World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European debt crisis and the threat of dictatorship

ஐரோப்பியக் கடன் நெருக்கடியும் சர்வாதிகார ஆட்சி என்னும் அச்சுறுத்தலும்

Stefan Steinberg
16 July 2011

Back to screen version

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கிரேக்க பாராளுமன்றம் கிரேக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் பேரழிவுப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு புதிய சுற்றுச் சிக்கன நடவடிக்கைகள் பற்றிய சட்டத்தை இயற்றியது. பாராளுமன்ற வாக்கெடுப்பிற்கு முன்னதாக புதிய சிக்கன நடவடிக்கைகள் சந்தைச் சந்தைகளை அமைதிப்படுத்துவதற்கும் யூரோவை உறுதிப்படுத்துவதற்கும் ஒரே வழி என்று நிதிய நிறுவனங்கள், வங்கிகள், முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகளிடம் இருந்து வந்த  பிரச்சாரங்களால் நிறைந்திருந்தன.

அப்பொழுது முதல் ஐரோப்பியக் கடன் நெருக்கடி இன்னும் தீவிரம் அடைந்துள்ளது. நெருக்கடிக் காலம் முழுவதும் இருந்த வடிவமைப்பை ஒத்து, புதிய சுற்று சமூகநலச் செலவுக் குறைப்புக்களும் மற்றும் தனியார்மயமாக்குதல்களும் கிரேக்கத்திலும், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின்மீது இன்னும் மிருகத்தனமான தாக்குதல்களைக் கோரும் அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளன

கிரேக்க சிக்கனப் பொதி இயற்றப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின், மூடிஸ் (Moody's) தரநிர்ணய நிறுவனம் போர்த்துக்கல் அரசாங்கத்தின் பங்குபத்திரங்களை  மதிப்பற்ற அந்தஸ்த்திற்கு கீழே தள்ளிவிட்டது. சில நாட்களுக்கு பின்னர் தனியார் முதலீட்டு நிதியங்கள் (hedge funds) மற்றும் தரப்படுத்தும் நிறுவனங்கள் (rating agencies) இணைந்து நடத்திய தாக்குதல் இத்தாலிய அரசாங்கப் பத்திரங்களின் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்தி நாட்டின் தேசியக்கடன் பற்றி கிட்டத்தட்ட பெரும் பீதி நிலையை முன்கூட்டியே உருவாக்கியது.

நிதியச் சந்தைகளின் இந்த நடவடிக்கை இத்தாலிய அரசாங்கம் உடன்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் அது இறுதி வடிவம் பெறும்போது தணித்துவிடப்படலாம் என்ற அறிக்கைகளின் பிரதிபலிப்பாகும். சந்தைத் தாக்குதலுக்கு விடையளிக்கையில் இத்தாலிய நிதி மந்திரி அடுத்து மூன்றரை ஆண்டுகளில் செயல்படுத்த உள்ள பொதுநலச் செலவுக் குறைப்புக்களை இரு மடங்காக அதிகரிக்கப் போவதாக அறிவித்தார். சில நாட்களுக்குள் ஐரோப்பாவின் மூன்றாம் பெரிய நாட்டில் பாரிய சிக்கன நடவடிக்கை பொதி இயற்றப்பட்டு விட்டது.

இந்த வார ஆரம்பத்தில் ஐரோப்பிய நிதி மந்திரிகள் சந்தைகளை சமாதானப்படுத்துவது பற்றி விவாதிக்க ஒரு அவசரக்கால கூட்டத்தில் சந்தித்தனர். ஒரு பெரும் சலுகையாக அவர்கள் இப்பொழுதுள்ள கொள்கையை மாற்ற உடன்பட்டு ஐரோப்பிய ஒன்றிய பிணையைடுப்பு நிதியத்தில் இருக்கும் இருப்புக்களைக் கொண்டு நேரடியாக கிரேக்க கடன்களை வாங்குவது என்ற முடிவெடுத்தனர்.

இவ்விட்டுக்கொடுப்புகளுக்கு பிரதிபலிப்பாக சந்தைகள் ஒரு புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை நடத்தின. செவ்வாயன்று மூடிஸ் அயர்லாந்தின் கடன் பத்திரங்களைக் மதிப்பற்ற நிலைக்கு கீழிறக்கியது. புதன் கிழமை அன்று பிட்ச் (Fitch) தர நிர்ணய நிறுவனம் கிரேக்க அரசாங்கக் கடனைக் கீழிறக்கி கிரேக்கத்தின் செலுத்தமதியின்மையை ஒரு உண்மையாக சாத்தியமானது என்று அறிவித்தது.

