சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Which way forward for the working class in Greece?

கிரீஸில் தொழிலாள வர்க்கத்துக்கு முன்னால் இருக்கும் பாதை என்ன?

Stefan Steinberg
15 June 2011

Use this version to print | Send feedback

கிரீஸில் சமூக ஜனநாயகக் கட்சி PASOK அரசாங்கத்தால் கோரப்படும் சமீபத்திய சமூக வெட்டுக்களை எதிர்த்து கிரீஸின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் வர்க்க நனவுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அரசியல் முன்னோக்கு குறித்த முக்கிய கேள்விகளை முன்வைக்கிறது.

2009ல் ஐரோப்பிய கடன் நெருக்கடி வெடித்தது முதலாக ஐரோப்பா முழுவதிலும் தொழிற்சங்க நிர்வாகிகளால் அழைப்புவிடுக்கப்பட்ட முந்தைய பல ஒருநாள் வேலைநிறுத்தங்களைப் போலவே இந்த வேலைநிறுத்தமும் வங்கிகளால் கோரப்படும் வெட்டுக்களை நிறுத்துவதற்கு எதுவும் செய்யப் போவதில்லை. இந்த விளக்கம் குறிப்பாக எகிப்தில் முபாரக்கும் துனிசியாவில் பென் அலியும் வெளியேற்றப்படுவதற்கு இட்டுச் சென்ற வெகுஜன எழுச்சிகளுக்குப் பின்னர் கிரீஸிலும் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பரந்த அடுக்குகள் இடையே பரவியிருக்கிறது.

ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் நிராகரிக்கின்ற இளைஞர்களின் பிரிவுகள் அதிகரித்துச் செல்வதையே ஸ்பெயினில் “சீற்றமுற்றவர்களின்” ஆர்ப்பாட்டங்களும் கிரீஸின் அகானாக்திஸ்மேனி (Aganaktismeni) ஆர்ப்பாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. ஜூன் 5 அன்று ஏதேன்ஸில் நடந்த ஒரு மக்கள் ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு எதிராகத் திரும்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இதில் அவர்கள் பங்குபெறுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றனர்.

முன்னைய வடிவத்திலான அரசியல் வாழ்க்கை மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டம் காலாவதியாகிவிட்டதான ஒரு உணர்வு அதிகரித்து வருகிறது. எகிப்தில், முபாரக் வெளியேறி விட்டால் இராணுவவாத ஆட்சி முடிந்து விட்டதாய் அர்த்தமல்ல, அல்லது மக்கள் இயக்கத்தை உருவாக்கிய அரசியல் மற்றும் சமூக அபிலாசைகளை அது பூர்த்தி செய்து விடவும் இல்லை என்று ஒரு ஆழமான விழிப்புணர்வு இருக்கிறது. மேலும் தீவிரமானதும் மற்றும் ஆழமானதுமான ஒன்று அவசியமாகிறது என்கிற உணர்வு பிரபலமான “இரண்டாம் புரட்சி”க்கான சுலோகத்தில் பிரதிபலிக்கிறது.   

ஸ்பெயினில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை உள்ளடக்கும் ஒரு தெளிந்த மூலோபாயமும் வேலைத்திட்டமும் இல்லாத ஆர்ப்பாட்டம் முட்டுச்சந்தியில் முடிவடைந்ததை மாட்ரிட்டின் Plaza del Sol இல் இருந்து 'சீற்றமடைந்தவர்கள்' பின்வாங்க நேர்ந்ததில் காணத்தக்கதாய் இருந்தது.

இரண்டு அபிவிருத்திகளுமே, வெவ்வேறு வழிகளில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஒரு புதிய அடிப்படையில் மாறுபட்டதொரு முன்னோக்கினால் வழிநடத்தப்பட வேண்டியிருப்பதற்கான அவசியத்தை சுட்டி நிற்கின்றன. கிரீஸிலும் சர்வதேசரீதியாகவும் கடந்த காலத்தின் அனுபவங்களை கவனமாக பகுத்தாய்ந்து பொருத்தமான அரசியல் முடிவுகளுக்கு வருவது அவசியமாகும்.

