World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The political lessons of Greece

கிரேக்கத்தின் அரசியல் படிப்பினைகள்

Stefan Steinberg
6 July 2011

Back to screen version

சர்வதேச வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து தீவிர அழுத்தத்திற்கு இடையே கடந்த வாரம் கிரேக்கப் பாராளுமன்றம் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் PASOK அரசாங்கம் தயாரித்திருந்த ஒரு புதிய சிக்கன நடவடிக்கைகள் பொதியை நிறைவேற்றியது. கிரேக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான இச்சமீபத்திய தாக்குதல் ஒரு உலக அடையாளமாக சேவைசெய்வதுடன், ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுக்கும்.

ஐரோப்பிய சமூக நலன்புரி அரசு இப்பொழுது ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளின் இருப்புநிலைக் குறிப்புக்களின் ஏற்றத்திற்காக இல்லைதொழிக்கப்பட உள்ளது. புதிய சிக்கன பொதியில் சேர்க்கப்பட்டுள்ள மத்திய கோரிக்கை அரசிற்கு சொந்தமான தொழிற்துறைகளையும் மற்ற நிறுவனங்களையும் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதாகும். வெப்பம் தருதல், மின்சக்தி, தொலைத்தொடர்புகள் போன்ற அடிப்படை பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு பெருநிறுவன இலாபங்களுக்கு ஒரு புதிய மூலாதாரமாகும்.

இக்கொள்கையில் ஆழ்ந்த பிற்போக்குத்தன தாக்கங்கள் கடந்த வார இறுதியில் யூரோப் புதிய நிதி மந்திரிகளின் தலைவர் Jean-Claude Juncker ஆல் சுட்டிக்காட்டப்பட்டது. ஜேர்மனிய செய்தி ஏடான Focus இடம் அவர் கிரேக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார்மயம் ஆக்கும் வழிவகை அகற்றப்படுவது முக்கியமானது என்றார். German Treuhand முன்மாதிரியில் ஒரு அமைப்பு நிறுவப்பட வேண்டும், அதுதான் கிரேக்க சொத்துக்களை விற்க வேண்டும் என்றார் அவர்.

இத்திட்டத்திற்கு ஐரோப்பாவில் இருந்து பொருளாதார நிபுணர்களை மிகத் திறமையான (அதாவது, மிக அதிக இலாபம் அளிக்கும்) தனியார்மயத்திட்டத்தை அமைக்க அனுப்புதல் உள்ளடங்கும். இதன் விளைவாக, “கிரேக்கத்தின் இறைமை பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுவிடும்என்றார் Juncker .

Treuhand ஜேர்மனிய அரசாங்கத்தில் 1990ல் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவிற்குப் பின் கிழக்கு ஜேர்மனியில் தொழில்துறை அகற்றுவதை மேற்பார்வையிடுதற்கு நிறுவப்பட்டது. இந்தக் கொள்கைமுறை செயற்பாடு முதலாளித்துவ சந்தை உறவு முறைகள் மீட்பில் ஆரம்ப நடவடிக்கை ஆகும்.

Treuhand 1990 முதல் 1994 வரை விற்பனைகளுக்கு ஏற்பாட்டைச் செய்தது. பெரும்பாலானவற்றில் இது மூடப்படல் என இருந்தது. கிட்டத்தட்ட 12,000 கிழக்கு ஜேர்மனிய நிறுவனங்கள் விற்கப்பட்டன. இந்நிறுவனங்கள் 4 மில்லியன் தொழிலாளிகளை Treuhand அவற்றை எடுத்துக் கொண்டபோது கொண்டிருந்தன; ஆனால் Treuhand தன் செயற்பாட்டை நிறுத்தியபின் 1.5 மில்லியன் தொழிலாளர்கள்தான் இருந்தனர். கிழக்கு ஜேர்மனியின் மிக அதிகமான தொழில்துறைப் பகுதிகள் தரிசு நிலங்களாக்கப்பட்டன. நூறாயிரக்கணக்கான கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கிற்கு வேலை தேடி குடிபெயரும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

மறு ஒருங்கிணைக்கப்பட்ட நாட்டில் தொடர்ந்த ஜேர்மனிய அரசாங்கங்கள் கிழக்கில் இருந்த சமூப் பேரழிவைப் பயன்படுத்தி மரபார்ந்த ஒப்பந்தக் கட்டமைப்புக்களை முறித்து, மேற்கு ஜேர்மனியிலும் ஊதியங்களைக் குறைத்து, கிழக்கில் இருந்து வந்த பணிநீக்கம் செய்யப்பட்ட குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை பயன்படுத்தின. இரு தசாப்தங்களுக்குப் பின், கணிசமாக மக்கள் தொகை குறைந்துவிட்ட கிழக்கு ஜேர்மனிய மாநிலங்கள் நாட்டின் மேற்குப் பகுதியோடு ஒப்பிடும்போது இன்னமும் கணிசமான உயர் வேலையின்மை மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரங்களை கொண்டிருந்தன.

