World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Egypt, Tunisia, and the fight against US imperialism

எகிப்து, துனிசியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்

Bill Van Auken
28 January 2011

Back to screen version

அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், அவர்கள் பிராந்தியங்களின் "அஸ்திவாரங்கள் மண்ணில் புதைந்து வருகின்றன" என்று அரேபிய தலைவர்களை எச்சரித்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதிகரித்து வரும் புரட்சிகர மக்கள் எழுச்சி, வாஷிங்டனின் சொந்த மத்தியகிழக்கு கொள்கையின் ஊண்டுகோல்கள் இற்றுப்போய், நொருங்கி வருகின்றன என்பதை நிரூபித்துள்ளன.

துனிசியாவில் சர்வாதிகாரி ஜைன் அல்-அபிடென் பென் அலியின் 23-ஆண்டுகால ஆட்சியைத் கவிழ்த்துவிட்ட மக்கள் எழுச்சி, தற்போது எகிப்தில் பத்து ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகளில் இழுத்து வரப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹோஸ்னி முபாரக்கையும், மூன்று தசாப்தங்களுக்கு நெருக்கமாக இருந்துவரும் அவருடைய பழைய ஆட்சியைக் கீழிறக்க, தொடர்ந்து  உயிர்களை இழந்து பாதுகாப்பு படைகளை அவர்கள் எதிர்த்து வருகிறார்கள். வியாழனன்று சனா தலைநகர் யேமனில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வரும் அலி அப்துல்லாஹ் சலெஹ் விலக வேண்டுமென கோரி, ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.   

ஒவ்வொரு இடத்திலும், சமூக சமத்துவமின்மை, ஊழல், அரசியல் ஒடுக்குமுறை, சித்திரவதை ஆகியவற்றில் ஒத்திருக்கும் ஆட்சிகளுக்கு எதிராக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பெருமளவிற்கு நிதியூட்டப்பட்டு, அதற்கு பலமாக சார்ந்திருக்கும் அந்த ஆட்சிகளுக்கு எதிராக, பெருந்திரளான இளைஞர்களும், தொழிலாளர்களும் எழுச்சியுற்றுள்ளனர். வேலைவாய்ப்பின்மை, விலையுயர்வுகள் மற்றும் ஒரு துனிசிய  இளைஞர் மொஹமத் பொவ்ஜிஜ் போராட்டத்தில் தம்மைத்தாமே கொளுத்திக் கொள்ளும் அளவிற்கு (இது தான் அவருடைய நாட்டின் ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்தது) இட்டுச்சென்ற அரசாங்கத்தின் துஷ்பிரயோகம் போன்ற ஒரேமாதிரியான நிலைமைகளால் அவர்கள் தூண்டப்பட்டுள்ளனர்.         

இத்தகைய நிலைமைகள், இளம் தலைமுறையினருக்கு எதிர்காலமே இல்லாமல் செய்து, அப்பிராந்தியம் முழுவதிலுமே மில்லியன்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சகிக்கமுடியாத வாழ்வை ஏற்படுத்தியுள்ளது. இப்பிராந்தியத்திற்கு ஏகாதிபத்தியத்திடமிருந்து எவ்விதமான சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களின் இயலாமையாலும் மற்றும் விருப்பமின்மையையாலும் பின்விழைவான ஓர் ஒட்டுமொத்த காலனித்துவ ஆதிக்க சகாப்தத்தின் மரபாகும். தற்போது மக்களின் வறுமை, ஒடுக்குமுறை போன்ற இத்தகைய நிலைமைகள், அமெரிக்கா அதன் மையத்தில் கொண்டிருக்கும், உலக முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்றுரீதியிலான நெருக்கடியால் தீவிரமாக ஆழமடைந்துள்ளன.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால்விடமுடியாத தலைமையை கொண்டு வர அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைப் போலிக்காரணமாக பயன்படுத்தி, ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிர்வாகம் முதலில் ஆப்கானிஸ்தானிலும் பின்னர் ஈராக்கிலும் யுத்தங்கள் தொடுத்ததிலிருந்து சுமார் ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. மில்லியன்கணக்கான மக்களின் உயிர்களை விலையாக கொடுத்தும், அமெரிக்க பொருளாதாரத்திலிருந்து ட்ரில்லியன்கணக்கான டாலர்களைப் பாய்ச்சியும், தொடர்ந்துவரும் இந்த யுத்தங்களும், ஆக்கிரமிப்புகளும் அவற்றின் உண்மையான இலக்குகளை அடையவில்லை. அதேவேளையில் மத்தியகிழக்கு முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் வாஷிங்டன் மீது வெறுப்பையே அதிகமாக்கியுள்ளது.     

