WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Sri Lankan
ruling party fails to win war
torn northern local elections
இலங்கை ஆளும் கட்சி
யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கின் உள்ளூராட்சி தேர்தலில் தோல்வி கண்டுள்ளது
Subash Somachandran and S. Jayanth
27
July
2011
இலங்கையில் கடந்த 23ம் திகதி நடந்த 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்,
பிரதானமாக தெற்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 உள்ளூராட்சி சபைகளை
வென்றுள்ளது. ஆளும் கட்சி “சௌகரியமான
வெற்றியை”
பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் புகழ்ந்துகொண்டன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி
(யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஆகிய எதிர்க் கட்சிகளின்
பொறிவின் காரணமாகவே சுதந்திர முன்னணியால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. ஆயினும்,
யுத்தத்தால் நாசமாக்கப்பட்டுள்ள வடக்கில் உள்ள தமிழ் மக்கள், அரசாங்கத்துக்கு
எதிரான தமது கட்டுமீறிய எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக அதற்கு எதிராக வாக்களிக்க
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.
முன்னதாக 335 உள்ளூராட்சி சபைகளில் 234 சபைகளுக்கு மட்டும் கடந்த மார்ச்சில்
தேர்தலை நடத்திய அரசாங்கம், ஏனையவற்றுக்கான தேர்தலை எதேச்சதிகாரமான முறையில் ஒத்தி
வைத்தது. இந்த சனிக்கிழமை நடந்த தேர்தலின் பின்னர், மேலும் 23 சபைகளுக்கான தேர்தலை
செப்டெம்பரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இதில் கொழும்பு மாநகரும்
அடங்கும். கொழும்பு நகரை தெற்காசியாவின் ஒரு வர்த்தக மையமாக ஆக்குவதற்காக 70,000
குடிசைவாசிகளை அரசாங்கம் இப்போது வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு வடக்கில் 15 சபைகளையும் கிழக்கில் 3 சபைகளையும் வென்றுள்ளது.
வன்னியில் தமிழ் கூட்டமைப்புடன் ஒத்துழைத்து போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை
முன்னணி இரு சபைகளை வென்றுள்ளது. யூ.என்.பீ. எந்தவொரு சபையையும் வெற்றிகொள்ளத்
தவறியதோடு தனது கட்டுப்பாட்டில் இருந்த ஐந்து சபைகளையும் இழந்தது.
சிறுபான்மை தமிழர்களில் பெரும் பகுதியினர் வாழும் வடக்கில் ஆளும் கட்சி வெற்றி
பெறுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தது. அங்கு உள்ளூராட்சி சபைகளை வென்று,
கொழும்பு அரசாங்கத்துக்கு தமிழர்களின் ஆதரவு இருக்கின்றது என காட்டுவதோடு,
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் யுத்தத்தில் இழைக்கப்பட்ட
யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான விமர்சனங்களை சவால் செய்வதே அதன் குறிக்கோளாகும்.
ஆனால் வடக்கின் 20 சபைகளில் மூன்றை மட்டுமே அதனால் வெற்றிகொள்ள முடிந்தது.
