சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Turkish Prime Minister Erdogan wins third term

துருக்கிய பிரதம மந்திரி எர்டோகான் மூன்றாவது முறை வெற்றி பெறுகிறார்

By Peter Schwarz 
14 June 2011

Use this version to print | Send feedback

ஞாயிறன்று நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகானின் கட்சி எதிர்பார்த்தபடி வெற்றி அடைந்தது. 87% வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்த நிலையில், பழைமைவாத இஸ்லாமிய நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) மொத்த வாக்குகளிலும் சற்றே பாதிக்குமேல் பெற்றது. 2007 தேர்தலில்  இது 46%, 2002 தேர்தலில் 34% எனப் பெற்றிருந்தது.

ஆனால் AKP 550 பாராளுமன்ற இடங்களில் 367 ல் வெற்றிபெற வேண்டும் என தானே நிர்ணயித்திருந்த இலக்கை அடைய முடியவில்லை. மூன்றில் இரு பகுதிப் பெரும்பான்மை அதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பு பற்றி முடிவெடுக்க உதவியிருக்கும். புதிய பாராளுமன்றத்தில் 326 பிரதிநிதிகளைக் கொண்டுள்ள நிலையில், ஒரு புதிய அரசியலமைப்பை முன்வைக்கப் பாராளுமன்றத்தில் தேவைப்படும் 330 எண்ணிக்கையிலும் (பின் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும்) 4 குறைவாகக் கொண்டுள்ளது.

1982 இராணுவ ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு பதிலாக ஒரு ஜனாதிபதி முறையைக் கொண்ட வேறு ஒரு அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டத்தை எர்டோகான் கொண்டிருந்தார். அது அவருக்கு அவருடைய மூன்றாம் மற்றும் இறுதி பதவிக்காலம் முடிந்த பின்னரும் ஒரு சர்வாதிகார ஜனாதிபதியாக ஆட்சியிலிருக்க உதவியிருக்கும்.

AKP வாக்குப் பதிவு சதவிகிதத்தில் பெற்ற வாக்குகளுக்கும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள வேறுபாடு துருக்கியத் தேர்தல் சட்டத்தின் விளைவு ஆகும். இது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட இருக்கும் கட்சிகளுக்கு 10 சதவிகிதத் தடையைக் கொடுக்கிறது. தீவிர வலதுசாரி MHP (Nationalist Movement Party) 10 சதவிகித நுழைவுத்தடையை தாண்டாது என்று எர்டோகான் நம்பியிருந்தார். அது AKP க்கு குறைந்த பட்சம் இன்னும் 30 இடங்களைக் கொடுத்திருக்கும்.

தேர்தலுக்குச் சற்று  முன்னர் சில அனாமதேய ஒளிப்பதிவு நாடாக்கள் MHP அரசியல்வாதிகள் ஒவ்வாத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைக் காட்டிய வகையில் வெளிப்பட்டன. இந்த ஒளிப்பதிவு நாடாக்கள் மூலஆதாரம் AKP ஐச் சுற்றி இருந்த எவரோ அல்லது பொலிஸில் அரசாங்கச் சார்புடைய வட்டங்களிலோ இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் MHP இறுதியில் பாராளுமன்றத்தில் 54 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மொத்த வாக்குப் பங்கு 18ல் இருந்து 13 என்று குறைந்தாலும், அது 10 சதவிகித தடையைவிட அதிகமாகவே பெற்றது.

ஆனால், மிக அதிக எண்ணிக்கை உடைய எதிர்க்கட்சியான கெமாலிய CHP (Republican People’s Party) தன் வாக்குப் பங்கைக் கணிசமாக உயர்த்திக் கொண்டுள்ளது. இதன் பங்கு 21ல் இருந்து 26% என அதிகமாயிற்று. புதிய பாராளுமன்றத்தில் இது 135 இடங்களைக் கொள்ளும். இதன் புதிய தலைவர் கெமால் கில்லிக்டரோக்லு கட்சிக்கு இன்னும் தெளிவான சமூக-ஜனநாயகவாத உருவை அளித்துள்ளார். இவருக்கு முன்பு தலைவராக இருந்த டெனிஸ் பேகலின் கீழ் இது இராணுவத்தின் குரலை எதிரொலிக்கும் அமைப்பாக தாழ்ந்திருந்தது.

குர்திஷ் BDP (அமைதிக்கும் ஜனநாயகத்திற்குமான கட்சி) யும் தெளிவான வெற்றிகளை அடைந்தது. இதன் வேட்பாளர்கள் வாக்குகளில் கிட்டத்தட்ட  7 சதவிகிதத்தைப் பெற்றனர். பாராளுமன்றத்தில் இக்கட்சி இப்பொழுது 35 இடங்களைக் கொண்டிருக்கும். முன்னர் 20 இடங்களைத்தான் பெற்றிருந்தது. தேர்தலில் சுயேச்சைகளாக அவர்கள் போட்டியிட்டதால், 10% நுழைவுத் தகுதி அவர்களுக்குப் பொருந்தவில்லை.

