World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Hundreds of thousands across Egypt defy police attacks to demand ouster of Mubarak

எகிப்து முழுவதிலும் இலட்சக்கணக்கான மக்கள் பொலிஸ் தாக்குதல்களை மீறி முபாரக் அகற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்

By Stefan Steinberg and Barry Grey
29 January 2011

Back to screen version

கெய்ரோ, சூயஸ், அலெக்சாந்திரியா மற்றும் எகிப்தின் பல நகரங்களிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெள்ளியன்று பெரும் பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினரைத் திணறடித்ததுடன், அரசாங்க அலுவலகங்களைச் சூழ்ந்து கொண்டு ஆளும்  தேசிய ஜனநாயக கட்சியின் (NDP) தலைமையகத்தையும் கொளுத்தினார்கள். இந்த வெடிப்புத் தன்மையுடைய இயக்கம் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் அமெரிக்க ஆதரவு பெற்ற 30 ஆண்டு சர்வாதிகார ஆட்சியை அதிர்விற்கு உட்படுத்தியுள்ளது.

ஆட்சியானது பாலங்கள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் பொலிசாரை குவித்தனர். மெட்ரோ ரயில் மூடப்பட்டது. இணைய தளங்களும் கைத்தொலைபேசிகளும் நிறுத்தப்பட்டன. கெய்ரோ மற்றும் பிற நகரங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றாகக் கூடுவதை தடுக்கும் முயற்சியாக ஆட்சி இதைச் செய்திருந்தது. சீருடை அணிந்த பொலிசாரும், சாதாரண உடையில் இருந்த பொலிசாரும் எகிப்து, பரந்த மத்திய கிழக்கு இன்னும் உலகம் முழுவதும் பொது மக்களுக்கு அன்றைய நிகழ்வுகள் சென்று அடையாமல் தடுக்கும் வகையில் நிருபர்களை தாக்கி கைது செய்தனர். இணைய தளவசதி அளிக்கும் Noor Data Networks என்னும் ஒரு இணைப்புத்தான் கொடுக்கப்பட்டது. இது எகிப்தின் பங்குச் சந்தைகளை உலகின் மற்ற பங்குச் சந்தைகளுடன் இணைப்பதாகும்.

ஆனால் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை முடிந்தவுடன், மக்கள் மசூதிகளிலிருந்து வெளியே வந்து நாடு முழுவதும் கூட்டமாக நகரங்களிலும் தெருக்களிலும் குழுமினர். பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டு, நீர் பாய்ச்சுதல், ரப்பர் தோட்டாக்களைச் சுடுதல் மற்றும் தடியடிப் பிரயோகம் ஆகியவற்றை நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஆனால் இவை பலனளிக்கவில்லை. எகிப்திய உள்துறை அமைச்சரகம் கலகம் தடுக்கும் பொலிசுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்துமாறு உத்தரவிட்டது.

பொலிஸ் வன்முறையினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 முதல் 20 வரை என்று மாறுபட்ட தகவல்கள் கூறுகின்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்றனர், சிலர் தோட்டாத் தாக்குதலினால் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் நாட்டின் பெரும் பகுதியின் தொடர்புகள் முற்றிலும் மூடப்பட்டுள்ள நிலையில், உண்மையான இறப்பு, காயமுற்றோர் எண்ணிக்கை மிக அதிகமாகத்தான் இருக்கும்.

எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது பற்றி இதுகாறும் தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை பல நூறுகளுக்கு மேலாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கெய்ரோவில் NDP தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்து தரைமட்டம் ஆக்கியதை பொலிசாரால் நிறுத்த முடியவில்லை. சூயஸில் எதிர்ப்பாளர்கள் பொலிஸ் தலைமையகத்தை ஆக்கிரமித்து ஆயுதங்களை கைப்பற்றினர். இதே போன்ற நிகழ்ச்சிகள் மற்ற நகரங்களிலும் நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

கெய்ரோவின் ஆடம்பர ஹில்டன் ஹோட்டலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று சூழ்ந்து கொண்டது. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மேகக்கூட்டமென பொலிசாரால் ஏவியபோது, விருந்தினர்கள் பால்கனிக்களுக்கு செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். நாளின் பெரும்பகுதியில் கெய்ரோ இன்னும் அலெக்சாந்திரியா, சூயஸ் போன்ற மற்ற நகரங்களின் மையப் பகுதிகள் போர்க் களங்களை ஒத்திருந்தன.

