World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Mounting concerns about China’s slowing growth

சீனாவின் குறைவான வளர்ச்சி தொடர்பாக பெருகும் கவலைகள்

By John Chan
9 June 2011
Back to screen version

சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைவடைந்து வருகிறது என்பதற்கான அடையாளங்கள் வந்துள்ளன. இது பொருளாதார வர்ணனையாளர்களையும் பங்குச் சந்தைகளையும் உலகளவில் சமீபத்திய வாரங்களில் பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) அதனுடைய சீன உள்நாட்டு மொத்த உற்பத்திக்கான வளர்ச்சிக் கணிப்பை 2011ல் 9 சதவிகிதம் என்று திருத்திக் கொண்டது. இது 9.7 சதவிகிதத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம் கணிப்பீடு செய்யப்பட்டதைவிட குறைவாகும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உத்தியோகப்பூர்வமாக 2010ல் 10.3 சதவிகித வளர்ச்சி விரிவாக்கம் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் சர்வதேச கடன்மதிப்புத் தர நிர்ணயம் செய்யும் அமைப்பான Standard & Poor’s சீன அரசாங்கத்தின் பணவீக்க எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒட்டி விளைவுகள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கடன் கொடுத்தலில் இறுக்கிப்பிடிக்கும் தன்மை குறித்து. அதன் அறிக்கை கூறுவதாவது: “பணவீக்கமும் ஒருக்கால் நேரக்கூடிய பொருளாதார மித வளர்ச்சியும், கடன் கொடுத்தலை இறுக்கப்பிடித்தலில் இருந்து விளைந்தவைகளை அது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கடன்தர இழப்புக்களில் ஏற்றத்தைக் காணக்கூடும். சீன வங்கிகளின் இலாபத் தன்மை 2011 ல் எஞ்சிய காலத்தில் குறையக்கூடும், அடுத்த இரு ஆண்டுகளில் இன்னும் குறையலாம்.”

சீனாவில் பிரதானமாக ஏற்றுமதித் தொழில்களில் கிட்டத்தட்ட 20 மில்லியன் வேலைகளைத் தகர்த்துவிட்ட 2008 உலக நிதிய நெருக்கடியைத் தொடர்ந்துசீன ஆட்சியானது பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிப்பதற்காக அரச வங்கிக் கடனை வெள்ளமெனக் கொடுத்தது. 2009 மற்றும் 2010ல் கொடுக்கப்பட்ட 17.5 டிரில்லியன் யுவான் (அமெரிக்க 2.7 டிரில்லியன் டொலர்) கடன்கள் அக்காலக்கட்டத்தில் சீன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதிக்குச் சமம் ஆகும். இதன் விளைவு தொழில்துறைகளில் கூடுதல் இருப்புக்கள்நிலச் சொத்துக்களின் மதிப்பு பெரிதும் உயர்ந்துவிட்டது மற்றும் மலையெனக் கடன்கள் குவிந்ததும் ஆகும்.

நாட்டின் வங்கிச் சொத்துக்களில் மூன்றில் இரு பகுதிகள் அரசிற்குச் சொந்தமான முக்கிய வணிக வங்கிகள் மற்றும் கூட்டுப் பங்கு வங்கிகளில் உள்ளன. ஆனால் இவற்றைத் தவிர 3,500 சிறிய வங்கி அமைப்புக்களும் உள்ளன. அவற்றில் நாணயக் கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளன. அவை பெரும்பாலும் உள்ளூர் அரசாங்கங்களின் கட்டுமானத் திட்டங்களுக்கு நிதியளிப்பவை. S&P உடைய அறிக்கை இத்தகைய கடன்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அறவிடமுடியாத கடன்களாகப் போகலாம் என்பதாகும். சீன வங்கி முறையில் மோசமான கடன்களின் அளவு அடுத்த மூன்று ஆண்டுகளில் 5 முதல் 10 சதவிகிதம் அதிகரிக்கலாம்,  2010ன் இறுதியில் இருந்த 1.4 சதவிகிதத்தைவிடத் தீவிரமாக கூடுதலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங்கின் இறுக்கிப்பிடிக்கும் கடன் கொள்கை, வங்கியின் மொத்தச் சொத்துக்களில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமான இருப்பு விகிதம் என்று உயர்த்தப்பட்டுள்ளதை அடக்கியதும் சிறு வணிக அமைப்புக்களுக்கு புதிதாகக் கடன்களை வழங்குவதில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனச் செய்தித்தாள்கள் சிறிய, நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் கடன் பெறுவதிலுள்ள தடைகளையொட்டி மூடப்படும் அலையைக் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் தொழிலாளர்கள் கோரும் அதிக ஊதியங்கள் மற்றும் ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளின் சுருக்கங்களும் இந்நிலையை கடினமாக்கியுள்ளன.