இத்தகைய யுத்தங்களுடன் இருந்த ஏகாதிபத்திய பெருமிதத்தின் முரட்டுத்தனமான நாட்களில், புஷ் நிர்வாகம் அதன் ஆதரவை ஒரு "சுதந்திர திட்டத்திற்கு" பறைசாட்டியது. ஒரு "விடுதலையடைந்த" ஈராக்கானது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களோடு ஒன்றுபடுத்தி, அப்பிராந்திய மக்களுக்கு "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகத்தினை" பெற்றுக்கொள்ள தூண்டுதலளிக்க சேவைசெய்யும்  என்ற ஓர் ஆய்வை அது முன்னிறுத்தியது.

அப்பிராந்தியத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்கு வாஷிங்டனின் உள்ளார்ந்த ஆதரவு குறைந்த காலத்திற்குத் தான் இருந்தது. பாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் பாராளுமன்ற தேர்தல் என்பது இஸ்லாமிய ஹமாஸ் இயக்கத்திற்கு ஒரு தெளிவான வெற்றியைக் காட்டியது. அது அமெரிக்க-பின்புல "அமைதி பேச்சுவார்த்தையின்" கட்டமைப்பை நிராகரித்தது; பாலஸ்தீன மக்கள் வாக்குபெட்டியில் அவர்களின் ஓட்டுக்களை அளித்தமைக்காக அவர்களை தொடர்ச்சியாக ஒட்டுமொத்தமாக தண்டிக்கும் வகையில், ஓர் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கும், பின்னர் மேற்கு கரை மற்றும் காசாவின் பிரிவினைக்கும் ஒத்துழைத்ததன் மூலமாக அமெரிக்கா பிரதிபலிப்பைக் காட்டியது.       

இதேபோல, லெபனானில், அந்நாட்டின் பாராளுமன்ற அமைப்புமுறை விதிகளுக்குட்பட்டு, ஹெஸ்புல்லா இயக்கத்தின் பின்புலத்தில் ஓர் அரசாங்கம் சமீபத்தில் பதவிக்கு வந்திருப்பதை, உதவிகள் வெட்டப்படும், இராணுவ தாக்குதல் கூட நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல்களுடன், வாஷிங்டன் அதை ஒரு முறைகேடான சதியாக கையாள்கிறது.  

அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசனைக் குழுவின் முன்னாள் மத்தியகிழக்கு பகுப்பாய்வாளர் கிரேம் பெனர்மென், வியாழனன்று தேசிய அரசு வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில், சீர்திருத்தம் மற்றும் மனித உரிமைகளில் ஒத்துழைப்பது குறித்த அனைத்து வார்த்தைஜாலங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ் அமெரிக்க அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை எதிரொலித்தார்.  

மத்தியகிழக்கில் மக்கள் அபிப்பிராயங்கள் அமெரிக்க கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்றன,” என்று தெரிவித்த அவர், “மத்தியகிழக்கில் எந்த அரசாங்கத்திலாவது செய்யப்படும் எந்த மாற்றமும் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது ஒரு அமெரிக்க-எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கும் என்பதுடன் நிச்சயமாக அது அமெரிக்காவிற்கு சுமூகமாக இருக்காது, அது நமக்கு தீவிர அரசியல் பிரச்சினையாக இருக்கக்கூடும்,” என்றார்.

இது எகிப்தை விட வேறெங்கும் இந்தளவிற்கு உண்மையாக இருக்க முடியாது. 34 ஆண்டுகளாக, ஜெருசலேமிற்கு அன்வர் சதாத் விஜயம் செய்து, அதன்பின்னர் இஸ்ரேலுடன் கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, முதலில் சதாத் தலைமையிலும் பின்னர் அவரை அடுத்து வந்த முபாரக் தலைமையிலுமான இராணுவ சர்வாதிகாரத்தை  அமெரிக்கா ஆதரித்து கொண்டிருக்கிறது.

