சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan ruling party resorts to violence in northern elections

இலங்கை ஆளும் கட்சி வடக்கு தேர்தலில் வன்முறையை நாடுகிறது

By Subash Somachandran
21 July 2011
Use this version to print | Send feedback

இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையில் எதிர்க் கட்சி வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவதோடு தேர்தல் சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தீவின் உள்நாட்டு யுத்தத்தின் கடைசி கட்டத்தின் போது இடம்பெற்ற இராணுவத்தின் யுத்தக் குற்றங்களில் தனது அரசாங்கத்தின் ஈடுபாடு சம்பந்தமான விமர்சனங்களை சவால் செய்வதற்காக உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றவும் தனது அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கின்றது எனக் காட்டுவதற்கும் அவநம்பிக்கையான முயற்சிகளை குவித்துக்கொண்டிருக்கின்றார்.

65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் சனிக்கிழமை நடைபெற உள்ளன. மார்ச் மாதத்தில் அரசாங்கம் எதேச்சதிகாரமான முறையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை ஒத்தி வைத்தது. வட மாகாணத்தில் தேர்தலைக் குவிமையப்படுத்தியுள்ள அரசாங்கம், டசின் கணக்கான அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அங்கு பிரச்சாரம் செய்ய அனுப்பியுள்ளது. இராஜபக்ஷவும் அங்கு சென்றுள்ளார். ஆளும் கூட்டணி, அரச வளங்களை பயன்படுத்துவதோடு அதன் எதிரிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.

ஆளும் சுதந்திர முன்னணி, அதன் கூட்டணி பங்காளியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) உடன் சேர்ந்தே தேர்தலில் போட்டியிடுகின்றது. ஈ.பீ.டி.பீ. ஒரு அரசியல் கட்சியாக இயங்குகின்ற அதே வேளை, அது இராணுவத்தின் ஆதரவுடன் செயற்படும் ஒரு துணைப்படை குழுவைக் கொண்டிருப்பதோடு குண்டர் நடவடிக்கைகளில் இழிபுகழ் பெற்றதாகும்.

இந்த வன்முறைகளின் பிரதான இலக்கு, தமிழ் கட்சிகளின் கூட்டணியும் ஒரு எதிர்க் கட்சியுமான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது யுத்தத்தின் போது பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊது குழலாக செயற்பட்டது. 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதோடு, தற்போதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டியில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின் மீது சீருடை அணிந்த சிப்பாய்கள் பாய்ந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சியில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் இராணுவம் மக்களை எச்சரித்திருந்தது. தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்களான கே. விநாயககுமார் மற்றும் சுகந்தன் அச்சுறுத்தலுக்கு உள்ளானதோடு அவர்களது துண்டுப் பிரசுரங்களும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், பச்சிளைப்பள்ளியில் உள்ள வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர், அங்குள்ள மக்களை சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளனர்.

எதிர்க் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஆள் அடையாளம் காட்டாத வன்முறை பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றன. நாய்களின் தலைகள் அல்லது முண்டங்கள் அவர்களது வீட்டு கேட்டுகளில் அல்லது கதவருகில் அல்லது கிணற்றுக்குள் போடப்பட்டுள்ளன. அவர்களது கேட்டுகளுக்கு அருகில் மலர் வளையங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களது வீடுகள் அல்லது அலுவலகங்கள் மீது கழிவுகள், போத்தல்கள் மற்றும் சுடலை சாம்பல்கள் வீசப்பட்டுள்ளன.

எல்லா இடங்களிலும் சுவர்களில் இராஜபக்ஷவினதும் ஈ.பீ.டி.பீ. அமைச்சரவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும் முகங்களைக் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதோடு, எதிர்க் கட்சியினரின் போஸ்டர்களைக் காணவில்லை. யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்வது சாத்தியமற்றதாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடுகளை ஓரங்கட்டிய பொலிசார், இந்த சம்பவங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பே அரங்கேற்றுவதாக குற்றஞ்சாட்டினர். யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கதுருசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வதன் மூலம் அனுதாபத்தை தேட முயற்சிக்கின்றது என குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் வலிகாமத்தில் கூட்டமொன்றில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் இராஜபக்ஷ, ஒரு மெல்லிய எச்சரிக்கையொன்றை வாக்காளர்களுக்கு விடுத்தார். ஜனாதிபதி மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளார். சகல அதிகாரங்களும் எங்கள் கையில் உண்டு என தெரிவித்த அவர், எதிர்க் கட்சி வாக்காளர்களுக்கு எதிராக தண்டனையளிக்கும் சாத்தியத்தை வெளிப்படுத்தினார்.

புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்தின் கடைசி மாதங்களில், இராணுவம் நடத்திய ஆட்டிலறி மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்களில் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். யுத்தம் முடிந்த பின்னர், முற்கம்பிகளால் சூழப்பட்ட நலன்புரி முகாங்களில் சுமார் 300,000 பொது மக்களை இராணுவம் தடுத்து வைத்திருந்தது. ஆயிரக்கணக்கான இளம் தமிழர்கள் புலி சந்தேக நபர்களாக விசாரணைகளுக்கென இரகசிய இடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

பொது மக்கள் கொல்லப்பட்டது சம்பந்தமான ஐ.நா. நிபுணர்கள் குழு அறிக்கை மற்றும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல் 4 வீடியோ காட்சிகள் உட்பட, தனது யுத்தக் குற்றங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்ற அரசாங்கம், தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வெகுஜன ஆதரவாக வடக்கில் தேர்தல் வெற்றியை சுரண்டிக்கொள்ள எதிர்பார்க்கின்றது.