கிழக்கு ஜெஜியாங் மாநிலத்தில் ஏற்றுமதி நகரம் ஒன்றான வென்ஜௌவில் நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்று கண்ணாடிகள், லைட்டர்கள், பேனாக்கள் மற்றும் பூட்டுக்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விற்பனை 7 சதவிகிதம் குறைந்துவிட்டதையும், இலாபங்கள் 30 சதவிகிதம் குறைந்துவிட்டதையும் 2011 முதல் காலாண்டில் கண்டுள்ளன என்று காட்டுகிறது. கால் பகுதிக்கும் மேலான நிறுவனங்கள் நஷ்டங்களை அடைந்தன. சராசரி இலாப விகிதம் 3.1 சதவிகிதம் என்றுதான் இருந்தது. இது “2008 ஐவிடக் கடினமான நேரம்என்று நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களுக்குப் பொறுப்பு உடைய அதிகாரி China Business Times  இடம் கூறினார்.

சீனாவின் நிலச் சொத்துக்களின் விலைகள் பெரிதும் கூடுதல் வீக்கத்திற்கு உட்பட்டுள்ளன, இது சரிவை நோக்கிச் செல்கிறது என்ற அச்சங்கள் பெருகிவிட்டன. பைனான்சியல் டைம்ஸ்  ஜூன் 1ம் தேதி கூறியது: “சீனாவில் நிலச் சொத்துச் சந்தை வெடிக்கக் கூடிய குமிழியா, சீனாவின் வளர்ச்சியைத் தகர்த்து உலகப் பொருளாதாரத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்துமா என்னும் கேள்விதான் இப்பொழுது பிரேசிலிலுள்ள இரும்புத் தாதுப் பொருள் வணிகர்கள் துவங்கி சிட்டி ஆப் லண்டனிலுள்ள ஹெட்ச் நிதி மேலாளர்கள் வரை கேட்கப்படும் வினாவாகும்.”

சீன எஃகுப் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் கட்டிடப்பணிகளுக்குச் செல்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுப் பாவனைப் பொருட்கள், கட்டுமானக் கருவிகள் போன்ற சொத்து தொடர்புடைய தொழிற்துறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், சொத்துச் சந்தை பரந்த அளவில் கடந்த ஆண்டு 626 மில்லியன் டன் எஃகு, நாட்டின் எஃகு உற்பத்தியில் மூன்றில் இரு பகுதியை நுகர்ந்தது. இது உலகின் மொத்தத்தில் 44 சதவிகிதமாகும்.

அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் Nouriel Roubini  சமீபத்தில் பிரிட்டனின் Economist இதழில் பெய்ஜிங்கின் 2008க்குப் பிந்தைய ஊக்கத் திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிரந்தர முதலீட்டுப் பங்களை 42 சதவிகிதத்திலிருந்து 2009ல் 47 சதவிகிதத்திற்கு உயர்த்தியது என்று எச்சரித்துள்ளது. அந்த விகிதம் 2010ல் இன்னும் அதிகமாகக் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் என்று உயர்ந்துவிட்டது.

இதில் பிரச்சினை என்னவென்றால், எந்த நாடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதம் அளவை புதிய மூலதனப் பங்கில் மறு முதலீடு செய்யும் அளவிற்கு உற்பத்தித் திறன் கொண்டது அல்ல. ஏனெனில் இது இறுதியில் மகத்தான கூடுதல் திறனை எதிர்கொள்ளும் என்பதுடன் செயல்படாத கடன் பிரச்சினை அதிர்வையும் ஏற்படுத்தும். நடைமுறை முதலீட்டில் கூடுதல் முதலீட்டை அதிகமாக சீனா கொண்டுள்ளது, அதுவும் உள்கட்டுமானம், சொத்துப் பிரிவுகளில்என்று ரூபினி எழுதியுள்ளார்.