ஒரு வருட காலத்திற்கு முன்பாகத் தான் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் இருந்து வந்த 110 பில்லியன் டாலர் கடனை பொருளாதார வளர்ச்சிக்கு திரும்புவதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக கிரேக்க அரசாங்கம் காட்டியது. ஆனால் இந்தக் கடன்கள் எல்லாம் பெரும் வட்டி விகிதங்கள் கொண்டவை என்பதோடு தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீது குறிவைத்து சமூகச் செலவினங்களில் மிகப் பெரும் வெட்டுகள் செய்வதை நிபந்தனையாக்கின.

வளர்ச்சி பற்றிய வாக்குறுதிகள் எல்லாம் இருந்தபோதிலும் இந்த வெட்டுகளைத் திணித்தமை கிரேக்கப் பொருளாதாரத்தை ஒரு ஆழமான வீழ்ச்சிக்குள் தள்ளியது. பொருளாதாரக் சுருக்கத்தின் விகிதம் 2009ல் 2.3 சதவீதமாக இருந்ததில் இருந்து 2010ல் 4.0 சதவீதத்திற்குச் சரிந்தது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்கான கூர்மையான சரிவாகும். இந்தக் சுருக்கம் இந்த ஆண்டு மேலும் துரிதப்பட்டு, முதல் காலாண்டில் -5.5 சதவீதத்தை தொட்டிருக்கிறது. தொழிலாளர்கள் சராசரியாக தங்கள் வருமானத்தில் மலைப்பூட்டும் 30% அளவுக்கு இழந்திருக்கின்றனர் என்று கிரேக்கப் பொருளாதார அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.

மிருகத்தனமான செலவின-வெட்டு நடவடிக்கைகள் எல்லாம் எடுத்தும் கூட பொருளாதார வீழ்ச்சியானது கடனைத் திருப்பிச் செலுத்துவதை கிரீஸுக்கு சாத்தியமற்றதாக்கி இருக்கிறது. சென்ற வெள்ளியன்று, பிரதமர் ஜோர்ஜ் பாப்பான்ரூவின் அரசாங்கம் ஒரு புதிய சுற்று வெட்டுக்களையும் அரசுச் சொத்துகளை பெருமளவு விற்றுத் தள்ளுவதையும் அறிவித்தது.

இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவ வர்க்கத்திடமே எந்த உருப்படியான தீர்வும் இல்லை என்பதும் இந்த மந்தநிலை வெறுமனே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய சரிவு அல்ல. மாறாக உலக முதலாளித்துவத்தின் ஒரு அமைப்புமுறை செயலிழப்பு என்பதுமான யதார்த்தத்தை அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் பெரும் கடன் கொண்ட பிற நாடுகளிலும் மீண்டும் உருவாக்கப்படும் கிரீஸிலான அனுபவம்  அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் வடிவத்தில் நிற்கிற சர்வதேச நிதி உயரடுக்குக்கு கிரீஸ் அடிபணிந்து செல்வது தொழிலாள வர்க்கத்தை ஒரு பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஆனால் கிரீஸில் உள்ள தேசியவாதிகளால் முன்வைக்கப்படுகின்ற மாற்றான ஐரோப்பிய பொது நாணய மதிப்பில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு மறுபடியும் முன்னாள் கிரீஸ் நாணயமான டிராச்மாவுக்குத் திரும்புவது என்பது அதேஅளவுக்கு பெருங்கேடானதே. இதன் விளைவு மிகப்பெரும் பணவீக்கத்தைக் கொண்டுவந்து மக்களை நாசம் செய்து விடுவதாக இருக்கும். இது 1923ல் ஜேர்மனி முழுக்க வீசிய உயர்பணவீக்க குழப்ப நிலை போன்றதொரு காட்சியாக இருக்கும்.

