World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democrats, Republicans vow trillions in US spending cuts

அமெரிக்க பொதுநலச் செலவுகளில் டிரில்லியன்களை வெட்டுவதாக ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் உறுதிமொழி எடுக்கின்றனர்

By Patrick Martin
21 July 2011

Back to screen version

கூட்டாட்சிக் கடன் உச்சவரம்பை உயர்த்துவது குறித்த பேச்சுக்கள் புதனன்று வெள்ளை மாளிகையில் மீண்டும் தொடங்கின. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் ஆதரவைப் போட்டி நடவடிக்கைகளுக்கு அறிவித்தனர். அவையோ சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு இன்னும் ஏனைய முக்கிய கூட்டாட்சி சமூகநலத் திட்டங்களில் டிரில்லியன் கணக்கான டொலர்களை வெட்டுகின்றன.

அடுத்த மாதம் கூட்டாட்சி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை தவிர்க்க “உகந்ததைப் பேசும்” நேரம் வந்து விட்டது என்று கூறி ஜனாதிபதி ஒபாமா காங்கிரஸ் தலைவர்களை அழைத்தார். அப்பொழுது கொடுக்க வேண்டிய நிதிகள் அனைத்தையும், ஆகஸ்ட் மாதம் 3ம் திகதியில் சமூகப் பாதுகாப்புக் காசோலைகள் தொடங்கி பல கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்க முடியாமற் போகலாம் என்று நிதியமைச்சரகம் கணித்துள்ளது.

இரு கட்சிகளும் வரவு-செலவுத் திட்டம் பற்றிப் பேசுவதற்கான வடிவமைப்பு தொடர்ந்து வலதிற்கு மாற்றம் பெறுகிறது. ஒபாமா சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை மேசையில் வைக்கும் முடிவையடுத்து இது நிகழ்கிறது. மேலும் அவர் காங்கிரஸிலுள்ள குடியரசுக் கட்சியினர் ஆரம்பத்தில் கோரியதை விட அதிகமான வெட்டுக்களையும் முன்வைக்கிறார்.

செனட்டில் மூன்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் மூன்று குடியரசுக் கட்சியினரும் “அறுவர் குழு” என அழைக்கப்படுவோர், செவ்வாயன்று இந்த ஆறு செனட் உறுப்பினர்களின் ஆதரவையும் கொண்ட வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டுக்களை ஏற்படுத்தும் உடன்பாட்டை அறிவிப்பதற்கான முயற்சிகளை மீண்டும் தொடக்கினர். கன்சர்வேடிவ் கட்சியின் ஒக்லாகோமாவைச் சேர்ந்த டோம் கோபர்ன் மே மாதம் குழுவில் இருந்து விலகினார், ஆனால் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவியில் கூடுதலான 117 பில்லியன் டொலர்கள் வெட்டுக்கள் வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை மூன்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றவுடன் மீண்டும் குழுவில் பங்குபற்றுகிறார்.

அறுவர் குழு முன்வைக்கும் சுருக்கமான நான்கு பக்கத் திட்டமானது 25 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், 24 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய இரு கட்சியும் அடங்கிய 49 செனட் உறுப்பினர்கள் கொண்ட குழுவின் முன் வைக்கப்பட்டது. இது மேல்மன்ற மொத்த உறுப்பினர்களில் பாதி ஆகும். இந்த அறிக்கை அடுத்த பத்து ஆண்டுகளில் 3.7 பில்லியன் டொலர்கள் செலவுக் குறைப்புக்களைக் கோருகிறது; இதைத்தவிர 1 டிரில்லியன் டொலர்கள் “கூடுதல் வருமானத்தில்” கோருகிறது; அது விளக்கப்படும் விதம் செல்வந்தர்கள் மீதான நிகர வரிகள் நீண்ட காலத் தன்மையில் குறைக்கப்படும் என்று உள்ளதே ஒழிய அதிகப்படுத்தப்படும் என்று இல்லை. பெருநிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிகள் உடன்படிக்கையின் ஒரு பகுதியாகக் கணிசமாகக் குறைக்கப்படும்.