சீனாவில்இப்பொழுது எங்கும் செல்லாத நெடுஞ்சாலைகள், ஆயிரக்கணக்கான மிகப் பெரிய மத்திய, மாநில அரசாங்கக் கட்டிடங்கள், மனிதர்களற்ற சிறுநகரங்கள், உலக விலைகள் சரிவதைத் தடுப்பதற்காக  புத்தம்புதிய அலுமினியத் தயாரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பது ஆகியவற்றைக் கொண்டுள்ளதுஎன்று ரூபினி குறிப்பிட்டுள்ளார். 2013ல் சரிவு ஏற்படக்கூடும், அதன் பின் நீடித்த மெதுவான வளர்ச்சிக் காலம் இருக்கலாம், இது 1997-98ல் இருந்து ஆசியப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் இருந்த நிலைபோல் இருக்கும் என்றார் அவர்.

சீனாவிலிருந்து சர்வதேச நிதியங்கள் திடீரென வெளியேறுவது நாட்டின் நிதிய முறையைத் தீவிரமாக உறுதிக் குலைப்பிற்கு உட்படுத்திவிடும். இதுதான் 1997-98ல் தென்கிழக்கு ஆசியா முழுவதும் நடைபெற்றது. கடந்த மாதம் ஹாங்காங் நிதிய அதிகாரம் எந்த அளவிற்கு உள்ளூர் வங்கிகள் கிட்டத்தட்ட வெள்ளமெனச் சேர்ந்துள்ள 90 பில்லியன் டொலர்கள் சேமிப்புத் தொகைகள் ஹாங்காங்கில் இருப்பது திரும்பப் பெற்றால் தொடர்ந்து செயல்படும் என்று இடர் சோதனைகளை நடத்தியது. 2008 உலகச் சரிவைத் தொடர்ந்து ஹாங்காங்கில் பணம் அப்படிச் சேர்ந்ததுதான் சீனாவின் நிலச் சொத்துத் துறையைச் சென்று அடைந்தது.

Institute of International Finance நடத்திய சமீபத்திய ஆய்வின்படி சீனா 2008ல் இருந்து சீனா சர்வதேசத் தனியார் முதலீட்டிற்கு மிகப் பெரிய உறைவிடமாகிவிட்டது, இப்பிரிவில் நிகர உள்வரத்து 2010 மற்றும் 2012க்கு இடையே கிட்டத்தட்ட 250 பில்லியன் டொலர்களை அடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இம்மூலதனத்தின் பெரும் பகுதிசூடான பணம் அதாவது, குறுகிய காலத்தில் சீன நிலச் சொத்துக்களில் இருந்து உயர்ந்த ஆதாயங்களைப் பெற முற்படுவது ஆகும்.

உயர்ந்த வீடுகளுக்கான விலைகள் பற்றிய மக்கள் சீற்றத்தைச் சமாதானப்படுத்தும் அதே நேரத்தில் பொருளாதாரத்தையும் வளர வைத்தல் என்பதற்கு பெய்ஜிங் 36 மில்லியன் அரச உதவி பெற்ற அடுக்குவீடுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைவூதியக் குடும்பங்களுக்குக் கட்டும் திட்டம் ஒன்றை  அறிவித்துள்ளது. இதன் நோக்கம் 218 மில்லியன் நகர்ப்புறக் குடும்பங்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கு வீடு அளிப்பதாகும்.

இந்த ஆண்டு 1.3 டிரில்லியன் யுவான் செலவில் 10 மில்லியன் உதவித் தொகை அடுக்கு வீடுகளைக் கட்டும் இலக்கைக் கொண்டும்கூட, அரசாங்கம்  103 பில்லியன் யுவானைத்தான் அதற்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ்  குறிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட 400 முதல் 500 பில்லியன் யுவான் வரை உள்ளூர் அரசாங்கங்களிடம் இருந்து பெறப்படும், 800 முதல் 900 பில்லியன் யுவான் வரை தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும்.