வடக்கில் பதட்ட நிலைமைகளுக்கு மத்தியில் சுமார் 50 வீதமான மக்கள்
வாக்களித்திருந்தனர். வடக்கில் மக்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பு இருப்பதை
உணர்ந்துகொண்ட ஆளும் கட்சி, வாக்காளர்களை ஈர்ப்பதற்காக அவசர அவசரமாக
“அபிவிருத்தித்
திட்டங்களை”
ஆரம்பித்ததோடு கடலில் மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. அதே
சமயம், தேர்தல் சட்டங்களை பகிரங்கமாக மீறி, உடல் ரீதியான தாக்குதல்கள் உட்பட
எதிர்க் கட்சிகள் மீது வன்முறைகளையும் பயன்படுத்தியது.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான பிரச்சாரம் என்ற (கபே) அமைப்பு,
வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 கிராமங்களில் வாக்காளர் அட்டைகள்
அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. வாக்குச் சாவடிகளில் வன்முறையில் ஈடுபட்டிருந்த
ஆளும் கட்சி குண்டர்களை பொலிசார் அலட்சியம் செய்தனர். மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு
செல்வதை நிறுத்துவதற்காக அன்று நன்பகல் வரை கிளிநொச்சியில் பாரதிபுரம், மலையாலபுரம்
ஆகிய கிராமங்கள் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண குடாநாட்டின் மேற்கில் உள்ள நெடுந்தீவு, ஊர்காவற்துறை மற்றும் வேலனை ஆகிய
சிறிய தீவுப் பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் சுதந்திர முன்னணி பெரும்பான்மை
ஆசனங்களை வென்றுள்ளது. இந்த பிரதேசங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
(ஈ.பீ.டி.பீ.) ஆதரவுடன் நீண்ட காலமாக இலங்கை கடற் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து
வருகின்றன. ஈ.பீ.டி.பீ.யின் துணைப்படைக் குழுவினர் வடக்கில் எதிர்ப்பாளர்கள் மீது
வன்முறைகளைப் பயன்படுத்துகின்றன. அவர்கள் இந்த தீவுப் பகுதிகளில் தமிழ்
கூட்டமைப்பினதும் ஏனைய எதிர்க் கட்சிகளதும் பிரச்சாரத்தை தடுத்தனர்.
அரசாங்கத்தின் பங்காளியான ஈ.பீ.டி.பீ. ஆளும் சுதந்திர முன்னணியுடனேயே தேர்தலில்
போட்டியிட்டது. ஈ.பீ.டி.பீ. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்தின்
தோல்வியைப் பற்றி சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
“தேர்தல்
தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது,”
ஏனென்றால் “தமிழ்
கூட்டமைப்பினரால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எல்லோரதும்
கண்களும் திறக்கப் போகின்றன”
என அவர் கூறினார். ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்தால் அரசாங்கம் தமிழர்களுக்கு
நன்மைகளை செய்யாது என இந்த அமைச்சர் தேர்தலுக்கு முன்னதாக எச்சரித்திருந்தார்.
தேர்தல்
வெற்றியை உடனடியாக பற்றிக்கொண்ட தமிழ் கூட்டமைப்பு, கொழும்பு அரசாங்கத்துடனான அதன்
பேரம் பேசலைப் பலப்படுத்தியது. தமிழ் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்,
தேர்தல் முடிவுகள் ஒரு அரசியல் தீர்வுக்கான வாக்களிப்பை காட்டுகிறது என சுட்டிக்
காட்டியுள்ளது. “வடக்கு
கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சகல அதிகாரங்களுடன் கூடிய அரசியல் சுயாட்சி
வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது”
என அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்த
தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளதோடு, தமிழ் கூட்டமைப்பு
பெரும்பான்மையான உள்ளூராட்சி சபைகளை வெல்ல முடிந்தது, தமிழ் மக்கள் இக்கட்சியின்
மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் காரணமாக அல்ல. அவர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின்
மீதும் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பின் மீதும் தமக்குள்ள ஆழமான எதிர்ப்பை
வெளிக்காட்டவே தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.
புலிகள்
இராணுவத் தோல்வியடையும் வரை அவர்களது தனியான முதலாளித்துவ அரசு வேலைத்திட்டத்துக்கு
தமிழ் கூட்டமைப்பு ஆதரவளித்தது. பின்னரே கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில்
அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கைக்காக கொழும்பு அரசாங்கத்துடன் பேரம் பேசுவதற்காக
நகர்ந்தது. அது ஏகாதிபத்தியத்தின் ஆதரவையே நம்பியிருக்கின்றது. சர்வதேச
சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் தமிழ் கூட்டமைப்பின் அறிக்கை, அவர்கள்
“தமிழ்
மக்களின் [வாக்களிப்பின் மூலமான] இந்தத் தீர்ப்புக்கு மதிப்பளிக்குமாறும்”
சர்வதேச
யுத்தக் குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ளுமாறும் மற்றும்
“தமிழ்
மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வுக்காகவும் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்த
வேண்டும்”
என பிரகடனம் செய்கின்றது.
அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட மேற்கத்தைய சக்திகள் தமது சொந்த நலனுக்காக யுத்தக்
குற்ற துருப்புச் சீட்டை விளையாடுகின்றன. சீனாவிடம் இருந்து தூர விலகிக்கொள்ளுமாறு
இராஜபக்ஷவுக்கு அவை செய்தி அனுப்புகின்றன. ஆசியாவில் அமெரிக்காவுக்கும்
சீனாவுக்கும் இடையில் பகைமை வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமையின் மத்தியில் சீனா
இலங்கையில் தனது செலவாக்கை துரிதமாக அபிவிருத்தி செய்கின்றது. இதே போல், தமிழ்
கூட்டமைப்பு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சிறப்புரிமைகளை
தக்கவைத்துக்கொள்வதிலேயே அன்றி, தமிழ் வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக
அக்கறை காட்டவில்லை. மற்றும் அது இந்த வல்லரசுகளின் கருவியாக உருவெடுக்கும்.
கூட்டமைப்பு அடுத்த திங்கட் கிழமை அரசாங்கத்துடன் இன்னுமொரு சுற்று
பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளது.
தெற்கில் கிராமப்புற மாவட்டங்களிலேயே தேர்தல்கள் நடந்தன. இராஜபக்ஷ மீண்டும்
மேற்கத்தைய-விரோத மற்றும் ஏகாதிபத்திய-விரோத அறப்போராளியாக தன்னை காட்டிக்கொண்டார்.
கிளிநொச்சியில் உரையாற்றிய இராஜபக்ஷ,
“எங்களது
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் ஐரோப்பாவிடம் இருந்து அல்லது ஏனைய சக்திகளிடம்
இருந்து ஆலோசனைகளைப் பெற நினைக்கவில்லை. சினேகப்பூர்வமாகவும் அமைதியான முறையிலும்
தீர்வுகளைக் காணக்கூடிய இயலுமை எங்களுக்கு உள்ளது”
என்றார்.
ஐ.நா.
நிபுணர்கள் குழு அறிக்கையையும் இலங்கை கொலைக் களம் என்ற பெயரில் செனல் 4
வெளியிட்ட கானொளிகளையும் தாக்கிப் பேசிய அரசாங்க அமைச்சர்கள்,
“தாயகத்தை”
காக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். புலிகளுக்கு எதிரான தாக்குதல்களின்
கடைசி மாதத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அறிக்கை
இராஜபக்ஷவையும், அரசாங்க உயர் அதிகாரிகளையும் மற்றும் இராணுவத் தளபதிகளையும்
குற்றவகையில் சம்பந்தப்படுத்தியிருந்தது. பாதுகாப்பு படையினரால் தமிழ் கைதிகள்
சுட்டுக் கொல்லப்படும் செனல் 4 வீடியோ காட்சிகளை அரசாங்கம் மறுத்துள்ளது. இந்த
வாய்சவடால்கள் சமூகப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கே
ஆகும்.
எந்தவொரு மாற்று கொள்கையையும் முன்வைக்க முடியாமல் உள்ள யூ.என்.பீ. மற்றும்
ஜே.வி.பீ. யின் அரசியல் பக்கவாதத்தாலேயே ஆளும் சுதந்திர முன்னணி நன்மையடைந்துள்ளது.
வாழ்க்கைச் செலவு இடைவிடாமல் அதிகரித்து வருவது தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக
மக்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமையிலேயே, யூ.என்.பீ.
மற்றும் ஜே.வி.பீ. யினரால் தலைதூக்க முடியாமல் போனது. அரசாங்கத்தின் தோரணையை
அவர்களால் சவால் செய்ய முடியவில்லை. இரு கட்சிகளும் யுத்தத்துக்கு ஆதரவளித்து,
இராணுவத் தாக்குதல்களின் போது நடந்த எந்தவொரு யுத்தக் குற்றத்தையும் நிராகரித்த
தோடு சந்தை-சார்பு கொள்கைகளையே முன்னெடுத்தன.