சமூகச் சொத்துகளை வரலாற்று அளவில் ஒரு சிறுபான்மை நிதி உயரடுக்கின் கரங்களில் ஒப்படைக்கும் பணியை சர்வதேச நிதி மூலதனம் ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆளும் அடுக்கிற்கு, வேலைவாய்ப்பற்றவர்களுக்கான நல உதவிகள், ஓய்வூதியங்கள், இலவசக் கல்வி போன்ற போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் மேற்கில் அபிவிருத்தி செய்யப்பட்ட சமூகப் பாதுகாப்பு வடிவங்கள் எல்லாம் இலாபத்தில் சகிக்க முடியாது வீணாகச் செல்லும் பகுதியைக் குறிக்கின்றன. ஒரு நூற்றாண்டுக் காலத்தில் கடுமையான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் பாதையில் வென்றெடுத்த இந்த நலன்கள் எல்லாம் இப்போது மொத்தமாய் துடைத்தழிக்கப்பட இருக்கின்றன.

கிரீஸிலும் சர்வதேசரீதியாகவும் நிதி உயரடுக்கு மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள், தொழிலாள வர்க்கத்தின் மீதான அவற்றின் பொருளாதார மற்றும் சமூகத் தாக்கத்தில், 1980களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் நடந்தேறிக் கொண்டிருந்த முதலாளித்துவ மீட்சிக்கு இடையே சோவியத் ஒன்றியத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார “அதிர்ச்சி வைத்திய”த்தை ஒத்திருக்கின்றன.

அந்த நடவடிக்கைகள் எல்லாம் 1920கள் மற்றும் 1930களில் சோவியத் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறித்து நூறாயிரக்கணக்கில் சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியை தலையாய்க் கொண்டிருந்த போல்ஷிவிக்குகளின் ஒரு ஒட்டுமொத்த தலைமுறையையும் படுகொலை செய்த ஸ்ராலினிச அதிகாரத்துவ ஆட்சியின் எதிர்ப்புரட்சிகரக் கொள்கைகளின் உச்சகட்டமாய் இருந்தவை.

கோர்பசேவ் மற்றும் அவருக்குப் பின் யெல்ட்சின் ஆகியோரின் கீழான அதிகாரத்துவம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு வேலை செய்து 1917 புரட்சியால் நிலைநாட்டப்பட்ட தேசியமயப்பட்ட தொழிற்துறையில் எஞ்சியிருந்தவற்றையும் அகற்றியதோடு முதலாளித்துவ சந்தை உறவுகளை அறிமுகம் செய்தது.

அதன் விளைவு ஒரு பெரும் சமூகக் கேடாய் இருந்தது. பொருளாதார வாழ்வு துரிதமாய் சிதறிப் போனது, அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் எல்லாம் பெரும்பொட்டலமாய்க் கட்டப்பட்டு அடிமட்ட விலைக்கு விற்கப்பட்டன, இது ரஷ்யாவின் கொள்ளைக்கார ஒரு சிலவராட்சியின் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது. வாழ்க்கைத் தரங்கள் நிலைகுலைந்ததோடு சமூக ஏற்றத்தாழ்வில் ஒப்பிடமுடியாத ஒரு அதிகரிப்பு நேர்ந்தது. 1990களின் மத்தியில், மக்களின் ஆயுட்கால எதிர்பார்ப்பு இரண்டாம் உலகப் போர் சமயத்தின் போது இருந்ததை விடவும் கீழாகச் செல்லும் அளவுக்கு அங்கு வாழ்க்கைத்தரங்கள் வீழ்ச்சி கண்டிருந்தன.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகரக் காட்டிக்கொடுப்பில் இந்த இறுதிக்கட்ட காட்சியானது, சமூக ஜனநாயகக் கட்சிகள், கம்யூனிஸ்டுக் கட்சிகள் அத்துடன் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை கொண்ட பழைய தொழிலாளர்' அதிகாரத்துவங்கள் அனைத்தினாலும் செய்யப்பட்ட சீரழிவு மற்றும் காட்டிக்கொடுப்பு என்னும் விரிந்த நிகழ்வுப்போக்கின் பாகமாக அமைந்ததே