மத்தியகிழக்கில் எகிப்து அமெரிக்காவின் அச்சாணியாக செயல்பட்டுள்ளது. அதற்கு பிரதிபலனாக, ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா எகிப்திய ஆட்சிக்கு இராணுவ உதவிக்காக 1.3 பில்லியன் டாலரை வாரிவழங்கியுள்ளது. கெய்ரோவிலும் ஏனைய இடங்களிலும்  ஆர்ப்பாட்டம் நடத்தும் இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும், கண்ணீர் புகை குண்டுகளும், இலத்திகளும் "அமெரிக்காவில் செய்யப்பட்டவை" என்ற முத்திரையையும் தெளிவாக கொண்டிருக்கின்றன.    

மத்தியகிழக்கில் கிளர்ச்சி பரவிய தொடக்கத்தில் இருந்தே, உத்தியோகபூர்வ வாஷிங்டன் அந்த நிகழ்வுகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. துனிசியாவில், பென் அலி ஒரு விமானத்தில் ஏறி, அவரின் உறவினர்கள் இருக்கும் சவூதி அரேபியாவிற்கு பறப்பதற்கு வெறும் மூன்று நாட்களுக்கு முன்னர் தான், அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் கிளிண்டன் "குழப்பம் மற்றும் ஸ்திரமின்மை" குறித்து அவருடைய கவலையை வெளியிட்டிருந்தார். அதேவேளையில் அந்நாட்டின் நீண்டகால சர்வாதிகாரியுடன் "நமக்கிருக்கும் உறவின் மிகவும் ஆக்கபூர்வமான தன்மைகளை" மெச்சினார். அந்த பெண்மணி அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட, ஆயுதமளிக்கப்பட்ட துருப்புகள் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத்தள்ளி வருகையில் வாஷிங்டன் "ஒதுங்கி கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.

அதன் கூட்டாளி பென் அலி கீழிறங்கிய பின்னர் தான், ஒபாமா நிர்வாகம், ஜனாதிபதியின் வார்த்தைகளில், “துனிசிய மக்களின் தைரியத்தையும், கண்ணியத்தையும்" புரிந்து கொண்டது. அவருடைய நாட்டு மக்களுக்கான உரையில், அமெரிக்கா "துனிசிய மக்களோடு துணை நிற்கிறது" என்று அறிவித்தார். ஆனால் அதேநாள் எகிப்தில் கலகத் தடுப்பு படைகளின் மற்றும் இரகசிய பொலிஸின் குண்டர்கள் பெருந்திரளான மக்களை கைது செய்தும், ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலவே, பத்திரிகையாளர்களையும் அடித்து நொருக்கியபோதும், அவர் எகிப்து மக்களுக்காக இதுபோன்ற வார்த்தைகளை அளிக்கவில்லை.  

வியாழனன்று துணை ஜனாதிபதி ஜோ பீடன், வெறுக்கப்படும் எகிப்திய சர்வாதிகாரத்திற்கு நிர்வாகத்தின் பொறுப்புகள் தொடரும் என்பதைத் தெளிவுபடுத்தினார். “பல விஷயங்களில் முபாரக் நம்முடைய கூட்டாளியாக இருந்து வருகிறார். மேலும் அந்த பிராந்தியத்தில் (அமெரிக்க) பூகோள அரசியல் நலன்களுக்குஇஸ்ரேலுடன் உறவை சமாதானமாக வைத்திருப்பதில்அவர் மிகவும் பொறுப்பானவர்,” என்று பீடன் அறிவித்தார். “அவரை நான் ஒரு சர்வாதிகாரி என்று குறிப்பிட மாட்டேன்,” என்றதன் மூலம், முபாரக் பதவியிலிருந்து இறங்க வேண்டியதில்லை என்பதை குறிப்பாக சுட்டிக்காட்டினார்

வீதிகளில் இறங்கியிருக்கும் பெருந்திரளான மக்களால் தூக்கியெறியப்படுவதை தடுக்க ஓர் இரத்தக்குளியலில் முபாரக் ஆட்சி இறங்க வேண்டியிருந்தாலும், அது வாஷிங்டனினால் உறுதியாக ஒத்துழைக்கப்படும் என்பதே சந்தேகத்திற்கிடமில்லாத செய்தியாக உள்ளது. சுய-சீர்திருத்தத்தை அந்த ஆட்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எல்லா பேச்சுவார்த்தைகளும், முற்றிலும் வீணானவை. 82 வயது நிரம்பிய முபாரக்கின் கொடுமையான எகிப்திய சர்வாதிகார காலத்தில் இத்தகைய முறைமைகள் நீண்டகாலத்திற்கு முன்னரே பொருந்தாதவையாக ஆகிவிட்டன.