பிரதிநிதிகள் மன்றத்தில் குடியரசுக் கட்சியினர் முன்வைத்த திட்டங்கள் மற்றும் ஒபாமாவின் ஒரு பெரும் உடன்பாட்டிற்கான திட்டப்படியான வரவு-செலவுத் திட்டத்தில் 4 டிரில்லியன் டொலர்கள் பற்றாக்குறையைக் குறைப்பது போலவே, அறுவர் குழுவின் திட்டமும் குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக எதையும் கூறவில்லை. உத்தியோகப்பூர்வ வரவு-செலவுத் திட்டத்தின் அனைத்துப் பிரிவினரும் இத்திட்டங்கள் வெட்டப்படும், எவருக்கு வெட்டப்படும் என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்குத் தெளிவாகத் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் அத்தகைய அறிவிப்பு தவிர்க்கமுடியாமல் பெரும் வெகுஜன எதிர்ப்பை அமெரிக்க மக்களிடம் இருந்து தோற்றுவிக்கும் என்ற அச்சம் உள்ளது.

அறுவர் குழு உடனடியாக வரவு-செலவுத் திட்டத்தில் 500பில்லியன் டொலர்கள் வெட்டுக்கள் தேவை என்று அழைப்பு விடுகிறது; இதைத்தவிர பல துறைகளில், சுகாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து, இராணுவம், விவசாயம், போன்றவற்றில் 3.2 டிரில்லியன் டொலர்கள் கூடுதல் குறைப்பையும் நாடியுள்ளது; ஆனால் எப்படிப்பட்ட திட்டங்கள் குறைப்பிற்காகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பது சட்டமன்றக் குழுக்கள் இத்துறைகளை மீது அதிகார வரம்பைக் கொண்டவற்றால் நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்பட்டுவிட்டது.

மருத்துவப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி மீதான செலவு வளர்வதை நிறுத்தும் திட்டத்தை இது முன்வைக்கிறது. அது பணவீக்க விகிதத்துடன் 1 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகள் இதைவிட அதிகமாகத்தான் நான்கு தசாப்தங்களாக உயர்ந்து வருகின்றன. 60 வாக்கு என்னும் உயர் பெரும்பான்மை தேவைப்படும் சமூகப் பாதுகாப்பு பற்றிய மாற்றங்களுக்கும் இது அழைப்பு விடுகிறது; அது இல்லாவிட்டால் முழுத் திட்டமும் செயலற்றுப்போய்விடும்.

ஆறு செனட் உறுப்பினர்களில், ஜனநாயகக் கட்சியில் இரண்டாம் இடத்தில் இருக்கும், பெரும்பான்மைக் கொரடா இல்லிநோய்சின் ரிச்சர்ட் டர்பின் மற்றும் செனட் வரவு-செலவுக் குழுத் தலைவர் வட டகோட்டாவின் கென்ட் கொன்ராட் ஆகியோர் அடங்குவர். ஒரு தொலைத்தொடர்பு வணிகத்தின் பல மில்லியனுக்கு சொந்தக்காரரான வர்ஜீனியாவைச் சேர்ந்த மார்க் வார்னர் மூன்றாவது ஜனநாயகக் கட்சி உறுப்பினராவார். மூன்று குடியரசுக் கட்சியினரான கோபர்ன், இடாஹோவின் மைக் கிராபோ மற்றும் ஜோர்ஜியாவின் சாக்ஸ்பி சாம்பிளிஸ் ஆகியோர் ஆவார்கள்.

குழுவின் திட்டம் இயற்றப்பட முடியாது என்றும் ஆகஸ்ட் 2ம் தேதி கடன் உச்சவரம்பிற்கான சட்ட வரைவு இயற்றுவதற்கான இறுதிநாள் என்பதுதான் இதற்குக் காரணம் என்று டர்பின் ஒப்புக் கொண்டார். “நாம் கட்டமைக்க முயல்வது இக்கருத்தாய்வுகளை ஒரு நீண்டகால கடன் குறைக்கும் திட்டம் என மாற்றுவதுதான்” என்று விவரிக்கும் வகையில் அவர் கருத்தாய்வை விளக்கினார்.

அறுவர் குழுத் திட்டத்தை ஜனாதிபதி ஒபாமா பாராட்டி, அதே நேரத்தில் தான் அதை இன்னும் படிக்கக்கூட இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்; ஆனால் இரு கட்சி உடன்பாடு என்பதைத் தளமாகக் கொண்ட எந்த முயற்சியையும் தான் ஏற்பதாகக் கூறினார். “நாம் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி, நிர்வாகத்தைக் கொண்டுள்ளோம்; அது சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றில் மாற்றங்கள், செலவுக் குறைப்புக்கள் அடங்கிய கடினப் பொதியாக இருந்தாலும் கையெழுத்திடத் தயாராக உள்ளது” என்று கூறிய அவர் இப்பொழுது அத்தகைய அணுகுமுறைக்கு உடன்படும் இரு கட்சிச் செனட் உறுப்பினர்கள் அடங்கிய குழுவைக் கொண்டுள்ளோம்” என்றும் சேர்த்துக் கொண்டார்.