இதே கொள்கைகள்தான் கிரேக்கத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. இந்நாட்டில் குறைவான பொருளாதார வளங்கள்தான் உள்ளன. 1930களுக்குப் பின் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையே இது நடைபெறுகிறது என்பதால் இன்னும் அதிக பேரழிவு விளைவுகளைத்தான் கொடுக்கும்.

Juncker ன் திட்டம் கிரேக்கத்தை தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளின் கரங்களில் உள்ள பகுதி காலனித்துவ அந்தஸ்து உடைய நாடாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும். அவ் அதிகாரிகளோ கிரேக்க ஆளும் வர்க்த்துடன் இணைந்து செயல்படுவதுடன் வங்கிகளுக்கும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும்தான் ஒத்துழைப்பர். கிரேக்க முதலாளித்துவம் இப்பொழுது அத்தகைய கொள்கையின் பகுதியாக இருக்கக்கூடிய கடுமையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கிறது. இதில் அரசியலமைப்பை மாற்றி முழுநேர அரசாங்க ஊழியர்களை வேலையிலிருந்து அகற்ற அனுமதிப்பதுடன் மற்றும் கிரேக்கத்தின் வரி விதிகளை முற்றிலும் மாற்றி செல்வந்தர்களுக்கு இலாபமடைய செய்ய மாற்றுதல் ஆகியவை உள்ளன.

வங்கிகளின் சர்வாதிகாரம் கிரேக்கத்தில் நிறுவப்படுகிறது. இது ஐரோப்பாவிற்கும் அதற்கு அப்பாலும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். கடந்த ஆண்டு முழுவதும் கிரேக்கத் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டங்களில் ஈடுபட்டும் கூட இப்பொழுது இதுதான் உண்மையான நிலைப்பாடாக உள்ளது.

இத்தாக்குதலை கிரேக்க மக்களின் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பை மீறி எவ்வாறு செயல்படுத்த முடிகிறது? முதலாளித்துவத்தின் எதிர்ப்புரட்சி தாக்குதலை விரட்டியடிக்கவும் தோற்கடிக்கவும் தொழிலாள வர்க்கம் எத்தகைய படிப்பினைகளைப் பற்றி எடுக்க வேண்டும்?

தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகளின் கொள்கைகளின் இருப்புநிலைக் குறிப்பை வரைய வேண்டியது அவசியம் ஆகும். இச்சக்திகள் தொழிலாள வர்க்கப் புரட்சி என்னும் அச்சுறுத்தலுக்கு எதிராக முதலாளித்துவ அமைப்புமுறையை பாதுகாக்கப் பாடுபடுகின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில், PASOK உறுப்பினர்களின் தலைமையில் இருக்கும் தொழிற்சங்கங்கள் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை அமைத்தனர். குட்டி முதலாளித்துவ முன்னாள் இடது அமைப்புக்களின் முழு ஆதரவுடன் இவை நடத்தப்பட்டன. 15 ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற எதிர்ப்புக்களின் கூறப்பட்ட நோக்கம் PASOK தன் போக்கை மாற்றிக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். முதலாளித்துவ PASOK அரசாங்கத்தை வெகுஜன சமூக மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் வீழ்த்த வேண்டும் என்ற கருத்து தொழிற்சங்கங்களாலும் போலி சோசலிசக் குழுக்களாலும் தீவிரமாக எதிர்க்கப்பட்டன. இவ்வகையில், இச்சக்திகள் முழு உணர்வுடன் உழைத்து வெட்டுக்களுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் களைப்படையவும், கதிகலங்கி நிற்கவும் செய்துள்ளன.

SYRIZA, ANTARSYA போன்ற அமைப்புக்கள் 1960 களில் போர் எதிர்ப்பு இயக்கங்களுக்குத் தலைமை தாங்கி, அதற்குப் பிந்தைய தசாப்தங்களில் மிகவும் வலதுசாரிப்பக்கம் திரும்பிய மத்தியதர வர்க்க சக்திகளின் நோக்கினையும் அரசியலையும்தான் பிரதிபலிக்கின்றன. அவற்றின் தலைவர்கள் பலரும் பல்கலைக்கழகங்கள், செய்தி ஊடகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தில் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகளில்தான் உள்ளனர். இன்று அவர்கள் மத்தியதர வர்க்கத்தின் சலுகைகள் நிறைந்த மேல்பிரிவைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தொழிலாளர்கள் அரசியல்ரீதியாக தீவிரமடையும் போது, புரட்சிகர சோசலிசத்தின் நீண்டகால எதிரிகள் என்னும் அவர்களது அனுபவத்தை ஆளும் வர்க்கத்திற்கு வழங்கி தொழிலாள வர்க்கத்தை நிலைகுலையச்செய்கின்றார்கள்.