ஆளும் கூட்டணியானது, இளைஞர்களுக்கு சில நியமனங்களை கொடுத்து, சுய தொழிலுக்கான உதவிகளை விநியோகித்துள்ளதோடு புதிய திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. எந்தவொரு தேர்தலுக்கும் ஒரு முறை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டால், தேர்தல் இலஞ்சமாக அமைந்துள்ள இந்த செயற்பாடுகள் சட்ட விரோதமானவையாகும்.

மேலதிகமாக, யுத்தத்தின் போது மூடப்பட்ட சில வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கான பாஸ் நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் சுமார் 500 பேர் முகாங்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கில் உள்ள வடமராட்சியைச் சேர்ந்த மக்கள் மீண்டும் குடியேற்றப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரும் வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம், வன்முறைகள் தொடருமானால் தேர்தலில் இருந்து தனது கட்சி வேட்பாளர்கள் விலகிவிடுவார்கள் என திங்களன்று தெரிவித்தார். தமிழ் இனவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ தமிழ் கூட்டணி, ஐக்கியப்பட்டு அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுமாறு சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்க இலாயக்கற்றதாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் சுயநிர்ணய உரிமையை கோருமாறும் வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களில் சிங்களமயமாக்கத்தை எதிர்க்குமாறும் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. அரசாங்கமும் இராணுவமும் திட்டமிட்டு நில அபகரிப்புகளை செய்வது உண்மையாக இருக்கின் அதே வேளை, இந்த நடவடிக்கையை இனவாத நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை சிங்களவர்களுக்கு எதிராக இருத்துகின்றது.

தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் நலன்களை ஸ்தாபிக்கும் ஒரு வழிமுறையாக ஒரு தனியான அரசுக்கான புலிகளின் கோரிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆதரவளித்தது. இதே போல், இப்போது அது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் தனிச்சலுகைகளை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை எட்டுவதற்கான பேரம் பேசலில் தனது கையை பலப்படுத்துவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்காக உள்ளது.

தனது குறிக்கோள்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் மேலும் கூறுகின்றது. இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஆதரவளித்த இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதே பெரும் வல்லரசுகளின் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பியிருக்கின்றது. சீனாவுடனான உறவுகள் அபிவிருத்தியடைகின்ற நிலையில் இராஜபக்ஷவை அவராகவே அதில் இருந்து தூர விலகிக்கொள்ள வைப்பதற்காக அவருக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில், படுகொலைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னரே அரசாங்கத்தின் மனித உரிமைகள் பிரச்சினை சம்பந்தமாக பெரும் வல்லரசுகள் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தன.

திருகோணமலையில் நடந்த கூட்டமொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சேனாதிராஜா பேசும் போது, தமிழ் மக்களின் நம்பிக்கையைக் கொண்டுள்ள ஒரே அமைப்பாக கூட்டமைப்பை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதாலேயே தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது எனக் கூறினார். இதன் மூலம், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை தக்கவைத்துக்கொள்வதன் பேரில் பெரும் வல்லரசுகளின் ஒரு கருவியாக செயற்பட தனது தயார் நிலையை கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தக் காரணங்களுக்காக, வாக்காளர்களின் ஆதரவைப் பெற அரசாங்கத்தைப் போலவே தமிழ் கூட்டமைப்பும் ஏங்குகிறது. முழு கொழும்பு ஸ்தாபனத்தின் மீதும் தமிழ் வெகுஜனங்கள் மத்தியில் ஆழமான பகைமை இருப்பதன் காரணமாக, 2010 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 77 வீதமான மக்கள் வாக்களிக்காமல் இருந்துவிட்டனர். அவற்றில், தமிழ் வாக்காளர்களின் மத்தியிலான பரந்தளவிலான நம்பிக்கையீனத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 43 வீதத்தையே வென்றது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மீதான தமது எதிர்ப்பை பலர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது விளக்கினர். இந்தக் கட்சிகளுக்கு இடையில் அடிப்படை வேறுபாடுகள் கிடையாது என ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் தெரிவித்தார்: அரசாங்கம் வெற்றி பெறுவதற்காக போலி வாக்குறுதிகளை கொடுக்கின்றது. அது யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக அதற்குப் பின்னால் தமிழ் மக்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, அது பின்கதவால் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எதிர்பார்க்கின்றது.

 “அரசாங்கம் பல்கலைக்கழக ஆசிரியர்களின் தற்போதைய சம்பளப் போராட்டத்தை தகர்க்க முயற்சிக்கின்றது, என அவர் மேலும் கூறினார். குறைந்த சம்பளத்தைப் பற்றி பேசிய அவர், நாங்கள் ஓய்வுபெரும் போது எங்களால் எங்களது சொந்த வீட்டில் கூட வாழ முடியாது என விளக்கினார்.

இன்னுமொரு தொழிலாளி தெரிவித்ததாவது: முள்ளிவாய்க்காலில் [இராணுவம் அதன் இறுதித் தாக்குதலை நடத்திய இடம்] மக்களைக் கொன்ற அரசாங்கத்துக்கு நாங்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாங்கள் யாருக்கு வாக்களித்தாலும் எங்களது பிரச்சினைகள் தீரப் போவதில்லை. அரசாங்கம் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெறுவதற்காக படையினரை வீதிகளில் நிறுத்தி மக்களை அச்சுறுத்துகிறது. இது ஒரு இராணுவ சர்வாதிகாரமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் செயற்படவுள்ளதால் அது தேர்தலில் வென்றாலும் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என அவர் மேலும் கூறினார்.