World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind Obama’s Afghan withdrawal decision

ஆப்கானில் இருந்து திரும்பப்பெறும் ஒபாமாவின் முடிவுக்குப் பின்னால்

Bill Van Auken
21 June 2011
Back to screen version

2009 டிசம்பரில் ஜனாதிபதி ஒபாமா கூறியதைப் போல,  ”ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை நகர்த்துவதை ஆரம்பிப்பதற்கு”,  அவர் சுயமாக அமைத்துக் கொண்ட காலக்கெடுவான வருகின்ற ஜூலை மாதத்தில் எவ்வளவு படைகளை அவர் திரும்பப் பெறுவார் என்பது குறித்த முடிவை இந்த மாத இறுதியில் அவர் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரால் நாசமுற்று வரும் அந்த நாட்டிற்குள் கூடுதலாய் 33,000 துருப்புகளை “அதிகரிப்பதை” அறிவிக்கும் தனது உரையின் போது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார். ஜனநாயகக் கட்சி நிர்வாகம் 2009 ஆரம்பத்தில் அதிகாரத்தில் வந்தது முதல் ஆப்கானிஸ்தானிலான அமெரிக்க இராணுவப் படைகளின் அளவு மும்மடங்காகி இருக்கிறது. இப்போது அதன் எண்ணிக்கை சுமார் 100,000 என்கின்ற அளவில் இருக்கிறது. 

ஒபாமா அவ்வாறு கூறியதற்கு பிந்தைய இந்த ஒன்றரை ஆண்டுகளில், அவரும் பிற அமெரிக்க அதிகாரிகளும் இந்த 2011 ஜூலை காலக்கெடுவின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டவே முனைந்து வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமைகளினால் தீர்மானிக்கப்பட்டும் மற்றும் இராணுவத் தளபதிகளுடனான கலந்தாலோசனையின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படவிருக்கின்ற ஒரு நடைமுறையின் ஒரு ஆரம்பம் மட்டுமே அது என்று அவர்கள் அழுந்தக் கூறி வருகின்றனர்.

ஆனாலும், அமெரிக்க மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் போரை எதிர்க்கின்றனர் என்பதையும் ஏறக்குறைய முக்கால்வாசி மக்கள் “கணிசமான” அளவில் படைகளைத் திரும்பப் பெற விரும்புகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்ற நிலையிலும், தாயகத்தில் இரக்கமற்ற சமூகச் செலவின வெட்டுக்களுக்கு மத்தியில் ஒரு வாரத்திற்கு 2 பில்லியன் டாலர்களாக போர்ச் செலவுகள் பெருகிச் செல்வதுமான நிலையிலும், ஒட்டுமொத்தக் கவனமும் தவிர்க்கவியலாமல் இந்தக் காலக்கெடுவின் மீது குவிந்திருக்கிறது.

ஒரு அடையாளத்திற்கு உதவிப் படைகளின் சிறு எண்ணிக்கையை திரும்பப் பெறுவதோடு இதனை மட்டுப்படுத்திக் கொள்வதையும், ஆப்கானிஸ்தானில் களத்தில் இருக்கும் போர்புரியும் அமெரிக்கப்படையை குறைக்காமல் பராமரிப்பதையுமே தான் விரும்புவதை பென்டகன் தெளிவாக்கி விட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்க்கும் தலிபான் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் தங்கள் இராணுவத் தாக்குதலைத் தொடுக்கத் தயாராயுள்ள நிலையில் இந்த மற்றும் அடுத்த வருடத்தின் கோடைக்கால “சண்டையிடும் பருவங்களுக்கேனும்” படைகளை வைத்திருக்கும் நிலையை அது வலியுறுத்துகிறது. இந்த மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகவிருக்கும் பாதுகாப்புச் செயலரான ராபர்ட் கேட்ஸ், திரும்பப் பெறும் எண்ணிக்கை “ஓரளவானதாக” இருக்க வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா “வெளியேற அவசரம் காட்டக் கூடாது” என்றும் பகிரங்கமாக வலியுறுத்தி இருக்கிறார்.

குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் சிலர் உட்பட நாடாளுமன்றத்தின் முன்னணி உறுப்பினர்கள் படை திரும்பப் பெறலை துரிதப்படுத்த அழைப்பு விடுத்துள்ளனர். போர்புரியும் துருப்புகள் உட்பட 15,000 அமெரிக்க இராணுவப் படையினரை அடுத்த மாதம் திரும்பப் பெற வேண்டும் என்று செனட் ஆயுத சேவைகள் குழுவின் (Senate Armed Services Committee) தலைவராக இருக்கும் ஜனநாயகக் கட்சியின் மிச்சிகன் உறுப்பினரான செனட்டர் காரல் லெவின் ஆலோசனை கூறியுள்ளார்.