அதே நேரத்தில் முக்கிய கடன் தர நிர்ணயிக்கும் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கடனையும் கண்காணிப்பில் இருத்தின. ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் கடன் வரம்பு உயர்வது நிறுத்தப்படாவிட்டால், அது செலுத்தமதியின்மையை அடைந்துவிட்டதாக கருதப்பட்டுவிடும் என்று எச்சரித்தன.

இப்போக்குகள் தற்போதுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கின் வடிவமைப்பிற்குள் ஐரோப்பியக் கடன் நெருக்கடிக்கு அமைதியான அல்லது பகுத்தறிவு நிறைந்த தீர்வு இல்லை என்பதைத்தான் நிரூபிக்கின்றன. இதற்குக் காரணம் அரசாங்கக் கடன் மற்றும் யூரோ நெருக்கடி என்பது சாதாரணமான ஒரு பருவகாலத்திற்குரிய கீழ்நோக்கிய சரிவு என்பது மட்டும் இன்றி, ஒரு அடிப்படையான, உலக முதலாளித்துவ முறையின் அமைப்புடனான நெருக்கடியும் ஆகும்.

அமெரிக்காவில் மையம் கொண்டிருந்த செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவு, பெருகிய முறையில் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளிலும் பல தசாப்தங்கள் நடந்த பொறுப்பற்ற நிதிய ஊக வணிகத்தின் விளைவுதான். ஆளும் உயரடுக்கு முன்னோடியில்லாத வகையில் செல்வக்கொழிப்பு அடைவதற்கு மலை போன்ற கடன் நிதியாக அளிக்கப்பட்டது. இந்த செல்வத்தைத் தோற்றிவித்த நிகழ்வுபோக்கானது உண்மையான மதிப்பை தோற்றுவிப்பதில் இருந்து அதிகரித்தளவில் பிரிக்கப்பட்டுவிட்டது.

உண்மையில் உலக நிதியப் பிரபுத்துவத்தின் வளர்ச்சி அமெரிக்காவிலும் பிற முன்னேற்றம் அடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் தொழில்துறை மற்றும் உற்பத்தித் திறன் உடைய உள்கட்டமைப்பு அழித்தல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் ஊதியங்கள், வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின்மீது இரக்கமற்ற தாக்குதல்களைத் தளமாகக் கொண்டது.

இதன் விளைவு பொருளாதாரம் சமூகச் செல்வத்தை அப்பட்டமாக கொள்ளையடித்தலுக்கு வழியமைக்கப்பட்டதுடன், நிதியக் குமிழ்கள் உருவாக்கப்படுவதுடன் இணைக்கப்பட்டதுடன் அடிப்படையில் திவாலாகிவிட்ட வங்கி முறையைத் அடித்தளமாகக் கொண்டிருத்தது. 2007-2008 அமெரிக்க வீட்டுக்கடன்கள் குமிழியின் தவிர்க்கமுடியாத வெடிப்பானது நிதிய அமைப்புமுறையின் மிகைக்கடன் நிலைமையை எடுத்துக்காட்டியது.

வீழ்ச்சிக்கு பின் எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கைகளும் வங்கிகள் நெருக்கடியின் அடித்தளத்தில் இருக்கும் நெருக்கடியைத் தீர்க்கவில்லை. மாறாக, அவை இழப்புக்களை வங்கிகளில் இருந்து அரசாங்கத்திற்கு பாரிய பிணையெடுப்புப் பொதிகள் மூலம் மாற்றியது. அதே நேரத்தில் இருக்கும் கடன்களுக்கும் அதிகமாக புதிய வகைக் கடன்களும் குவிந்தன.

இந்த சங்கடமான நிலைக்கு முதலாளித்துவத்திடம் ஒரேயொரு பதில்தான் உண்டு. அதாவது 20ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் போராடிப்பெற்ற சமூக நலன்களை அனைத்தையும் பறிப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட இன்னும் மிருகத்தனமான தாக்குதல்களை நடத்துவது. அதே நேரத்தில்  ஒவ்வொரு தேசிய ஆளும் உயரடுக்கும் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக பெருகிய முறையில் ஆக்கிரோச மற்றும் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்து இராணுவவாதம் மற்றும் போரின்  வளர்ச்சிக்கு எரியூட்டத் தொடங்கியது.

நிதிய மூலதனத்தின் பிரதிநிதிகளுக்கு தங்கள் எதிர்ப்புரட்சிக் கொள்கை பெரும் சமூக எழுச்சிகளைத் தூண்டிவிடும் என்பது நன்கு தெரியும். அதற்கு அவர்களின் விடை இன்னும் புதிய, கூடுதலான ஒடுக்குமுறை ஆட்சி முறைக்கான தயாரிப்பை மேற்கொள்ளுதல் என்பதுதான்.

