World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

NATO bombs kill Libyan civilians in Tripoli

திரிப்போலியில் லிபிய பொதுமக்களை நேட்டோ குண்டுகள் கொல்கின்றது                 

By Peter Symonds 
20 June 2011
Back to screen version

ஞாயிறு அதிகாலையில் திரிப்போலியில் ஒரு தொழிலாள வர்க்க புறநகரில் நேட்டோ நடத்திய வான்தாக்குதலில் ஏராளமான பொதுமக்களைக் கொன்று, காயப்படுத்தியது. முந்தைய லிபிய பொதுமக்கள் இறப்புக்கள் பற்றிய சான்றுகளை உதறித்தள்ளியிருந்த மேலைச் செய்தியாளர்கள் அத்தலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் ஒரு ஒன்பது மாதக் குழந்தை, ஒரு சிறுவன் உட்பட குறைந்தபட்சம் ஐந்து சடலங்களை பார்த்ததையும் உறுதிப்படுத்தினர். குறைந்தது இன்னும் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், மற்றும் ஒரு 18 பேர் காயமுற்றனர் என்று லிபிய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

நியூ யோர்க் டைம்ஸ் கொடுத்த தகவலில்: “இப்பகுதியில் இராணுவ நிலையம் இருப்பதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. குழந்தைகளின் காலணிகள், உள்ளணிகள், ஒரு பெண்ணின் உடை, சமையலறைக் கருவிகள் ஆகியவை ஞாயிறு அதிகாலை சேதக்குவிப்பில் காணப்பட்டன. கட்டிடத்தின் மேற்பகுதியை குண்டுத்தாக்குதல் வெடிக்கசெய்து சீமெந்து படிக்கட்டுக்கள் வெறும் வானத்தை நோக்கி நிற்பதுதான் தெரியவந்துள்ளது. கட்டிடத்தில் இருந்த சில கார் நிறுத்தும் இடங்கள் சரிந்து உள்ளே இருந்த கார்கள் நசுக்கப்பட்டன. ஒரு கட்டிடத்திற்கு அப்பால் வசிக்கும் நபர் ஒருவர் செய்தியாளர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து சன்னல்கள், கதவுகளில் இருந்து உடைந்து நொருங்கி விழுந்த கண்ணாடித் துண்டுகளைக் காட்டி அவருடைய மனைவி இவற்றினால் காயமுற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பின்வருமாறு எழுதுகிறது: “பைஜாமாக்கள், செருப்புக்கள் அணிந்த நூறுபேருக்கும் மேலானவர்கள் இடர்பாடுகள் நிறைந்த தெருக்களின் அதிகாலை நேரத்தில் கூடினர். தன்னார்வ தொண்டர்கள் இறந்தவர்கள் அல்லது தப்பிப் பிழைத்தவர்களை தேடுவதற்காக பெரும் சீமெந்து குப்பைகளை அகற்றினர். தேடுதல் தொடர்ந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டது. பெரிய சீமெந்து பகுதிகளையும், முறுக்கப்பட்ட மின்கம்பிகளையும் புல்டோசர்கள் அகற்றின. குழந்தைகளுடைய ஆடைகள் இடிபாடுகளிடையே காணப்பட்டன.”

லிபிய ஆட்சியிடம் அரசியல் ஆதரவுகொடுக்காத ஒரு நபர் செய்தியாளரிடம் கூறினார்: “இது முற்றிலும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி ஆகும். (லிபியத் தலைவர் முயம்மர்) கடாபி எவ்வளவு விரைவில் அகற்றப்படுகிறாரோ, அந்த அளவிற்கு நன்மை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால் இது போன்ற தெரு ஒன்றின் மீது குண்டுவீச்சை நேட்டோ நடத்துவது குற்றச் செயல் ஆகும். இங்கு எந்த இடத்திலும் இராணுவம் இல்லை.” தலைநகரில் Souq al-Juma என்னும் புறநகர்ப்பகுதியில் தொழிலாள வர்க்கம் வசிக்கும் இடத்தில் அல்-கஹ்ரி என்பவரின் பெரிய குடும்ப அங்கத்தவர்கள் வாழும் இல்லம்தான் தாக்கப்பட்டது.

நேட்டோவின் செய்தித் தொடர்பாளர்கள் அதன் போர் விமானங்கள் ஒரு பொதுமக்கள் வாழும் பகுதியைத் தாக்கியிருக்கக் கூடும் என்பதை ஒப்புக் கொண்டனர். “நாங்கள் பொதுமக்கள் இறப்பை மிகவும் கவனத்துடன் எடுத்துக் கொள்ளுவோம், இந்நிகழ்ச்சி பற்றிய உண்மைகளை நன்கு ஆராய்வோம்.” என்று ஞாயிறு பின்னர் வெளிவந்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்த நேட்டோப் பணியின் தலைமைத் தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் சார்லப்ஸ் பௌச்சார்ட்ஆயுதங்களின் இயக்கசெயற்பாடு தோல்வி ஏற்பட்டதை அடுத்துஇது நிகழ்ந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.

இதேபோல் மேலைச் செய்தி ஊடகம் இறப்புக்களின் முக்கியத்துவதைக் குறைக்கும் வகையில் இத்தாக்குதலில்தான் பொதுமக்கள் உயிர்கள் முதன்முதலாகப் பறிக்கப்பட்டது என்று கூறுகிறது. ஆனால் இதுவரை உயிரிழந்த 11,000 லிபியக் பொதுமக்களில் இது ஒன்றுதான் நேட்டோ தாக்குதலினால் ஏற்பட்டது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.