மோதல்களின் போது, தேசிய மாற்றத்திற்கான அமைப்பு என்னும் எதிர்க்கட்சியின் தலைவரான மஹம்த் எல் பரடெய் கெய்ரோவில் அவர் வெள்ளி மதியப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்ட நகர மைய மசூதியிலிருந்து வெளியேறக்கூடாது என்று பொலிசார் உத்தரவிட்டனர். சர்வதேச அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவரான எல்பரடெய் வியன்னாவிலுள்ள தன் வீட்டில் இருந்து எகிப்திற்கு ஒரு புரட்சிகர இயக்கத்தைத் திசைதிருப்பவும்புதிய முதலாளித்துவ அரசாங்கத்திற்குஅமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் பறந்து வந்தார்.

நாடெங்கிலும் மற்ற நகரங்கள் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமிய தகவலைக் கொடுத்துள்ளன. கிட்டத்தட்ட 40,000 எதிர்ப்பாளர்கள், மன்சூர்யாவில் ஆளும் கட்சியின் தலைமையகத்தை தாக்கினர், தெற்கு எகிப்தில் லக்சரில் நடந்த எதிர்ப்புக்களில் 15,000 பேர் தெருவிற்கு வந்தனர்.

அலெக்சாந்திரியாவில் எதிர்ப்பாளர்கள் பொலிசை விட அதிகம் இருந்தனர். சில அதிகாரிகள் பிடிபட்டு அவர்கள் வைத்திருந்த தடியினாலேயே அடிவாங்கினர். எதிர்ப்பாளர்கள் பொலிஸ் வாகனங்களுக்கு நெருப்பு வைத்தனர்.

சூயஸில் மிகக் கடுமையான மோதல்கள் நிகழ்ந்ததாக தகவல்கள் வந்துள்ளன. இங்கு 15,000 கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவினர் கூட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். இருள் கவிழ்ந்ததும் நகர்த் தெருக்களில் டாங்குகள் பயன்படுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட 80,000 மக்கள் சூயஸ் கால்வாய் முகத்துவாரத்திலுள்ள Port Said ல் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று கூறப்படுகிறது. கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவினர் இஸ்மைல்லா, பயோவும் மற்றும் ஷ்பின் எல்கோம் ஆகிய பகுதிகளில் எதிர்ப்பாளர்களை எதிர்கொண்டனர்.

முபாரக்கை அகற்றும் கோரிக்கை நிறைந்த மக்கள் கூட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் தங்கள் சீருடையைக் கிழித்துத் தூர எறிந்துவிட்டு கலந்துகொண்டதாகவும் பரவலாகத் தகவல்கள் வந்துள்ளன.

பிற்பகல் இறுதியில் கூட்டங்கள் கெய்ரோவில் வெளியுறவு அமைச்சரகம் மற்றும் தகவல் துறை அமைச்சரகத்தை ஆக்கிரமிப்பதாக அச்சறுத்தியபோது, எகிப்திய அரசாங்கத் தொலைக்காட்சி முபாரக் கெய்ரோவிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் ஒரு புதிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார், இராணுவங்களை தெருக்களுக்கு வருமாறு உத்தரவு கொடுத்துள்ளார் என்று அறிவித்தது.

இராணுவம் நேரடியாக ஆர்ப்பாட்டக்காரர்களை  தாக்குவதிலிருந்து தன்னை குறைந்த பட்சம் கெய்ரோவிலேனும் தடை செய்து கொண்டதாகத் தோன்றுகிறது. இராணுவத்திற்கும் பொலிஸிற்கும் மோதல்கள் இருந்தன என்றும் தகவல்கள் வந்துள்ளன. வாஷிங்டனின் வலியறுத்தலில் இராணுவம் நடுநிலை கொண்டுள்ளது அல்லது மக்களைப் பாதுகாக்கிறது என்ற போலித் தோற்றத்திற்கு ஊக்கம் கொடுக்க ஆட்சி முற்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இதற்குக் காரணம் புரட்சி அச்சுறுத்தல் என்பது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, எழுச்சியை வன்முறையில் அடக்குவதற்கான சூழ்நிலையை தோற்றுவிப்பதாகும்.