Aon என்னும் ஒரு இடர் காப்பீட்டு நிறுவனம் (Risk insurance broker) தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள சமீபத்திய அறிவிப்பில் கிரேக்கத்தில் முதலீடு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்நிறுவனம் கிரேக்கம் “2011ல் உலக வரைபடத்தில் பயங்கரவாத ஆபத்தைஎதிர்கொள்ளும் என்றும் அங்கு புரட்சி, இராணுவ ஆட்சி மாற்றம் அல்லது உள்நாட்டுப் போர் போன்ற இடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று அறிவித்துள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வலைத் தளத்தில் கடந்த வாரம் வந்த கட்டுரை ஒன்று ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து பெருகும் பொருளாதார நெருக்கடி பற்றிக் குறிப்பிடுகிறது. கிரேக்கத்தில் வெகுஜன எதிர்ப்பு வெளிப்படுவது பற்றி போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சில கண்ணீர்ப்புகை குண்டுகளை சேமிப்பது நல்லது என்ற தலைப்பில் எழுதியுள்ளது.

இத்தகைய எச்சரிக்கைகள் ஐரோப்பாவோடு மட்டும் நின்றுவிடவில்லை. அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள பரந்த வேலையின்மை மற்றும் சமுக சமத்துவமின்மை ஆகியவை சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கலாம் என்று எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி நிலையம் MSNBC க்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் நான் அழிவைக் கணித்துக்கூறும் தீர்க்கதரிசியாக இருக்க விரும்பவில்லை. நாம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றும் நான் நம்பவில்லைஆனால் ஆழ்ந்த சமூக மோதல்கள், சமூக விரோதம், பல தீவிரமயமாக்கல் ஆகியவற்றை நோக்கி நாம் சரியப்போகின்றோம் என்று நினைக்கிறேன். இது ஒரு நீதியற்ற சமூகம் என்ற உணர்வு வரப்போகின்றதுஎன்று கூறினார்.

இந்த முடிவு அதிகரித்தளவில் முதலாளித்துவ வட்டங்களுக்குள் எடுக்கப்படுகின்றது. அதாவது சமூகப் பேரழிவிற்கான நிலைமையை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மரபார்ந்த பாராளுமன்ற வழிவகை மூலம் செயல்படுத்த முடியாது என்பதுதான் அது.

ஜேர்மனியில் ஜனநாயகத்திற்கு பிந்தைய ஆட்சி வடிவத்தின் அத்தியாவசியம் என்பது பற்றிய விவாதங்கள் பேர்லின் பேராசிரியர் ஹெர்பிரீட் முங்க்லரால் வழிநடத்தப்படுகிறது. ஜனநாயக முறை ஒன்றும் யூரோ நெருக்கடிக்குத் தீர்வல்ல என்று வாதிடும் முங்க்லர் ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய உயரடுக்குகளுக்குக் கூடுதலான அதிகாரம் கொடுப்பதுதான் தீர்வு என்கிறார்.

இதே போன்ற முறையில் ஜூலை 14ம் திகதி பைனான்சியல் டைம்ஸ்  இத்தாலியின் நிதிய நம்பகத்தன்மையைக் பாதுகாத்தல்என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. அதில் இத்தாலி சிக்கன நடவடிக்கைகளையும் விட அதிகமாக தேவையைக் கொண்டுள்ளதுஎன அறிவித்து, பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி அகற்றப்பட வேண்டும் என அழைப்புவிடுத்து, “அவருக்குப் பதிலாக உயர்வல்லுனர்கள் (Technocrats) வழிநடத்தும் பரந்த தளமுடைய அரசாங்கம் தேவைஎன்று கூறுகிறது அதாவது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வங்கிகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறது.

பெரும் வெகுஜன வறிய நிலை, சர்வாதிகாரம் மற்றும் போர் என்ற அடித்தளத்தில் முதலாளித்துவம் நெருக்கடியைத் தீர்க்கும், அல்லது தொழிலாள வர்க்கம் அதன் அரசியல் உணர்மையுடன் கூட்டாக செயல்படும் முறை மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த புரட்சிகர நடவடிக்கை மூலம் நெருக்கடியைத் தீர்க்கும். 1930 களில் ட்ரொட்ஸ்கி எழுதியபடி மாற்றீடு சோசலிசமா காட்டுமிராண்டித்தனமா என்பதுதான்.