லெவினின் ஆலோசனை பின்பற்றப்பட்டாலும் கூட அதன்பின்னும் ஆப்கானிஸ்தானில் 85 சதவீத அமெரிக்கப் படை இருக்கவே செய்யும், 2009 ஆரம்ப காலம் முதல் இந்த நாட்டிற்கு ஒபாமா அனுப்பியிருக்கும் கூடுதலான 65,000 துருப்புகளில் முழுமையாக 50,000 துருப்புகள் அங்கு தான் இருக்கும்.

வாஷிங்டனில் அதிகம் அரங்குக்கு வராத இந்த விவாதத்தின் மீது ஊடகங்கள் தமது கவனத்தைக் குவித்துள்ள நிலையில், இந்த ஏறக்குறைய ஒரு தசாப்த காலப் போரின் உண்மையான நோக்கங்கள் குறித்த ஆழமான  பார்வையை வழங்கக்கூடிய இரண்டு தொகுதி பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அதிகாரிகள் திரைமறைவில் நடத்தி வருகின்றனர். 

தலிபான்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி வருவதை பாதுகாப்புச் செயலரான கேட்ஸ் ஞாயிறன்றான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உறுதி செய்திருக்கிறார். இந்த இஸ்லாமிய இயக்கத்தின் ஆட்சி தான் 2001 அக்டோபரில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அகற்றப்பட்டதாகும்.

அதே நேரத்தில், தலிபான்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் சர்வதேச தடைகளை அல் கொய்தா மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளில் இருந்து பிரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையையும் அமெரிக்கா நெருக்கி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரான சூசன் ரைஸ் இந்த நடவடிக்கையைப் பாராட்டினார். தலிபான்களுக்கு ”வருங்காலம் இருக்கிறது எனத் தெளிவான ஒரு செய்தியை கொடுக்கக் கூடியநல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு முக்கியமான கருவி என அவர் இதனைக் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக தலிபான் உறுப்பினர்கள் எனக் கூறப்பட்டு கொல்லப்பட்ட அல்லது சிறைப்பிடிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையை (இது அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கையுடன் சேர்ந்து மிகப் பெரியதாய் ஆனது) தெரிவிப்பதையே அமெரிக்க தளபதிகள் வேலையாகக் கொண்டிருந்தனர் என்பதை கொண்டு பார்த்தால், இந்த வருங்காலம் குறித்த வாக்குறுதி கொஞ்சமும் பொருந்தாமல் நிற்கிறது. சுமார் ஒரு தசாப்த காலமாக, அரசியல்வாதிகளானாலும் சரி தளபதிகளானாலும் சரி ஒன்றுபோல தலிபான்களையும் அல்கொய்தாவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்ததையும் ஒட்டுமொத்தப் போருமே பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகவும் அமெரிக்க மண்ணில் இன்னொரு 9/11 நிகழ்வதைத் தடுப்பதற்காகவுமே நிகழ்த்தப்பட்டு வருவதாக வலியுறுத்துவதையுமே அமெரிக்கப் பொதுமக்கள் கண்டு வந்திருக்கின்றனர்.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துவிட்டிருந்தாலும் கூட அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை தளர்த்தி விட்டதாக அர்த்தமில்லை என்பதையும் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். “தலிபான்கள் ஒரு உண்மையான பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதற்கு முன்பாய் அவர்கள் இராணுவ நெருக்குதலின் கீழ் உணர வேண்டும் மற்றும் தங்களால் வெல்ல முடியாது என்று நம்பத் தொடங்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று அவர் CNN இடம் கூறினார்.

இவ்வாறாக, அமெரிக்கத் துருப்புகள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கொல்லவும் கொல்லப்படவும் இருக்கின்றன, ஆனால் எதற்காக? அவர்கள் அமெரிக்காவைத் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதாக நாடகமாடுவதெல்லாம் எந்த நம்பகத்தன்மையையும் இழந்து விட்டது. பெண்டகனுக்கும் நேட்டோவுக்கும் ஆப்கான் மண்ணில் நிரந்தரமான இராணுவத் தளங்களுக்கு அனுமதி கிட்டுவதை உறுதி செய்கின்ற ஒரு மூலோபாயக் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஆதரவுடன் இயங்கி வரும் ஜனாதிபதி ஹமீது கர்சாயின் ஆட்சியுடனும் இன்னொரு பாதி இரகசியமானதொரு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. படைகளை திரும்பப் பெறுவதைப் பற்றிய பகிரங்க பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, இந்த திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை வைத்திருப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