தன்னுடைய அறுதிப் பெரும்பான்மைக்கு AKP செல்வம் படைத்த வணிகர்களுடைய ஆதரவை பெற்றிருந்தது ஒரு காரணமாகும். அதேபோல்அனைவருக்கும் வளமைஎன்ற அதன் உறுதிமொழியும் ஒரு காரணம் ஆகும். 2003ல் எர்டோகான் அரசாங்கப் பொறுப்பை எடுத்துக் கொண்டபோது நாடு பொருளாதார அளவில் மிக மோசமாக இருந்தது. மூன்று இலக்க பணவீக்கம் மற்றும் 2001ல் நடந்த பொருளாதாரச் சரிவு மத்தியதர வகுப்பின் சேமிப்புக்களைத் தகர்த்து, கணக்கிலடங்கா மக்களின் வாழ்க்கை வழிவகையையே பாதித்திருந்தது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் சுமத்திய கடினமான நிபந்தனைகளை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது.

எர்டோகானுடைய ஆட்சியில் துருக்கிப் பொருளாதாரம் பின்னர் வலுவான வளர்ச்சியைக் கண்டது. சராசரி தனிநபர் தலா வருமானம் மூன்று மடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு, பொருளாதார உற்பத்தி 9% வளர்ச்சி அடைந்தது. உலகில் 17வது பெரிய பொருளாதாரமாக துருக்கி விளங்கத் தொடங்கியது. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் எர்டோகான் இந்த மீட்பு தொடரும் என்று உறுதிமொழி கொடுத்து, பல பெரும் திட்டங்களையும் அறிவித்தார். உதாரணமாக ஒரு 50 கிலோமீட்டர், 150 மீட்டர் அகல கால்வாய் போஸ்போரஸைக் கடக்கும் வகையில் கட்டமைக்கப்படும் என்றார். அதைத்தவிர வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க பல துணை நகரங்கள் கட்டமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் துருக்கியப் பொருளாதாரம் இன்னும் தீவிர உறுதியற்ற தன்மையில்தான் உள்ளது. 2009ல் இது பொருளாதாரச் செயற்பாடுகள் சர்வதேச நெருக்கடியின் விளைவாக 14% ஆல் குறைந்தது.

நாட்டில் சமூக மற்றும் அரசியல் பிளவுகள் ஆழ்ந்த தன்மையில் உள்ளன. வேலையின்மை விகிதம் 9% க்கும் மேல் உள்ளது. தொழில்துறை வளர்ச்சி அடைந்த மேற்குப்புறத்திற்கும் பெரும்பாலும் விவசாயம் மற்றும் வளர்ச்சியில்லாத கிழக்குப் பகுதிக்கும் இடையே பரந்த இடைவெளி உள்ளது. இது தீர்க்கப்படாத குர்திஷ் பிரச்சினையிலும் வெளிப்பட்டுள்ளது.

தன்னுடைய அரசியல் போக்கை 1970 களில் இஸ்லாமிய முகாம்களில் எர்டோகான் ஆரம்பித்தார். 1990 களில் இஸ்தான்புல்லின் நகரசபை தலைவர் என்ற முறையில் அவர் வறிய பகுதிகளில் குறிப்பாக அனடோலியாவில் இருந்து புதிதாக வந்து குடியேறியவர்களிடையே ஓரளவு செல்வாக்கைப் பெற்றார். 2001ல் அவர் இஸ்லாமிய பொதுநலக் கட்சியில் இருந்து முறித்துக் கொண்டு பிற முன்னாள் உறுப்பினர்களுடன் சேர்ந்துகொண்டு AKP நிறுவினார்.

அனடோலிய முதலாளித்துவம்என்ற அழைக்கப்பட்டோரின் குரலாக AKP மாறியது, அதாவது, கெமாலிய ஆளும்பிரிவால் நலன்களைப் பெறாதவர்கள் என்று உணர்ந்த துருக்கியப் பெருவணிகப் பிரதிநிதிகளின் குரலாகியது. எர்டோகான் பதவியில் இருந்த முதல் ஆண்டுகளில் கெமாலியவாதிகள் மற்றும் இராணுவத்துடனும் அதிகாரப் போட்டி மேலோங்கியிருந்தது. இவை பொருளாதாத்தின் பெரும் பிரிவுகளையும் அரசாங்கத்தின் கருவிகளில் பலவற்றையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தன. இதற்குக் காரணம் மாபியா அமைப்புக்களின் நிலைப்பாடுதான். 2008ல் எர்டோகான் ஐந்து ஆண்டுகள் ஏற்கனவே அரசாங்கத்தில் தலைவராக இருந்த நிலையில் அவை இன்னமும் நீதித்துறையைப் பயன்படுத்தி AKP தடைக்கு உட்படுத்த முயன்றன.