முந்தைய தினம் ஒரு நேட்ட வான்வழித்தாக்குதல் கடாபி எதிர்ப்பு படைகளைச் சேர்ந்த டாங்குகள், இராணுவ வாகனங்கள் வரிசை ஒன்றைத் தாக்கியது; அப்பிரிவோ கிழக்கே உள்ள எண்ணெய் நகரமான ப்ரேகாவிற்கு அருகே முன்புறம் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயம் அடைந்தனர். குறைந்தது இன்னும் இருநட்புரீதியான தாக்குதல்(friendly fire) நிகழ்வுகளும் சமீப வாரங்களில் நடந்துள்ளன.

தன்னுடைய லிபிய நட்புப் படைகளையே நேட்டோ தாக்குகிறது என்றால், இதேபோன்றதவறுகளைஅது அதிக மக்கள் உடைய லிபியத் தலைநகரான திரிப்போலியிலும் செய்துதான் கொண்டிருக்கும். அங்கு லிபிய இராணுவத்துடன் தொடர்பு உடைய எதுவும் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு இலக்கு எனக் கொள்ளப்படுகிறது. குண்டுத்தாக்குதலின் குற்றம் சார்ந்த தன்மை பல முறை கடாபி இல்லங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில், லிபியத் தலைவரையும் அவருடைய உறவினர்களையும் கொல்லும் முயற்சிகளில் எடுத்துக்காட்டப்படுகிறது.

லிபிய அரசாங்கம் வான் தாக்குதல்களால் உயிரிழந்த குடிமக்களின் எண்ணிக்கையை 800க்கும் மேல் என்று கூறியுள்ளது. சமீபத்தில் ஒரு நேட்டோ குண்டுத்தாக்குதல் ஒரு தங்கும்விடுதியை தகர்த்தது, மற்றொன்று திரிப்போலிக்கு தென் மேற்கே ஒரு பஸ்ஸைத் தாக்கி டஜன் மக்களைக் கொன்றது எனவும் அது கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும் பொதுமக்கள் இறப்புக்கள் வாடிக்கையாக அமெரிக்காவால் புறக்கணிக்கப்படது பற்றிய தகவல்களைப் போலவே, நேட்டோவும், மேலைச் செய்தி ஊடகத்தின் ஆதரவுடன், முந்தைய லிபியக் கூற்றுக்களைஅரசாங்கத்தின் பிரச்சாரம்என்று உதறித்தள்ளியுள்ளது.

லிபியாவின் செய்தித்தொடர்பாளர்கள் உடனடியாக நேட்டோ கூற்றுக்களில் கிட்டத்தட்ட நான்கு மாதமாக அது நடத்தும் வான் தாக்குதல்கள் பற்றிக் கூறப்படும் தகவல்களில் உள்ள அபத்தத் தன்மையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். சமீபத்திய தாக்குதல்கள் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை வெளியுறவு மந்திரி கலிட் கைம் கூறினார்: “பொதுமக்களை எவர் தாக்குகின்றனர் என்பதைக் காண்கிறோம். இவர்கள் வீடுகளையும் அடுக்கு இல்லங்களையும் இலக்கு வைக்கின்றனர். நாளை அவர்கள் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இலக்கு வைப்பர்.”

லிபியப் போர் ஒன்றும் பொதுமக்களைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. இது அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகள் வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் கொண்டுள்ள மூலோபாய, பொருளாதார இலக்குகளை மேம்படுத்தும் புது வகை காலனித்துவபோர் நடவடிக்கை ஆகும். இதன் இலக்கு கடாபியை அகற்றி, ஏகாதிபத்திய சக்திகள் நாட்டின் விசை வளங்களை சுரண்ட அனுமதிக்கும் மேலை சார்புடைய கைப்பாவை ஆட்சியை நிறுவுதல் ஆகும். அத்துடன் அப்பிராந்தியம் முழுவதும் புரட்சிகர இயக்கங்களை நசுக்குவதற்கு ஒரு தளத்தை அமைப்பதும் ஆகும்.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள பல முதலாளித்துவ ஆட்சிகளின் வெற்றுத்தன்மை கடந்த வார இறுதியில் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், OCI எனப்படும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் நன்கு வெளிப்பட்டது. இம்மாநாடு மோதலுக்குஓர் அரசியல் தீர்வுகாண்பதற்காக நடத்தப்பட்டது.

இந்த அமைப்புக்கள் அனைத்தும் நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு லிபியாவில் ஒரு மேலைச் சார்பு ஆட்சியை நிறுவ முயல்கின்றன; அதில் கடாபியின் முன்னாள் அமைச்சர்கள், இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் TNC எனப்படும் இடைக்கால தேசியக்குழு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட குழுவில் உள்ள நாடுகடந்து வசிக்கும் நபர்கள் ஆகியோர் உள்ளனர். கூட்டத்தில் இருந்து அனைவருடைய இழிந்த தன்மையும் ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி மூனின் கருத்துக்களில் சுருக்கமாக விளக்கப்பட்டது; அவர் லிபியாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமாகி வருவதைப் பற்றிவலுவான கவலைகளைத்தெரிவித்தார்; அதே நேரத்தில் இச்சூழ்நிலையை உருவாக்கியுள்ள குண்டுத்தாக்குதலுக்கு ஆதரவையும் கொடுத்துள்ளார்.

இந்த அமைப்புக்கள் ஒவ்வொன்றும், அவை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகுள் லிபியாவில் நடத்தும் குற்றங்களுக்குப் பொறுப்பாகும்.