எகிப்திய நேரப்படி கிட்டத்தட்ட நள்ளிரவில், பல ஆயிரக்கணக்கானவர்கள் தலைநகரிலும் மற்ற இடங்களிலும் எதிர்ப்புக்களைத் தொடர்ந்தபோது, முபாரக் இறுதியாகத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தான் பாதுகாப்பை நிலைநிறுத்த இருப்பதாக திமிர்த்தனமாக அறிவித்ததோடு மக்களின் பொருளாதார, அரசியல் புகார்களையும் தீர்ப்பதாக வெற்று உறுதிமொழிகளைக் கொடுத்தார். தான் தற்போதைய அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதாகவும், ஒரு புதிய அரசாங்கத்தை நியமிக்க உள்ளதாகவும் கூறினார். தான் இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதே இவற்றின் அடித்தளத்திலுள்ள கருத்தாகும்.

இது முபாரக்கின் உரையின் போது எண்ணிக்கையில் பெருத்துவிட்ட எதிர்ப்பாளர்களுக்கு இன்னும் சீற்றத்தைத்தான் அதிகரித்தது.

ஒரு 60 நிமிடங்களுக்கு பின்னர், ஜனாதிபதி  பாரக் ஒபாமா முபாரக்கை அடிப்படையில் ஆதரித்து ஒரு தொலைக்காட்சி அறிக்கையை வெளியிட்டார். மனித உரிமைகளுக்கு அமெரிக்க ஆதரவு இருப்பதாக பாசாங்குத்தனமாகக் கூறி, எகிப்திய அரசாங்கம் எதிர்ப்புக்கள் மீது அதிக வன்முறையைப் பயன்படுத்துதல் கூடாது என்றும் வலியுறுத்தினார். எகிப்துஅரசாங்கம், மக்களுடன்அமெரிக்காவின்பங்காளித்தனம்பற்றியும் ஒபாமா பேசினார். வெள்ளியன்று வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் உச்சக்கட்டத்தை அடைந்து, குருதி கொட்டும் ஆட்சியை நடத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது மறைத்ததுஅதேபோல் இத்தகையபங்காளித்தனத்தைஅகற்ற விரும்பும் மக்களின் ஆழ்ந்த விருப்பத்தையும் புறக்கணித்தது.

எகிப்தில் மனித உரிமைகளுக்கான அமெரிக்க ஆதரவை ஒபாமா வெளிப்படுத்திய அன்றே, ஆட்சியின் சித்திரவதை, படுகொலைத் திட்டம் ஆகியவை அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது பற்றிய அமெரிக்காவின் உடந்தை மற்றும் தெரிந்திருந்தது பற்றி ஆவணப்படுத்திய அரச அலுவலக தகவல் ஆவணங்களைகளையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

எகிப்தில் இராணுவத் தலையீடு என்பது துனிசியா, அல்ஜீரியா, யேமன் மற்றும் ஜோர்டன் போன்ற நாடுகள் உட்படத் தொடர்ச்சியான அரபு நாடுகளில் தொழிலாள வர்க்க எழுச்சியில் ஒரு திருப்புமுனையை பிரதிபலிக்கிறது. சமீபத்திய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அரபு ஆட்சி அரசியல் எதிர்ப்புக்களை அடக்கும் வகையில் குறுக்கிட இராணுவப் படைகளை அணிதிரட்டியுள்ளது.

எகிப்திய இராணுவம் தலையிடுவது பற்றி வாஷிங்டனிடம் விவாதிக்கப்பட்டது, ஒப்புதல் பெறப்பட்டது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. வெள்ளியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் பென்டகன் இடைவிடாமல் எகிப்திய இராணுவ உயர்கட்டுப்பாட்டுடன் தொடர்பில் உள்ளதை உறுதிப்படுத்தினார்.

வெள்ளியன்று ஜோர்டானிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட 1,500 எதிர்ப்பாளர்கள் அம்மானின் மத்திய பகுதியில் கூடினர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மற்ற நகரங்களில் ஆர்ப்பரித்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன. சிரியாவும் வெள்ளியன்று  இணைய தள சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியதாகக் கூறப்படுகிறதுஎகிப்திய எழுச்சி பற்றி தகவல் பரவுவதை தடுக்க இது செய்யப்பட்டது.

எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் ஞாயிறன்று தெருக்களில் கூட இருப்பதாக உறுதி எடுத்துக் கொண்டனர்.