பாப்பாண்ட்ரூ மூலம் ஒன்றை ஆண்டுக் காலம் வெட்டுக்களைப் பார்த்தபின், அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் பெருகியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்து திரும்பிவிடாமல் இருப்பதற்குத்தான் SYRIZA, ANTARSYA போன்றவை கிரேக்கத்தில் சீற்றமுற்றோரின் எதிர்ப்புக்கள்என்று அழைக்கப்பட்டவற்றைத்தான் நடத்த வேண்டும் என்று செயல்பட்டன; அவை அரசியல் கூடாது என்ற திவால்தன்மை நிறைந்த கோஷத்தை அடித்தளமாக கொண்டிருந்தன. அதாவது முதலாளித்துவ அரசியலின் தொடர்ச்சியான மேலாதிக்கம் தேவை என்று கருதின.

இப்பிற்போக்குத்தன இலக்கை தொடர, அவை வெளிப்படையான வலதுசாரி, தேசியவாத சக்கதிகளுடன் ஏதென்ஸின் சின்டக்மா சதுக்கத்தில் செயல்பட்டன. இதையொட்டி அவை தேசியவாத முன்னோக்கான யூரோப் பகுதியை விட்டு நீங்கி கிரேக்கத்தின் முன்னாள் நாணயமான ட்ரஷ்மாவிற்கு மீண்டும் வருதல் என்பதை ஆதரித்தன. கிரேக்க முதலாளித்துவம் அத்தகைய கொள்கையை ஏற்றால், அது பெரும் பணவீக்கத்தின்மூலம் தொழிலாளர்களை இன்னும் வறிய நிலையில் தள்ளவிடத்தான் உதவும்.

கிரேக்க பொருளாதரத்தை ஆளும் வர்க்கம் கொள்கையடிப்பதற்கு ஒரே முற்போக்கான விடையிறுப்பு ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு நிதியப் பிரபுத்துவத்திற்கு எதிராக சோசலிச வேலைத்திட்டத்தை தளமாகக் கொண்டு போராடுவதுதான். இதுதான் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்னும் முன்னோக்கின் இதயத்தானத்தில் மூலோபாயமாக உள்ளது.

இந்தப் புரட்சிகர முன்னோக்கிற்கான போராட்டத்தில் முதலும் தவிர்க்க முடியாததுமானதும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்களின் மரணப்பிடியில் இருந்து முறித்துக் கொண்டு ஒரு புதிய ஜனநாயக முறையிலான, தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட அமைப்புக்களை நிறுவுவதுதான். அதாவது ஆலைகள், பணியிடங்கள், வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் செயற்குழுக்களை நிறுவுதல் மூலம்  அரசாங்கத்திற்கும் முதலாளித்துவ முறைக்கும் எதிராகத் தொழிலாள வர்க்கத்தின் சக்தியைத் திரட்டுதலாகும்.

இப்போராட்டத்திற்கு ஸ்ராலினிச, பப்லோவாத ஆகியவை கொண்டுள்ள போலி இடது அமைப்புக்கள் மற்றும் போக்குகளை எதிர்த்து விட்டுக்கொடுக்காத போராட்டம் தேவை. அத்தகைய போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதற்கு இன்றியமையாததாகும். அதுதான் முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் அரசியல் சுயாதீனத்தை நிறுவ முடியும்.

ஐரோப்பாவில் சோசலிசத்திற்கான போராட்டம் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் கூட்டுடன்தான் நடத்தப்பட முடியும். சாராம்சத்தில், சமூக ஜனநாயக அரசாங்கங்கம் கிரேக்கத்தில் செயல்படுத்தும் வெட்டுக்கள் அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் திட்டமிடுபவற்றில் இருந்தோ, அல்லது அமெரிக்க மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதில் இருந்தோ (விஸ்கான்சின் வெட்டுக்கள் கடந்த குளிர்காலத்தில் பெரும் எதிர்ப்புக்களைத் தூண்டியவை ஒரு உதாரணம்) வேறுபட்டவை அல்ல.

கிரேக்கத்தில் நிகழ்பவை உலக சோசலிச வலைத் தளத்தின் செல்வாக்கை விரிவாக்குதல் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை ஐரோப்பா முழுவதும் கட்டமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.