இப்போது ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பொருளாதார நெருக்கடி வெடித்துள்ள நிலையில், முதலாளித்துவ தாக்குதலுக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை திட்டமிட்ட வகையில் கட்டுப்படுத்தவும், தணிக்கவும், கழுத்தை நெரிக்கவும், அத்துடன் இந்தத் தாக்குதல்களைத் தொடுக்கின்றதும் மக்கள் எதிர்ப்பை பிரயோசனமற்ற ஆர்ப்பாட்டங்களுடன் மட்டுப்படுத்த முனைகின்றதுமான அரசாங்கங்களை பாதுகாக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வேலை செய்து வந்திருக்கின்றன. தேசிய அரசாங்கங்களுக்கு “நெருக்குதல்” கொடுப்பதாக அவை கூறிக் கொண்டாலும் உண்மையில் அவை வங்கிகள் விரும்பும் கொள்கைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கு நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளான கிரீஸில் SYRIZA , பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி, ஸ்பெயினில் முதலாளித்துவ-எதிர்ப்பு இடது போன்றவற்றின் முக்கியமான ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த அமைப்புகள் தொழிலாள வர்க்க எதிர்ப்பினை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” கட்சிகளின் பின்னால் திசைதிருப்பி விடுவதற்கு தமது அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிக்கின்றன.

அவற்றின் அவ்வப்போதான புரட்சிகர வாய்வீச்சுகள் எல்லாம் இருந்தபோதிலும், இந்த அமைப்புகள் எல்லாம் சோசலிசப் புரட்சியையும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தையும் எதிர்க்கின்றன. தமது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஏகாதிபத்திய எதிரிகள் மற்றும் ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலான வளர்ச்சியுறும் நாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தேசியப் போட்டித் திறனை அதிகரிக்க ஒரு அத்தியாவசியமான நடவடிக்கையாக இவ்வெட்டுகளை அவை ஆதரிக்கின்றன.

இந்த நெருக்கடிக்குத் தேசியத் தீர்வு ஒன்றும் கிடையாது. ஐரோப்பாவிலும் சர்வதேசரீதியாகவும் உண்மையான பிரிக்கும் கோடு நாடுகளுக்கு இடையில் இல்லை, மாறாக வர்க்கங்களுக்கு இடையில் தான் இருக்கிறது.

கிரேக்க மக்களை “சோம்பேறிகள்” என்றும் “தங்கள் வசதிக்கு மீறி வாழ்பவர்கள்” என்றும் அவதூறு செய்கிற ஊடகப் பரப்புரைகளை ஐரோப்பா முழுவதுமிருக்கும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் இதேபோன்ற பேரழிவூட்டும் தாக்குதல்களை தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுக்க நெருக்குதலளித்து வருவதால், ஐரோப்பிய மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதே அடிப்படையான பதிலிறுப்பாக அமைய வேண்டும்.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு நெருக்குதல்கொடுப்பது அல்லது அதிகாரத்தை ஆளும் உயரடுக்கின் ஒரு பிரிவிடம் இருந்து இன்னொரு பிரிவிற்கு மாற்றுவது ஆகியவையெல்லாம் தொழிலாள வர்க்கத்திற்கு முன் செல்வதற்கான எந்த வழியையும் வழங்கவில்லை.

தொழிலாளர்களது சமூக உரிமைகள் மீதான சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதல் அரசியல் அதிகாரம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கும் தொழிலாள வர்க்கம் நிகழ்த்தக் கூடிய போராட்டம் மட்டும் தான் வங்கிகளின் தாக்குதலை எதிர்ப்பதற்கான ஒரே வழியாகும். இதற்கு சோசலிசத்திற்கான ஒரு உலகப் போராட்டத்தில் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவது அவசியமாகும்.

இது தான் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்னும் முன்னோக்கில் சுருங்கக் கூறப்பட்டிருக்கும் வேலைத்திட்டமாகும். இதற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடி வருகிறது.