சனிக்கிழமையன்று, இந்த மூலோபாய ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க தூதுக்குழு ஒன்று காபூலுக்கு வந்துசேர்ந்த சமயத்தில், ஜனாதிபதி கர்சாய் தொலைக்காட்சியில் ஆற்றிக் கொண்டிருந்த உரையில் அமெரிக்காவையும் அதன் நேட்டோ கூட்டாளிகளையும் தாக்கிக்கொண்டிருந்தார். “அவர்கள் தங்களது சொந்த நோக்கங்களுக்காகவும் தங்களது சொந்த இலட்சியங்களுக்காகவும் தான் இங்கே இருக்கிறார்கள், அதற்கு நமது மண்ணை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் கர்சாய். ஆப்கான் மக்களைக் கொல்வதற்காகவும் செறிவுகுறைந்த யுரேனிய ஆயுதங்களைப் பயன்படுத்துவது உள்ளடங்கலாக நாட்டின் சூழலை சீரழித்ததற்காகவும் ஆக்கிரமிப்புப் படைகளையும் அவர் கண்டனம் செய்தார்.

ஆப்கான் மக்களிடையே அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் படைகளுக்கு நிலவுகின்ற பெருமளவான வெகுஜன விரோதத்தின் ஒரு பரிதாபகரமான பிரதிபலிப்பே கர்சாயின் எதிர்ப்பு. இந்த விரோதம் தங்களை அழித்து விடக் கூடும் என்று இந்த கைப்பாவை ஜனாதிபதியும் அவரது கூட இருப்பவர்களும் நியாயமான பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதே சமயத்தில், தலிபான்களுடனான ஒருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் உட்பட, ஆப்கானிஸ்தானில் ஒரு நீண்டகால அமெரிக்க பிரசன்னத்திற்கு அமெரிக்கா முயற்சி செய்து வருகின்ற ஏற்பாடுகளில் கர்சாய் மற்றும் அவரது கூட்டத்தின் சேவைகள் தேவையற்றதாகபோலாம் என அவர்கள் பயந்து வருகின்றனர் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சிகளைப் போலவே, கர்சாயும் தன்னை அதிகாரத்தில் பராமரித்து வருகின்ற துருப்புகளையும் பணத்தையும் வழங்கும் அமெரிக்காவுக்கும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க மூலோபாய நோக்கங்கள் குறித்து அதிகமான அளவில் உன்னிப்பாய் எச்சரிக்கையுடன் கவனித்து வரும் அமெரிக்காவின் பிராந்திய எதிரிகளுக்கும் இடையில் சமப்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார்.

இவ்வாறாய், சென்ற வாரத்தில், கர்சாய் கசகஸ்தானில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization) கூட்டத்தில் பங்குபெற்றார். இங்கு இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் “சுதந்திரமான, நடுநிலையான” ஆப்கானிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. இது அந்நாட்டில் அமெரிக்க இராணுவப் பிரசன்னம் நீடிப்பதற்கான எதிர்ப்பின் ஒரு பிரகடனம் தான் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் போரிடுவதும் இறப்பதும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும் இல்லை அல்லது ஜனநாயகத்தை சாதிப்பதற்கும் இல்லை. இந்தப் போருக்கான உண்மையான நோக்கம் என்னவென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தனது மேலாதிக்கத்தை எரிசக்தி வளம் செறிந்த மத்திய ஆசியப் பகுதியில் முன்னெடுப்பதற்கும் இந்த இயற்கைச் செல்வத்தை மேற்கு நோக்கி திசைதிருப்புவதற்கான குழாய் பாதைகள் மீது தனது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்குமான நடவடிக்கைகளுக்கு ஒரு தளத்தைப் பாதுகாத்துக்கொள்வதுமாகும்.  

இந்த நோக்கத்தை 10 வருடப் போர் மற்றும் ஆக்கிரமிப்பில் சாதிக்கத் தோற்றிருக்கும் நிலையில், அமெரிக்காவானது இந்தப் பிராந்தியத்தில் தனது மூலோபாய எதிரிகளிடம் இருந்து, பிரதானமாக சீனா மற்றும் ரஷ்யாவிடமிருந்து, பெருகும் எதிர்ப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அழுக்குமிக்க காலனித்துவவகை போரினால் உருவாக்கப்பட்ட தீவிரமான பாதிப்பும் ஸ்திரமற்ற நிலையும் பூகோளம் முழுமைக்குமான உழைக்கும் மக்களுக்கு கணக்கிட முடியாத அபாயங்களைக் கொண்டுவரக் கூடிய பரந்ததொரு பிராந்திய மற்றும் உலக மோதலாகப் பரவும் அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.