வேறுவிதமாகக் கூறினால், இத்திட்டங்கள் ஊக வணிக குமிழிகளினால் இலாபம் அடைந்த அதே அடுக்குகளைத்தான் முக்கியமாக நம்பியிருக்கும். சமீபத்திய Forbes China பட்டியலில் உள்ள 213 சீனாவில் தோன்றியுள்ள டாலர் பில்லியனர்களில் 30 சதவிகிதத்தினர் தங்கள் சொத்துக்களை முழுமையாகவோ பகுதியாவோ நிலச் சொத்துக்களில், பெரும்பாலும் சீனாவின் மூலம் அடைந்தனர். அதே நேரத்தில் உள்ளூர் அரசாங்கங்கள் மிகப் பெரிய அளவில் சொத்து, நில விற்பனையைத்தான் வருமான ஆதாரங்களுக்கு நம்பியுள்ளன. இதையொட்டி அவற்றின் விலைகள் உயர்வதற்கான உந்துதல்கள் ஏற்பட்டுள்ளன.

பெரிதும் உயர்ந்துள்ள வீட்டு விலைகள் பற்றிய பரந்த அதிருப்தி யார் மீது குற்றம் சாட்டுவது என்பது பற்றி பகிரங்க வேறுபாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த மாதம் முன்னாள் பிரதம மந்திரி ஜுரொங்ஜி அவருடைய 1990 களின் சந்தைச் சார்பு வரிச்சீர்திருத்தங்கள், பெய்ஜிங் அரசாங்க வருமானத்தை மையப்படுத்தியதால் உள்ளூர் அரசாங்கங்களுக்கு நிதிகள் இல்லாமல் போய்விட்டதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்து தன்னைக் காக்க முற்பட்டார்.

தற்பொழுதைய தலைமையின்தவறு”, உள்ளூர் அரசாங்கங்களின் சொத்துக்கள், நிலச் சொத்து வருமானங்களை வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளதுதான் என்று குறைகூறி, இதுதான் விலைகள் பெரிதும் உயர்ந்துமக்களுடைய கூடுதல் இருப்பை உறிஞ்சிவிட்டது என்றார். முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜேமின் உடைய தலைமையில் இருந்தமூன்றாம் தலைமுறைத் தலைமைக்குதான்  ஆதரவு கொடுப்பதாகவும், இப்பொழுது 1998ல் தனியார் வீடுகள் சந்தையை அறிமுகப்படுத்தியதில் அதற்குப் புகழ் மங்கி விட்டது என்றும் அவர் கூறினார்.

கார்த் தொழிற்துறைக்கு நிதியுதவி அளிக்கும் தற்பொழுதைய தலைமையின் கொள்கையையும் ஜு தாக்கினார். ஷாங்காய் கார்க் கண்காட்சிகளில், சில ஆடம்பரக் கார்கள் 100 மில்லியன் யுவானைவிட அதிக விலை கொண்டிருந்தன ($15மில்லியன் ஒவ்வொன்றும்). அதே நேரத்தில் சில வணிக உரிமையாளர்கள் சொந்தமாக ஜெட்டுக்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். “ஆனால் மக்கள் இன்னும் தங்கள் வயிற்றுக்கு உணவளிக்க முடியாத நிலையிலுள்ள கிராமப் புறங்களைப் பற்றி என்ன கூறுவது? என்று அவர் வினவினார்.

இத்தகைய பாசாங்குத்தன குற்றம் சாட்டும் விளையாட்டு, ஸ்ராலினிச ஆட்சியின் உயர்மட்டத்தில் உள்ளது, சீனாவின் பெருகிய உறுதியற்ற பொருளாதாரம் சமூக அழுத்தங்களை ஏற்படுத்திவிட்டது, ஒரு கட்டத்தில் பல மில்லியன் மக்களைக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு வெடிப்புத் தன்மை நிறைந்த இயக்கத்தைத் தூண்டிவிடும் என்ற அச்சங்களைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.