இதற்கிடையில், வியாழனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுவதைப் போல, “அந்த பிராந்தியத்தில் பரவிவரும் ஆத்திரத்தை அமெரிக்கா திசைதிருப்ப முயற்சிக்கிறது.” அது அந்த பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஜெஃப்ரே பெல்ட்மேனை, பென் அலி இல்லாமல் பென் அலியின் சர்வாதிகாரத்தை அழியாமல் காப்பாற்ற தேவைப்படும் உபாயங்களைக் காண துனீசிற்கு அனுப்பியுள்ளது. எகிப்தில், நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி ஒழுங்கமைப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான மொஹமத் எல்பராடே கெய்ரோவிற்கு வந்திருப்பது, ஒரு பேச்சுவார்த்தையை உடன்படிக்கையை எட்ட அமெரிக்கா முயற்சி செய்ய தொடங்கியிருப்பதற்கு ஓர் அறிகுறியைக் காட்டுவதாக இருக்கலாம்.  

எல்லாவற்றிற்கும் மேலாக, மில்லியன் கணக்கான எகிப்திய தொழிலாளர்கள் பெரும் அரசியல் போராட்டத்திற்கு நுழைந்துவிடுவார்களோ என்று வாஷிங்டன் அஞ்சுகிறது. நாளொன்றுக்கு 2 டாலர் அல்லது அதற்கும் குறைவாக பெற்று வறுமையில் வாழும் 40 சதவீத மக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், “கட்டுப்பாடற்ற சந்தை" முதலாளித்துவத்தின் வடிவத்தில் அமெரிக்காவால் பேணி வளர்த்தெடுக்கப்பட்ட "சுதந்திரம்" வழங்கப்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல், சந்தைகளைத் திறந்துவிடுதல், ஒரு சிறிய அடுக்கை உச்சியில் செழிப்பாக்கி இருக்கும் ஏனைய முறைமைகளை ஊக்குவித்துள்ளது. அதேவேளையில் பெரும்பாலான மக்களை ஆழமான துன்பியலில் தள்ளியுள்ளது.

மத்தியகிழக்கில் மேலெழுச்சிக்கு எண்ணெய் வார்த்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடி, அதன் மையத்தை அமெரிக்காவில் தான் கொண்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் வாஷிங்டன் எதிர்கொள்ளும் நெருக்கடியானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி ஆழமடைந்து வருவதைக் கூறும் ஒரு முறையாக உள்ளது.

துனிசியா, எகிப்து, யேமன், ஜோர்டான், அல்ஜீரியா மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளில் போராட்டங்களில் களமிறங்கும் தொழிலாளர்கள், அமெரிக்காவின் வரலாற்றில் வேலைகள் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளின் மீது ஆழ்ந்த தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் அதன் தொழிலாள வர்க்கத்தில் அவர்களின் சிறந்த கூட்டாளிகளைக் காண முடியும்.   

வேலைகளுக்காகவும், வாழ்வதற்கேற்ற கூலிகளுக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் துனிஸ், கெய்ரோ மற்றும் ஏனைய அரேபிய நகரங்களின் வீதிகளில் இறங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகள், எந்த நாட்டிலும் உழைக்கும் மக்களின் மிக அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டுமே எட்ட முடியும்.

உலக சோசலிச புரட்சியின் ஒரு பாகமாக மத்தியகிழக்கிலும், மெஹ்ரெப்பிலும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில் நாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடும் ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவது தான் இந்த நிகழ்வுகளால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் முக்கிய பணியாக உள்ளது. இது அந்த பிராந்தியம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதைக் குறிக்கிறது