கெமலியவாதிகளுடன் போராடுகையில், எர்டோகன் மக்களின் பரந்த அடுக்குகளுக்கு அழைப்புவிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். நீதித்துறை மற்றும் இராணுவத்துடன் செயற்படுகையில் அவர் தன்னை ஒருஜனநாயகவாதிஎன்று காட்டிக்கொண்டு, தாராளவாத அறிவுஜீவிகளின் ஆதரவைப் பெற்றார். பின்னர் அவர் இராணுவத்தின் செல்வாக்கைக் குறைப்பதில் இறுதியில் வெற்றி அடைந்தார். இதற்கிடையில் பல தளபதிகள் சிறையில் உள்ளனர். பல சலுகைகளை ஒடுக்கப்பட்ட குர்திஷ் சிறுபான்மையினருக்கும் அவர் கொடுத்தார்; நீண்டகாலமாக குர்திஷ் மொழிபயன்பாடு மீதிருந்த தடையை அகற்றினார். ஆனால் உத்தியோகபூர்வ மொழி என்னும் அதன் பயன்பாடு இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

அனடோலிய முதலாளித்துவம் குறுகிய காலத்தில் எழுச்சி பெற்றது. நாட்டின் பல செல்வம் படைத்த முதலாளிகளான, எரிசக்தி ஆலைகள், சொகுசு மாளிகைகள் மற்றும் வணிக வளாகங்கள், கட்டமைப்புக்கள் ஆகியவற்றை நடத்தும் நஹிட் கைலர், செய்தி ஊடக தொழிலதிபர் அஹ்மெட் காலிக் ஆகியோர் எர்டோகானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர்.

துருக்கியில் உருவாகிவருவது ஒரு சிறந்த கூட்டாகும்என்று Die Zeit கருத்துக் கூறியுள்ளது; “AKP புதிய வணிகக் குழுக்களின்--அரசியல் பாதுகாவலர்கள் என்ற முறையில் இது நிகழ்ந்துள்ளது; வணிகச்சீமான்களும் வணிகச்சீமாட்டிகளும் AKP க்கு ஆதரவு கொடுக்கும் குழுக்களாக வெளிப்பட்டுள்ளனர். சமயம் ஒன்றும் அவர்களைப் பிணைக்கவில்லை; ஆனால் வளர்ச்சிச் சார்பு உடைய சிந்தனைப் போக்குத்தான்.ஒன்று மதிக்கப்படுகிறது, மற்றொன்றின்மீது நட்பு செலுத்தப்படுகிறதுமாலையில் சூடான தீயைச் சுற்றி அமர்கையில், ஒரு கோப்பை பழச்சாற்றினை ஒன்றாகக் கூடி அருந்துகின்றனர்.”

பழைய கெமாலிய ஆளும்பிரிவினரை தனக்கு ஆதரவாக எர்டோகான் திருப்பியபின், அவர் பெருகிய முறையில் சர்வாதிகாரப் போக்கைத்தான் காட்டியுள்ளார். பிரச்சாரத்தின்போது இதுதான் இடைவிடாமல் கூறப்பட்ட கருத்து ஆகும். செய்தியாளர்களும் விஞ்ஞானிகளும் அரசாங்கத்தைக் குறைகூறுபவர்கள் அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர், பல்கலைக்கழகப் பதவிகள் கட்சிச் சார்பை ஒட்டித்தான் கொடுக்கப்படுகின்றது என்று தெரிவிக்கின்றனர்.

குர்திஷ் பிரச்சினையிலும் எர்டோகன் மாறிய போக்கைக் கொண்டுள்ளார். 2007 தேர்தல் பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவர் பின்வருமாறு கூறினார்: “குர்திஷ் பிரச்சினை என் பிரச்சினையும் ஆகும்.” இப்பொழுது அவர், துருக்கியில் இனி குர்திஷ் பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டார். குர்திஷ் பகுதிகள் இன்னும் வறுமையில் வாடுகின்றன, குர்திஷ் அரசியல்வாதிகள் பொலிஸ் மற்றும் நீதித்துறையின் தொடர்ந்த தாக்குதலுக்கு உட்பட்டுள்ளன என்ற போதிலும் இந்நிலைப்பாடு தொடர்கிறது.