யூ.என்.பீ. பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, கட்சியின்
உட்பூசல்களே அதன் தோல்விக்குக் காரணம் என மூடி மறைக்க முற்பட்டார். கட்சியின் உப
தலைவர் சஜித் பிரேமதாச, தலைவர் பதவியைப் பெற முயற்சிப்பதோடு அவரும் அவரது
ஆதரவாளர்களும் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக
விமர்சிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள், மோசடி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான
தாக்குதல்களைப் பற்றி போலி விமர்சனங்களை செய்கின்ற யூ.என்.பீ., உண்மையில்
அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கான தயார் நிலையை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மாத முற்பகுதியில் நியூயோர்க்கிற்கு சென்று திரும்பிய போது, ஐ.நா. நிபுணர்
குழு அறிக்கை சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசாங்கத்துக்கு கால
அவகாசம் கொடுக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தான் வேண்டுகோள்
விடுத்ததாக
யூ.என்.பீ.
யின் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க அம்பலப்படுத்தினார். யுத்தக்
குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதோடு அரசாங்கம் தமிழ்
கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தால் அதற்கும் ஆதரவளிப்பதாக மேலும் அவர்
தெரிவித்தார்.
சிங்கள
அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) உள்ளூராட்சி சபைகளில் 13 ஆசனங்களை
மட்டுமே வென்றுள்ள அதே வேளை, அது 48 ஆசனங்களை இழந்துள்ளமை கிராமப்புறத்தில்
அதற்கிருந்த ஆதரவு மேலும் சரிந்து போயுள்ளதை காட்டுகிறது. அது தேர்தல் முடிவுகள்
சம்பந்தமாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள போதிலும், தனது இழப்புக்களைப் பற்றி
எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக, வடக்கு மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்ற
வெளிப்படையான உண்மையை சுட்டிக்காட்டியுள்ளது
ஜே.வி.பீ. தமிழர்களின் ஆதரவாளனாக காட்டிக்கொண்டு வடக்கிலும் பல உள்ளூராட்சி
சபைகளில் போட்டியிட்டது. தெற்கில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வாய்சவாடல்களை அள்ளி
வீசிய ஜே.வி.பீ., அதே சமயம் அது ஒரு சோசலிசக் கொள்கையுடையதாகவும் பொய்யாக
சித்தரித்துக்கொள்ள முயற்சித்தது. எவ்வாறெனினும், ஜே.வி.பீ. யுத்தத்துக்கு
ஆதரவளித்து, முதலாளித்துவ அரசாங்கங்களில் அங்கம் வகித்ததோடு சிங்களப் பேரினவாதக்
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்ததனால் கையளவேயான வாக்குகளையே அதனால் பெற
முடிந்தது.
ஆளும்
கட்சிக்கு கிடைத்த வாக்குகளினால் மக்கள்
“ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் கொள்கைகள் மீதான தமது நம்பிக்கையை வலியுறுத்தியுள்ளனர்”
என சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த பிரகடனம் செய்தார்.
சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் தொடரும்
என்பதே இந்த கூற்றின் அர்த்தமாகும்.
இத்தகைய
தாக்குதல்களை கட்டவிழ்த்து விடவும் பொலிஸ் அரச வழிமுறைகளை திட்டமிடவும் தொழிலாள
வர்க்கத்தை பிளவுபடுத்துவதன் பேரில் தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிடுவதற்கு தாம்
தயார் என்பதை ஏற்கனவே அரசாங்கத்தில் உள்ள சில பகுதியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சரும் சிங்கள அதி தீவிரவாத ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக
ரணவக்க தமிழ் கூட்டமைப்புக்கு விடுத்த எச்சரிக்கையில்,
“மக்களால்
அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த மக்கள் ஆணையை பற்றி தமிழ் தேசிய
கூட்டமைப்பு மனதில் கொள்ள வேண்டும்,”
என்றார். தமிழர்கள், சிங்கள ஆளும் தட்டின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்பதே ரணவக்கவின் வெளிப்படையான கோரிக்கையாகும்.
இன
பாகுபாடுகளை தூக்கியெறிந்து சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச
ஐக்கியத்தை கட்டியெழுப்புவதோடு இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக
சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும். |