செனட் மன்றத்தில் மூன்றாம் உயர்மட்டத்திலுள்ள குடியரசுக் கட்சியின் டெனசியைச் சேர்ந்த லாமர் அலெக்சாந்தர் அறுவர் குழுவின் திட்டம் வெளியிடப்படும்போது பங்கு பெற்று, தன் ஆதரவைக் கொடுத்து, “மூன்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேரும் செனட்டில் மிக மூத்த கன்சர்வேடிவ்கள் என்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இதற்கிடையில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதிநிதிகள் மன்றத்தில், உறுப்பினர்கள் தங்களுக்கும் வலதில் ஒபாமா முன்னிற்பதாகக் குறைகூறி, செவ்வாய் அன்று காங்கிரசின் இரு மன்றங்களிலும் இதுவரை ஏற்கப்படாத மிகக் கடுமையான திட்டத்தை இயற்றி முனைப்பை மீட்டுக் கொண்டனர்.

“வெட்டுக, வரம்பு வைக்க, சமச்சீர்படுத்த” என்னும் இச்சட்டவரைவு கிட்டத்தட்டக் கட்சி ஒழுங்கின்படி 234 க்கு 190 எதிர் என்ற கணக்கில் இயற்றப்பட்டது. குறிக்கப்படாத செலவு வெட்டுக்கள் 5.8 டிரில்லியன் டொலர்கள் என்பதற்கு இது உத்தரவிடும்; அடுத்த பத்து ஆண்டுகளில் இது செயல்படுத்தப்படும்; கூட்டாட்சிக் கடன் வரம்பு உயர்த்தப்படுவதற்கு ஈடாக சமச்சீர் வரவு-செலவுத் திட்டம் தேவை என்னும் அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கப்பட வேண்டியது இதற்குத் தேவை ஆகும்.

இச்சட்டவரைவு மன்றத்தில் ஏப்ரல் மாதம் ஏற்கப்பட்ட நீண்டக்கால வரவு-செலவுத் திட்டத் தீர்மானத் தரத்தில் மொத்தச் செலவு வரம்பை நிர்ணயிக்கும்; அதில் மருத்துவப் பாதுகாப்பு படிப்படியாக அகற்றப்படுவதும் அதற்குப் பதிலாக தனியார் காப்பீடு வருவதும் அடங்கும்; பிந்தையதிற்கு கூட்டாட்சி நிதி கொடுப்பது படிப்படியாக மதிப்பில் உண்மையான காப்பீட்டுச் செலவுகளுடன் ஒப்பிடும்போது குறையும்; இதையொட்டி வயதானவர்களுக்குக் கூடுதலான எப்பொழுதும் பெருகும் செலவினங்கள் ஏற்படும்.

அரசியலமைப்புத் திருத்தம், செல்வந்தர்களுக்குச் சிறப்பு நிலைமையை உள்ளடக்கும் வகையில் அவர்களுடைய வரிகளை உயர்த்துவதற்கு இரு காங்கிரஸ் பிரிவுகளிலும் மூன்றில் இரு பங்குப் பெரும்பான்மை தேவை என உள்ளது; ஆனால் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் சமூகநலத் திட்டங்களின் செலவுகளைக் குறைப்பதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதும் என்று உள்ளது.

இச்சட்டம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செனட்டில் நிறைவேற்றப்பட முடியாது. பலமுறையும் இச்சட்டவரைவிற்கு தான் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுத்திவிடப்போவதாக ஒபாமா கூறியுள்ளார். இந்நடவடிக்கையின் முழு நோக்கமும் மன்றக் குடியரசுக் கட்சியினர் ஒபாமாவிற்கு வலதில் செலவுக் குறைப்புக்களை ஏற்படுத்தும் நிலையை மீட்பதை அனுமதிக்கும். மேலும் தீவிர வலது குடியரசுக் கட்சியினர், Tea Party இயக்கத்துடன் பிணைந்துள்ளவர்கள், வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைக்குத் தாழ்ந்து நிற்குமுன் உயர்ந்தவர்கள் எனக் காட்டிக் கொண்டவர்களும் கூட்டாட்சிக் கடன் வரம்பை உயர்த்த அனுமதிக்கப்படுவர்.