எர்டோகனின் சர்வாதிகார உந்துதல்கள் சில ஐரோப்பிய வர்ணனையாளர்கள் கூறுவதுபோல் தனிப்பட்ட குணநலன்களின் விளைவு அல்ல. அவர்கள் இவரை முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போல் ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்த விரும்புவதற்காக ஒப்பிடுகின்றனர். AKP அதன் சமீபத்திய தேர்தல் வெற்றிகளுக்கு உயர்ச்சியடையக்கூடிய செழிப்பு என்னும் உறுதிமொழியைக் காரணமாக காட்டுகின்றது. ஆனால் துருக்கிய பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி அடையக்கூடிய சூழ்நிலை விரைவில் முடிவிற்கு வந்துகொண்டிருக்கிறது. அவருடைய சர்வாதிகார போக்கினால் எர்டோகான் வருங்கால வர்க்கப் போராட்டங்களுக்குத்தான் தயாரிப்பு செய்கின்றார்..

சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியால் ஆகக்குறைந்தது தன்னை பிராந்திய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள துருக்கி ஒரு வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்பை கொண்டிருக்கின்றது. கெமலியவாதிகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் தாழ்ந்துநடந்து, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையை தொடர்ந்திருந்த நிலையில், எர்டோகானும் அவருடைய வெளியுறவு மந்திர அஹ்மெட் தவுடோக்லுவும் பழைய ஓட்டோமன் பேரரசின் தன்மை உடைய முனைப்பான வெளியுறவுக் கொள்கைகளை வளர்த்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போரில் அமெரிக்க தலையீடு, துருக்கிய வெளியுறவுக் கொள்கையில் சில உத்திகளைக் கையாள இடமளித்துள்ளது. தன் நேட்டோ அங்கத்துவத்தன்மையை முறித்துக் கொள்ளாமலும், அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவப் பிணைப்புக்களை முறித்துக் கொள்ளாமலும், வெளியுறவு மந்திரி தவுடோக்லுஉங்கள் அண்டை நாடுகளுடன் சிறிதும் பிரச்சினைகள் இல்லைஎன்று முத்திரையிடப்பட்டுள்ள பாதையைத் தான் அங்காரா தொடர்கிறது என்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவத்தன்மையையும் அங்காரா நாடியுள்ளதுடன், இஸ்ரேலுடன் நெருக்கமான அரசியல் மற்றும் இராணுவ உறவுகளைக் கொண்டுள்ளது.  அதே நேரத்தில் ஈரான், சிரியா, சவுதி அரேபியா, எகிப்தி மற்றும் வளைகுடா ஷேக் ஆட்சிகளுடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. AKP யின் இஸ்லாமியப் பின்னணியில் இருந்தும் எர்டோகான் பயன் பெற்றுள்ளார்.

சமீபத்தில் மத்திய கிழக்கில் பெருகியுள்ள அழுத்தங்கள் இப்பொழுது இக்கொள்கையை கீழறுக்கின்றன. துருக்கி இஸ்ரேலுடன் கொண்டுள்ள உறவுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த காசாப் போருக்குப் பின் கணிசமாக நலிந்தன. இப்பொழுது சிரியாவுடன் வெளிப்படையான மோதல் என்ற பிரச்சனை உள்ளது; ஏனெனில் அசாத்தின் ஆட்சி துருக்கிய எல்லைக்கு அருகே எதிர்த்தரப்பினரைச் சுட்டுக் கொன்றுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் துருக்கிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பாரசீக வளைகுடாமீது ஆதிக்கம் பற்றிய அதிகரித்துவரும் மோதலும் இரு புறத்திலும் நல்ல உறவுகளைக் கொள்வதில் துருக்கிக்கு இடர்பாடுகளைக் கொடுத்துள்ளது. தன் பங்கிற்கு வாஷிங்டன் பெருகிய முறையில் நேட்டோ அங்கத்துவ நாடுகள் அமெரிக்காவின் பக்கம் முழுமையாக ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அங்காராவின் லிபியப் பூசலில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள், கடாபியிடன் சமரசத்திற்கான முயற்சி ஆகியவை வாஷிங்டனின் சீற்றத்திற்கு உட்பட்டன

எர்டோகனும் அவரைப் பாராட்டுபவர்களும் AKP யின் சமீபத்திய தேர்தல் வெற்றியை ஒரு முறியாத வெற்றியின் தொடர்ச்சி என்று காட்ட முற்படுகின்றனர்; இதில் துருக்கிஐரோப்பாவின் சீனாஎன்று காட்ட முற்படுகிறது (Economist). உண்மையில் இது ஒரு திருப்பு முனையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. துருக்கி வன்முறைமிக்க சமூக எழுச்சிகள் மற்றும் பிராந்திய மோதல்கள் ஆகியவற்றைத்தான் எதிர்கொள்ளுகிறது.