூ அரசாங்கத்தை அகற்றுவதற்குத் தொழிலாளர்கள் அரசாங்கம் நிறுவப்படுவது என்னும் ஒரு அரசியல் மூலோபாயத்தை பெறுவது பற்றிய விவாதம் முற்றிலும் தடைக்கு உட்பட்டவை ஆகும்.

இத்தடையை செயல்படுத்த யார் முடிவெடுத்தது என்று கேட்கப்பட்டதற்கு இப்பொழுது இது ஓரளவிற்கு கடினத்தன்மை குறைந்துள்ளதுகுட்டி முதலாளித்துவ இடது குழு உறுப்பினர் ஒருவர் விடையிறுத்தார்: “அமைப்புக் குழு”. இக்குழுவில் யார் உள்ளனர் என்று வினவப்பட்டதற்கு அதே நபர் கூறினார்; “இடது அமைப்புக்கள், SYRIZA, ANTARSYA உட்பட இடது அமைப்புக்கள் பலவற்றின் உறுப்பினர்கள்.”

இதன் பொருள் இந்த இரு அமைப்புக்களில் ஈடுபாடுடைய போலி இடதுப் பிரிவுகள் தங்கள் அரசியல் நோக்கங்களை வெளிப்படையாக அறிவித்து, விவாதிப்பது பற்றிய வாய்ப்பை தாங்களாவே கொடுத்துள்ளனர் என்பதாகும். ஏனெனில் கணிசமான காலமாக இந்த அமைப்புக்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் தொழிற்சங்கத்தின் மீதான கட்டுப்பாட்டின் கீழ் தாழ்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. அதையொட்டி அவை PASOK உடன் நெருக்கமான தொடர்பு உடையவை. இப்பொழுது பெருகிய முறையில் தொழிற்சங்கங்கள் மற்றும் PASOK யில் இருந்து அகன்றுள்ள நிலையில், இவை நேரடி ஜனநாயகம் என்ற பெயரில் சோசலிச முன்னோக்குகளுக்கான போராட்டத்தை நிராகரிக்கின்றனர்.