செனட் மற்றும் பிரதிநிதிகள் மன்றம் என்று இரண்டிலும் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டக் குறைப்புக்களின் பெருகிய அளவு பற்றி வோல் ஸ்ட்ரீட் மகிழ்ச்சி கொண்டாடியது. டௌ ஜோன்ஸ் தொழில்துறைச் சராசரி 202 புள்ளிகள் செவ்வாயன்று உயர்ந்தது. இது 2011ம் ஆண்டிலேயே மிக அதிகமானது ஆகும். வெள்ளை மாளிகைச் செய்தியாளர் அறையில் ஒபாமா எதிர்பாராமல் தோன்றி அறுவர் குழுவிற்குத் தன் ஆதரவைத் தெரிவித்த உடனேயே டௌ தீவிரமாக உயர்ந்தது.

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கடன் வரம்பினை உயர்த்துவதற்கான வழிவகையில் ஒபாமாவின் நிலையில் ஏற்பட்டுள்ள கணிசமான மாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், குறுகிய காலம் கடன் வரம்பை நீட்டிக்க வேண்டும் என்பதில் கையெழுத்திட ஒபாமா இனி மறுக்க மாட்டார், ஆனால் பெரிய பற்றாக்குறைக் குறைப்புப் பொதியில் உடன்பாடு மற்றும் காங்கிரஸிற்கு  அதை இயற்றுவதற்காக அதிக கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொண்டால்தான் இது அவரால் ஏற்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஒரு குறுகிய கால கடன் வரம்பு நீட்டிப்பு என்பதற்குத் தான் ஆதரவு கொடுப்பதாக இல்லை என்பதை ஜனாதிபதி தெளிவாக்கிவிட்டார்” என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கூறினார்: “ஒரு பெரிய உடன்பாட்டின் மீது ஒப்பந்தம் இல்லாத நிலையில் நாங்கள் குறுகிய கால நீட்டிப்பிற்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பதுதான் இதன் பொருள். அதை நாங்கள் ஏற்க முடியாது. இருதரப்பினருமே கணிசமான உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டால், அவை பற்றிய விவரங்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்.”

இத்தந்திரோபாயத்தின் தெளிவான நோக்கம் அறுவர் குழு கூறும் வழியே உடன்பாட்டிற்கு கதவைத் திறந்து வைத்தல் என்பதாகும். அக்குழுவின் திட்டம் இன்னும் குடியரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மன்றத்தில் நிராகரிக்கப்படவில்லை. ஒரு இடைக்கால தடுப்பு நடவடிக்கை என்னும் முறையில் வெள்ளை மாளிகை மக்கோனல்-ரீட் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கிறது. அது ஒபாமாவிற்கு கடன் வரம்பை உயர்த்த ஆகஸ்ட் 2 வரை அவகாசம் கொடுக்கிறது; செலவு வெட்டுக்கள் 1.5 டிரில்லியன் டொலர்கள் வரை இருக்குமாயின் இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம்.

காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு இன்னும் தீர்வு ஏதும் வரவில்லை; மன்ற குடியரசுக் கட்சியினர் எவ்வளவு குறைவாக இருந்தாலும் செல்வந்தர்கள் மீதான வரி அதிகரிக்கப்படக்கூடாது என்றும் கணிசமான பெரும்பான்மையினர் கடன் உச்சவரம்பை மீறுவது இன்னும் பெரிய நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

மன்ற வரவு-செலவுத் திட்டக் குழுவின் தலைவர் ரியன் அறுவர் குழுவின் திட்டமான செல்வந்தர்களுக்கு வரி 35ல் இருந்து 29 சதவிகிதம் எனக் குறைக்கப்படுவதை பாராட்டினார்; மேலும் பெருநிறுவன வரிவிகிதங்கள் குறைப்பையும் பாராட்டினார்; ஆனால் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் போதுமான வெட்டுக்கள் இல்லை என அவர் புகார் கூறினார்.

இதற்கிடையில் கடன் தரம் பிரிக்கும் நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீசஸ் அமெரிக்கப் பொதுநிதி தொடர்பாகக் கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளது; மேரிலாந்து, புதிய மெக்சிகோ, வர்ஜீனியா, டெனசீ மற்றும் தென் கரோலினா என்னும் ஐந்து மாநிங்கள் தரம் கீழிறக்கப்படும் திறனை எதிர்கொள்கின்றன, ஏனெனில் அவை கூட்டாட்சி வருமானத்தைத்தான் அதிகம் நம்பியுள்ளன என்று கூறுகிறது. “அமெரிக்க அரசாங்கத்தின் தரம் Aa1 அல்லது அதற்கும் கீழே குறைக்கப்டுமாயின், இந்த ஐந்து மாநிலங்களின் தரமும் கீழிறக்கப்படும் என்று மூடிஸ் செவ்வாயன்று அறிவித்துள்ளது.